Image may contain: 1 personநெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள்.


அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.


நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்.


வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்


 

தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் அவரும் வந்தார். எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதிதான் என்.எஸ்.கேவிற்கும் முதல்படம்.


அதுவரை தமிழ்சினிமா சீரியஸ் பாடலாக செல்லும், சிரிப்பு என்று பெரிதாக இருக்காது, அந்த சிரிப்பு காட்சிகளை சிந்திக்கும் விதத்தில் சொல்லும் நுட்பத்தை முதன் முதலில் தொடங்கியவர்தான் என்.எஸ் கிருஷ்ணன்


இன்று காமெடிகள் என்பது குடிப்பது, இரட்டை அர்த்தம் , மகன் தாயினை மிரட்டுவது, புனிதமான ஆசிரியர்களை கேவலபடுத்துவது, கடவுளை கலாய்ப்பது என தலைகீழாக திரும்பிவிட்ட காலம், அப்படி ஆகியிருக்கும் காலத்தில் கலைவாணரின் சிந்தனைகள் சுகமான நினைவுகளை கிளறுகின்றன‌


அவரது காமெடி சிந்திக்க வைத்தது, யார் மனதினையும் புண்படுத்தாமல் அது சிரிக்க வைத்தது. எது மூடபழக்கம், எது சிந்தனைக்குரியது என்பதை மிக அழகாக எதார்த்த காட்சிகளில் கொண்டுவந்தவர் அவர்.


அவரது புன்னகைகான முகமும், துடுக்கான பேச்சும், கலகலப்ப்பான சுபாவமும் அவருக்கு தனி இடத்தை பெற்று கொடுத்தது, குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தார்.


இரண்டாம் மனைவியாக கட்டிகொண்ட மதுரம் வந்தபின் இன்னும் அவரது படங்களுக்கு தனி மவுசு இருந்தது, அவரது பாடல்களும், அவரின் குரலும் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியா அடையாளமாயிற்று, புகழின் உச்சிக்கு சென்றார்.


அது தகுதியானதும் கூட, பலமுறை பார்த்தாலும் இன்றும் பொருந்தகூடிய அட்டகாசமான நடிப்பு நுட்பம் அது, கலகலப்பான முகத்துடன் அனாசயாமக கடந்தார் அவர்.
சில படங்களை இயக்கவும் செய்தார், ஏராளமான பாடல்களை சொந்தமாகவும் எழுதினார். அக்காலத்திலே சம்பாதித்து குவித்தவர் அவர். ஆனால் அள்ளிகொடுப்பதில் நிறைய அவருக்கு நிகர் அவரே.


அன்றைய காலத்தில் அவரிடம் உதவிபெறாதவர்கள் குறைவு, அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றார். அது ஒரு கட்டத்தில் அவரை திவாலாக்கும் நிலைக்கும் சென்றபின்னும் அவர் மாறவில்லை, பின் சம்பாதித்துகொண்டார்.


திருட வந்தவனுக்கு சோறுபோட்டு அவர் வேலை கொடுத்த கதைதான் பின்னாளில் ஆனந்தம் படத்தில் வந்தது, அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அது.


அவர் தருமம் எனும் பெயரில் வருமான வரியினை மறைக்கின்றார் என சந்தேகபட்ட அதிகாரி, மாறுவேடத்தில் பொய் மகள் திருமணம் என கைஏந்தி நின்றதும், அப்போது அள்ளிகொடுத்த என்.எஸ்.கேவிடம் கண்கலங்கி, நீர் கர்ணன் அய்யா என கண்ணீர்விட்டு, இனியாவது ஒரு கணக்கு வையுங்கள் என சொன்னதும் அவரின் இளகிய மனதிற்கு எடுத்துகாட்டுகள், நடந்த உண்மை இது


இறுதிகாலத்தில் தன்னிடம் மருந்துவமனையில் பணகட்டுடன் சந்தித்த எம்ஜிஆரிடம் சில்லரையாக கொடு ராமச்சந்திரா, நிறைய பேருக்கு கொடுக்கலாம் என சொன்ன மனம் அவருடையது.


இப்படி ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு, மதுரம் அவரிடம் மயங்கியதே அறிமுகம் இல்லா மதுரத்திற்கு அவர் அவசரத்தில் உதவியதால்தான், அந்த நன்றி காதலாயிற்று.
சீர்திருத்த கருத்துக்களை சொன்னாலும் காந்தி மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, நாகர்கோவிலில் அன்றே காந்தி நினைவுதூண் நிறுவியது அவரே


ஒரு மனிதனுக்கு வாழ்வு வரும்பொழுது கூடவே சோதனைகளையும் அனுப்புவது இறைவனுக்கு பிடித்தமான ஒன்று, அதுவும் கலைஞர்கள் ஜாதகம் அப்படியானது.
அவருக்கு விதி லட்சுமிகாந்தன் உருவில் வந்தது, ல்ட்சுமி காந்தன் சினிமா பத்திரிகை நடத்தினார், அதாவது இன்றைய கிசுகிசு கசமுசா பத்திரிகை செய்திக்கெல்லாம் அவர்தான் முப்பாட்டன்.


பத்திரிகை செய்தி எனும்பெயரில் பலரை மிரட்டிகொண்டிருந்தார், பணம் வசூலித்துகொண்டிருந்தார் என அவர் மீது ஒரு சலசலப்பு இருந்தது
அக்காலத்தில் உள்ளவர்கள் கிசுகிசுவிற்கு அஞ்சியிருக்கின்றனர், சில சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன, அவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள்.


சர்ச்சை நடக்குபொழுது அந்த லட்சுமிகாந்தன் கொல்லபட்டார், பழி தியாகராஜ பாகவதர் மீதும் திட்டத்திற்கு உதவியதாக என்.எஸ் கே மீதும் விழுந்தது, அது பிரிட்டிசார் ஆண்ட காலம், யாரும் தப்பமுடியாது.


இன்று இருப்பது போல நடிகன் கார் ஏற்றி கொன்றுவிட்டு அசால்ட்டாக வெளிவருவது, பணத்தினை கொடுத்து காரியம் முடிப்பது எல்லாம் பிரிட்டிசார் காலத்தில் இல்லை.
வழக்கு நடக்கும்பொழுது சிறைவைக்கபட்டார் கிட்டதட்ட 3 ஆண்டு கால சிறைவாசம், திறமையான அக்காலத்து ராம்ஜெத்மலானியான வழக்கறிஞர் எத்திராஜின் வாதத்தில் குற்றமற்றவர் என விடுதலையானார் என்.எஸ் கிருஷ்ணன்
அந்த இடைவெளிக்கு பின் தியாகராஜபாகவதர் சரிந்தார்,


ஆனால் என் எஸ்கே பழைய இடத்தினை பிடித்தார், கலைவாணர் பட்டமும் அதன் பின்புதான் வழங்கபட்டது,நல்ல தம்பி போன்ற படங்களை அதன் பின்புதான் கொடுத்தார்.


திடீரென நோயில் விழுந்தார், அது கன்னத்து புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள், பல் பிடுங்கிய இடத்தில் நிற்காமல் வந்த ரத்தம் அவர் உயிரை பிடுங்கிற்று
சாகும் பொழுது அவருக்கு வயது 49.


தமிழ் சினிமா உலகம் கோஷ்டி சண்டைக்கு பெயர்பெற்றது, அவ்வுலகத்தில் எல்லோருக்கும் பிடித்தமான, எல்லோரும் பழககூடிய ஒரு நடிகன் இருந்திருக்கின்றான் என்றால் அது நிச்சயம் என்.எஸ்.கே ஒருவர்தான்


சென்னையில் அவருக்கு சிலையும் உண்டு, அவர் பெயரில் அரங்கமும் உண்டு


மதுரத்துடன் அவர் செய்த காமெடிகள் காலத்தை கடந்தவை, அவரின் பாடல்கள் இன்றளவும் நினைவுக்கு வருபவை காரணம் எதார்த்த வாழ்வின் பாடல் அது
"எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்"
"ஒண்ணில இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்" போன்ற பாடல்கள் மாத சம்பளம் வாங்குவோரின் நிரந்தர கானம்.


எத்தனையோ விஷயங்களை ரசிக்கதக்க விஷயத்தில் சொன்னவர், சிரிப்பாக சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்.
இயல்பாக வரும் பிறவி ஞானம் என ஒன்று உண்டு, அது அவருக்கு, எம் ஆர் ராதா, பாலையா , நாகேஷ் போன்ற நடிகர்களுக்கு வாய்த்திருந்தது, அதுதான் அவர்களை உயர்த்தி காட்டியது.


தமிழ் சினிமாவில் சிரிப்பு காட்சிகள் இருக்கும் வரை, சிந்தனை கருத்துக்கள் வரும்வரை என்.எஸ் கிருஷ்ணனும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.


நாகர்கோவில் செல்லும்பொழுதெல்லாம் அந்த தெரு, அந்த டென்னிஸ் கோர்ட், அந்த வடசேரி சந்தை என அந்த இடங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அவர் நினைவே வரும்.


வடசேரி சந்தையில் அக்கால மாட்டுவண்டி வியாபாரிகளிடம் துண்டு கருப்பெட்டி வாங்க வந்து சிரிக்க வைப்பார் என்பது அக்காலத்தவர்கள் சொல்ல கேட்டது, அப்பொழுதே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள்.
இன்று அவரின் நினைவுநாள், அந்த தமிழகத்து சார்லி சாப்ளின் நினைவுக்கு வருகின்றார்


மறக்கமுடியா நினைவுகள் உண்டு
அண்ணாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்.எஸ்.கே, எதிர் வேட்பாளர் ஒரு காங்கிரஸ்காரர் மருத்துவர். பிரச்சாரத்தில் கடுமையாக டாக்டரை புகழ்கின்றார், அவர் படிப்பென்ன, அவர் கைராசி என்ன? அவர் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை என பெரும் பாராட்டு


சொல்லிவிட்டு கேட்கின்றார், "சொல்லுங்க டாக்டர் எப்படி?" எல்லோரும் சொல்கின்றார்கள், "சொக்க தங்கம், எங்களுக்கு கிடைத்த வரம்"


"புரிகிறதல்லவா, அவரை சட்டசபைக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்து கொள்ளுங்கள், உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அண்ணாவிற்கு மருத்துவம் தெரியாது அவரை சட்டசபைக்கு அனுப்பி விடுங்கள்.."
இதுதான் என்.எஸ.கே,


யார் மனதனையும் புண்படுத்தாமல், புன்னகை பூத்த முகமாய் வாழ்வினை கடந்து சென்ற, எல்லோரையும் சிரிக்க வைத்த பெரும் கலைஞன்,


கலைவாணரின் வாழ்வு சொல்வது ஒன்றுதான்


தமிழகம் மகா வித்தியாசமானது, இங்கு மக்கள் அபிமானம் பெற்றோர்கள் சீர்திருத்த கருத்து பேசினால் எப்படியாவது தொலைத்துவிடுவார்கள், வசமாக வழக்கில் சிக்க வைத்து முடித்துவிடுவார்கள்


அதுவும் சூத்திரன் பேசிவிட்டால் தொலைத்தே விடுவார்கள்


அப்படி வஞ்சக வழக்கில் சிக்கவைக்கபட்ட முதல் நடிகன் என்.எஸ் கிருஷ்ணன் அடுத்து எம்.ஆர் ராதா


இருவரையும் இப்படித்தான் சரித்தார்கள்


இறுதிவரை அக்கும்பலால் தொடமுடியாமல் போனவர்கள் பெரியாரும் , கலைஞருமே. இருவரையும் அவர்களால் நெருங்க கூட முடியவில்லை


உண்மையில் தான் பேசிய மூட நம்பிக்கை ஒழிப்பிற்காகவும், புராணங்களை கிழ்த்து கிண்டல் செய்ததற்காகவுமே வழக்கில் சிக்கவைக்கபட்டு ஒழிக்கபட்டார் கலைவாணர்


மறக்கமுடியாத கலைஞன். அந்த தமிழகத்து சார்லி சாப்ளின். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்