Wednesday, August 30, 2017

நாளை மலேசிய சுதந்திர தினம்



Image may contain: sky, skyscraper and outdoorநாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது.


அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது.


இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான்


மலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம்.


அதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை கப்பல் கப்பலாக ஏற்றிவந்தான்.


மலேசியாவின் இன்னொரு வளம் தாதுமணல் போன்றது, சீனத்திலிருந்து ஏராளமான சீனர்கள் வந்து குவிந்தனர், அப்படியாக வளர்ந்த மலேயா ஜப்பானியரிடம் சில காலம் சிக்கி இருந்தனர், பின் மறுபடியும் பிரிட்டன் பிடித்துகொண்டது.


ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்


மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.


இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.


அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை


மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள். வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.


ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.


இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.


சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.


விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது


அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.


தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.


அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.


உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும், அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.


ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.


இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.


அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை


மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது. எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.


மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே


உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.


எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.


நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ


அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள், எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும், மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.


ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.


நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர், ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.


அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.


மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.


வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும், குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?


பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்


எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.


அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.


நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.


இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.


எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.


அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.


நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.


இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்,


சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌


ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்.


ஆயுதம் விற்கும் தேசம்தான் வளரும்.


பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது


பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.


ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று பலநாட்டு மக்களை விட‌ முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்


வன்மத்தாலும் விரோதத்தாலும் வீழ்ந்தவர்கள் அவர்கள். அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வாழ்வாங்கு வாழ்பவர்கள் இவர்கள், அன்பும், நம்பிக்கையும், சகோதரத்துவமே அமைதியாக வாழ வழி என சொல்லிசாதித்திருப்பவர்கள் இவர்கள்.


அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்," நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை" என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்


சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.


அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் "யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்" பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்


மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.


அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.


எனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, குஷ்பூ நடித்திருந்தால் அது இன்னும் மிகசிறந்தபாடலாக இருந்திருக்கும்.













 






No comments:

Post a Comment