Wednesday, August 24, 2016

எனக்கும் ஒர் மகளுண்டு... என் வாழ்விற்கு ஓர் இனிமையுண்டு

தனிமை எனக்கு புதிதல்ல, எத்தனையோ பிரிவுகளையும் வலிகளையும் தாண்டி வந்தததால் எந்த உறவின் பிரிவுகளும் அவ்வளவு எளிதில் பாதிக்காது , பாதிக்கவிட்டதுமில்லை,


எந்த தனிமையும் அனாசயமாக கடந்துவிட கூடியது, எந்த வெறுமையும் தூக்கிபோட்டு நகர்ந்துவிட கூடியது, பிரிவுகள் எல்லாம் அன்றாடம் நடப்பது


இதெல்லாம் மகள் பிறப்பதற்கு முன்.




இன்று மகளின் சொற்ப‌கால பிரிவில் ஒரு நொடியினை கூட கடக்க முடியவில்லை, அவளில்லா வீட்டில் நுழையவும் மனமில்லை,


தெய்வம் இல்லாத கோயில் போல் கிடக்கின்றது வீடு.


ஆலயத்தின் ஒவ்வொரு தீபத்திலும் தெய்வத்தின் முகம் தெரிவது போல, வீட்டின் ஒவ்வொரு பொருளிலும் அவள் முகமே தெரிகின்றது .


அவள் மகள் அல்ல, என் உள்ளம் ஆட்கொண்ட தெய்வம் என்பது புரிந்துகொண்டே இருக்கின்றது.


பூக்களின்றி அமையாது சோலை, மழையின்றி அமையாது அழகிய காடு, மகளின்றி அமையாது வாழ்வு என அறிந்துகொண்ட தருணமிது


புத்ரி பாசத்திற்கு அவ்வளவு வலிமை,


தாமரை இலை நீர் போல மனமெல்லாம், மனதை எதற்கும் தயாராக வைத்திருக்கும் ஞான வழி, சித்தர் தத்துவமெல்லாம் அதில் அதில் அறவே சாத்தியமில்லை,.


பள்ளி வாசலில் சீன மொழியில் "இந்தியா போகிறேன் ..." என‌ தோழியிடம் சொல்லிவிட்டு மகிழ்வோடே வந்தாள், குழந்தைகளுக்கான மகிழ்ச்சி அது,


மொத்த உலகினையும் வாங்கிய மகிழ்ச்சி, வீட்டுபாடமில்லா மகிழ்ச்சி, பள்ளி இல்லா மகிழ்ச்சி..


ஆனால் விமான நிலையத்தில் கலங்கிய கண்களோடு,"நல்லா சாப்டுறேன்பா....பாட்டிய பாத்துட்டு வாரேன்பா.....ஒரு பொம்மை வாங்கி வைங்கப்பா....." என தழுதழுத்த குரலில் மழலையாய் கபடற்று சொன்னபொழுதில் சிலிர்த்து வெடித்தது மனம்.


அந்த விமான நிலையத்திலே நிற்கின்றது மனம், அவள் வரும் வரை அது அங்கேயேதான் நிற்கும்.


அங்கே தூரத்தில் கலங்கிய கண்களுடன் அவள் கை காட்டியபொழுது அப்படியே கலங்கிய உள்ளம், கடன் பட்டார் நெஞ்சத்தை விட கடுமையானது


இனி அவளை கண்டாலன்றி, அவள் குரல் கேட்டாலன்றி,அவள் ஓடி வந்து "அப்பா....." என அழைத்தாலன்றி திரும்பாது உயிர், அதுவரை இது சுவாசிக்கும் சடலம்.


மனிதனால் ஒருகாலமும் முடியாத விஷயம் உயிர்ப்பிப்பது,


அது தெய்வத்தால் மட்டுமே சாத்தியம்.


அவ்வகையில் எனது தெய்வமும் அவளும் வேறல்ல...



No comments:

Post a Comment