காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின்வாங்கல்
மொத்த கன்னடமும் டெல்லியில் கடும் லாபி செய்து சில காரியங்களை சாதித்திருக்கின்றது, பதிலுக்கு மத்திய அரசினை டெல்லியில் மல்லுகட்டவேண்டிய தமிழக எம்பிக்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?
பெருவாரியாக இருக்கும் அதிமுக எம்பிக்கள் அலகு குத்துதல், அந்தரத்தில் கிரேனில் தொங்குதல், அப்பல்லோ வாசலில் சுருண்டு படுத்தல், மண்சோறு, யாகம் வளர்த்தல், ரகசிய கூட்டம் போடுதல் என ஏராளமான ஜன்நாயக கடமைகளில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பரிவர்த்தனைகள், நாட்டாமைத்தனம் ஏக மிகவும் பிசி.
இன்னும் சசிகலா புஷ்பா போன்றோர்கள் நீதிமன்றம் அலைதலும், தோள் தட்டி அர்த்தமில்லா பேட்டிகளை பெரிதாக கொடுப்பதிலும் பிசி.
இன்னும் சிலர் அம்மா வந்து சொன்னால்தான் களத்தில் இறங்குவோம் என மகாபாரத பீஷ்மர் போல வாளாயிருக்கின்றனர்.
மைனாரிட்டியான திமுக எம்பிக்கள் என்ன செய்கின்றார்கள் என்பதும் மர்மமே, அவர்களுக்கே வெளிச்சம்
தமிழக காங்கிரஸ் பற்றி சொல்லவேண்டாம், வழக்கம் போல அது கலைஞருடன் மாட்டுசந்தையில் துண்டுபோட்டு பேரம்பேசுவது போல விரல்பிடித்து விளையாடிகொண்டிருக்கின்றது
தமிழக மத்திய அமைச்சரான பொன்னாருக்கு கோவையில் பாகிஸ்தானை கண்டுபிடித்தல், ஊர்வலம் செல்லுதல் என ஏகபட்ட பிசியான வேலைகள் அவரும் வாய்திறக்கமாட்டார்.
தமிழிசை எல்லா உள்ளாட்சி பதவிகளையும் பாஜ கைபற்றும் என அதிகாலை கனவில் இருக்கின்றார். கனவு கூட காணாவிட்டால் எப்படி?
இந்நிலையில் உச்சநீதிமன்றம் என ஒன்று இருப்பதால் காவேரியில் கொஞ்சமாவது நீர் வந்துகொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
ஆக தமிழத்தில் உரிமை குரல் ஒற்றுமையாக இல்லாததும், டெல்லியில் இவர்கள் ஒரு குரலும் பலமாக எழுப்ப முடியாத அளவிற்கு சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இன்னபிற சிக்கல்களில் தவிப்பதும், தேசிய கட்சிகள் தமிழகத்தில் பலமின்றி கிடப்பதுமே காவேரி சிக்கலுக்கு காரணம் என்பது கண்கூடு
தமிழனே காவேரிக்கு எதிரி, காவேரி மீட்புக்கும் எதிரி
ஒற்றுமையாக ஒன்றை செய்துவிடவும் கூடாது, விவேகமாக மத்திய அரசினை எதிர்க்கவும் கூடாது, சில காரியங்களுக்காக இந்த கழகங்கள் அஞ்சி நடுங்கவேண்டும். தமிழர்கள் தேசிய அரசுக்கான வாக்கினையும் அந்த திராவிட கட்சிகளுக்கே செலுத்தவேண்டும்.
தமிழகத்தை யார் ஆண்டால் என்ன? வரவேண்டிய நீர் வந்தே தீருவதுதான் நியாயம் என்றெல்லாம் நீதிமன்றத்தில் பேசலாம். நீதிமன்றம் தாண்டிய அரசியல் உண்டு, சில அரசியல்களை அரசியலால்தான் வெல்லவேண்டும்
அறத்தினை தாண்டியதுதான் அரசியல் என்பது மக்களாட்சியில் முதல் தத்துவம்.
கன்னடன் வழியிலே அதாவது தேசியகட்சிகள் வழியிலே அவனை திருப்பி அடித்தால் மத்திய அரசு குழம்பி தவித்து தானாகே மத்தியஸ்தம் செய்ய வரும், வந்தே தீரும்
அதனை தமிழகம் உணர்ந்ததாகவும் தெரியவில்லை, உணரபோவதாகவும் தெரியவில்லை.
பின் காவேரியில் மணல் லாரிதான் ஓடும்..
பருவமழை இன்னும் தொடங்கவில்லை, பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
அம்மா ஆணையிடாமல் எப்படி மழை பெய்யும்? அதற்கு ஆணையிடாவது வந்துவிடுங்கள் அம்மா என ஒரு சிலர் வற்றிபோன குளத்தின் நடுவே இருந்து சத்தமிடுகின்றார்களாம்
அதில் சில கலெக்டர்களும் இருக்கலாம் என்கின்றார்கள்
No comments:
Post a Comment