Monday, October 24, 2016

பகுத்தறிவு எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

திராவிடம் பற்றி என்ன குறைகண்டாய், பகுத்தறிவு எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா


பெரியாரும் நாங்களும் (இவருமாம் :) ) போராடவிட்டால் நாடு எவ்வளவு மோசமாயிருக்கும் தெரியுமா? எங்கள் போராட்டத்தால்தான் கல்வி, பெண்விடுதலை, இன்னபிற விஷயங்கள் சாத்தியமாயிற்று என ஒருவன் வந்து சொல்லிகொண்டே இருக்கின்றான்


அதாவது இந்துமதம் ஒரு கொடூரமான மதமாகவும், திராவிட கொள்கைகளே மிக சிறந்தது என ஒப்புகொண்டு எழுதவேண்டுமாம், ஆலோசனை சொல்கின்றாராம்.


தீபாவளி இந்துக்களின் புரட்டு, பிராமணர்களின் அட்டகாச பொய் என எழுதவேண்டுமாம், அப்படியே திராவிட பகுத்தறிவு கொள்கைகளை விளக்கவும் வேண்டுமாம்.


நண்பரே


மதம் என்பது மக்களின் ஆதார நம்பிக்கை, அதனை தகர்க்கும் விதமாகவோ அல்லது புண்படுத்தும் விதமாகவோ கருத்துக்களை சொல்லிவிடமுடியாது.


நாத்திகம் நீங்கள் ஏற்றுகொண்ட பாதையாக இருக்கலாம், உங்களுக்கு பிடித்தமான கொள்கையாக இருக்கலாம், நல்லது, ஆனால் நாத்திகம் உலகினை மாற்றியது என்பதையோ அல்லது அது பலமாற்றங்களை ஏற்படுத்திற்று என்பதோ ஒப்புகொள்ளகூடிய கருத்து அல்ல.


நரபலி என்பது ஆதிகால பழக்கம், சிவன் பிள்ளைகறி கேட்டது புராணம் என்றாலும் கூட, பைபிளில் ஆபிரகாமிடம் கடவுள் கேட்டது நரபலி,அதாவது அக்காலத்தில் உலகெல்லாம் இருந்த பலி.
அதனை எந்த நாத்திகமும் மாற்றவில்லை, ஆனால் காலம் மாற மாற மாறிற்று, ( இன்னும் ரகசியமாக இருக்கின்றதா? என்றால் கிரானைட் குவாரிகளில்தான் கேட்கவேண்டும்)


அடிமை முறை என உலகெல்லாம் இருந்ததே மகா கொடுமையான முறை அதனை சட்டமிட்டு தடுத்த லிங்கன் என்ன நாத்திகவாதியா? அவர் கட்சி என்ன கருப்புசட்டையா?


பெண் அடிமை என்பது இந்துமதத்தில் மட்டுமல்ல, மதங்களின் தாயான யூதமதம் அதனை கடுமையாக சொல்லிற்று, அதன் வழிதோன்றலான இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதனையே தொடர்ந்தன. கட்டுபாடான இஸ்லாம் அதனை இன்னமும் பின்பற்றுகின்றது. கிறிஸ்தவம் ஐரோப்பிய கலப்பலிலும் பெண்ணடிமைதனத்தை போதித்தது.


பின்னாளில் போப்பின் ஆதிக்கம் முடிய, தொழில்புரட்சி ஏற்பட, பணியாளர் பற்றாக்குறை வந்தபொழுதுதான் பெண்கள் வேலைக்கே அனுப்பபடனர், வாக்களளிக்கும் உரிமை கூட நெடுநாள் இல்லை, ஐரோப்பா வாய் கிழிய பேசும் பெண்ணுரிமை வரலாறு இதுதான்.


இன்னமும் பெண்கள் கிறிஸ்தவ போதனைக்கு அனுமதிக்கபடுவதில்லை, பைபிள் போட்ட கடிவாளம் அப்படி, இவை எல்லாம் பெண் அடிமைத்தனம் இல்லையா?


இப்படி எல்லா மதமும் பெண்களை அடிமைபடுத்தியே வைத்திருக்கும் பொழுது, இந்துமதம் மட்டும் அடிமை படுத்தியதாகவும் அதனை நாத்திகம் மாற்றியதாகவும் நீங்கள் சொல்வது நிச்சயம் ஒரிஜினல் நாத்திகமாகாது.


தேவதாசிமுறை இந்து மதத்தில் மட்டும் உள்ளதல்ல, முற்கால சமூகம் பெண்களுக்கு அளித்திருந்த சுதந்திரம் அப்படி. அக்கால திபெத்திய பெண்கள் அவர்கள் தனிமையில் சந்திக்கும் ஆண்களிடம் பெறும் வளையமே அவர்கள் மதிப்பு, யார் அதிக வளையம் வைத்திருக்கின்றாகளோ அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் கூட்டம் அலைமோதும்.


ஒரு பெண்ணிடம் நெருங்க ஒரு வெள்ளாட்டு குட்டி என்பது மேற்காசிய வழக்கம்(பைபிளில் கூட உண்டு), அப்படி பெரும் மந்தை சேர்த்தவளின் சுயம்வரமே அன்று பெரும் ஒலிம்பிக் போட்டி.


பிற்கால எழுச்சிகளில் மற்ற இடங்களில் அவை ஒழிக்கபட்டாலும், முற்கால உலகின் தொடர்ச்சியான இந்தியாவில் அது தொடர்ந்து,
பின் இது நிச்சயமாக‌ இந்துக்களின் தேவதாசிமுறை என அறியபட்டு பழி இந்துமதம் மீது திணிக்கபட்டது.


பெண் ஒரு ஆணின் சொத்து என மதங்களும், மனுதர்மமும் மாற்றிய பின்புதான் உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது.


அதனையும் இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் எனும் பிராமண ஆத்திக சீர்திருத்தவாதி மாற்றினாரே அன்றி ஒரு நாத்திகன் அல்ல.


கம்யூனிசம் ரஷ்யாவில் வென்றபின்பே, இந்தியாவில் நாத்திகவாதம் ஓங்கி ஒலித்தது, அது பின் பரவியது. கடவுள் நம்ப்பிக்கையோடு கூடிய கம்யூனிசம் மட்டும் அமைந்திருக்குமென்றால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்ய ஒன்றியம் அசைந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது.


தம்மை அடக்குபவர்கள் ரஷ்ய திருச்சபை என மக்கள் நம்பியதன் விளைவு ரஷ்யபுரட்சி, அங்கு இன்று நிலை தலைகீழ். பிராமணர்கள் நம்மை எல்லாம் சுரண்டுகின்றார்கள் என நம்பவைக்கபட்டதன் விளைவு தமிழக எழுச்சி.


இந்தியாவில் எத்தனை அரசர்கள், எத்தனை நிலசுவாந்தார்கள் அல்லது ஜமீன்கள் உண்டு. இதில் ஒரு பிராமண அரசன் அல்லது ஜமீன் என காட்டமுடியுமா?, நமது நோக்கம் அது அல்ல விட்டுவிடலாம்.


ஆனால் மதம் என்பது மக்களின் அடிப்படை நம்பிக்கை ஆதாரம், கடவுளை தாங்கள் விரும்பிய வடிவில் வணங்கி கொண்டாடிவிட்டு போகின்றார்கள், ஆனால் ஊர்வலம் எனும்பெயரில் ஏற்படும் சச்சரவுகள் தேவையற்றவை.


கடல் ஒன்றே, மனிதன் இட்ட பெயர்கள் பல. மேகம் ஒன்றே அது பெய்யும் இடங்கள் வேறு. கடவுள் ஒருவரே அதனை மனிதன் வணங்கும் பெயர்கள் பல.


அப்படியே இந்துமதம் கடவுளுக்கு பல உருவத்தினை படைத்து, சில தத்துவங்களை சொல்லி இச்சமூகம் கட்டுப்பாடோடு வாழ சில வகைகளை அக்கால சமூகம் வகுத்திருக்கின்றது, அதனை அவர்கள் பின்பற்றுகின்றார்கள்.


உதாரணம் பிள்ளையார், பிள்ளையாரை கடவுளாக கூட பார்க்கவேண்டாம், அதிலுள்ள தத்துவங்களை காணலாம் அல்லவா?


தாயினை போல் மனைவி அமையவே மாட்டாள், கிடைத்தவளுடன் மகிழ்வாய் இரு எனும் தத்துவமும். சாணியும் அருகம்புல்லும் பெரும் கிருமிநாசினி என சொன்ன தத்துவமும்,


மாக்கொழுக்கட்டையும், வாழைபழம் உடலுக்கு நல்லது எனும் ஆரோக்கியமும் அதில் அடங்கி இருப்பதை மறுக்கமுடியுமா?


தீண்டாமை என்பது யூதமத்தில் உண்டு, தீண்டாமையின் தொடக்கம் அம்மதமே, அதனை கண்டித்த புனிதமான இயேசுவினையே தீர்த்துகட்டிய மதம் அது,


அரேபியரிடமும் அப்படியான பாகுபாடு இருந்தது, நபிகள் நாயகம் அதனை நீக்கத்தான் பாடுபட்டார்.


அதே நேரம் கட்டுபாடு இல்லா மதம் வாழமுடியாது, ஒரு கண்ணுக்கு தெரியாத உயிரினை கூட கொல்லகூடாது என கொள்கையுள்ள மதம் அதாவது மகா கட்டுபாடுள்ள மதம் வாழமுடியாது, புத்தம் அப்படித்தான் சுருங்கிற்று.


எல்லா மதத்திலும் சிற்சில குறைபாடுகள் உண்டு.


ஆனால் இந்துமதம் எத்தனையோ இடர்பாடுகளை கடந்தும் வாழ்கிறதென்றால் அதன் காரணம் அது அனுமதித்திருக்கும் சுதந்திரம். பெருமாள் கோயில் இல்லையா, குளத்துக்கரை சாஸ்தா போதும், அதுவும் இல்லையா ஒரு கல்லும் சூடமும் போதும் தெய்வம் வந்துவிடும்.


இந்த சூட்சுமத்தில்தான் காலம் காலமாக அது தொடர்ந்து வருகின்றது, அதாவது ஒரு சக்தி இல்லாத மதம் இக்காலம் வரை தொடரமுடியாது. சரக்கில்லா கடைவாசலில் ஒரு ஆள் நிற்பார்களா?


ஆயிரமாயிரம் வருடங்கள் கழித்தும் நிலைத்து நிற்பவை இம்மதங்களா? அல்லது பிறந்து வெறும் 90 வருடங்களுக்குள்ளாக மெல்ல செத்துகொண்டிருக்கும் நாத்திகவாதமா?


இந்து மதம் அவர்களின் மதம், அதனை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் அல்லது விட்டு ஒதுங்கிவிடலாம்.


அதனை விட்டுவிட்டு அவர்கள் கொண்டாடிகொண்டிருக்கும் பொழுது, நாத்திக வாதம் பேசுவது எப்படியானது?


எனது தாய் அன்பானவள் என்றால் அது எனக்கு. அதற்காக அடுத்தவன் வீட்டுதாய் காட்டுமிராண்டி என சொன்னால் அவன் மனது எப்பாடுபடும்?


அவனவனின் தாய் அவனுக்கு தெய்வமல்லவா? மதங்களும் அப்படியானவை.


இவ்வுலகம் முழுக்க பல கொடுமைகளும், சிக்கல்களும் இருந்தன. கல்வி மறுப்பு, பெண் அடிமை, தீண்டாமை என சிக்கல் எல்லா நாட்டிலும் மதங்களிலும் இருந்தன‌


காலம் மாற மாற இவை எல்லாம் மாறிற்றே தவிர, இவற்றில் நாத்திகம் சாதித்தது என்ன?


அப்படி மாற்ற நினைத்தவர்களில், மாற்றி காட்டியவர்களில் மத நம்பிக்கை கொண்டவர்களே இருந்தார்களே அன்றி நாத்திக வாதிகள் அல்ல.


நாத்திகத்தின் ஆயுள் 1915களில் தொடங்கி 1990களில் முடிந்துவிட்டது.


இன்னும் நாத்திகம், பகுத்தறிவு, பார்ப்பானியம் என ஏதாவது சொல்லிகொண்டிருந்தால் உங்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை.


உலகில் நடந்தது காலமாற்றம், அது தமிழகத்திலும் நடந்தது அவ்வளவுதான்,


இதில் பகுத்தறிவு இயக்கம் சாதித்தது என்பது குருவி அமர பனம்பழம் விழுந்த கதையே அன்றி வேறல்ல..

No comments:

Post a Comment