Sunday, October 23, 2016

மறுபடியும் பறவைக் காய்ச்சல்....


Image may contain: one or more people


மறுபடியும் பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் தொடங்கியாயிற்று, வழக்கமாக வடக்கு சீனாவில் இருந்து தொடங்கும் சர்ச்சை இம்முறை டெல்லியில் தொடங்கியிருக்கின்றது


சரணாலயம் மூடபட்டிருக்கின்றது, கோழிபண்ணைகள் கண்காணிக்கபடுகின்றன என சில பரபரப்புகள் கிளம்புகின்றன.


நவீன காலத்தில் எல்லாமே சந்தேக கண்கள், எதற்கெடுத்தாலும் ராசாயணம், ஊட்ட சத்து ஊசி, ஹார்மோன் ஊசி என்பன ஹாலிவுட் நடிகைகள் செய்துகொள்ளும் ஆப்பரேஷன்களை போல, ஹார்மோன் ஊசிகள் கோழிகளையும் விட்டுவைக்கவில்லை.


பறவகைகள் கொத்து கொத்தாக சாகும், அதன் மூலம் சுற்றுபுற சீர்கேடு கெட்டு மனிதர்களுக்கும் நோய்பரவும் என்பதால் இது அச்சத்தோடு நோக்கபடும் காலமிது


பறவை காய்ச்சல் செய்திவந்துவிட்டாலே எந்த நாடும் கோழி இறக்குமதிகளை நிறுத்திவிடும், உற்பத்தி தேங்கும். இதனால் இரு நாட்களாக கோழிகறி பெரும் விலை வீழ்ச்சியினை வடக்கே சந்தித்திருப்பதாக சொல்கின்றார்கள்.


அதனை உண்ணாதீர்கள், நோய் வரும் என ஒரு கூட்டம் எச்சரிக்கின்றது.


இம்மாதிரி விஷயங்களில் அரசு தகுந்த நிபுணர்களை கொண்டு சொல்லபடும் பரிந்துரைகளைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும், அதுதான் செய்யவேண்டியது


அரசு செய்யவேண்டியதை செய்யட்டும், மக்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்


ஆனால் பறவைகாய்ச்சல் என்பது ஏதோ சமீபத்தில் ஏற்படும் விஷயமல்ல, அது அக்காலத்திலிருந்தே அவ்வப்போது கலைஞருக்கு வரும் தீடீர் தமிழர் அக்கறை போல, அமெரிக்காவுற்கு அவ்வப்போது வரும் உலக அமைதி ஞானம் போல, தீடீரென‌ வந்துகொண்டேதான் இருந்தது தான் இருந்தது.


அன்று இவ்வளவு பரபரப்பில்லை, ஓஓஓ கோழி சீக்கு என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள், காரணம் இப்படி லட்சகணக்கான கோழிகளை ஒரே இடத்தில் வளர்ர்கும் அவசியம் அன்று இல்லை, வீட்டுக்கு வீடு நாட்டு கோழிகள் இருக்கும், மொத்த எண்ணிக்கை 50 ஐ தாண்டாது.


விஐபிக்கள் வருகை, குடும்ப பஞ்சாயத்து, பண்டிகை, இவற்றினை பொருத்து அவை உணவாகும்.


அதாவது பெரும் கூட்டம் என்றால் ஆடு, சிறிய கூட்டம் என்றால் நாட்டுகோழி அவைதான் விருந்தினை தீர்மானித்தன‌


இந்த பிராய்லர் கோழி, ஊசி, ரசயாண உணவுகள் என இம்சைகள் எல்லாம் அன்று இல்லை.


ஆனால் கோழி சீக்கு இருந்தது, கோழிக்கு மட்டுமல்ல ஆடுகளுக்கும் ஒரு நோய் அவ்வப்போது வரும், அன்று ஊரெல்லாம் உப்புகண்டம் எனப்படும் கொடிகறி போடிவார்கள், கொடிகளில் அது காய்ந்துகொண்டிருக்கும்


ஆடு நோயில் சிக்கிவிட்டது என்றவுடன் அறுத்துவிடுவார்கள், எனக்கு தெரிந்து எங்கள் தோட்டத்தில் இருந்த கிடையிலே 30 ஆடுகள் வரை இரு நாளில் வெட்டபட்டது, ஈரல்களை மட்டும் 48 மணிநேரம் தொடர்ந்து சுட்டு விழுங்கிய கின்னஸ் காலங்கள் அவை.


கோழி சீக்கும் அப்படித்தான் வரும், வழக்கமாக நள்ளிரவில் உறங்கும் கோழிகள், பகலில் இன்றைய அதிமுகவினர் போல தலையினை லேசாக தொங்கவிட்டால் போதும், அவ்வளவுதான் உற்சாகம் பலருக்கு பீறீட்டுகொள்ளும்.


அக்கோழி இரவில் தூங்காமல் பகலில் தூங்கினாலும் விட மாட்டார்கள், இல்லை இல்லை உனக்கு நோய்தான், விட்டால் செத்துவிடுவாய் என அறிவித்துவிட்டு கழுத்தினை திருக்கி வெந்நீரில் முக்கிவிடுவார்கள்.


பாம்படம் அணிந்த கிராமத்து கிழ‌விகள் அதனை ஓலைதீயில் காட்டி கோழி முடியினை எரிக்கும்பொழுது, தோலினை கருக்கும்பொழுது வரும் வாசம் ஊரெல்லாம் காற்றில் நிரம்பி கிடக்கும்.


அப்படி அன்றைய பறவை காய்ச்சல் கிராமங்களில் தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாமும். கொண்டாடி தீர்ப்பார்கள், ஊரெல்லாம் கோழி மணக்கும், திரும்பிய பக்கமெல்லாம் கோழி இலையில் கிடக்கும்.


யாருக்கும் அதனால் நோய் வந்ததாகவோ, உடல்நலம் பாதிக்கபட்டதாகவோ மூச்சும் இருக்காது, கடும் உற்சாகத்தோடு அலைவார்கள்.


அப்படி ஒரு காலத்தில் பறவை காய்ச்சலை கொண்டாடி தீர்த்த சமூகம்தான் இன்று டெல்லியில் பறவை காய்ச்சல் என்றவுடன் "அய்யோஓஓஓஓ...." என அலற தொடங்கி இருக்கின்றது


காரணம் காலமாற்றம், அன்று நமக்கு தேவையான கோழிகள் இயற்கை முறையில் வளர்க்கபட்டன, இன்று வியாபார உலகம் லட்சகணக்கான கோழிகள் ஹார்மோன் ஊசிகளாலும், ரசாயாணத்தாலும் ஒரு பொம்மை பொல யாருக்காகவோ வளர்க்கபட்டு, இன்று பறவைகாய்ச்சல் என்றவுடன் அலற வைக்கின்றன.


அன்றைய பறவை காய்ச்சல் கோழிகளை தின்றாலும் பாதிப்பில்லை, காரணம் அவை கிராமங்களில் எல்லாம் தின்று, புழுதியோடு புழுதியாய் வளர்ந்தன, பூரான் முதல் கரையான் வரை விடாது விழுங்கியவை


அவற்றின் உடலில் நோய் விஷமில்லை, மாறாக நோய் எதிர்ப்பு சக்திகள் அப்படி இருந்தன. எல்லா கோழியும் இறக்காது, கொஞ்சம் சுணங்கும், விட்டால் எழுந்துவிடும்தான்


ஆனால் விழ யார்விடுவார்கள், அடுப்பில் விழவைத்து மகிந்துகொண்டிருப்பார்கள்.


இக்கால கோழிகள் ஒரு விஞ்ஞான உயிர் பொம்மை, அவ்வளவுதான். நாட்டுகொழியின் சுவை கண்டவர்கள் இக்கோழியினை கண்டால் நகைக்கத்தான் செய்வார்கள். அவைகளின் பலமும் அவ்வளவ்தான், சிறு நோய்க்கும் அவை தாங்குவதில்லை, இவைகள்தான் நகரத்தில் புரோட்டீன் சத்திற்கு பிரதானம், கால கோலம்.


ஆனால் அக்கால கிராமத்து நாட்டுகோழி அப்படி அல்ல.


இயற்கை உணவினை உண்டு, ஓடியாடி வளர்ந்து, சுவையான இயற்கை கோழிகள் அவை. கலப்படமில்லா ஆனால் எடைமட்டும் குறைந்திருந்த மளிகளைகளை கொண்டு சமைக்கபட்ட கோழிகறி அப்படி சுவையானவை.


அக்காலங்கள் அவ்வளவு அருமையானவை, இனி திரும்பி வாரா


இக்கால பறவை காய்ச்சல் எச்சரிக்கைகளை கேட்டவுடன் அக்காலம் நினைவுக்கு வருகின்றது


எங்கள் ஊரில் ஒரு தாத்தா இருந்தார், மனிதருக்கு இறைச்சி என்றால் உயிர், அப்பாவி மனிதர். மனைவி கடும் ஸ்டிரிக்ட் முதல்மரியாதை பொன்னாத்தா போல் அல்ல, மாறாக வாரத்திற்கு ஒருமுறை கோழ்க்கறி வேண்டும் என அவர் ஸ்ட்ரைக் செய்தால் அவரும் என்ன செய்வார்?


அன்றும் ஏதோ கடும் கோழிக்கறி தகறாறு போல, மனிதர் தோற்றுவிட்டு விஜயகாந்த் போல பாவமாக திண்ணையில் அமர்ந்திருந்தார்.


நான் அவ்வழியாக சென்றுகொண்டிருந்தேன்


என்னை அருகில் அழைத்து, மிக மெதுவாக கேட்டார்


"அப்பாவு...இந்த கோழிகளுக்கெல்லாம் ஒரு சீக்கு வருமே.. அது எப்பொழுது வரும்?


வாசலில் நின்ற அவரின் மனைவி கண்களை உருட்டிகொண்டிருந்தார்,


ஆனால் அதனையும் மீறி ஒரு புன்னகை அவரிடம் வெளிபட்டது.


அப்படி இருந்த கிராமங்கள்தான் இன்று பறவை காய்ச்சல் என்ற செய்தியினை மிக பயந்து. பெரும் நோய் போல பார்த்துகொண்டிருக்கின்றன...




No comments:

Post a Comment