Saturday, October 15, 2016

நெல்லையின் சதாம் ஹூசைன் : பாகம் 01



Image may contain: 2 people


ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், அவரை அறியாமல் ஒரு மாணவன் பெயில் கூட ஆகிருக்கமுடியாது.


கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை மாகாணத்தின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி,


வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் கதைதான்)


ஒருவழியாக கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கி தென்னகம் வந்து ஆற்காடு நாவாப்பையும் பிடித்தனர். நவாப் வடிவேலு பாணியில் "சொன்னார் நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க"


இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் "தேங்க் யூ..தேங்க் யூ" என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள், வல்லாட்சி நடந்தது.


அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி, சினிமா தமிழருக்கு அவர் பெயர் நன்றாக தெரியும், வேறுயாருமல்ல கமலஹாசனின் கனவில் வரும் அபூர்வமாக வரும் ஆண்களில் ஒருவர்,


அவர் மருதநாயகம்.


பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.


ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.


மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.


அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.


அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் மாவீரன் திப்புசுல்தான். சவால் என்றால் ராக்கெட் வீசி வெள்ளையனை அதிரசெய்யும் அளவிற்கு திகில் கொடுத்தார், இவரை அடக்காமல் இந்தியா நமக்கெல்ல என கம்பெனி முடிவுசெய்த நேரம். கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.


பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்த்திதான் வந்தான்.


"வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்" என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, "நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன்" என்ற அதிரடி, அப்படி செய்த் காட்டினார்.


மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர பாளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.
உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.


அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.


பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.


வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.
ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.


அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.


ஒருவழியாக மைசூர் புலியினை மதவெறி தூண்டிவிட்டு சாய்த்தபின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.


அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.


புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.


இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16


நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.


சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக "அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்" என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.
உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.


இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் எப்படி தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார் என்பதை பின்னர் பார்க்கலாம்.


தொடரும்  (பாகம் 2)














No comments:

Post a Comment