Wednesday, August 24, 2016

கிருஷ்ணாவதாரம்.....


kr


எத்தனையோ அவதாரங்கள் உலகில் வந்தார்கள், அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, அதில் ஒரு அவதாரம் என்றும் கொண்டாடபட்டு இன்றுவரை இந்திய கலாச்சாரத்திலே இடம் பிடித்துவிட்டது


அது கிருஷ்ணாவதாரம்


அதனால்தான் வியாசர் முதல் வாலி வரை இந்திய கவிஞர்கள் பாடினார்கள், புரந்தரர், மீரா, ஆண்டாள் என அவரை பாடாத பக்தர்கள் இல்லை. பாரதி, கண்ணதாசன் என அவரை கொண்டாடாத கவிஞர்கள் இல்லை, காரணம் அவனின் வாழ்வு அப்படி , மகா ஆச்சரியமான வாழ்வு


கருவாகும் முன்னமே தாய்மாமன் எமன், பிறந்த அன்றே தொடங்கியது போராட்டம், 6 வயதிற்குள் சிறியதும் பெரியதுமாக ஆயிரம் பூதங்களையும், ஏராளமான ஆபத்துக்களையும் கடந்தார்.


அரச குலத்தவர் தான், ஆயினும் அன்று உலகம் சிறிதும் மதிக்காத இடையர்கள் குலத்தில்தான் ஓர் மாடுமேய்ப்பவனாகத்தான் வளர்ந்தார்.
சிறு வயதிலே வேடிக்கையும், விளையாடுமாக பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதும்,த்த்துவத்தை போதிப்பதும், சிரித்து கொண்டே தர்மத்தினை நிலைநாட்டுவதும் அவருக்கு மனம் வந்த கலை.


அவரது வாழ்வில் எங்காவது கண்ணன் கவலையுற்றார், அல்லது கண்ணீர் விட்டார் என்று பார்க்க முடியுமா? தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்வித்தார், பாதுகாத்தார்


ஏராளமான தீயவர்கள் பெருகியிருந்த காலகட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்கு சிறுவயதிலிருந்தே அவர் பாதுகாப்பு, பெரும் பூதங்கள்,படைகள் என சகலத்தையும் அடக்கிய அவர் அன்று பெரும் நாயகன், அதுவரை அடிவாங்கிய ஆயர்பாடி கூட்டம் அவர்தலமையில் திருப்பி அடித்தது, அதுவும் காளிங்கனை அடக்கியபின் அன்றைய ஆயர்பாடியில் அவர்தான் டாப் நாயகன்.


1980களில் டி.வியில் இம்ரான்கானிற்கே மயங்கிய பெண்கள் உள்ள இந்தியாவில், கண்ணனுக்கும் ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கமாட்டார்களா? இருந்தார்கள், மயங்கினார்கள். மாவீரன் மட்டும் என்பதல்ல, சிரித்த முகமும், இனிமையான குழலிசையும் , எந்த ஆபத்தையும் அசால்ட்டாக தாண்டும் அவருக்கு பெரும் ரசிகைகள் இருந்தது வியப்பே இல்லை.


எல்லாம் கொஞ்சகாலம்தான், ஒரு கட்டத்தில் தன்னை உணர்ந்து கொண்டு, அவதார கடமைகளை ஒவ்வொன்றாக‌ நிறைவேற்றினார். அதாவது அந்தந்த வயதிற்குரிய வாழ்க்கையினை அனுபவித்து வாழ்ந்திருக்கின்றார், ஒரு வாழ்க்கை தத்துவம் அது


அந்த வாலிப கால லீலை முடிந்ததும், கம்சனை கொன்றார், ஆயினும் மன்னராகும் ஆசை இல்லை, தாத்தாவிடம் ஆட்சியை கொடுத்து மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானார்.


ஆயிரம் கம்சன் உண்டல்லவா?, பல்வேறு தொந்தரவுகள் கொடுத்தார்கள், ஒரு கட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்காக துவாரகையை சொர்க்கத்திற்கு நிகராக உருவாக்கி, உலகிலே முதன் முதலாக அதுவரை ஒடுக்கபட்ட, விரட்டபட்ட, கடுமையாக புறக்கணிக்கப்ட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு நாடு கொடுத்து வாழச்செய்தார்.


போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின, அவர் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின, தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தார்,


உச்சகட்டமாக ஒரு குண்டூசி கூட ஏந்தாமல் முழுக்க முழுக்க யுத்த வியூகத்தால் அவர் சாதித்த இடம் மகா பாரதம். அதில் கொடுக்கபட்ட இடைசெருகல் அல்ல கீதை, மாறாக அது அப்போரின் சுருக்கம்.


முதலிலே விளங்கிற்று கண்ணனுக்கு, இது பெரும் அழிவிற்கான போர், கடும் ஆயத்தம் தேவை, தயாரிப்புகள் தேவை. நேரம் வரும் வரை மோதவேண்டாம்


பெரும் ராஜ தந்திர திட்டத்தினை முன்னடுத்தான். தர்மன் ஆடும்போதும் அமைதியானான், பாஞ்சாலி கத்தும்போதும் அவளை காப்பாற்றினானே அன்றி துச்சாதனன் மீது கைவைக்கவில்லை,


பாண்டவர்களோடு அவனும் கானகம் சுற்றினான்,வனவாச காலத்தில் பாண்டவர்களை கண்ணன் சும்மா இருக்கவிடவில்லை, தொலைதூரத்தில் சில கொடிய மன்னர்கள் இருந்தார்கள். பாண்டவரோடு இணைந்து அவர்களை அழித்தான், காரணம் நாளை சண்டை என வந்தால் அவர்கள் நிச்சயம் துரியோதனுக்கு உதவ வருவார்கள், இனம் இனத்தோடு சேருமல்லவா?


ஜெராசந்தனும்,சிசுபாலனும் இன்னும் பலரும் இவ்வாறே அழிந்தனர்.
வனவாச காலத்திற்குள் பாண்டவர்களை போருக்கு தயார் படுத்தினான், நினைத்திருந்தால் துவாரகையிலே அவர்களை தங்க வைத்திருக்கலாம், வைக்கவில்லை காரணம் நாடு நாடாக அலைந்தால் தான் நிறைய அரசுகளின் நட்பு கிடைக்கும் எனும் தந்திரம், அப்படியே கிடைத்தது, பல அரசர்கள் பாண்டவருக்கு துணைநின்றனர்.


அர்ஜூனன் பல திருமணங்கள் செய்ததும் அந்த யுத்த வியூகமே, அரசு ஆதரவுகளை திரட்டும் முயற்சி அது.


பெரும் போருக்கு பாண்டவர்களையும்,நண்பர்களையும், பாசுபதகனை போன்ற ஆயுதங்களையும் தயார் படுத்திவிட்டுத்தான், ஒன்றும் அறியாத அப்பாவியாக துரியோதனிடம் தூது சென்றான். நிச்சயம் துரியோதனன் சொத்து கொடுக்கமாட்டான் என கண்ணனுக்கும் தெரியும்,


தெரிந்தும் ஏன் சென்றான் என்றால் கௌரவர் கூட்டணியில் குழப்பத்தினை ஏற்படுத்த, அதுதான் திட்டம்.


பாண்டவரும்,கௌரவரும் அப்படியே மோதிக்கொண்டால் 18 நொடிக்குள் பாண்டவர் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. துரியனின் கூட்டனி அப்படி, அரை குண்டூசி கூட கையில் இருந்தாலும் கொல்லமுடியாத துரோணர், நினைத்த போது மட்டும் மரணம் பெரும் பீஷ்மர், உலகை அழிக்கும் விதுரர், இன்னும் வெல்ல முடியாத கர்ணன், கிருபர், அஸ்வத்தாமர் என மிக நீண்ட வரிசை அது.


அவர்களுக்குள்ளும் துரியன் மீது கோபமிருந்தது, ஆனால் குலப்பெருமைக்காக பாகுபலி கட்டப்பா போல கூட இருந்தார்கள். தூது சென்ற கண்ணன் நிகழ்த்திய நாடகத்தில் விதுரர் வெளியேறினார், அஸ்வத்தாமன் மேல் துரியோதனனுக்கு சந்தேகம், இதற்கு மேல் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் ஈகோ பிரச்சினை, விளைவு பலமிக்க கூட்டணி சிதறியது, போதாக்குறைக்கு கர்ணனிடம் குந்தியை அனுப்பி அவனையும் காலம் பார்த்து குழப்பியாகிவிட்டது.


பாரத போரும் தொடங்கியது உறுதியாக சொல்லலாம் அது முதன் முதல் உலகப்போர், எல்லா நாட்டு அரசும் பங்கெடுத்தன, கண்ணனோ அப்பாவியாக தேரோட்டியாக வந்தார். ஆனால் அவரே சூத்திரதாரி. அந்த ஒரு விஷயத்திலே ஈகோ பிடித்த கவுரவர் அணி குழம்பி போயிற்று, கர்ணனின் சாவுக்கு தேரோட்டியின் ஈகோதான் காரணம்.


பல்லாண்டுகள் கழித்து ஆசிரியரையும், உறவினரையும் கண்ட அர்ச்சுணன் தசை ஆடியது, உணர்ச்சியில் சண்டையிட மறுத்தான், அரசே வேண்டாமென்றான், அர்ச்சுணன் இல்லாவிட்டால் பாண்டவர் ஏது?
மாபெரும் உபதேசம் கொடுத்தான் கண்ணன், தெளிந்தான் அர்ச்சுணன், அது அர்ச்சுணனுக்கு மட்டுமல்ல அல்ல மொத்த உலகிற்கு, அதுவே புனிதமான பகவத் கீதை.


18 நாள் பெரும்போரில் கண்ணனால் குழப்பபட்ட கௌரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர், பெரும் பலசாலிகள், வரம்பெற்றவர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது, அதில் சரியாக இடம்பார்த்து அடிக்க சொன்னார், பாண்டவர்கள் அடித்தார்கள், நியாயம் வென்றது.


அழிவுகள் இருபக்கம் இருந்தாலும் பாண்டவரை காப்பாற்றி, அவர்கள் வம்சத்தினை தொடர வைத்தவன் அவனே.


கடவுளாக நம்புபவர்களுக்கு அவன் கடவுள், நம்பாதவர்கள் அவன் நிச்சயம் பெரும் ராஜதந்திரி என்பதை மட்டும் மறுக்கவே முடியாது. பெரும் ராஜ தந்திரமும், மேலாண்மை நுட்பத்தினையும் உலகிற்கு கொடுத்தது கிருஷ்ணன்.
மதிநுட்பத்திலும், ராஜ தந்திரத்திலும் உலகில் முத்திரை பதித்தவர்கள் உண்டு, பாரதவரலாற்றை நன்கு கற்ற சாணக்கியனே அதில் முதலிடம்,


கண்ணனின் மகாபாரத மாய வித்தைகளை சுருக்கமாக சொன்னால், அதற்கு இன்னொரு பெயர்தான் அரசியலும்,உளவுதுறையும் உலகம் இந்தியாவின் பொக்கிஷம் என கொண்டாடும் "அர்த்த சாஸ்திரம்".


அரசியலை விடுங்கள், பல்லாயிரம் பேர் நிரம்பிய பெரும் கம்பெனியினை எப்படி நிர்ணயிப்பது, எதனை எப்பொழுது செய்யவேண்டும், கோபத்தை எப்பொழுது வெளிபடுத்தவேண்டும், யாரை எப்படி பயன்படுத்தவேண்டும், அழிவுளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற நவீன மேலாண்மை உத்திகளை எல்லாம் ஆராய்சி செய்துவிட்டு முடிவில் மகாபாரத கண்ணனிடமே சரண்டைகிறது இன்றைய உலகம்


அப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் அன்றே பாடம் சொல்லியிருக்கின்றான் கண்ணன். அக்கால அரசியல் பாடம் அவனை பின்பற்றியே உலகெல்லாம் இருந்தது என்கின்றார்கள், மிக ரகசியமாக பயிற்றுவிக்கபட்ட பாடம் அது, அரசன் தன் மகனுக்கு மட்டும் சொல்லிகொடுத்து வந்த கலை அது. பின்னாளில் மறைந்தும் விட்டது.


மாமன்னன் அலெக்ஸாண்டர் வளர்ப்பில் அது அழகாக தெரிகின்றது, இன்னும் பல மன்னர்களின் வாழ்விலும் அது தெரியும். அதற்கெல்லாம் மூலம் கிருஷ்ணனின் ராணுவமும், அவரின் ஆட்சிமுறையுமே என்கிறது ஓர் ஆய்வு, வரலாறு அவன் காலத்தில் பெரும் திருப்புமுனை கண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை.


பழம் காலத்தினை விடுங்கள், தற்போது உலகினை கலக்கிகொண்டிருக்கும் இஸ்ரேலின் புகழ்பெற்ற தளபதி மோஷே தயான், மொசாத்தின் பெரும் அடையாளம் டேவிட் கீம்சி, இந்தியாவின் வலிமையான இந்திரா காந்திக்கு வங்கபோரினை வெற்றியாக முடித்து கொடுத்த "ரா"வின் சில அதிகாரிகள் என ஆயிரம் ராஜ தந்திரிகள் வந்தாலும், என்றும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக வழிகாட்டுதலாக இருப்பது கண்ணணே.


கண்ணனின் வாழ்வும், மாய வேலைகளும் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றுதான் "தீயவர்களின் கூடாரம் மிக பலமானதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த பலத்தில் ஒரு சிறிய பலவீனம் இருக்கும், தர்மத்தினை நிலை நாட்டுவதற்காக அது இறைவனால் அனுமதிக்கபட்டது, அந்த பலவீனத்தினை அறிந்து நிதானமாய் இறைவன் துணையோடு போரிடுபவனுக்கு என்றுமே தோல்வி இல்லை, அதர்மம் நிச்சயம் வீழும்"


பாரத்தினை விடுங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு சோதனை காலங்கள் இருக்கும், சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கம்சனையோ,காளிங்கனையோ அல்லது துரியோதனன் போல அறவே நியாயம் இல்லாத 200% கொடுமையாளரின் சித்திரவதைகள‌ நீங்கள் அனுபவத்திருக்கலாம், அப்பொழுது தர்மத்தினை காக்கும் பொருட்டு , உங்களை பாதுகாத்து கைதூக்க நிச்சயம் ஒருவர் வந்திருப்பார் அல்லது வருவார்.


எனக்கு அப்படி வந்தவர்கள் உருவில் எல்லாம் தெரிந்தது மகாபாரத கண்ணன் காட்சிகளே


வரலாற்றின் முதல் புரட்சியாளன் அவன், ஒடுக்கபட்ட அந்நாளைய இழிசாதியினை ஆளும் சாதியாக மாற்றியவன் அவன், முதல் போராளி


கருப்பர்கள் மீதான இனவெறி இன்னும் அகலாத காலத்தில், அன்றே சாதித்து காட்டிய கருப்பு வித்தகன் அவன், ஒரு உந்து சக்தி


ஒரு நல்ல அரசு எப்படி நடத்தபடவேண்டும் என முதலில் உலகிற்கு சொன்ன மன்னன் அவன்


ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என உலகிற்கு சொன்ன முதல் கட்டட கலைஞன் அவன்.


ஒரு ராணுவம் எப்படி இருக்கவேண்டும், ஆயுதம் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன யுத்த ஞானி அவன். யுத்த வியூகமும் ஆயுதங்களின் பிரயோகமும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் சொன்னவனும் அவனே.


உளவு உலகம் எப்படி இருக்கவேண்டும், தகவல்களை எப்படி திரட்டவேண்டும், எந்த நேரத்தில் எந்த தகவலை யாரிடம் எப்படி சொல்லி காரியம் சாதிக்கவேண்டும் எனும் வித்தையினை சொன்ன முதல் உளவாளி அவன்


ஒரு மெய்காப்பாளன் எப்படி இருக்கவேண்டும் என முதலில் சொன்ன பாடிகார்ட் அவன், அர்ச்சுணனை அவன் அப்படித்தான் யுத்தத்தில் காத்து நின்றான்.


மனமொடிந்த அர்ஜூனன் மனம் தேற்றிய வரலாற்றின் முதல் மனநல ஆலோசகர் அவன்.


வாழ்வியல் தத்துவத்தை எளிமையாக போதித்த அற்புத தத்துவ ஆசிரியன் அவன்.


நல்ல நட்பும், நல்ல காதலும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவனே முன்னோடி.


உறவுகளை எப்படி பேணவேண்டும் என்பதிலும் அவனே முன்மாதிரி, பாண்டவர்களும், கவுரவர்களும், சகுனியும் உறவினர்கள் அவனுக்கு. ஆனாலும் நேரடியாக அவன் கவுரவர்களை பகைக்கவில்லை. இறுதியில் காந்தாரி முன் பேசியதும் அவனே. பெரும் எண்ணிக்க உறவுகளை பேண நினைப்பவர்கள் அவனை அழகாக பின்பற்றலாம்.


இப்படி இந்த உலகில் எதனை எடுத்தாலும், எந்த துறையினை எடுத்தாலும் அதனை தொடங்கி வைத்தவன் அவனாகவே இருப்பான், வழிகாட்டியும் அவனாகவே இருப்பான், உலகில் இந்த சிறப்பு எந்த அவதாரத்திற்குமில்லை, அதனால்தான் யுகம் கடந்தும் நிற்கின்றான் கண்ணன்.


வாழ்வினை ஆனந்தமாக வாழ சொல்லிகொடுத்த அவனைத்தான், குழந்தை வடிவில் வா, என் இல்லம் வா என இந்தியர் இல்லம் தோறும் அழைக்கின்றனர்.


காரணம் அவன் இருக்குமிடத்தில் அமைதியும், ஆனந்தமும், பாதுகாப்பும் இருக்கும் என்பதே அவன் வாழ்வு சொல்லும் பாடம்.


அழைத்தவர் குரலுக்கு ஓடிவந்து காக்கும் கண்ணனுக்கு நாளை அவதார நாள். இந்திய கலாச்சாரத்தில் தனிதாக்கம் எற்படுத்திய அந்நாளை கொண்டாடியே தீரவேண்டும்


கண்ணனை புகழவே பிறந்த கவிஞன், தலைவனின் "ஆயர்பாடி மாளிகையில்" எனும் பாடல் காதோரம் கேட்கும் நேரமிது.





No comments:

Post a Comment