Friday, October 21, 2016

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்...

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்.


அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள்


இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும்.


அப்படி என்ன என்கின்றீர்களா?


பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லை


பிரம்மோஸ் மிக பலமான அஸ்திரம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சீனா அதனை போன்றே ஒன்றை உருவாக்கிவிட்டது, கேட்டால் இது கப்பல் தகர்க்க நாங்கள் உருவாக்கியது என ஏதோ சொல்கின்றது


அமெரிக்க ஏவுகனைகள் மகா துல்லியம் வாய்ந்தவை, பல இடங்களில் அவை யுத்தகளங்களில் சோதிக்கபட்டுகொண்டிருப்பவை, இன்னொன்று அவர்கள் ஒரு ஆயுதத்தினை வெளிகாட்டுகின்றார்கள் என்றால் அதனை விட சிறப்பான ஒன்றை மறைத்து வைத்திருப்பார்கள் என்பது பெண்டகன் தியரி


சீனா சமீபத்தில் உளவுபார்க்க வந்த‌ அமெரிக்க செயற்கை கோளினை கூட தனது ஏவுகனையால் தகர்த்தது பெரும் ஆச்சரியம். அப்படி அவர்களிடமும் சில விஷயங்கள் உள்ளது.


அமெரிக்கா பற்றி நாம் நம்மை ஒப்பிடமுடியாது, காரணம் பல யுத்தங்களை உலகெங்கும் நடத்தியவர்கள், தங்கள் ராணுவத்தை நாள்தோறும் பலபடுத்துபவர்கள்.


ஏவுகனைமுதல், கப்பல் வரை அவர்கள் ராணுவத்தை உலகெல்லாம் சோதித்துகொண்டே இருப்பவர்கள்


அவர்களுக்கு யுத்த அனுபவம் மிக அதிகம், நாமோ பாகிஸ்தானை தவிர யாரிடம் மோதி இருக்கின்றோம்?


அப்படிபட்ட அமெரிக்காவிடம் இல்லாத நீர்மூழ்கி கப்பல் பலம் நம்மிடம் உண்டாம்


அவர்கள் நீர்மூழ்கிகள் இன்றும் உலகெல்லாம் கடலுக்கடியில் நிற்கின்றன, உத்தரவு கொடுத்ததும் சட்டென்று டால்பின் போல ஏவுகனைகள் கடலுக்குள்ளிருந்து எதிரி நாட்டுமேல் பாயும், நொடியில் பாயும்


நம்மிடம் இருக்க்கும் நீர்மூழ்கி கப்பல்கள் அம்மாதிரி அல்ல, ஆனால் எதிரி கப்பல்களை உடைக்க சில இறக்குமதிகள் உண்டு


ரஷ்ய நீர்மூழ்கிகளும் மகா சக்திவாய்ந்தவை


இந்தியா அவற்றில் சில வாங்கி இருக்கலாம். ஆனால் எல்லா குருவும் தன் பாதுகாப்பிற்கு சில விஷயங்களை மறைத்துவிட்டே சிஷ்யனுக்கு சொல்வார்கள்.


அவ்வளவு ஏன் அஞ்சப்பர் பிரியாணி, வாடிக்கையாளர்களுக்கு இருப்பதை விட அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு சிறப்பாக இருக்கும் அல்லவா?


ஆக என்னதான் இறக்குமதி செய்தாலும், சில விஷயங்களில் அவை தரகுறைவாகவே இருக்கும்.


ஒரு சத்தமும் வராது.


அடுத்த செய்தி இந்திய ஏவுகனை ஆகாஷ் ஒரே நேரத்தில் 10 விமானங்களை வீழ்த்தும்


ஆனானபட்ட இஸ்ரேலிய, அமெரிக்க சிஸ்டமே ஒரு விமானத்தை வீழ்த்த இரு ஏவுகனைகளை அனுப்பும், ஆனால் இந்தியா ஒரே கனையில் 10 விமானங்களை வீழ்த்துமாம்


ராமாயணம், மகாபாரதம் படித்துவிட்டு விஞ்ஞானம் படிக்க சொன்னால் இப்படித்தான் உளறுவார்கள் போலும், ராமனின் அம்பு 7 மரங்களை துளைத்தது என்பார்கள்


இந்த கூட்டம் அதனை 7 விமானம் என மாற்றி அளந்துவிடுகின்றது, அப்படி ஒரு கனை இப்போதைக்கு சாத்தியமே இல்லை.


சரி அப்படி அருமையான ஏவுகனையினை வைத்துகொண்டு ஏன் போனவாரம் ரஷ்யாவிடம் 50 ஆயிரம்கோடிக்கு புக் ர ஏவுகனைகளை அதாவது எஸ் 400 ரகத்தினை இந்தியா வாங்கவேண்டும்?


ரஷ்ய தயாரிப்பான சுகோய் 30 இந்திய தயாரிப்பாம், இப்படி ஒரு புளுகு மூட்டை, அப்படி இந்திய தயாரிப்பென்றால் ரஷ்யாவிடம் பின் வாசல் வழியாக கொடுத்து முன்வாசல் வழியாக வாங்குகின்றோமா?


அடுத்த செய்திதான் மகா காமெடி


இந்தியாவின் அர்ஜூன் டாங்க், அணுகுண்டாலும் உடைக்க முடியாதது


எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? இப்படி எல்லாமுமா அளந்து விடுவார்கள்?


அணுகுண்டு வெடிக்கும்பொழுது அதன் வெப்பநிலை சில ஆயிரம் டிகிரி வெப்பநிலையினை அசால்டாக கொடுக்கும், அப்பொழுது உருகாத பொருள் ஒன்றுமில்லை, அதன் சக்தி அப்படியானது.


இன்றளவும் அமெரிக்கா சில நாடுகளுகளிடம் தயங்குவதும், இஸ்ரேல் முந்திகொண்டு சிரிய,ஈராக்கிய அணுவுலைகளை நொறுக்கியதும், இன்று ஈரானை குதற வெறியாக அலைவதும் அணுகுண்டுக்கு பயந்துதான்


காரணம் அதன் சக்தி அப்படியானது, அதனால் அடிபட்டுவிட்டால் அடுத்த 70 வருடம் அந்த நகரம் எழும்ப வாய்பில்லை, இப்பொழுதுள்ள அணுசக்தி அப்படி, ஹிரோஷிமா, நாகசாகி எல்லாம் கோலிகுண்டு சைஸ்,


அதன் முன் அர்ஜூன் டாங்க் அசையாதாம், அள்ளிவிடுகின்றார்கள்


இனி மோடி அணுகுண்டாலும் அசைக்கமுடியாதவர் என சொல்ல தொடங்கிவிடுவார்கள், உடனே ஒரு கூட்டம் ஹேய் என கைதட்ட காத்துகொண்டிருக்கின்றது.


விளம்பரங்கள் எல்லோரும் செய்வதுதான், ஆனால் இப்படிபட்ட கடும் வதந்திகள் எந்த ஆட்சியிலும் வந்ததில்லை


பொருளாதார வதந்தி முதல் பரப்பியவர்கள் இன்று ராணுவ வதந்திகளை கிளப்புகின்றார்கள்


இந்த பாஜக அப்படி ஒருமாதிரியான கட்சி, விளைவுகளை பற்றி அது யோசிப்பதில்லை, அது 1998ல் அழகாக தெரிந்தது.


இந்தியாவின் அணுகுண்டு 1974லே வெடிக்கபட்டுவிட்டது, அதாவது அன்றே நாம் அணுசக்தி நாடு. அதன் பின் வெறியாய் அலைந்த பாகிஸ்தானுக்கு அணுசக்தி கிட்டவில்லை. கிட்டியது போல் இருந்தாலும், அப்படி இருப்பதை எப்படி சொல்ல என தயங்கி நின்றது, அதாவது அரைகுறை அணுகுண்டு அவர்களிடம் இருந்தது.


வாஜ்பாய் அரசு ஏதோ முதல்முறை செய்வதுபோல சீன் காட்ட, இதுதான் சாக்கு என கண்டுகொண்ட பாகிஸ்தான், நன்றி வாஜ்பாய், நன்றி என சொல்லி அதன் முதல் அணுகுண்டினை சோதித்து நம்மை பயமுறுத்தியது


இன்று யுத்தம் மூண்டாலும் வெற்றி நமக்கே, ஆனால் அதன் அணுசக்தி இந்தியாவில் பெரும் அழிவினை உண்டு பண்ணும், அதனால் முழு யுத்தத்திற்கு இந்தியா தயங்கவே செய்யும்


அப்படி எல்லாம் செய்பவர்கள்தான், இன்று இப்படிபட்ட ராணுவ காமெடிகளை அள்ளிவிடுகின்றார்கள்


இதனை எல்லாம் படிக்கும் வெளிநாட்டினர், நிச்சயம் தலையில் அடித்துகொண்டு சிரிப்பர்


இது ரஷ்யருக்கு தெரிந்தால் சத்தமாக சொல்வர், இப்படிபட்ட அணு அறிவுள்ள கட்சியினர் கூடங்குள அணுவுலையினை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம், 3ம் 4ம் உலை என்ன?


30ம் 40ம் உலைவரை நாம் அங்கு கட்டலாம், மீறி எவனாவது அணு ஆபத்து, காப்புறுதி, அணுகழிவு என சொன்னால் இப்படி சமாளிக்கலாம்


எப்படி?


"உங்களிடம்தான் அர்ஜூன் டாங்கி இருக்கின்றதல்லவா? அது அணுகுண்டாலும் உடைக்கமுடியாது அல்லவா?, ஏதும் சிக்கல் என்றால் அதற்குள் அமர்ந்துகொள்ளுங்கள்.."


இன்னும் இவர்கள் என்னென்ன சொல்வார்களோ, பார்க்கலாம்


அங்கிள் சைமன் கூட்ட காமெடி போலவே, இன்னொரு கூட்டமும் ஆரம்பித்திருக்கின்றது.

No comments:

Post a Comment