Wednesday, August 23, 2017

வெல்ல பிறந்தவன் : 11



Image may contain: one or more people and outdoor


பாபிலோன் திரும்பிய அலெக்ஸாண்டருக்கு எல்லாமே முரணாக நடந்தன‌


அவனின் மிக‌ பரந்த பேரரசில் ஆங்காங்கு எழும்பிய கலவரங்கள் இப்பொழுது தீவிரமாயின, காரணம் அந்த கடைசி யுத்தம்.


ஒருவன் வெற்றிமேல் வெற்றி பெரும்வரைதான் அடங்கியிருப்பார்கள், அவன் சறுக்க ஆரம்பித்தால் அவன் நிழல் கூட அவனுக்கு அடங்காது. அலெக்ஸாண்டருக்கும் இதே சிக்கல் வந்தது.


போராஸுக்கு மட்டும் நாட்டை திரும்ப கொடுப்பாராம், எங்களுக்கு கொடுக்கமாட்டாராம் என்பன போன்ற குரல்கள் எதிரொலித்தன, பார்மீனியோவினை கொன்றபின் அலெக்ஸாண்டரின் தளபதிகள் அலெக்ஸாண்டரை நம்பவில்லை, அலெக்ஸாண்டருக்கு அவர்களுக்கும் ஏதாவதுசெய்யவேண்டும் போலிருந்தது


உடலால் பலவீனமாக இருந்தாலும் , பிழைத்து எழுவோம் என நம்பிகொண்டிருந்தான் அலெக்ஸாண்டர், தன் நம்பிக்கைகுரிய 4 தளபதிகளை அழைத்தான்


தன் தேசத்தை 4 பங்காக பிரித்தான், 4 பேரையும் 4 பகுதியினை ஆண்டுகொள்ள அனுமதித்தான். ஆள்வது என்றால் கலவரங்களை அடக்குவது என பொருள். கிட்டதட்ட மன்னர்கள் போல அவர்களுக்கு முடி சூட்டினான்.


ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் தந்திரக்காரன் அலெக்ஸாண்டர், தளபதிகளை மன்னராக்கி அவர்கள் அதிருப்தியினை போக்கியாயிற்று, கலவரங்களை அடக்கியாயிற்று மொத்த பேரரசும் நிலைத்தும் ஆயிற்று.


இம்மாதிரி தந்திரம் தான் அலெக்ஸாண்டர்.


No automatic alt text available.அவன் மனம் முழுக்க இந்தியாவில் அடைந்த தோல்வியே இருந்தது, ஆப்கன் மண்டல அதிபதியாக தான் முடிசூட்டிய செலுகஸிடம் சொன்னான், "என்றாவது ஒரு நாள் கிரேக்கர்கள் இந்தியாவினை கைபற்றியே தீரவேண்டும், ஒரு முனையில் இருந்து அடித்தால் கைபற்றகூடிய தேசம் அல்ல அது, மாறாக பல முனையில் இருந்து அடிக்க வேண்டும்


நம்மிடம் தரையில் பலமான ராணுவம் உண்டே தவிர, கப்பல் படை இல்லை, நான் அதில் கவனம் செலுத்த போகின்றேன்


அப்படி செய்து கடல்மார்க்கமாக ஊடுருவி அவர்களை நாங்கள் அடிக்கும் பொழுது நீ தரைமார்க்கமாக நொறுக்கினால் இந்தியா நம் வசம்"


ஆம், கிரீசுக்கு திரும்பி பெரும் படை திரட்டி மறுபடியும் இந்தியாவினை பிடிக்கும் திட்டம் அவனுக்கு இருந்தது.


மாசிடோனியா நோக்கி பயணமாக ஆரம்பித்தான், வழியில் அலெக்ஸாண்டிரியா செல்லும் திட்டமும் இருந்தது.


எகிப்தில் அவன் உருவாக்கிய அற்புத நகரம் அது, அலெக்ஸாண்டர் உருவாக்கியதில் மகா அற்புதம் என நெப்போலியனே வாய்விட்டு பின்னாளில் சொன்னான். அதனை உருவாக்கிய அலெக்ஸாண்டர் அதன் பின் அங்கு திரும்பவில்லை, இப்பொழுது செல்கின்றான்


செல்லும் வழியில் அலெக்ஸாண்டருக்கு காய்ச்சல் அதிகமானது, எத்தனையோ இடர்களை நோய்களை சந்தித்து மீண்டவன் அவன், ஆனாலும் இம்முறை அவனுக்கு காய்ச்சல் நீங்கவில்லை


தன் முடிவு நெருங்குவதை அறிந்தான், இனி தப்ப முடியாது என அவனுக்கு தெரிந்தது. சாவு நெருங்கும் மனிதன் தன் கடைசி கட்ட விருப்பங்களை, கடமைகளை விரைவாக செய்வான் அல்லவா? அவனும் செய்தான்


மனைவி ரக்சனாவிடம் 4 வயது மகனை தன் தாய் ஒலிம்பியஸிடம் ஒப்படைக்க சொன்னான், ஒலிம்பியஸ் அவனை தன்னைபோல‌ பெரும் வீரனாக்குவாள் என மனதார நம்பினான்


தன் விசுவாசமிக்க நண்பர்கள் தன் மகன் உரிய காலம் வரும்பொழுது ஆட்சியினை அவனிடம் ஒப்படைப்பார்கள் என அவன் ரக்சனாவிடம் சொல்லிகொண்டான்


எந்த மாவீரன் ஆனாலும் , பெரும் மன்னன் ஆனாலும் விடைபெறும் காலம் உண்டு, காலம் யாருக்கும் அது அனுமதித்ததை தாண்டி ஒரு நொடி கூட கொடுக்காது, இரக்கமற்றது அது. கடவுளின் அவதாரங்களே காலத்திற்கு தப்பமுடியாதபொழுது அலெக்ஸாண்டர் எப்படி?


தன் நாடு, குடும்பம் அரசு என சிந்தித்து தன் கல்லறை பற்றியும் சிந்தித்தான். அக்காலத்தில் மன்னர்கள் புதைக்கபடும் பொழுது பெரும் வைரம், தங்கம், வைடூரியம் எல்லாம் சேர்த்து போட்டு புதைப்பார்கள்


கொஞ்ச நாள் காவல் இருக்கும், பின்பு காலம் மாறும்பொழுது யாராவது கொள்ளையிடுவார்கள், மன்னனின் எலும்பு எங்கோ எறியபடும்.


இது எகிப்து பிரமீடுகளில் நடந்தது, இன்னும் பல மன்னர் கல்லறையில் நடந்தது, இதனை சிந்தித்தான் அலெக்ஸாண்டர்


தன் உடலும் அப்படி தூக்கி எறியபட கூடாது என சிந்தித்தான், தான் செத்தால் இரு கை வெளியே நீண்டபடி பெட்டியில் இருக்கவேண்டும், அலெக்ஸாண்டர் எதுவும் கொண்டு செல்லவில்லை என உலகம் அறியவேண்டும் என சொல்லிகொண்டான்


அப்படிபட்ட துறவி எல்லாம் இல்லை அவன், மாறாக கல்லறை பற்றிய பயமே அது.


அந்த மாபெரும் அசாத்திய வீரன் பாபிலோனில் இருந்து மாசிடோனியா செல்லும் வழியில் இறந்தான்


போரசோடு யுத்தம் நடத்திய காயம், ஒரு கொசு கடித்த்தால் காய்ச்சல், மருந்தே விஷமானது, என பலவாறான செய்திகள் உண்டு.


உண்மையில் பார்மினியோ, புக்கிலேஸ் இல்லாத அலெக்ஸாண்டர் பாதி செத்தான், புருஷோத்தமன் கொடுத்த அடி அவனை கவலையில் ஆழ்த்தியது. அந்த கவலை நோயானது.


தானியேல் தீர்க்கதிரிசி கண்டபடி அந்த கிடாவின் விந்தையான கொம்பு நொறுங்கிற்று.


இம்மாதத்தில் கிரேக்கத்தை விட்டு மன்னன் வெளியேறினால் அவன் உயிரோடு திரும்பமாட்டான் எனும் கிரேக்க பூசாரிகளின் ஜோதிடம் பலித்தது.


பிரமீடையும், பாபிலோனையும் தொடுவது சாபம் . அதனை கொள்ளையிட்டவர் வாழ்வதில்லை எனும் நம்பிக்கையும் உண்மையாயிற்று.


No automatic alt text available.பெரும் அஞ்சலிக்கு பின் அலெக்ஸாண்டர் புதைக்கபட்டான், ஆனால் அவன் எங்கு புதைக்கபட்டான் என்பது இன்றுவரை தெரியாது.


அவன் கல்லறையினை இன்றுவரை உலகம் தேடுகின்றது, இன்னும் கிடைத்தபாடில்லை, ஆனால் அவன் சவபெட்டி இப்படி இருந்திருக்கலாம் எனும் வடிவம் துருக்கி மியூசியத்தில் உண்டு


அலெக்ஸாண்டர் வரலாற்றில் நிகழ்த்திய மாற்றம் பெரிது, அவன் நிர்வாகம் அசத்தலாய் இருந்திருக்கின்றது, அது இன்றைய மேலாண்மை படிப்பிற்கே அஸ்திவாரம்


ராணுவமும் அதன் வியூகமும் எப்படி இருக்கவேண்டும் என உலகிற்கு முதலில் சொன்னது அவனே


ஆசியாவில் கிரேக்க சாம்ராஜ்யத்தை அவனே பரப்பிவிட்டான், ஆப்கன் வரை அவன் சாம்ராஜ்யம் இருந்தது, இன்று தனி இனம் என அவர்களை, அரேபியர்களை சொல்லமுடியாது, கலிபாக்கள், செங்கிஸ்கான் ஆட்சி வரும் வரை அரேபிய பகுதியில் கிரேக்கர் ஆட்சியே இருந்தது.


அரேபியரில் கிரேக்க கலப்பு இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.


கிரேக்க மொழி அவனால் உச்சம் பெற்றது, பைபிள் வரை அதனாலே கிரேக்கத்தில் எழுதபெற்றது. புதிய கட்டட கலைகள் எல்லாம் உலகில் உருவாயின.


கிரேக்கரை பின்பற்றியே ரோம சாம்ராஜ்யம் எழும்பியது. இன்று நாம் காணும் பல நடைமுறைகள் அதனாலே வந்தது.


தமிழக இலக்கியங்கள் யவணர் எனும் கிரேக்கன் பாண்டிய , சோழன் அரசவையில் இருந்ததாக சொல்லவும் அலெக்ஸாண்டரே காரணம்.


எகிப்து அரேபியாவில் கிரேக்கர் ஆட்சி வந்தபின் அவர்கள் தமிழகத்திற்கும் வந்தார்கள்.


இப்படி அவனால் பல மாறுதல்கள் உலகில் நடந்தன, அசாத்திய பிறவி அவன்.


மகா அசாத்திய திறமையும், மிக சிறந்த நிர்வாகியும், உலகின் ராணுவ திட்டங்களுக்கு பிதாமகனாகவும் , தந்திரத்தில் மிக சிறந்தவனாகவும் வாழ்ந்த மாமன்னரில் அவனுக்கு என்றுமே இடம் உண்டு


இவ்வளவு சிறப்பு வாய்ந்த அலெக்ஸாண்டரின் வாரிசு என்ன ஆனது?


துரோகங்களில் வீழ்வதே ராஜகுடும்பம். ஜெயா செத்தபின் அதிமுக என்னபாடு படுகின்றது என சொல்லி தெரியவேண்டியதில்லை, சிறிய தமிழகத்தின் முதல்வர் பதவிக்கே, அதுவும் தற்காலிக பதவிக்கே இவ்வளவு குத்து என்றால் அந்த பெரும் சாம்ராஜ்யத்திற்கு எவ்வளவு ரத்தபலி ஏற்பட்டிருக்கும்


அலெக்ஸாண்டருக்கு பின் அவன் மகன் பாலகன் என்பதால், அந்த 4 தளபதிகளும் நாட்டை பிரித்து மன்னர் ஆனார்கள். அலெக்ஸாண்டரின் மனைவியும் மகனும் ஒலிம்பியஸிடம் அடைக்கலம் ஆனார்கள்.


இனி அவன் வளர்ந்தால் ஆபத்து என்று கணித்த கூட்டம் மொத்தமாக ஒலிம்பியஸ், ரக்சனா, அலெக்ஸாண்டரின் மகன் என எல்லொரையும் ஒழித்து கட்டியது.


சிங்கம் இல்லா அரசு நரிகளின் வேட்டைகாடாகும் என்பது அங்கேயே நடந்தது. அலெக்ஸாண்டரின் வாரிசு இல்லாமல் போனது.


செலுகஸ் அலெக்ஸாண்டர் சொன்னபடி இந்தியாவில் நுழைந்து பார்த்தான் மவுரிய படை பந்தாடியது, ஆயினும் அசோகர் துறவியான பின் இந்தியா வலுவிழந்த நேரத்தில் இன்றைய பாகிஸ்தானில் கொஞ்சநாள் கிரேக்கர் ஆட்சி இருந்தது.


பின் ஓட விரட்டபட்டார்கள். ஆனாலும் ஆப்கானிலிருந்து வந்து அவர்கள் கொடுத்த தொல்லையின் வழியில்தான் பின்னர் கோரி, கஜினி, தைமூர், பாபர் என எல்லோரும் வந்தார்கள், தொடங்கி வைத்தது சாட்சாத் அலெக்ஸாண்டர்தான்


உலகை வெல்ல கிளம்பிய அலெக்ஸாண்டருக்கு இன்று 6 அடி நிலம் கூட இல்லை. அவன் என்றல்ல செங்கிஸ்கான் கல்லறை இன்றும் தெரியாது, ஹிட்லருக்கு கல்லறையே கிடையாது


உலகை மிரட்டியவர்கள் எல்லாம் இந்நிலையினைத்தான் எட்டியிருக்கின்றார்கள், இதில் யாரின் வாரிசுகளும் வாழ்வாங்கு வாழ்ந்ததுமில்லை, நின்று ஆண்டதுமில்லை


வரலாறு சொல்லும் பாடம் இதுதான். யாரும் எதுவும் நிரந்தரமாக இங்கு செய்யமுடியாது


ஆடும் வரை ஆடிவிட்டு கிளம்ப வேண்டியதுதான். அலெக்ஸாண்டரும் அப்படி ஆடினான், கிளம்பினான்.


காலம் அந்த மாவீரனை தன்னோடு அணைத்துகொண்டது.



முற்றும்














 




 


No comments:

Post a Comment