Wednesday, August 17, 2016

மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பெரிய கவிஞன் தெரியுமா?

மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பெரிய கவிஞன் தெரியுமா? அவரையா கலாய்கின்றாய் அறிவிலியே என சிலர் அவருக்காக வரிந்து கட்டுகின்றார்கள், அது அவர்கள் விருப்பம் எனினும் கவிதை தெரியா கழுதையா நீ எனும்பொழுது சிலவற்றை சொல்லதான் வேண்டி இருக்கின்றது

கவிதை என்பது என்ன? அது கலையின் ஒரு வடிவம். எல்லா மொழிகளிலும் அது உண்டு, அதற்கான சில தனிதன்மைகள் உண்டு

அதாவது ஒரு அழகு வேண்டும், வர்ணனை வேண்டும், உருவகம் வேண்டும், உவமை வேண்டும் சொல்ல வந்ததை மறைமுகமாக சொல்லவேண்டும். இலக்கணம் கட்டுப்பாடுகள் உண்டு எனினும் இக்காலம் கொஞ்சம் மாறி இருக்கலாம்.

ஆடை வடிவம் மாற்றம் என்பது காலமாற்றம், ஆனால் ஆடைக்கும் சில அடிப்படை இலக்கணம் உண்டல்லவா?

அப்படி சில விஷயம் உள்ளவை கவிதைகள். கம்பன் வர்ணனையில் நின்றான், பாரதி உணர்ச்சியில் நின்றான், கண்ணதாசன் உவமையிலும் அற்புதமான சொல்லாட்சியிலும் நின்றார், வாலி வார்த்தை விளையாட்டில் உச்சம் தொட்டார்.

சொல்ல வரும் விஷயத்தை இலக்கிய நயம்பட மறைமுகமாக‌ சொல்வது கவிதை, ஒரு பொருளை சொல்லும். காளமேகம் போன்றோர் ஒரு வரி சொல்லி இரண்டுவிதமாக பொருள் சொன்னார்கள், அதுவும் கவிதை

ஆனால் ஏதோ கிறுக்கி வைத்து கொண்டு, இது கவிதை இதற்கு பல பொருள் உண்டு என சொன்னால் அது கவிதையா கலைடாஸ்கோப்பா?

மனுஷ்யபுத்திரன் போன்றோர் சில பெண் கவிஞர்கள், ஜெயமோகனிடம் விருது வாங்கும் சில பின் நவீனத்துவ கவிஞர்கள் எல்லாம் எழுதுவது அப்படித்தான் இருக்கின்றது, அவர்களாக எழுதுவது? பின் எப்படி என கேட்பது? புரியவில்லை என்றால், இது புரியாது இது பல பொருள் நிறைந்த கவிதை என அவர்களாகவே சொல்லிகொள்வது

ஒரு சுவையா, அழகோ, உவமையோ இல்லாத அந்த எழுத்து பிணத்துக்கு சமானம், அதனை எப்படி உயிர் பிரிந்திருக்கும் எனும் போஸ்ட்மார்ட்டம் செய்பவர்கள் தான் இவர்களை கொண்டாடுபவர்கள்.

இப்படி செத்திருப்பானோ, இங்கு அடி விழுந்திருக்குமோ, உயிர் கண்வழி பிரிந்திருக்குமோ அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ என ஆராய்சி செய்பவர்கள்தான் அதன் ரசிகர்கள்

அண்ணாவின் எழுத்துக்களை, பேச்சுக்களை பாருங்கள். அதனை வரி வரியாக பிரித்து எழுதுங்கள் மனுஷ்யபுத்திரனை விட பெரும் கவிஞராக அண்ணா தெரிவார்.

ரசிகமணி டிகேசி , இன்னும் பல பெரியவர்களின் உரைகளை பிரித்து போடுங்கள் அவர்கள் பெரும் கவிஞராக தெரிவார்கள்.

அவர்கள் எல்லாம் கவிஞர்கள் வரிசையில் வருபவர்களா? இல்லை

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும் அப்படி பட்ட சாயலே, அது என்ன கவிதை ரகத்தில் வருமா?

துக்ளக் சோ கூட மனோராமாவுடன் டூயட் சொந்தமாக எழுதியிருப்பா "இஸ்க் இஸ்க் இன்னாங்குற.." அவர் கவிஞர் என ஏற்றுகொள்ளமுடியுமா?

திரைக்கு வருபவர்கள் மட்டும் கவிஞர் இல்லை. அப்துல் ரகுமான், இன்குலாப், காமராசன் என‌ இன்னும் ஏராளமான கவிஞர்கள் உண்டு, அவர்கள் எழுதியிருக்கும் அழகு அப்படி.

இப்பொழுது உள்ள இம்சைகள் காண சகிக்காதவை

சுருக்கமாக சொன்னால் 4 கோடு போட்டு அலலது வெற்றிலை எச்சில் போட்டு துப்பி, இதுதான் மார்டன் ஆர்ட் என சொல்லி சிலர் அதனையும் ரசிப்பார்கள் அல்லவா? அப்படித்தான் மனுஷ் போன்ற இம்சைகளை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்

ரவிவர்மன், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களை ரசித்தவனுக்கு மார்டன் ஆர்ட் எப்ப்டி என்றால் காரி துப்பமாட்டானா?, மிக சிறந்த ஓவியனான ஹிட்லர் சொன்னான், மார்டன் ஆர்ட் எனும் பைத்தியகாரதனத்தை ஐரோப்பாவில் அனுமதிக்கமாட்டேன், அது ஒரு வகையான மெண்டல் கூட்டட்த்தின் கூச்சல்

அப்படித்தான் இந்தவகை கவிஞர்களும், ஒரு கவிஞனுக்கு உலகாளாவிய அனுபவமும், மொழியிம் பெரும் அனுபவமும், இயற்கை ஞானமும் வாய்க்கவேண்டும்.

பாரதி அவ்வகையே, கண்ணதாசனும் மற்றும் பலரும் அவ்வகையே என்பது பகைவரும் ஒப்புகொள்ளகூடியது.

ஆனால் ஆனானபட்ட‌ அப்துல்கலாமினை டெக்னோகிரேட் எனும் சொல்லும்போதே சாகுல் ஹமீது எனும் மனுஷின் அறிவு படீரென வெளிபட்டது, இப்படி இன்னும் பலர்.

தமிழகத்தில் கண்ணதாசனுக்கு அடுத்தபடி ஒரு மிகசிறந்த கவிஞன் உண்டென்றால் அது அவர்தான்

சிரிக்காதீர்கள், கவிதை, இலக்கியநயம் எனும் பார்வையில் மட்டும் பார்த்தால் டி.ராஜேந்தரை விட பெரும் கவிஞன் கிடையாது, நிச்சயம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் அது

ஆனால் நான் அஷ்டவதானி, வசனம் பேசுவேன், நடிப்பேன், முகத்தில் நவ அமிலமும் காட்டுவேன், ஆடுவேன், கட்சி நடத்துவேன் என எல்லா அழிச்சாட்டியமும் செய்து அவர் அதனை மறைத்துகொண்டார்

போதா குறைக்கு அப்படியே ஒரு மகனையும் பெற்று வளர்த்து பெரும் அட்டகாசம்,

ஆனால் கவிதைக்கு உள்ள இலக்கணபடி அவர் பெரும் கவிஞன், அதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்று அவர் இடம் தனி.

ஆக கவிதை என்பது வேறு, உரைநடை என்பது வேறு. உரைநடையினை இழுத்து இழுத்து எழுதுவது கவிதை ஆகாது, மனுஷ்யபுத்திரன் எல்லாம் கவிஞன் என்றால், தேவயாணியின் கணவன் ராஜகுமாரனின், அவர் குரு விக்ரமனின், லா..லல்ல..ல்லா பிண்ணணியுடன் ஒலித்த சில படங்களின் வசனங்களை பிரித்து போடுங்கள், உங்கள் கருத்துபடி அற்புதமான கவிதை தயார்.

அன்று அழகாக இருந்தது கவிதை உலகம்

பாரதி, பாரதிதாசன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ஆலங்குடி சோமு, அழ.வள்ளியப்ப, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என பல கவிஞர்கள் இருந்த இடத்தில் எங்கே இப்படிபட்ட வரலாறு திரும்பிற்று?

அவரால்தான், அது அவராக அவர் பத்திரிகையில் எழுதினார். அவருக்கு வந்ததை எல்லாம் எழுதினார்.

சிலருக்கு புரிந்தது, சிலர் தலையினை சொறிந்தனர். சிலர் அவர் பேசுவதற்கே பல அர்த்தம் வரும், அவர் எழுதினால் நூறு அர்த்தம் வரும் என தலை தெறிக்க ஓடினார்கள்.

அவரோ எழுதிகொண்டிருந்தார், அவருக்கு பிறவி வரமான வசனத்தை எல்லாம் கவிதை என சொல்லிகொண்டிருந்தார்.

இது என்ன வகை கவிதை என அன்றே கேட்டனர், இது தமிழில் இல்லையே என்றனர், இல்லை இது நான் உருவாக்கிய புது தமிழ், இதன் பெயர் வசன கவிதை என்றார் அவர்.

அவர் கலைஞர் கருணாநிதி

அவர்தான் இம்மாதிரியான அட்டகாசங்களுக்கு தலைமகன், கவனித்துபாருங்கள் இன்று அவர் பின்னால் அமர்ந்திருக்கும் கவிஞர்கள் என தன்னை அழைத்துகொள்ளும் பலர் அப்படித்தான் எழுதிகொண்டிருக்கின்றனர் கனிமொழி உள்பட, அதில் மனுஷும் ஒருவர்

அவர்கள் அப்படித்தான்

புரியாத ஒவியம் என ஒப்புகொள்ளவே முடியாத மார்டன் ஆர்ட் போல இவர்கள் ஒரு கவிதை கூட்டம், அதனை படிப்பவர்கள் தான், புரிந்து கொள்பவர்கள்தான் அறிவாளிகளாம். அதற்காகவே ஒரு கூட்டம் நானும் அறிவாளி என சொல்லிகொண்டிருக்கின்றது.

அப்படியானால் நாங்கள் முட்டாள்களாக இருந்துவிட்டு போகின்றோம், விட்டுவிடுங்கள்.

No comments:

Post a Comment