Tuesday, October 18, 2016

என்ன போராட்டமோ? என்ன அரசியலோ?



தமிழ்நாட்டில் ஒரு விசித்திர பழக்கம் உண்டு, அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தும் விதம்.


ஏதாவது மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்றால், உடனே மத்திய அரசு சம்பந்தமான விஷயங்கள் மீது எதிர்ப்பினை காட்டுவார்கள். அவர்கள் கண்ணில் படுவது இரண்டே விஷயம்


ஒன்று தேசிய நெடுஞ்சாலை, இன்னொன்று ரயில் தண்டவாளம், உடனே இந்த இரண்டின் மேலும் அமர்ந்து மறியல் செய்து அழிச்சாட்டியம் செய்வார்கள்


இந்த அணுவுலைகள் , கல்பாக்கம் கூடன்குள அணுவுலைகள் எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமானவை. அதற்குள் நுழைவார்களா என்றால் இல்லை, சத்தம் இருக்காது.


சரி இந்த ராணுவ முகாம்கள் முன்னால் ஏதும் ஆர்ப்பாட்டம் இருக்குமா என்றாலும் இருக்காது


சரி ஆளும் கட்சி எது பாஜக, அந்த கட்சியின் அலுவகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யலாம் அல்லவா? மாட்டார்கள்


ஏன்?


அப்படி செய்தால் முன்பு ஆண்ட கட்சிகளான காங்கிரஸ் அலுவலகம் முன்பும், அதன் தமிழக கூட்டாளியான திமுக அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் செய்யவேண்டும்


அப்படியானால் அது அந்த கட்சி தன் சொந்த கட்சி அலுவலகத்தையே முற்றுகையிட்டு ஆர்பரிக்கும் ஒரு வித்தியாசமான, வாய்விட்டு சிரிக்கும் வினோத போராட்டமாகும், மத்திய அரசே சிரிக்கும்.


அதனால் அந்த திட்டத்தையும் விட்டுவிடுவார்கள்


இதனை எல்லாம் விடுத்து, மத்திய அரசுக்கு சொந்தமான‌ துறைமுகம், விமான நிலையம், அணுவுலை, ராணுவ தளம் பக்கம் எல்லாம் செல்லும் திட்டம் அறவே இல்லை, வரவும் வராது


மத்திய அரசுக்கு சொந்தமான பெட்ரொல் கிடங்குகள், குடோன்கள் முன்னால் எல்லாம் இவர்கள் செல்லவே மாட்டார்கள்.


மத்திய அரசுக்கு சொந்தமான விண்வெளி ஆய்வு மையங்களும் தமிழகத்தில் உண்டு, அங்கும் செல்லமாட்டார்கள்


காரணம் அவை எல்லாம் கடும் கட்டுபாடு நிறைந்த காவல் பகுதிகள், உள் நுழைந்து மத்திய அரசு ஒழிக, ஆரியம் ஒழிக, கன்னடன் ஒழிக என முழக்கமிட்டால் உயிருக்கு உத்திரவாதமில்லை


ஆக இவர்களுக்கு கிடைத்தது நெடுஞ்சாலையும், தண்டவாளமும்தான்


ஆனால் இதில் பாதிக்கபடுவது தமிழக தமிழர்கள்தான், அவர்கள் மட்டும்தான்.


ஏற்கனவே அழுதுகொண்டிருக்கும் தமிழர்களை பிடித்து காவேரி தண்ணீர் ஏன் வரவில்லை என கேள்வி கேட்டு பஸ்ஸினையோ, ரயிலையோ மறிப்பதன் பெயர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.


இவர்களை வைத்து என்ன செய்வது என தெரியாமல் தமிழக மக்கள் பஸ்ஸிலும், ரயிலிலும் தலையில் அடித்துகொண்டு அமர்ந்திருக்கின்றனர்.


மத்திய அரசு என்பது பேருந்தும், ரயிலும் என்பதுதான் இவர்கள் ஆராய்ச்சியின் முடிவு.


இப்பிரச்சினையினை எங்களுக்காக டெல்லியில் பேசுங்கள் என தமிழகம் அனுப்பிய 39 பேரில் சிலரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்ததுதான் காமெடி


அய்யன்மீர், நீங்கள் தமிழக சந்துபொந்தில் கத்த உங்களுக்கு எம்பி எனும் அடையாளம் ஏன்? அதனை சாதாரண சுப்பனோ, கோயிந்தசாமியோ செய்யமாட்டானா?


கத்தவேண்டிய டெல்லியினை விட்டுவிட்டு இப்படி சம்ப்ந்தமில்லாமல் கூட்டத்தோடு கத்துவதுதான் மக்கள் தொண்டா?


என்ன போராட்டமோ?, என்ன அரசியலோ?


இன்னும் பல காமெடிகள் செய்வார்கள், நாம் பார்த்துகொண்டே இருக்கலாம்.


உதாரணம் மேடும் பள்ளமுமாக சாலை பழுதடைந்து இருக்கும், அதில் ஒட்டை உடசலோடு பஸ் வரும்


உயிரை பணயம் வைத்து அதில் தமிழன் இருப்பான். ஆனால் போராட்டகாரர்கள் சொல்வதென்ன?


மத்திய அரசினை கண்டித்து மறியல் செய்கின்றோம், சரி இந்த சாலை, உடைசல் பேருந்து எல்லாம் கண்டிக்கமாட்டீர்களா என்றால், ம்ஹூம் இது உங்கள் தலையெழுத்து, நாங்கள் மத்திய அரசினை சும்மா விடமாட்டோம் என்பார்கள்.


இவர்களை இப்படி கேட்கலாம்


அடேய் அரசியல்வாதிகளா, வோட்டு போட்டுத்தான் உங்கள் பொறுப்பில் அப்பிரச்சினையினை அம்மக்க்கள் விட்டுவிட்டபின்னரும், வோட்டு வாங்கியவனை விட்டுவிட்டு வாக்களித்த மக்களை போட்டு பாடாய் படுத்துவீர்களா?


எந்த ஆளும் கட்சியும் போராட்டம் நடத்தியதாக சரித்திரமே தமிழகத்தில் இருக்காது, எல்லாம் எதிர்கட்சிகள் நடத்தியதாகவே இருக்கும்


அப்படி மக்கள் மீது என்ன கோபம்?


தங்களுக்கு வாக்களிக்காத மக்களை இதனை விட்டால் எப்படி பழிவாங்குவது என்ற வன்மமாக இருக்கலாம், அதனை தவிர வேறு நோக்கம் இருக்க முடியாது


அப்படி இல்லை என்றால், மத்திய அரசினை கண்டித்து இப்படி வாக்களித்த தமிழர்களை பாடாய் படுத்துவார்களா?






No comments:

Post a Comment