Tuesday, October 25, 2016

சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது...

https://youtu.be/P0KAhpGPDZ4
                                                        சுஜாதா : கோபி நாத்  :: நேர்காணல் 





மலேசியாவில் சில தமிழறிஞர்களை கண்டிருக்கின்றேன், ஓலை சுவடி முதல் தமிழ் பண்டைய இலக்கியம் வரை வைத்திருப்பார்கள் பெரும்பால புத்தகம் கழக வெளியீடு, கழகம் என்றால் திராவிட கழகம் அல்ல, சைவ சித்தாந்த கழகம் போன்ற பழமையான தமிழக வெளியீடுகள்


அற்புதமான புத்தகங்களை கண்டிருக்கின்றேன், அதில் கம்பராமயணமும் உண்டு, அவர்கள் அதனைபற்றி பேச ஆரம்பித்தால் நெல்லை கண்ணனே கைகட்டி கேட்பார். அப்படி மிக சரளமாக சொல்வார்கள்.


உலகிற்கு தெரியாமல் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிவுபடைத்தவர்கள் அவர்கள், அவர்களின் இறுதிகாலங்களில் சந்தித்திருக்கின்றேன்


"இந்த புத்தகங்களை எல்லாம் கொண்டு செல்லுங்கள் அய்யா.. எமக்கு பின் என் வீட்டில் தமிழ்படிக்க யாருமில்லை.." என்றார்கள், சொல்லும்பொழுதே அவர்கள் கண்கள் கலங்கின.


பொருளாதார ஓட்டம் மிகுந்த உலகில் தமிழ் தோற்று கொண்டிருக்கின்றது, எதனால் உபயோகமில்லையோ அதனை தூக்கி எறிவது மனிதன் குணம், அப்படி உபயோமில்லா மொழி பல தமிழர்களின் வீடுகளிலிருந்து விடைபெற்று கொண்டிருக்கின்றது


நேற்று சுஜாதா ரங்கராஜன், அதாவது எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி பேட்டி இன்னும் திகிலூட்டியது


அவர் சொல்கிறார், அமெரிக்காவில் வாழும் என் பேரனுக்கு தமிழ்தெரியாது, ஜப்பானிய மொழியும் ஆங்கிலமும் தெரியும், அவனுக்காக நான் ஜப்பான் மொழி கற்றேன்


மனதில் வலித்த வலியினை சொல்ல வார்த்தை இல்லை


முன்பே கேட்ட செய்தி நினைவுக்கு வந்தது, பாரதியாரின் வாரிசுகள் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றன, இன்னும் ஓரிரு தலைமுறையில் தமிழ் அவர்களிடமிருந்து விடைபெறலாம்.


சுஜாதா எப்படிபட்ட தமிழறிஞர், தொன்மையான இலக்கியங்களில் அவருக்கு எப்படி ஆழ்ந்த அறிவு இருந்தது. ஆழ்வார்களின் பாடல்களுக்கு அவர் சொன்ன அற்புதமான விளக்கங்கள் எப்படி இருந்தன‌


அப்படி பட்ட சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது என்பது ஒவ்வொரு தமிழனுக்குமான, தமிழ் தெரிந்தவனுக்குமான வேதனை.


தமிழகத்தில் தமிழின் நிலை அப்படித்தான் இருக்கின்றது.


இந்தி தமிழை அழித்துவிடும் என்று சொல்லி போராட வைத்து 64 பேரினை கொன்று தடுத்தார்கள்


ஆனால் இந்தியினை வரவேற்ற ஆந்திராவில் தெலுங்கு அழியவில்லை, கேரளாவில் மலையாளம் அழியவில்லை, கன்னடத்தில் கன்னடம் அழியவில்லை


ஆனால் இந்தியினை தடுத்த தமிழகத்தில் தமிழ் அழிந்திருக்கின்றது, எப்படிபட்ட முரண்


காமராஜரும் பக்தவத்சலமும் தமிழை அழிக்கின்றார்கள் என சொல்லபட்ட காலத்தில் இருந்த அழகிய தமிழ் கழக ஆட்சிகளில் மிகவும் கெட்டுபோய் நிற்கின்றது


தமிழ் சொல்லுக்கும் தட்டுப்பாடு, கடைகள், நிலையங்கள் என தமிழை காணவில்லை


சந்தடி சாக்கில் புதிய தமிழ்சொற்களை உருவாக்குகின்றேன் என மனுஷ், ஜெயமோகன் இன்னும் பல இம்சைபிடித்தவர்களின் கற்பனையில் தொன்மம், படிமம், புரிதல், சொறிதல், ஆன்மம் என மிக கொடுமையான தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்கபட்டு அது அழிந்துகொண்டிருக்கின்றது


தமிழை நிச்சயம் காப்பாற்றலாம், அதற்கு தனிநாடு எனும் அவசியம் இல்லை. நமது தமிழ் எனும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் போதும்.


அரசும் சில கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், தமிழ் தானாய் வாழும்


வாழ வைப்போம், வாழட்டும்


திருமதி சுஜாதாவின் பேட்டி பல இடங்களில் திகைக்க வைத்தது, அவரின் எழுத்துக்களுக்காக அல்ல, மாறாக வாக்கு இயந்திரம் வடிவமைத்ததற்காக அவருக்கு பத்மஸிரி கொடுத்திருக்கலாம் எனும் அவரின் ஏக்கம் மனதினை தாக்குகின்றது


(ரஜினிக்கெல்லாம் பத்ம ஸிரி, பத்ம பூஷன் கொடுத்ததை நினைத்து தலையில் அடித்துகொள்ளலாம்)


சாகித்திய அகாடாமி கிடைக்காதது பற்றிய கேள்விகளுக்கு , மிக அழகான விஷயங்களை மறைமுகமாக சொல்கின்றார். சுஜாதாவின் எழுத்துக்கள் வேறு வகையானவை, அதற்கு சாகித்ய அகாடெமி எல்லாம் அளவுகோல் அல்ல‌


அவரின் வார்த்தைகள் சிலவற்றை சொல்கின்றன, சுஜாதா பணத்திற்காக எழுதியவர் அல்ல, அதனை கணக்கு பார்த்தவரும் அல்ல. புகழுக்காகவோ பணத்திற்காகவோ எழுத்தினை தொடங்கியவர் அல்ல‌


தன் மனதில் ஊறியவற்றை எழுதியிருக்கின்றார், கேட்டவருக்கெல்லாம் எழுதி கொடுத்திருக்கின்றார், பலர் அவரை வைத்து சம்பாதித்திருக்கின்றனர், எந்திரன் படத்திற்கு கூட அவர் கதை ஒப்பந்தம் எழுதவில்லை என்கின்றார்


அவரது ஆப்பரேஷனுக்கு கமலஹாசன் மட்டும் உதவி இருக்கின்றார் என்பதுதான் கண்ணீரை கொட்டுகின்றது, எத்தனை ஆயிரம் பேரினை வசீகரித்த எழுத்தாளர், எத்தனை கோடிகளை கொட்டும் சினிமாவிற்கு எழுதியவர், அவருக்கு உதவியர் எனும் பெயரில் கமலஹாசன் பெயர் மட்டும் வருகின்றது


"கற்றோரை கற்றோரே காமுறுவர்.."


பெரும் எழுத்தாளர் கல்கி ஒருமுறை சொன்னார். "எழுத்து என் தொழில், ஆனால் சோற்றுக்கு இன்னொரு தொழில் தேடிகொள்ளும் நிலையில் இருக்கின்றேன்"


தமிழக எழுத்தாளர் நிலை அன்றும் அப்படி, சுஜாதா காலத்திலும் அப்படி. எழுதி சம்பாதிக்கமுடியா தமிழகம் இது.


சினிமாவில் கூட நடிகனுக்கு இருக்கும் வரவேற்பு அவனுக்காக மாய்ந்து எழுதும் எழுத்தாளனுக்கு இருக்காது.


அவ்வளவு ஏன் யூத வரலாற்றினை மிக அற்புதமாக தமிழில் கொண்டுவந்தார் Pa Raghavan. உண்மையில் கிறிஸ்தவ சபைகள் கொண்டாட வேண்டிய நூல் அது, நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் உருவாக்க அவர் பட்டிருக்கும் பாட்டினை நினைத்தாலே புல்லரிக்கின்றது.


நிச்சயம் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரோ அல்லது கடவுளே இஸ்ரேலுக்காக வேண்டுகின்றோம் என கதறும் கிறிஸ்தவனோ, பழைய ஏற்பாட்டின் வசனங்களை நெற்றியில் தவிர கார், பைக், வீட்டு வாசல், டாய்லெட் சுவர் என எங்கும் எழுதி இம்சை செய்யும் கிறிஸ்தவன் செய்ய வேண்டிய வேலை அது


காரணம் பழைய ஏற்பாடு சொல்லவேண்டிய எத்தனையோ நிகழ்வுகளை அவர் சொன்னார்.இயேசு கிறிஸ்துவிற்கும் அதன்பின் இஸ்ரேல் அமைந்த 1948க்கும் இடைபட்ட அந்த யூத காலங்களை எங்கு படிப்பீர்கள்? கிறிஸ்தவ பாதிரிக்கு தெரியாது


இஸ்ரேலின் கடவுள் என மூச்சுக்கு முன்னூறு முறை கத்த்தும் கிறிஸ்தவர்களுக்கு அந்த கடவுளின் ஜனங்கள் 2000 வருடமாக எங்கிருந்தார்கள் என்பது தெரியாது


ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறுகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும் அல்லவா?


Pa Raghavan அவர்களுக்கு இந்த கிறிஸ்தவ சமூகம் செய்தது என்ன?


(கிறிஸ்தவ ஆயர்களும், இயேசுவிற்காக வாழ்பவர்கள் என சொல்பவர்களும் கலைஞரைத்தான் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள், இப்பொழுது மோடிக்கு


சொத்துக்களை காக்கவேண்டும் அல்லவா?)


இதுதான் தமிழகம், படித்துவிட்டு " ஓ...ஓ அப்படியா??.. என இலைக்குமுன்னால் அமர்ந்து "சோற்றை போடு..." என சொல்லும் சமூகம்


போகட்டும், இங்கு அப்படித்தான்


சுஜாதா தன் ஆன்மாவில் இருந்து எழுதியிருக்கின்றார், பணம் கொட்டியிருந்தால் கூட 3 தலைமுறையில் தீர்ந்திருக்கும். ஆனால் அவரின் எழுத்த்து எத்தனை தலைமுறை கடந்தும் நிற்கும்.


அந்த அழியா சொத்தினைத்தான் அவர் உருவாக்கி வைத்திருக்கின்றார்.


உலகமே தெரியாமல் வளர்ந்ததாக, வாழ்ந்ததாக சொல்லும் திருமதி சுஜாதா, நிச்சயம் பெரும் அறிவாளி. சுஜாதாவினை புரிந்திருக்கின்றார், அவருக்காக வாழ்ந்திருக்கின்றார்.


அப்படிபட்ட மனைவி கிடைத்ததால்தான் 40 வயதிலே நோயாளியான சுஜாதாவின் எழுத்து 75 வயது வரை தொடர்ந்திருக்கின்றது.


அவரின் பேட்டியினை கண்டால் தேர்ந்த அனுபவ அறிவு வெளிப்படுகின்றது, தெரியாது தெரியாது என சொல்லியே எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது தெரிகின்றது.


அவரின் ஒரு வரி கொஞ்சம் நெருடல் "வரம் பெற்றவர்களோடு வாழ்வது சிரமான காரியம்"


அதேதான் பாரதியாரின் செல்லம்மாள் சொன்ன அதே வார்த்தைகள்.


காரணம் எழுத்தாளன் என்பவன் பெரும்பாலும் சிந்தனையில் வாழ்வான், அவனுக்கான உலகம் தனி. சிந்திப்பதை உடனே எழுதியாக வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டால் அது போய்விடும்


திருமதி சுஜாதாவின் வார்த்தைகளும் அதனையே சொல்கின்றன.


சிந்தனை மிக்க எழுத்தாளனின் மனைவியாக வாழ்வது பெரும் கொடுமை,


(ஆனால் கலைஞர் போன்ற விசித்திர எழுத்தாளர்களால் அதனை கடந்துசெல்ல முடியும், மூன்று குடும்பத்தினை அழகாக தாங்கி இருக்கின்றார்.


இவர் மனிதரா இல்லை ஏதும் அவதாரமா? அஞ்சுகம் அம்மையார் எங்காவது கண்டெடுத்த ஏலியன்ஸா என்பது இன்றுவரை விளங்கவில்லை)


அவர் தன் மனைவிக்கு பெரிதாக செய்துவிடவில்லை என்ற எண்ணம் அவரிடம் இறுதிநாட்களில் இருந்திருக்கலாம், பெரும் அறிவாளியான சுஜாதாவின் கடைசி வார்த்தைகள் அதனைத்தான் சொல்கின்றன‌


எப்படி ஆயினும் எந்த எழுத்தாளனும், ஏன் மனைவிக்கு பெரும் நன்றிகடன் பட்ட மார்க்ஸ் கூட செய்யாத பிரதிபலனை எழுத்தாளரான சுஜாதா தன் மனைவிக்கு செய்திருக்கின்றார்


ஆம் அந்த திருவரங்க ரங்கராஜன் தன் எழுத்துக்களை எல்லாம் சுஜாதா எனும் பெயரிலேதான் எழுதியிருக்கின்றார்


அந்த பெயர்தான் காலத்தில் நிலைத்துவிட்டது.


தன் மனைவி தனக்காக படும் சிரமங்களை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்து தன் பெயரினை நீக்கி மனைவி பெயரினை இட்டுகொண்டார்.


அவர் உயிராய் நினைத்து, ஆன்மாவில் இருந்து எழுதிய எழுத்துக்களோடு தன் மனைவியின் பெயரினையும் இணைத்து நன்றிகடன் செய்துகொண்டார்


இதனை விட தன் மனைவி மீதான அன்பினை அவர் எப்படி வெளிகாட்ட முடியும்.


வற்றிவிட்ட ஒரு பெரும் நதியின் கரை, அந்நதியினை பற்றி பேசுவது போல இருந்தது திருமதி சுஜாதாவின் அனுபவமான பேட்டி







No comments:

Post a Comment