Wednesday, October 26, 2016

சீனப்ட்டாசு மட்டும் வெடிக்கவே கூடாதாம்...



பெப்சியும் கோக்கும் குடித்துகொண்டே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்,


சீன பட்டாசை வாங்காதே, சிவகாசி பட்டாசை மட்டும் வாங்கு என போதிக்க தொடங்கிவிட்டான்


அது என்ன சீனபட்டாசு மட்டும் விலக்கு?, அதனை தவிர எல்லாமும் வாங்கலாமா?


சீன பொருள் மலிவு, ஆனால் எப்படி மலிவு என்பதை யோசிக்கமாட்டார்கள், டிசைன் அப்படி.


அவர்களால் எப்படி இந்த விலைக்கு கொடுக்கமுடியும் ? அவர்களால் சல்லி விலைக்கு கொடுக்க முடிகிறதென்றால் என்ன அர்த்தம்.


இரண்டே விஷயங்கள்தான்


ஒன்று இது கட்டுபடியாகும் விலையே, இன்னொன்று அரசு கொடுக்கும் தொழில் ஊக்குவிப்புகளும் அங்கு குவியும் முதலீடுகளும்.


நிலையான அரசு, மோதல்களை அனுமதிக்காத அரசு, நொடியும் தயங்காமல் உழைத்துகொட்டும் மக்கள் என அவர்களால் இப்படி உற்பத்தியினை பெருக்க முடிகின்றது.


வியாபாரிகளை வைக்கவேண்டிய இடத்தில் சீனா வைத்திருக்கின்றது, வியாபாரிகளிடம் நன்கொடை பெற்று கட்சி நடத்தும் அவசியம் அவர்களுக்கு இல்லை,


கட்சி நன்கொடை இல்லை, தேர்தலுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அழிச்சாட்டிய தேவை இல்லை, குவார்ட்டர் பிரியாணி, பேனர் செலவு இம்சை இல்லை. ஏகபட்ட இல்லை


அதனால் வியாபாரிகள், தொழிலதிபர்களை கட்டுபடுத்தி வைக்கின்றார்கள், காதினை திருகி வரி வசூல் செய்ய முடிகின்றது, அதனை தொழில்துறைக்கு திருப்பமுடிகின்றது


இந்திய நிலைக்கு டாடா, அம்பானி, மல்லையா, வைகுண்டராஜனே சாட்சி. தொடமுடியுமா? தொட்டுவிட்டு அரசு நடத்தமுடியுமா?


பின் எப்படி பொருள் விலை குறையும்?


இங்கு நிலை என்ன? விவசாயம் அழிந்து வியாபாரம் லாப சம்பந்தமான தொழில் என அறியபட்டிருக்கும் நாடு இந்தியா. உற்பத்தி பற்றி, அடக்க விலைபற்றி கவலைபடமாட்டோம்,


வியாபாரி வைத்ததே விலை.


ஆனால் அதனை உடைத்து இந்த விலைக்கு கொடுக்கலாம் என சீனன் சொன்னால் உடனே பற்றி எரியதொடங்குவார்கள்.


பிரச்சினை வியாபார இந்தியாவின் பார்வையில் இருக்கின்றது, வியாபாரிகள் வைக்கும் விலையில் இருக்கின்றது.


இதனை பற்றி எல்லாம் பேசினால் நீ தேசதுரோகி என பெப்சியினை குடித்துகொண்டு, கேஎப்சி கோழியினை கடித்துகொண்டே நம்மை நோக்கி சொல்வார்கள்,


அமெரிக்க கோக், பர்கர் என விற்கலாம், பிரான்ஸ் விமானங்கள் பறக்கலாம், ஜெர்மானிய எந்திரங்கள் புல்டோசர் என அலையலாம், தென்கொரிய, ஜப்ப்பானிய கார்கள் விரையலாம்


ஆனால் சீனப்ட்டாசு மட்டும் வெடிக்கவே கூடாதாம்.


அதுதான் விசித்திரம்.


அதனை விட ஒரு மவுன விசித்திரம் உண்டு, கொஞ்சநாளாகவே சீன பட்டாசுகளை மொத்தமாக வாங்கி, இந்திய அடையாளங்கள் ஒட்டி இந்திய பட்டாசு என விற்கின்றார்கள் என ஒரு சர்ச்சை வந்தது.


ஆக சீனபட்டாசினை இந்திய அடையாளத்தோடு வாங்கினால் இந்திய வியாபாரி சம்பாதிப்பான், மக்கள் எந்த விலையும் கொடுத்து தொலையட்டும்


ஆனால் சீனப்ட்டாசை மக்கள் நேரடியாக வாங்கினால் எந்த வியாபாரி சம்பாதிப்பான்?


ஆக மக்களே சீன பட்டாசினை இந்திய அடையாளத்தோடு விற்கும் இந்திய முதலாளிகளிடம் வாங்கினால் அது தேசபற்று


நேரடியாக சீனபட்டாசினை குறைந்தவிலைக்கு வாங்கினால் அது இந்தியன் வயிற்றில் அடிக்கும் செயல் என ஒரு தியரி எழுதபட்டு கொண்டிருக்கின்றது


இருக்கட்டும்


இந்தியாவிற்கு பட்டாசு விற்றுதான் தன் பொருளாதரத்தை நிறுத்தும் நிலையில் அவர்கள் இல்லை, நாளையே பாகிஸ்தானை தூண்டிவிட்டு நாலு விமானம் விற்றால் கணக்கு சரி


இன்னொரு பக்கம் அவர்களின் சில பலம் கவனிக்கவேண்டியவை, சமீபத்தில் இப்படி தீவு தொடர்பாக ஜப்பான் முறுக்கிகொண்டபொழுது சில அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதில்லை என முடிவெடுத்தபொழுது ஜப்பான் இறங்கிவரத்தான் செய்தது.


விவசாய பொருள் உற்பத்தியிலும் சீனா முண்ணணியில் இருக்கின்றது, ஆப்ரிக்க நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அவர்கள் விவசாய முதலீடு குவிந்திருக்கின்றன, அது பின் சீன பொருளாக விற்கபடுகின்றன‌


வெங்காயம் முதல் காரட் வரை பின்னி எடுக்கின்றார்கள்


ஆக சீனபொருளை வாங்காதே என சொல்லிகொண்டிருப்பதை விட, சீனாவினை போல நாம் எப்படி செய்துகாட்டலாம் என்பதே அர்த்தமுள்ளது.


உற்பத்தி துறையில் அவர்கள் தொட்டிருக்கும் உயரம் நிச்சயம் பெரிது.


நாளையே புல்லட் ரயில் அமைக்கவேண்டும் என்றால் ஜப்பானிய விலையினை விட, சீன புல்லட்ரயில் மலிவாகத்தான் இருக்கும்


அப்பொழுது நம் அரசு யாரிடம் வாங்க சொல்லுவோம்?


வீணாக அவர்களை குறை சொல்வதை விட இந்திய வியாபார உலகம் எப்படி சம்பாதிக்கின்றது என சிந்தியுங்கள்


அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நம்மால் கொடுக்கமுடியவில்லை என சிந்தியுங்கள்


இந்நாடு வியாபாரிகளின் வேட்டைகாடாக மாறிவிட்டது என்பது தெரியும்






No comments:

Post a Comment