Saturday, October 22, 2016

தியாக பிறப்பொன்று பிறந்த நாள்...

தனக்காக வாழ்பவர் மத்தியில் பிறர்க்காக வாழ்பவர் பலர், அதில் எனக்காக வாழ்பவர் என் தாய்க்கு பின் என் மனைவி, அதாவது பாகம்பிரியாள்


அன்னாருக்கு இன்று பிறந்தநாள், என்னையும் ஒருத்தி கட்டி அழவேண்டும் என்பதற்க்காகவே தியாக பிறப்பொன்று பிறந்த நாள்.


காரணம் என்னோடு வாழ்வதென்பது உலகின் மிக கடினமான காரியம், அதுவும் மனைவியாக வாழ்வதென்பது மிக மிக கொடுமையான விஷம்




உதாரணம், அழகிய கார்கள் அணிவகுத்துவரும்பொழுது அதானை காட்டி பார்த்தீர்களா என்பாள், இந்த 100 கார்களுக்கு எவ்வளவு பெட்ரோல் வேண்டும், அப்படியானால் உலகெல்லாம் எவ்வளவு வேண்டும், எத்தனைஆயிரம் லிட்டர்கல் நொடிக்கு காலியாகும் என்பேன் தலையில் அடித்த்து கொள்வாள்


பட்டுசேலைகளை காட்டி, எப்படி அழகு என்பாள், உனக்கு பட்டின் வரலாறு தெரியுமா?, பட்டு சாலை தெரியுமா? அதனால் வந்த சிலுவை போர் தெரியுமா?, இந்த காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் பிரச்சினை கூட படமாக வந்தது என்றால் அப்படியே நகர்ந்துகொள்வாள்


அழகான கட்டங்களை காட்டி எப்படி இருக்கிறது என்பாள், இதன் அழகிற்காக எத்தனை ஆயிரம் மலைகள் உடைக்கபட்டிருக்கும், எவ்வளவு செம்மண் அழகபட்டிருக்கும் அவை எல்ல்லாம் அழிந்து இது உருவாகி இருக்கிறது என்பேன், பேசாமல் திரும்பிகொள்வாள்


காரணம் நான் அப்படித்தான், அவளும் தண்ணீர் தெளித்துவிட்டாள்.


இப்படியாக எனக்காக அவளின் தவ வாழ்வு தொடர்கிறது, அவள் புதுபடங்களை வைத்தால் நான் சிவாஜியில் மூழ்கிவிடுவேன், பொறுக்கமுடியாமல் சிலநேரம் அழுதே விடுவாள், நான் வியட்நாம் வீடு பார்த்து பத்மினிக்காக அழுதுகொண்டிருப்பேன்.


இப்படியாக தியாக வாழ்க்கை ஒன்றை அவள் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள், யாருக்காக? நிச்சயம் எனக்க்காக.....


நல்ல தாயும், நல்ல மனைவியும் ஆண்டவன் கொடுக்கும் வரம் என்பார்கள், நிரம்ப பெற்றிருக்கின்றேன்


ஒருவனுக்கு சொத்து, வீடு இன்னபிற வசதிகள் பெற்றோர் கொடுக்கலாம், ஆனால் நல்ல மனைவி தெய்வத்தால் மட்டுமே கொடுக்கபடுவாள் என்கிறது பைபிள்


அப்படி கொடுத்த தெய்வம் , அவளை ஆசீர்வதிக்கட்டும், அவள் பல்லாண்டு வாழட்டும்


காரணம் அவள் வாழ வாழத்தான் நானும் வாழமுடியும்.


அவ்வையார் அன்றே அழகாக சொன்னார்


"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்"


அப்படி அவளே சகலமும், அவளே எல்லாமும். பாகம்பிரியாள் என சொல்வதில் மிகை ஏதுமில்லை


அந்த தியாகியினை வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும்



No comments:

Post a Comment