Friday, October 14, 2016

அம்மக்களுக்காக வாருங்கள் அம்மா....

https://youtu.be/jSEQEXpLCyA

கரன் தாப்பர் நேர்காணல்



இதுவரை அடங்கி இருந்த அல்லது அடக்கி வைக்கபட்டிருந்த பத்திரிகை உலகம், இதனை விட்டால் இனி வாய்ப்பில்லை என முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தொடங்கிவிட்டன‌


ஆளாளுக்கு எழுதி குவிக்கின்றார்கள், சுவாரஸ்யமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது.


எவ்வளவு தகவல்கள்? இவைகளை எல்லாம் இவ்வளவு நாள் ஏன் பொத்தி வைத்திருந்தார்கள் என தெரியும் என்பதால் சொல்லவேண்டியதில்லை


ஜெயாவின் அம்மா வழிதான் திருச்சி ஸ்ரீரங்கம் என்கிறது ஆய்வு, அப்ப்பா வழி சர்வநிச்சயமாக மைசூரே, ஆயினும் என்ன? திராவிட நாடு அது போதும்.


சில விஷயங்கள் மகா சுவாரஸ்யமாக இருக்கின்றன, அதிலொன்று


1960ம் வருடன் 12 வயது சிறுமியாக நாட்டிய அரங்கேற்றம் செய்கிறார் அந்த கோமளவல்லி எனும் இயற்பெயர் கொண்ட, அம்மு என அழைக்கபட்ட சிறுமி. (கலைஞர் கொடநாட்டு கோமளவல்லி என கலாய்ப்பது இதற்காகத்தான்)


தலமை சிவாஜி கணேசன். அன்றைய மகா உச்ச நடிகர் சிவாஜி கணேசன். உலகம் கொண்டாடிய அந்த கணேசன்.


மகோ ராமச்சந்திரன் அன்று தடுமாறிகொண்டிருந்தார்.


நிச்சயம் நடிகையாவாய் என வாழ்த்துகின்றார் சிவாஜி கணேசன். காலில் விழுந்து ஆசி வாங்குகின்றாள் அந்த சிறுமி.


மிக சரியாக 35 வருடம் கழித்து அந்த கோமளவல்லி, ஜெயலலிதா எனும் பெயரோடு தமிழக முதல்வராய் குதிரை வண்டியில் வீற்றிருக்க, அவரின் வளர்ப்பு மகன் திருண ஊர்வலம் நடக்க, ஓரத்தில் சோகமாய் நடந்து வந்தார் சிவாஜி கணேசன்


நீ நடிகையாய் வரவேண்டும் என முதலில் வாழ்த்திய அந்த கணேசன்.


இப்படியாக ஏக சுவாரஸ்ய திருப்பங்கள்.


பள்ளி படிப்பில் மிக சிறந்த மாணவி, மாநில அளவில் 2ம் இடமாக‌ தேர்ச்சி பெற்ற மாணவி. விதி அவரை நடிகையாக்கிற்று


நடிகையான தாய்க்கு கொடுக்கபட்ட நெருக்கடி அவரை நடிப்பு தொழ்லிலுக்கு தள்ளிற்று அப்படியும் 23ம் வயதில் தாயினை இழக்கின்றார்.


அதன் பின் நடிப்பு, சலிப்பு, நாட்டிய பள்ளி கனவுகள் என பல சம்பவங்கள் விரிகின்றன.


இரு நாவல்களை கூட அவர் எழுதியிருக்கின்றார், உண்மையும் கூட. எழுத்துலகிலும் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கின்றது


எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு தள்ளபடுகின்றார், எம்ஜிஆர் அவரை கட்சிமுகமாக வைத்திருக்கின்றாரே ஒழிய, அரசியலோ அதில் முன்னேறும் வழியினையோ கொஞ்சமும் போதிக்கவில்லை


அது உண்மையும் கூட , கலைஞர் பெரியாரிடம் அண்ணாவிடம் அரசியல் கற்றவர். காமராஜருக்கு சத்யமூர்த்தி இருந்தார். மக்கள் அபிமானம் இருந்தாலும் எம்ஜிஆருக்கு பிண்ணணியில் பெரும் குழு இருந்தது, இன்னொன்று அவரும் திமுகக்காரர்.


இந்திரா நேருவின் நிழலில் வளர்ந்தவர், அரசியல் அத்துபடி


ஆனால் நடிகையாய் இருந்து, அரசியலில் முகம் காட்ட மட்டும் கொண்டுவரபட்டவருக்கு அரசியல் தெரியாது. கற்றுகொண்டார், தானே தன்னை செதுக்கி கற்றுகொண்டார். அது மறுக்க முடியா உண்மை.


அவரின் அரசியல் அவரே எழுதிகொண்ட இலக்கணம், அவரே வகுத்த பாதை.


பின் எம்ஜிஆர் மறைந்ததும், அவர் பட்ட அவமானமும் , அதனை முரண்டுபிடித்து அவர் வெற்றிகண்ட வரலாறுகளும் இன்னொரு சுவரஸ்ய பக்கம்


அதாவது கிணற்றில் விழுந்த நீச்சல் தெரியாத ஒருவன் அதிலே நீச்சல் கற்று பிழைத்து பின் நீச்சலில் முதலிடம் பிடித்தால் எப்படி இருக்கும்? அதனைத்தான் அரசியலில் அவர் செய்தார்.


நிறைய எழுதுகின்றார்கள், அவரின் பேட்டியினை கிளறுகின்றார்கள், அதில் ஒன்று மட்டும் புரிகின்றது


நடிப்பும், அரசியலும் அவர் விரும்பி ஏற்ற தொழில் அல்ல, மாறாக அவர் மீது சுமத்தபட்டிருக்கின்றது, ஆனால் சுமத்தபட்ட இரண்டையும் மிக நன்றாக, பொறுப்பாக செய்திருக்கின்றார்.


அவர் விரும்பிய வாழ்வு எத்தகையது என அவர் பகிரங்கமாக சொல்லவில்லை, ஆனால் இவை அல்ல என்பது புரிகின்றது.


நடிப்பு அவரை அரசியலுக்கு இழுத்துவந்தது, நடிப்பில் ஜெயித்த அவர் எம்ஜிஆர் காலத்திற்கு பின் அரசியலை விட்டு செல்லவில்லை? எங்கு செல்ல முடியும், அவருக்கான வாழ்வு அங்கே தொலைக்கபட்டிருந்தது. அதில் முட்டி மோதி ஜெயித்திருக்கின்றார்.


ஆற்றுநீரில் விழுந்த இலை போல அவரின் வாழ்வு சென்றிருக்கின்றது, இலை என்றால் இரட்டை இலை என்றும் கொள்ளலாம்


எழுத தொடங்கிவிட்டார்கள், இனி வந்து குவியும் பாருங்கள். அவரின் அக்கால பேட்டிகள் கூட வந்து நிற்கின்றன.


அவற்றில் ஒரு கேள்விக்கான பதில் மனதினை ரணமாக்குகின்றது, அவரிடம் கேட்கின்றார்கள் " ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ?"


ஜெயாவின் பதிலை பாருங்கள்


"இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அவ்வாறு இருக்கிறது.


அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் சந்தித்திருக்கவில்லை."


எவ்வளவு வலிநிறைந்த வார்த்தைகள் பாருங்கள், மனதில் எப்படிபட்ட வலி இருந்திருந்தால் இம்மாதிரியான வார்த்தைகள் வரும்.


அவரின் வாழ்க்கை அவ்வளவு வலி நிரம்பியதாக இருந்திருக்கின்றது.


தந்தையினை மிக சிறுவயதிலே இழந்தவர் ஜெயலலிதா.


அவரின் தாத்தாவோ ஆண்மகவு என ஜெயாவின் அண்ணனையே கொஞ்சிகொண்டிருந்தவர்.


தாய் இருந்தபொழுதும் அவர் பரபரப்பான‌ நடிகை , ஜெயாவுடன் நாள் முழுக்க கூட அவர் இருந்ததில்லை, 23 வயதில் அவருமில்லை


அதன் பின் நடிப்புலகில் நிபந்தனையற்ற அன்பினை அவரிடம் காட்ட யாருமில்லை. அவருக்கென்று கணவனோ, குடும்பவோ எதுவுமில்லை.


(வளர்ப்பு மகனும் பாதைமாறி எப்படியோ சென்று தொலைந்துவிட்டது :) )


அன்றைய அபல நிலையில் சொந்தங்கள் அவரை நெருங்கியதுமில்லை, பின்னாளில் சொந்தங்களை அவர் நெருங்விட்டதுமில்லை


அவர் சொன்ன அந்த நிபந்தனையற்ற அன்பினை அவர் கண்டதே இல்லை என்பது உண்மை. இதோ அப்பல்லோவில் இருக்கின்றார், பெருங்கூட்டம் அவருக்காக வெளியில் காத்திருக்கின்றது, உள்ளே மருத்துவ உலகின் நவீன முகங்கள் செயலாற்றிகொண்டிருக்கின்றன‌


எல்லாம் பெரும் கட்சி தலைவர், முதல்வர் எனும் அதிகாரத்திற்கே அன்றி வேறு எதற்கு?


அவரே சொன்னபடி பல இடங்களில் என்னை பயன்படுத்தினார்களே ஒழிய எனக்கு பயன் இல்லை.


எல்லாம் சித்தர் வாக்கு, பொன்னால் எல்லோருக்கும் பயனாம் பொன்னுக்கு என்ன பயன்? எனும் வாக்கின் வாழ்க்கை தத்துவம் ஜெயலலிதா.


ஆனால் அந்த நிபந்தனையற்ற அன்பினை அவர் இளமையில் பெறாமல் இருந்திருக்கலாம், சினிமா, கட்சி என பல இடங்களில் அது ஏமாற்றபட்டிருக்கலாம்.


ஆனால் அந்த நிபந்தனையற்ற அன்பினை, அவர் கிடைக்கவில்லை என சொன்ன அந்த அன்பினை அவருக்கு கொடுத்தது தமிழக மக்கள்.


அவரை அப்படித்தான் நேசிக்கின்றார்கள்,


அவரை உள்ளூர ரசிக்கின்றார்கள். அதனால்தான் ஆயிரம் சர்ச்சைகள், ஆயிரம் வழக்குகள், குற்றசாட்டுகள் என்றாலும் தேர்தல் என வரும்பொழுது அவரை தவிர வேறு யாரையும் அவர்களால் யோசிக்க முடியவில்லை.


அம்மக்களுக்காக வாருங்கள் அம்மா,


நீங்கள் இதுவரை பார்த்ததில்லை என சொன்ன அந்த நிபந்தனையற்ற அன்பினை உங்கள் மேல் கொடிகொண்டிருக்கும் அந்த மக்களுக்காக வாருங்கள்


காத்திருக்கின்றது தமிழகம் , விரைவில் வாருங்கள்


(அவர் வந்ததும் இந்த தொடர் எழுதுவனெல்லாம் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓடிவிடுவான், அவரும் விரைவில் வந்துவிடுவார்.


ஆகையால் முடிந்தவரை இப்பொழுதே படித்துகொள்வது நல்லது, எழுதுபவர்கள் விரைவில் எழுதிமுடிக்கும்படி கேட்டுகொள்கின்றோம்)




 ja.jpg

No comments:

Post a Comment