Friday, August 19, 2016

உசேன் போல்ட் : குதிரையின் ஆவி பீடித்திருக்கலாம்...



ஒலிம்பிக் நிச்சயம் மனிதர்களுக்கானது, உசேன் போல்ட் போன்ற அனுமாஷ்ய சக்திகளுக்கு அல்ல‌


ஒரு மனுஷன் இப்படியா ஓட முடியும்? மனிதருக்கு ஏதும் குதிரையின் ஆவி பீடித்திருக்கலாம், பெல்ப்ஸ் என்பவருக்கு நிச்சயம் சுறாவின் ஆவிதான், ஊக்க மருந்துக்கு சில சோதனைகள் இருப்பது போல இனி இம்மாதிரி ஆட்களுக்கு மாந்ரீக சோதனையும் அவசியம்.




[caption id="attachment_2335" align="aligncenter" width="960"]us உசேன்  போல்ட்[/caption]

இல்லாவிட்டால் ரோபோவா இல்லையா எனும் சோதனையும் அவசியம்.





கடலில் மீன்களோடும் கானகத்தில் மான்களோடும் ஓடவேண்டியவர்களை எல்லாம் மனிதர்களோடு போட்டியிட சொன்ன அந்த ஒலிம்பிக் கமிட்டியினை வன்மையாக கண்டிக்கின்றோம். இரண்டாமிடம் வருபவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது, அவ்வளவு இடைவெளில் வருகின்றார்கள்.

சளைக்காமல் ஓடும் கென்யர்களும், எத்தியோப்பியர்களும் கடல் மட்டும் இல்லை என்றால் ஓடியே பிரேசிலில் இருந்து தாய்நாட்டுக்கு வந்துவிடுவார்கள் போல , 10 ஆயிரம் மீட்டர் ஓடுகின்றார்கள் உடலில் ஒரு களைப்பு தெரிவதில்லை.

பயிற்சி எடுப்பதெல்லாம் வரிகுதிரை பின்னாலும், சிறுத்தை புலி பின்னாலும் ஓடி என்றால் இப்படித்தான் சளைக்காமல் ஓடுவார்கள்.

நீச்சல் டைவிங்கிலும், ஜிம்னாஸ்டிக்கிலும் சில வீராங்கனைகள் உடலினினை வளைக்கும்பொழுதும், சுற்றிவிட்ட பம்பரமாக சுழன்று விழும்பொழுதும், மயக்கமே வருகின்றது,

பிறந்த உடனே சுழற்றி தூக்கி எறிந்து விளையாடாமல் இது சாத்தியமில்லை, நமது ஊராக இருந்தால் அந்த‌ பயிற்சியாளர்களை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்துவிடுவோம்.. வீராங்கனையின் பாட்டியே "என் பேத்தி பாவம்........கொல்லவா பார்க்கிறாய்" என பயிற்சியாளரை ஓட விரட்டிவிடுவாள், நாம் அப்படித்தான்.

பல வகையான போட்டிகளை ஒலிம்பிக்கில் பார்க்கும் போது, அது விளையாட்டு என தெரிகின்றது, கவனம். நொடி தாமதிக்கா வேகம், அதிலொரு சூட்சுமம், என எல்லா விளையாட்டுக்களும் சுவாரஸ்யமாக செல்கின்றன,

அப்பொழுது 50 ஓவரிலும் மட்டை போட்டு நின்ற கவாஸ்கர், 4 அடித்துவிட்டு ஸ்டைலாக நின்ற தெண்டுல்கர், ஸ்பின் பந்து போட்டுவிட்டு நிதானமாக முகம் துடைக்கும் கும்ளே போன்ற முகங்களும் வந்து போகின்றன‌

இருக்கட்டும்

நல்லவேளையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் அனுமதிக்கபடவில்லை, அது வேண்டவும் வேண்டாம். ஒலிம்பிக் கால்பந்தினையே பார்க்க யாருக்கும் சுவாரஸ்யமில்லை. இது தடகளம், கால்பந்து தனியாக ரசிக்கவேண்டியது என கோட்டில் விட்டுவிட்டார்கள், கடமைக்கு நடந்துகொண்டிருக்கின்றது

ஒருவேளை கிரிக்கெட் அனுமதிக்கபட்டிருந்தால் இந்த சிந்து, தீபா, சாக்ஷி, போன்றோர் எல்லாம் வெளியில் தெரிந்திருப்பார்களா என்றால் இல்லை, நிச்சயம் இல்லை

ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது கோரிக்கை எல்லாம், இந்த கிரிக்கெட்டினை தயவு செய்து ஒரு காலமும் உள்ளே அனுமதித்துவிடாதீர்கள்.

அது எங்களுக்கு தனிபட்ட இம்சையாகவே இருந்து தொலையட்டும்

அவனவன் போலி ஊக்க மருந்தினை உட்கொண்டுதான் ஒலிம்பிக்கில் சிக்குவான், இந்தியா போலி மருத்துவரையே அனுப்பி சிக்கி இருக்கின்றது

ஆனாலும் வீரர்கள் போலி அல்ல என்பதனை தீபா கமார்கர், சாக்ஷி மாலிக், ஶ்ரீகாந்த், சிந்து போன்றோர் நிரூபித்து மானம் காத்துகொண்டிருக்கின்றனர்.





No comments:

Post a Comment