Monday, August 28, 2017

வாமணன் - நெப்போலியன் வரலாறு : 01



Image may contain: 1 person, standing and hatஐரோப்பா பல இன நாடுகளின் தொகுப்பு, முதலில் எல்லாம் அவைகள் அவ்வளவு பெரும் சிந்தனை கொண்ட நாடுகள் அல்ல, காட்டுமிராண்டிதனமான வாழ்வுதான் அவர்களுடையது.


அலெக்ஸாண்டர் முதலில் எழும்பி கிழக்கினை மேற்கினை இணைத்தான், கீழைநாட்டு அறிவு சிந்தனைகள் அதன் மூலமாக அவர்களுக்கு கிடைத்தன‌


ரோமையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து பெரும் சிந்தனைகளை பெற்றனர், வானியல் முதல் கணிதம் தத்துவம் என ஐரோப்பாவிற்கு வந்தன, சிந்தனை வளர்ந்தது.


ஐரோப்பியர்கள் கிறிஸ்தவம் முன் மண்டியிட்டு போப் ஆட்சி செய்தாலும் முதலில் கலீபாக்களும், அதன் பின் செங்கிஸ்கானும் அதன் பின் துருக்கிய சாம்ராஜ்யமும் அவர்களை அடித்து துவைத்து மிரட்டி வைத்திருந்தன. ஐரோப்பியருக்கு பெரும் செல்வாக்கு எல்லாம் அன்று இல்லை


அன்று தொழில்வளம் இல்லா நாடுகள் ஐரோப்பா நாடுகள், ஆசிய பகுதி பொருட்களே அவர்களுக்கு பிராதானம்.


இந்நிலையில்தான் ஐரோப்பியர் சிந்திக்க தொடங்கினர், அந்த சிந்தனை அவர்களை பல விஷயங்களுக்கு இழுத்துபோயிற்று, உலகெல்லாம் அலைந்தார்கள், அங்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தங்களுக்காக மாற்றினார்கள்.


பாரசீகம், இந்தியா, சீனா, ஆப்ரிக்கா என எங்கிருந்தெல்லாமோ விஷயங்களை கடத்தி , போட்டு குழப்பி கொஞ்சம் கொஞ்சமாக அறிவு பெற்று கொண்டார்கள்.


சீனாவிலிருந்து வெடிபொருள் கிடைத்தபின் பீரங்கி, துப்பாக்கி எல்லாம் செய்ய தொடங்கினார்கள், ஆசிய‌ கப்பல்களை கண்டு தங்கள் கப்பலையும் நவீனமாக்கினார்கள்


வியாபாரம் என உலகெல்லாம் கிளம்பினார்கள், பலமில்லா நாடுகளை கபளீகரம் செய்தார்கள், பலமான அரசுகள் இருந்தால் சமத்தாக வியாபாரம் மட்டும் செய்தார்கள்,


இந்த புது பணப்பெருக்கம் அவர்களிடையே போட்டியினை ஏற்படுத்திற்று.


பணமும், ஆயுதமும் குவித்து வைத்திருப்பவன் இடையே யுத்தம் வருவதில் ஆச்சரியமில்லை, பலமாக மோதினார்கள் அதில் பிரிட்டனை தவிர எல்லா நாட்டு எல்லைகளும் அடிக்கடி மாறிகொண்டே இருந்தன.


வணிகத்திலும் கப்பல் படையிலும் தன்னிகரற்று இருந்தது பிரிட்டன் அதுவும் சூயஸ்கால்வாய் எங்களுக்கு என அது உரிமைகொண்டாடிய பின் அதுகாட்டில் அடைமழை


இந்த சூழலில் ஐரோப்பாவில் சில திடீர் யுத்தம், திடீர் கூட்டணிகள் பரிசு பரிமாற்றங்கள் எல்லாம் நடக்கும்


அப்படி செனவா குடியரசு எனப்படும் நாடு கோர்சியா எனும் மத்திய தரைகடல் தீவினை பிரான்சுக்கு கொடுத்திருந்தது, அப்பொழுது 16ம் லூயிதான் பிரான்ஸ் மன்னன்.


கோர்சியாவினை பெற்ற பிரான்ஸ் மன்னன், அதன் நிர்வாகத்தினை ஒரு சட்ட தரணியிடம் ஒப்படைத்திருந்தான், அந்த கண்டிப்பு மிக்க சட்டதரணியின் பெயர் கார்லோ போனபார்ட்டே


போனபார்ட்டே என்பது அவர்கள் வம்ச பெயர்.


அந்த கார்லோ போனபாட்டேக்கு 8 பிள்ளைகள், அதில் இரண்டாம் பிள்ளைதான் நெப்போலியன் போனபார்ட்டே, 1769ம் ஆண்டு ஆகஸ்டு 15ல் பிறந்தான்.


அந்த 8 பிள்ளைகளும் கோர்சியாவில்தான் வளர்ந்தன, நெப்போலியனின் தாய் மிகுந்த கட்டுபாடு மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவள். நெப்போலியனை அவள்தான் அடக்கி வளர்த்தாள்


தவறாமல் திருப்பலி செல்லுதல், ஜெபங்களை சொல்ல சொல்லுத, ஜெபமாலை செலுத்துதல், கிறிஸ்துவின் பிரதிநிதியான போப்பாண்டவரை வணங்குதல் என வளர்க்கபட்டான் நெப்போலியன்.


ஆனால் அதே நெப்போலியன் பின்னால் போப்பாண்டவரை பாடாய்படுத்துவான் என்பது கடவுளை தவிர யாருக்கும் தெரிந்திருக்க நியாமில்லை.


அன்றைய பாரீஸ் கல்வியில் சிறந்து விளங்கியது, சட்ட தரணியாக இருந்த கார்லோ தன் மகனை அங்குள்ள ராணுவபள்ளியில் சேர்த்திருந்தார்.


குள்ளமும், மெலிந்த தேகமுமாய் இருந்த நெப்போலியனை அங்கு எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள்


கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீரர்கள் பனைமரம் போல நிற்கும்பொழுது டெண்டுல்கர் உலக்கை போல நடந்து செல்வதை டிவியில் பார்ப்போம் அல்லவா? அவர் அறிமுகமான ஆட்டத்தில் வால்ஸ் கூட டெண்டுல்கர் தலையில் செல்லமாக தட்டுவாரே, அப்படி தட்டிகொண்டிருந்தார்கள்.


அந்த நெப்போலியன் மகா வித்தியாசமானவன், அவனுக்கு அப்பொழுது தெரிந்ததெல்லாம் படிப்பு, வாசிப்பு, வாசிப்பு


நூலகத்தில் கிடையாய் கிடந்து வாசித்தான், அறையில் அடைபட்டு வாசித்தான், தேர்ந்தெடுத்து வாசித்துகொண்டே இருந்தான்


ஒரு வீட்டுமாடியில் தங்கி இருந்துதான் கல்லூரிக்கு சென்றுவந்தான், சட்டதரணி மகன் என்பதால் அவனுக்கு அந்நியம் அம்பி போல எல்லாமே ரூல்ஸாக இருந்தது.


யாரிடமும் அவன் அதிகம் பேசமாட்டான், ஆனால் படிப்பில் மகா சூரன், அதனை விட முக்கியம் தூங்கும் நேரம் தவிர எதனையாவது வாசித்துகொண்டே இருந்தது, அந்த வீட்டு உரிமையாளருக்கே வியப்பாய் இருந்தது.


"ஏம்பா இது பிரான்ஸ், எல்லோரும் வாழ்வினை அனுபவித்து வாழ்பவர்கள், உனக்கு அதெல்லாம் விருப்பம் இல்லையா? அது இல்லாமல் போகட்டும் ஆனால் நீ கோயிலுக்கும் செல்வதில்லை, விளையாடவும் செல்வதில்லை இப்படி படித்து என்ன கிழிக்க போகின்றாய்" என வாய்விட்டு கேட்டார் கிழவி


அவனோ புன்னகைத்துவிட்டு படித்துகொண்டிருந்தான், பெரும் ராணுவ ஜெனரலாகும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை, தனக்கு அதெல்லாம் சரிபட்டுவராது என்றே எண்ணிகொண்டிருந்தான்


அவனின் ஆசிரியர் அவனைபற்றி பெரும் கனவு வைத்திருந்தார், இவன் கணிதம், பூளோகத்தில் பெரும் ஞானம் கொண்டிருப்பதால் பெரும் கப்பல் மாலுமியாக வருவான் என நம்பினார்.


இந்நிலையில் கார்லோ போனபார்ட்டே மரணமடைந்ததை தொடர்ந்து தன் இருவருட படிப்பினை ஒரே வருடத்தில் முடித்துவிட்டு குடும்பத்தை காக்க பணிக்கு சென்றான் நெப்போலியன்.


அந்த குழப்பமான சூழலில் பிரான்ஸ் அரசன் ராணுவத்திற்கு ஆள் எடுத்துகொண்டிருந்தான், நெப்போலியனின் உருவம் பற்றியெல்லாம் கவலையின்றி, படித்திருக்கின்றான் எதற்கும் உதவுவான் இல்லாவிட்டால் குதிரை சாணம் அள்ளவாவது போடலாம் என சொல்லி அவனையும் சேர்த்துகொண்டார்கள்.


ஒரு சிப்பாயாகத்தான் பிரான்ஸ் ராணுவத்தில் சேர்ந்தான்,


நெப்போலியனுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோசியக்காரன் உலகில் இருந்தார். மிக பெரிய ஜோதிடர் அவர், அவர் கணிப்புகள் எல்லாம் பொய்க்கவே இல்லை.


ஹிட்லர், இந்திராகாந்தி, பின்லேடன், சீன மாவோ, உலகப்போர்கள் வரை அவர் எழுதிவைத்திருந்தவர்.


அவர் பெயர் நாஸ்ட்ரடாமஸ்


Image may contain: 1 personஉலகநாடுகளுக்கு எல்லாம் ஜாதகம் எழுதிய அவர், பிரான்சில் ஒரு மாவீரன் வருவான், பெரும் படை அமைத்து ஐரோப்பாவினை ஆட்டுவான், பின் தனிமை சிறையில் சாவான் என எழுதிவைத்திருந்தார்.


அப்படி ஒரு மாவீரன் பிரான்சில் வருவானா? யாராக இருக்கும் என அவ்வப்பொழுது பேச்சுக்கள் வரும்


ஒவ்வொரு மன்னன் பதவிஏற்கும் பொழுதும் வரும் காரணம் மன்னரை தவிர யாரும் ஆளமுடியாது, படை அமைக்க முடியாது என்பது அன்றைய எண்ணம், உலக நடப்பும் கூட‌


ஆச்சரியமாக நெப்போலியனே அதனை படித்துவிட்டு அப்படி யார் வருவார் என ஆச்சரியபட்டிருக்கின்றான்


தன்னை பற்றி முன்பொருகாலத்தில் நாஸ்ட்ரடாமஸ் எழுதியதை அவன் அன்று உணர்ந்துகொள்ளவில்லை.


இந்நிலையில் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த பெரும் மாற்றம் பிரான்சில் ஏற்பட்டது, நெப்போலியனும் அதனை கவனித்துகொண்டிருந்தான்.


ஆனால் அவன் அப்போது விடுமுறையில் இருந்தான், அதுவும் 2 ஆண்டு விடுமுறை, பிரான்சை சுற்றிபார்க்கின்றானாம்


ராணுவத்திலும் அவனை கண்டுகொள்ளவில்லை, அவனும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை. நாட்டில் நடைபெறும் சிற்சில விஷயங்களை கவனித்துகொண்டிருந்தான், அவன் என்ன செய்ய முடியும்? சாதரண சிப்பாய்.


ஒருவனின் தலைவிதிபடி சூழல் அமையும் என்பார்கள், நெப்போலியனின் தலைவிதியினை அந்த சூழல்தான் மாற்றியது.


காட்சிகள் வேகமாக மாறின..


வாமணன் வருவான்...














 


 

No comments:

Post a Comment