Wednesday, August 30, 2017

"ரொகிங்கியா" ஒழிக்கபடும் ஓர் இனம்.



Image may contain: 2 people, people standing and outdoor"ரொகிங்கியா" ஒழிக்கபடும் ஓர் இனம்.


அன்பிற்கும் அறத்திற்கும் உலகின் அடையாளமாய் ஜொலித்தது புத்தமதம், அசோகர் போன்ற பெரும் அரசர்களையே அது உள்வாங்கிற்று, இந்தியாவின் அம்பேத்கார் போன்ற மேதைகள் கூட விரும்பி ஏற்ற கொள்கை அல்லது மார்க்கம் அது.


எந்தபுனிதமான மதமும் அரசியல் எனும் ஆதிக்கசக்திக்கு அடித்தளமானால் என்னென்ன விபரீத, மனிதகுல அழிவுகள் தோன்றும் என்பதற்கு வரலாறுமுழுக்க சுவடுகள் கிடக்கின்றன, இன்றளவும் மேற்காசியா அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது.


மற்ற மதங்களை விட பொறுமையின் அடையாளமான புத்தமத நாடுகள் என தம்மை அறிவித்துகொண்ட நாடுகளான தெற்காசியாவின் வளமான பர்மாவும், சிலோனும் இன்று தரித்திர மியன்மாரும், லங்காவும் ஆகிவிட்ட பின்னரும், இன்னும் அம்மதத்தின் பிடியில் அரசியலில் சிக்கி, இன்னும் சீரழிய தயார் என பகீரங்கமாக அடம்பிடிப்பதுதான் புத்தருக்கே அத்தேசம் திருந்தாதா? என ஆசை வரும் முரண்.


புத்தசங்கங்களால் சீரழிக்கபட்ட இலங்கையும், அவர்களை எதிர்த்து கிளம்பிய ஈழபோராட்டம் திசைமாறி சென்றதும், அதனால் ஏற்பட்ட தமிழர் அழிவும் கடும் துயரமிக்கவை. லட்சகணக்கான மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கிவிட்டு இன்னும் புத்தம் சரணம், தமிழரை கொல்ல எந்த நாட்டோடும் சரணம் என சொல்லிகோண்டிருப்பது ரகசியம் அல்ல.


அன்றைய பர்மா ஒரு சொர்க்கபுரி, தமிழக செட்டியார்களின் அபார நிர்வாகத்தில் அது வெள்ளையர் காலம் முன்பே வளத்தால் நிரம்பியிருந்தது. வற்றாத நதி அருமையான மண்வளம், அரிசி மற்றும் விவசாய உற்பத்தியில் ஆசியாவில் பெரும் அடையாளமாக விளங்கிற்று.


அந்த வளத்தின் பெரும் அடையாளமாய் எழும்பி நிற்பவைதான் செட்டிநாட்டு அரண்மனைகள் இன்னொன்று இன்றும் யாங்கூன் (ரங்கூன்) நகரிலிருக்கும் பொன்னால் ஆன புத்தவிகாரையின் "பகோடா" எனும் கோபுரங்கள் (பல நூறு டன் தங்கம் அதிலுள்ளது என்பது கணிப்பு).


வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்றதும் நாசமாகி தீருவது என்றே முடிவெடுத்தார்கள், காரணம் அது புத்தநாடு என அறிவிக்கபட்டு முதல்குறி தமிழர்மேல் வைக்கபட்டது. ஆன்று அந்தநாட்டில் உழைத்த தமிழர்தான் உயர்வர்க்கம் அது போதாதா?


விரட்டினார்கள், தமிழர்கள் ஓடிவந்தார்கள், வழக்கம்போல அதனை பிண்ணனியாக கொண்டு தமிழ்திரைப்படங்கள் வந்தன, அற்புதமான வசனங்களால் ஒரு படம் சினிமா வரலாற்றை மாற்றியது. அகதி தமிழர் வாழ்வு மாறவே இல்லை.


இந்திய அரசோ பிரிவினை,காந்திபடுகொலை என கன்னத்தில் கைவைத்து கிடந்தது, பர்மாவை கண்டிப்பது பற்றி சிந்திக்கவே இல்லை.


பின்னர் பர்மா மக்களாட்சியை தூக்கி எறிந்து ராணுவ ஆட்சிமாறிய பின் நிலமை மகா மோசம், சொந்த நாட்டு மக்களை மத அடிப்படையில் விரட்ட ஆரம்பித்தது.


இந்தியாவின் வங்கதேச போருக்கு பின் கொஞ்சம் அடக்கிவாசித்த அந்த நாடு 1990க்கு பின் கொடூரமாக மாறிற்று, முஸ்லீம்களை ஓட ஓட விரட்டுகின்றது.


Image may contain: 6 people, people smiling, people sitting, child and close-upஅங்கு ரொகிங்கியா என ஒரு தேசிய இனம் உண்டு, அதாவது ரொகிங்கியா எனும் மொழிபேசும் முஸ்லீம்கள். அவர்களை குறிவைத்து அடிக்கின்றது. இஸ்ரேல் கூட செய்யா பெரும் கொடுமையை செய்கிறது மியன்மார் அரசு.


அதாவது அவர்களின் குடியுரிமையை பறித்து கிட்டதட்ட 10 லட்சம் மக்களை உள்நாட்டு அகதிகளாக்கிவிட்டது, அவர்கள் அங்கும் வாழமுடியாது, அடுத்தநாட்டிற்கும் செல்லமுடியாது, சாகவேண்டும். புத்தமத ஆளுகையில் மற்ற மதமானால் சாகத்தான் வேண்டும், இது மியன்மார் சட்டம்.


வேறுவழி இல்லா மக்கள் அகதிகளாய் திரிகின்றனர், அசாமில் குடியேறுவோரும் உண்டு, ஆனால் வங்கதேச அகதிகளை பெருமளவில் கட்டுபடுத்த தொடங்கியிருக்கும் இந்தியா இவர்களை பிரித்துபார்ப்பதில்லை, விரட்டலதான்.


கடந்த வருடம் நடந்த கொலைவெறி தாக்குதலின் தொடர்ச்சி இன்னமும் நடக்கின்றது, அகதிகளாய் அந்த அபலைகள் தெரித்து ஓடுகின்றார்கள்.


ஈழ தமிழர் வரிசையில் இப்பொழுது மியன்மாரின் ரொகிங்கியர்.


இருவரின் வரலாற்று துன்பத்திற்கும் காரணம் புத்தமதம் என்பதுதான் மகா விசித்திரம்


ரொகிங்கியா எனும் மொழியும் அந்த இனமும் அழியும் காலம் தொலைவில் இல்லை.


இலங்கையும், மியன்மாரும் எவ்வளவு செழிப்பான நாடுகள், அதுவும் மியன்மார் ஒழுங்காக விவசாயம் செய்தால் உலகிற்கே சோறுபோடும் அளவிற்கு நீரும் மண் வளமும் கொண்ட நாடு, அற்புதமான ஆறுகள் அங்கே ஓடுகின்றன‌


இலங்கையின் இயற்கை வளம் பற்றி சொல்லவேண்டாம், அற்புதமான தீவு.


இந்த இருநாட்டு மக்களும்தான் வாழ் வழியின்றி ஓடுகின்றார்கள் என்பது மானிட இனத்திற்கே பெரும் அவமானம்.


இந்த இரு அற்புத நாடுகளும் அமைதியும் அகிம்சையும் போதிக்கும் புத்தமதத்தை பின்பற்றுவதாக சொல்லி, இப்படி படு கொடூரத்தில் இறங்கியிருப்பதுதான் பெரும் முரண், இது பவுத்தமே அல்ல பயங்கரவாதம்.


பெரும் பணக்கார நாடுகளாக இருக்கவேண்டிய மியன்மாரும், இலங்கையும் படுபாதாளத்தில் கிடக்க இந்த மதவாதமே காரணம், வறுமையில் சிக்கினாலும் அம்மதத்தை எறிய அவர்கள் தயாராக இல்லை


காரணம் மதம் இல்லையென்றால் அங்கொரு கூட்டத்திற்கு அதிகாரமில்லை, வாக்கு வராது இன்ன்னும் நிறைய வராது.


புனிதமான புத்தமதம் இவர்கள் கையில் சிக்கி கொலை கருவியாய் ஆகிவிட்டது.


உலகில் இஸ்லாமியருக்காக குரல்கொடுக்கும் எந்த அமைப்பும் இந்த ரொகிங்க்ய முஸ்லீம்களுக்காக ஒரு குரலும் எழுப்பவில்லை. இந்தியாவில் சுத்தமாக இல்லை


அதுவும் தமிழகம் இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் பிஜே எனும் மனிதர் யாருக்கு மன்மத லீலையின் கடைசிபாடம் எடுத்துகொண்டிருந்தார் என ஆராய்ந்துகொண்டிருக்கின்றதது.


பாலஸ்தீனருக்கு குரல்கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளாலும், உலக மனித உரிமையை பெட்ரோல் தேசங்களில் மட்டும் தேடும் அமெரிக்காவாலும் கைவிடபட்ட இனம் இது, பரிதாபத்திற்குரிய இனம் இது.


இறைவன் அம்மக்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் அருளட்டும்.














 




 


No comments:

Post a Comment