Tuesday, October 25, 2016

நான் ஏன் கலைஞரை பற்றி எழுதுகிறேன்?

நீ ஏன் கலைஞரை பற்றி எழுதுகின்றாய், திமுக காரனாய் மாறிவிட்டாயா? எவ்வளவு கொடுத்தார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள்.


திமுக எனும் கட்சியோ, அதன் கொள்கைகளோ (அப்படி ஒன்று இருந்தால்) ஒரு நாளும் எம்மை ஈர்த்ததில்லை, தமிழகத்தின் பல குழப்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை


ஆனால் சில விஷயங்களை ரசிப்பது போல, கலைஞரை ரசிக்க முடிகின்றது. லாராவோ, டெண்டுல்கரோ அந்நாளைய வாசிம் அக்ரமையும், வாக்கர் யூனுஸையும் அற்புதமாக சமாளிக்கும்பொழுது கை தட்டுவோமே அப்படி தட்ட தோன்றுகிறது அவ்வளவுதான்




நான் என்ன ரசிப்பது, அந்நாளைய திமுக எதிரியான இந்திரா காந்தியே சில இடங்களில் புன்னகைத்தார்


அது மிசா காலம், யாரையும் சிறையில் அடைக்க காவல்துறைக்கு அதிகாரமுண்டு, ஆனால் சுவிஸ் வங்கி, மொனாக்கோ வங்கி போல எவ்வளவு பேர் அடைபட்டிருக்கின்றார்கள், எங்கு இருக்கின்றார்கள் என சொல்லமாட்டார்கள்


அதாவது யார் சிறையில் இருக்கின்றார், யார் வெளியில் இருக்கின்றார் என்பதே தெரியாது.


கட்சிக்காரன் சிறையில் இருக்கின்றான் என பத்திரிகையிலும் எழுதமுடியாது, காரணம் பத்திரிகை தணிக்கை இருந்தது.


ஆனால் கட்சி தலைவராக சிறையில் இருப்போர் பற்றி சொல்லியே தீரவேண்டிய கட்டாயம் கலைஞருக்கு இருந்தது.


மனிதர் யோசித்தார், ஒரு மலர் வளையம் வாங்கினார் கட்சி சார்பில் அண்ணாவிற்கு அஞ்சலி என அறிவித்தார், அந்த கூட்டத்தில் வாசித்தார்


"நம் இதய தெய்வமாம் அண்ணா அவர்களின் நினைவு நிகழ்ச்சிக்கு வராதவர்கள் பட்டியல்.." என பல பெயரினை வாசித்தார்


வாசித்து முடித்து சொன்னார், "மறுபடியும் சொல்கின்றேன் இவர்கள் எல்லாம் வரமுடியாதவர்கள்.."


புரியவேண்டியவர்களுக்கு புரிந்தது, அதாவது அரசு மறைத்த ரகசியம் வெளிவந்துவிட்டது,


சிறையில் இருப்பவன் எப்படி அண்ணா சமாதிக்கு வருவான்?


இந்த அண்ணா சமாதி செய்தியினை பத்திரிகைகளால் தடை செய்யவும் முடியவில்லை, இந்த நுட்பத்தினை அவர்கள் உணரவில்லை, ஏதோ அறிவிப்பு போல செய்துவிட்டார்கள்.


இப்படியாக தமிழகத்தில் மட்டும் உண்மை நிலையினை வெளிகொணர்ந்தார் கலைஞர்


இந்த 5ம் வகுப்பு கூட தாண்டாதவரின் நுட்பத்தினை கண்டு, தன் தோல்வியினை ஒப்புகொண்டு புன்னகைத்தார் இந்திரா, வெளிநாட்டில் படித்த இந்திரா.


சொல்லுங்கள், இப்படி ஒரு நுட்பமான அரசியல்வாதி இனி சாத்தியமா?


அந்த ரசனையே தவிர, கட்சி அபிமானம் எல்லாம் இல்லை






கொசுறு 1


"பெண்களின் உரிமை தொடர்பான பிரச்சினையை முஸ்லிம்–இந்து பிரச்சினையாக பேச வேண்டாம் என தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


இது முன்னேற்றத்துக்கான பிரச்சினை. இந்த விவாதம் மறுசீரமைப்பு வேண்டுவோர் மற்றும் வேண்டாதோர் அடங்கிய முஸ்லிம் அறிஞர்களுக்கு இடையே நடத்தப்பட வேண்டும்.


முஸ்லிம் பெண்களுக்கு அரசியல்சாசனத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளது" : பிரதமர் மோடி


வாழ்த்துக்கள் மோடி, மிக பொறுப்பான கோரிக்கை.








 கொசுறு 2


அனைத்து கட்சிகளிலிருந்தும் ஆட்களை சேர்த்துவிட்டு,அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது நயவஞ்சக நரித்தனம்.-வைகோ..

ஹஹஹஹா இவரே முன்னாள் திமுக நபர், தாய் கட்சிதானே அழைக்கின்றது சென்றால் என்ன?

சாதாரண பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே இவர் திமுகவில் இருந்ததால்தான் வர முடிந்தது, அதன் பின் இவரை எம்பி ஆக்கி கழகத்தின் போர்வாள் என ஆக்கி அடையாளமிட்டது அவர்கள்தான்.

திமுக என்றொரு கட்சி இல்லை என்றால் கோப்பால் சாமி ஒரு தோற்றுபோன வக்கீலாக எங்கோ அலைந்துகொண்டிருப்பார்.

இவர் கட்சி தொடங்கியது போலவும், திமுக அதனை உடைத்தது போலவும் பேசி கொண்டிருக்கின்றார்.

10 பேர் வெளிவந்தார்கள், 8 பேர் திரும்பி விட்டார்கள், ஒன்று அடிமை சாசனம் எழுதி இன்னொவாவில் சுற்றிகொண்டிருக்கின்றது

இவர் தனியாக நின்று துண்டை முறுக்கி சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்.

கோப்போலா..கோப்பாலா
மலையேறு கோப்பாலா..............




கொசுறு 3




தேர்தல் புறக்கணிப்பு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

உலகமே எதிர்பார்த்த விஷயத்தின் முடிவு இது,

எதற்கும் பங்குசந்தை முதலீடுகளை எல்லோரும் திரும்ப எடுத்துகொள்வது நல்லது, இப்பொழுது உலக சந்தை மூடபடும் பாருங்கள்.


சிரிய யுத்தம், உலக பொருளாதாரம் என பல பாதிப்புகளை ஏற்படுத்தபோகும் அறிவிப்பு வெளிவந்துவிட்டது

அமெரிக்க தேர்தல் களத்தில் இதன் பாதிப்பு நிச்சயம் தெரியும். அமெரிக்க டாலர் மதிப்பு எப்படி குறையும் என பாருங்கள்,

ஒபாமாவும் புட்டீனும் மிக அவசர சந்திப்பினை நடு கடலில் கூட நடத்தும் அளவிற்கு மிக நெருக்கடியான அறிவிப்பு...










No comments:

Post a Comment