Saturday, October 8, 2016

ரெமோ : திரை விமர்சனம்

https://youtu.be/GEB4qrrWIgs

இப்பொழுதுள்ள நடிகர்களில் யதார்த்த நடிப்பினை வழங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி, இமேஜ், பஞ்ச் டயலாக் இல்லாமல் அவர் அமைதியாக நடிப்பதால் ரசிக்கமுடிகின்றது, அந்த எளிமையும் அவரின் கூடுதல் பலம்.


இப்படி நான் விஜய் சேதுபதி ரசிகன் ஆனதாலேயே பாகம் பிரியாளுக்கு சிவகார்த்தியனை பிடித்துவிட்டது, அவரென்றல்ல இப்பொழுதுள்ள தாய்குலங்களுக்கு அவரை பிடிக்கின்றது, குறிப்பாக குழந்தைகள் கொண்டாடுகின்றன, நிஜம்


அப்படியான சிவகார்த்திகேயன் படம் ரிலீசானால் என்ன ஆகும்? வீட்டில் கோரிக்கை மனு வைக்கபடும். மறுக்க கூடாது, மறுத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை விஷயம் சென்றுவிடும், அதனால் அவர்கள் தீர்மானம் வென்றது.


ரெமோ என்றொரு படம், அதில் சிவகார்த்திகேயன் ‍+ சிவகார்த்திகேயனி என இரு வேடங்களில் அவர் நடித்திருக்கின்றார், பெண் வேடம் என்பதால் அவ்வை சன்முகி கமல் அளவிற்கெல்லாம் விமர்சிக்க ஒன்றுமில்லை, அதில் கண்களில் கூட பெண்மையின் மருட்சியினை காட்டி அசத்தி இருப்பார் கமல்.


சிவகார்த்திகேயனிடம் அப்படி எதிர்பார்க்கமுடியுமா? அப்பல்லோ உண்மையினை சொன்னாலும் இது நடக்குமா?
மக்கள் சிரித்து பார்க்கவேண்டும், நாம் சில்லறையினை எண்ணவேண்டும் எனற அதே தத்துவத்தின்படி படமெடுத்திருக்கின்றார்கள், மற்றபடி கதை, கருத்து, நடிப்பு போன்றவை எல்லாம் அப்பல்லோ முதல்வர் அறையில் தேடினாலும் கிடைக்காதவை.


படத்தில் சில இடங்களில் சிரிக்கலாம், அது என்ன விஷயமோ தெரியவில்லை இப்படத்தில் யாரை பார்த்தாலும் சிரிப்பு வருகின்றது, பின் எரிச்சலும் வருகின்றது, குறிப்பாக பிண்ணணி இசை, பாத்திர கடையில் யானை புகுந்தது போல இம்சை


நண்பர் அவர்களுக்கு நாயகி கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லவேண்டும். அவர் அழகா இல்லையா என்பது பிரச்சினை அல்ல, ஆனால் அவர் சிரிக்கும்பொழுது மாத கடைசியில் மணிபர்ஸ் பல் இளிப்பது போல இருக்கின்றது, அதுதான் பிரச்சினை


அவர் சிரிக்காமல் இருக்கும்பொழுது நெற்றிக்கண் "ராமனின் மோகனம்" மேனகாவினை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார்


நண்பர் Babu Rao அவர்கள் சிலர் தூண்டிவிட்டதை கண்டு கீர்த்தி சுரேஷ் நயனை விட அழகா என கொதிப்பது தெரிந்தது, நண்பரே கீர்த்தி போன்றவர்கள் காற்றில் பறக்கும் பட்டம் அல்லது ராக்கெட்டில் செல்லும் செயற்கைகோள் அவ்வளவே, கொஞ்சநாளில் காணாமல் போவார்கள்


அவை உயர செல்வதால் ஆலயகொடிமரத்தினை உயர்ந்ததாகுமா? ஆகாது. அப்படி உங்கள் நயன் ஒரு கொடிமரம்


ஆனால் குஷ்பூ ஒரு கோபுரம், ராஜகோபுரம், நிலைத்துவாழும் ஆலயம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் Babu Rao.


சமீபத்திய படங்களில் அசத்தியது ஆண்டவன் கட்டளை. தெளிந்த நீரோடை அமைதியாக செல்வது போல சென்றபடம் அது. விசா மோசடிகளை அப்பட்டமாக சொல்லியிருந்தார்கள், பாஸ்போர்ட் ஆபிசில் புரோக்கர்களை தவிருங்கள் என அறிவுறுத்தியிருந்தார்கள்


நானும் அன்று புரோக்கர் தவிர்த்து பாஸ்போர்ட் எடுத்தவன், ஆனால் அலுவலக தவறில் ECNR எனப்படும் குழப்பத்தில் என்னை ECR என குறிப்பிட்டார்கள்,


நானோ எல்லா ஆவணங்களையும் சமர்பித்தே இருந்தேன், கல்வி சான்றிதழ் உட்பட‌


அது என்னவென்றே எனக்கு அன்று தெரியவில்லை, முதலில் வெளிநாட்டு குடிநுழைவு அதிகாரிகள் என்னை படாதபாடு படுத்தியபோதும் விளங்கவே இல்லை.


அம்மாதிரியான குற்றங்களுக்கு வாழ்நாள் தடை எனும் அளவிற்கு வெளிநாடுகள் இறங்கும் என்கின்றார்கள், அதில் தப்பியதே பெரும் விஷயம்.


வேலைக்கான உத்தரவு பெற்றபின் டிக்கெட் எடுக்கும் இடத்தில் அவர் குண்டை வீசினார்


"தம்பி உன் பாஸ்போர்ட் நீ பத்தாம் வகுப்பே படிக்கவில்லை என்கின்றது, ஆனால் உனக்கு பன்னாட்டு கம்பெனி விசா கொடுத்திருக்கின்றது, இனி நீ மோசடி வழக்கில் சிக்குவது உறுதி.."


அன்று உலகம் பிளந்து நான் உள்ளே விழுந்துகொண்டே இருந்தேன், ஒரு மண்ணும் புரியவில்லை, கிட்டதட்ட எல்லாம் நாசமான நிலை


பின் கடும் திரில்லாக ஆங்காங்கே அலைந்து, இறுதியாக பாஸ்போர்ட் அலுவலகத்திலே உரண்டு புரண்டு எப்படியோ மாற்றிகொண்டது என் வாழ்வின் உலகப்போர் அல்லது வெற்றிபோர்.


அதனையும் தாண்டி சென்னை விமான நிலையத்தில் அந்த பாஸ்போர்ட்டினை புரட்டிய அதிகாரி என்னை தனியே அழைத்து, என் நெல்லை தமிழை கண்டதும் புன்னகை பூக்க, பெரும் நிம்மதியுடன் என்னை கேட்ட கேள்வி மறக்கமுடியாதது


"தம்பி நீ இலங்கைக்காரன் என்பது தெரிகின்றது, இந்த பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என்பதை மட்டும் சொல்"


அதாவது நான் ஒரு புலி என்றளவில் அவர்கள் கேட்டு படுத்தியபாடு கொஞ்சமல்ல,


எத்தனையோ அதிகாரிகள் என்னை தமிழ்பேச சொல்லி, குற்றியலுகரம், லிகரம், மாத்திரை அளவு எல்லாம் சோதித்தார்கள், நான் வேறு தென்னக தமிழனா, அது அவர்களுக்கு வாய்பாயிற்று


இன்னொன்று நெல்லையும் குமரியும் சங்கமிக்கும் எல்லையின் தமிழ் மிக இயல்பாக ஈழ தமிழ்போலவே இருக்கும், போதாதா?


அலறவிட்டார்கள், சொல் நீ புலிதானே? எப்படி பாஸ்போர்ட் பெற்றாய்? அல்லது எப்படி களவெடுத்தாய்?...."


இறுதியில் விமான சோதனையில் ஒரு பணிப்பெண் என்னை விஷேசமாக கவனித்துகொண்டிருந்ததை உணர முடிந்தது


அவர் நிச்சயம் பணிப்பெண்ணாக இருக்க முடியாது


ஆக அப்படி என்னை பெரும் குழப்பத்தில் தள்ளிய சம்பவம் அது, இன்னொரு நாள் நேரம் கிடைக்கும்பொழுது எழுதலாம், இப்பொழுது ரெமோ வால் அப்செட்


படத்தில் ஒரு காட்சியில் , லேடி மேக்‍ அப் பொம்மையினை பாஷா ஸ்டைலில் கட்டி வைத்து அடிப்பார்கள், காமெடியாம்.


அப்படி சுவரில் ரெமோ என எழுதி இறுதி சுற்று ஸ்டைலில் ஓங்கி குத்தவேண்டும் போல இருக்கின்றது


ஆனால் மகள் தூங்கும்பொழுதுதான் செய்ய முடியும், காரணம் அவள் அடிக்கடி "ஐ லைக் சிவேகாத்திகீயன் அங்கிள்" என சொல்லிகொண்டே இருக்கின்றாள்,


அவரை டிவியில் பார்த்துவிட்டாலே புன்னகைக்கின்றாள்




No comments:

Post a Comment