அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது,
அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று
உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் அதன் கரையிலேதான் உருவானது
இன்னும் ஏராளமான பெருமைகள் அதன் கரையிலே உருவாயின, ஒன்றல்ல இரண்டல்ல சொன்னால் பெருமை தாங்காது.

சிலப்பதிகாரம், தஞ்சை பெரிய கோயில், திருவையாறு கர்நாடக இசை போன்ற அழியா கலைகள் ஒரு எடுத்துகாட்டே தவிர இன்னும் ஏராளம் உண்டு
அந்த காவேரியில் இன்றைய ஆடிபெருக்கு மகா விஷேசமாக கொண்டாடபடும், அன்றைய காலங்களில் மிக சரியாக ஆடி மாதம் அது பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது, அன்று கன்னடத்தில் அணைகள் இல்லை, தமிழகத்தின் அதன் துணையாறுகளான அமராவதி, பவானி, நொய்யலிலும் அணைகள் இல்லை,
எப்படி பெருக்கெடுத்து வந்திருக்கும் காவேரி, நினைத்தாலே இனிகத்தான் செய்கிறது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்குன்றது.
கல்லணை அந்த வெள்ளபெருக்கில் கட்டபட்டதுதான் ஆச்சரியம், எப்படிபட்ட நுட்பம் என இன்றுவரை தெரியாது, எல்லாமே அனுமானம்.
அந்த கல்லணை மூலம் அக்கால சோழநாடே செழித்தது, செழித்தது என்றால் முப்போகம் தவறாமல் விளைந்தது, எல்லா வகை நெல்லும் அங்கே விளைந்தது என்கின்றார்கள்.
ஆடியில் பொங்கி வரும், அந்த பெருக்கெடுத்த காவேரியினைத்தான் பூ தூவி வணங்கிவிட்டு விதைக்க சென்றிருக்கின்றார்கள், நன்றியோடு
இன்று காவேரி மணல் அள்ளும குவாரியாக மாறிவிட்டாலும் அந்த பண்பாடு தொடர்கின்றது, ஏதோ சாஸ்திரத்திற்கு மேட்டுரிலிருந்து கொஞ்சம் நீர் வருகிறதாம், தலையில் தெளித்துவிட்டு ஆடிபெருக்கினை முடித்துவிடலாம்
உண்மையில் இது பெருக்கு அல்ல சுருக்கு. ஆயிரம் அரசியல் ஆயிரம் சர்ச்சைகள். ஏதும் கேட்டால் எங்கே சென்றுவிட்டாள் காவேரிதாய்? , பெங்களூரில் 5 லட்சம் தமிழர்களுக்கு தாகம் தீர்ப்பது யார் என கிளம்புவார்கள்
எல்லா தமிழ் இலக்கியங்களும் காவேரியினை பாடி இருக்கின்றன, வான் பொய்யினும் தான் பொய்யா காவேரி என புறநானூறு சொல்கின்றது,
கம்பன் பல இடங்களில் அதனை எப்படியெல்லாமோ கொண்டாடி இருக்கின்றான், சீதை பிறந்த ஜனக நாடு காவேரி கரைக்கு நிகரானது என ஒரே வரியில் அசத்தினான் கம்பன்
சிலப்பதிகாரத்தில்
"உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தன்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி" என
இளங்கோ அடிகளும் ஆடி பெருக்கினை அழகாக வர்ணிக்கின்றார்.
"இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தேவ மங்கையடி"
என பின்னாளில்
வாலியும் அழகாக சொன்னார்
எகிப்தின் நைல் நதிக்கு கொஞ்சமும் குறையா வரலாற்று பழமை கொண்டது காவேரி, எகிப்தியருக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கின்றது கண்போல் பார்த்துகொள்கின்றார்கள்
தமிழரின் கண்ணுக்கு என்ன தெரிகிறது, எல்லாமே பணமாக தெரிகிறது, காவேரி மண், பிளாட் , மீத்தேன் என நாம் வேறுமாதிரி திரும்பிவிட்டோம் என்ன செய்ய?
அதன் பழமையும், அதன் பெருமையும், அது கொடுத்த கொடைகளையும் சற்று சிந்தித்தால் காவேரி இப்படி ஆயிருக்காது
அந்த காவேரி தமிழனின் அடையாளம், தமிழனை உருவாக்கிய ஆறு, தமிழ் கலைகளை வளரவைத்த ஆறு
அந்த நன்றியோடு ஆடிபெருக்கினை கொண்டாடலாம், காவேரியினை நன்றியோடு வணங்கலாம்
தற்போது காவேரியினை நினைக்கும் பொழுதெல்லாம் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவிடத்தை பார்க்கும் ஒரு துயர நினைவிலே மனம் கனக்கின்றது
எங்கே போய்விடும் காலம், இஸ்ரேலில் அழிந்துவிட்ட ஆற்றை எல்லாம் உருவாக்குகின்றார்களாம். நமக்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்? காவேரிக்கும் காலம் வரும்.
அதுவரை ஒரு காலத்தில் நடந்த காவேரி வாழி
No comments:
Post a Comment