Monday, August 15, 2016

கலைஞர்கள் மிக இளகிய மனமுள்ளவர்கள்

பொதுவாக கலைஞர்கள் மிக இளகிய மனமுள்ளவர்கள் என்பார்கள். ஒரு படைப்பினை ஆத்மார்த்தமாக படைப்பார்கள். அதிலிருந்து வெளிவரவும், சிந்தனைகளை வேறுபக்கம் திருப்பவும் அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைபடும்.

FB_IMG_1471253558007

கம்பனின் தனிபாடல் திரட்டு ஏதோ சொல்ல வருகின்றது, பாரதி கஞ்சா பிடித்திருக்கின்றார், ஜெயகாந்தன் சிவஞானமூலிகை என ஒன்றை வைத்திருந்தார் என்பார்கள்.

கண்ணதாசனின் வலி வடிகால்கள் உலகறிந்தவை.

தமிழகம் என்றல்ல உலக புகழ்பெற்ற கவிஞர்களும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள், உமர்கய்யாம் முதல் பலர் அப்படியே

கவிஞர்கள் அல்லது கலைஞர்களின் மனம் அவ்வளவு மென்மையானது, ஒரு அங்கீகாரத்திற்கு ஏங்கும் குழந்தை மனமது, பலவீனமானது

அந்த வடிகாலிலே தான் ஒரு அமைதி தேடிகொள்கின்றார்கள், பின் அவமானம், வலி, ஏளனம் எல்லாவற்றையும் தாங்கிகொள்ள அதிலேதான் சரணடைவார்கள்

விதி அப்படியானது. மற்றவர்களை சந்தோஷபடுத்த மகிழ்விக்க கலைதுறைக்கு வரும் கலைஞர்களின் தனிபட்ட பக்கம் வலி நிறைந்ததாகவே இருக்கும் என்பது ஒருவகை சாபம்

ஒரு சிலரே அதற்கு விதிவிலக்கு, மற்றபடி 90% பேர் எதற்காவது ஒன்றிற்கு ஏங்கி தவித்து அழுதே சாவார்கள், சில்க் ஸ்மிதா உட்பட‌

விஞ்ஞானிகள் போல கலைஞர்களும் வேறு உலகத்தில் வாழ்வார்கள், பெரும்பாலும் சிந்தனையிலும் கற்பனையிலும் புதிய தேடலிலுமே அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள், மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்

ஆனால் உடல் எல்லா மனிதருக்கும் போல தனக்கும் உண்டு என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள், அதற்கு என்ன தெரியும்? மெது விஷமோ அல்லது உடனடி விஷமோ அது படுத்தே விடும்

குடியால் வாய்பிழந்த கலைஞர்கள் முக முத்து முதல் பின்னாளைய நாகேஷ் வரை ஏராளம். நடிகைகளிலும் பலர் உண்டு

உயிரிழந்தவர் வரிசையில் தியாகராஜ‌ பாகவதர், சாவித்திரி, சந்திரபாபு, கண்ணதாசன், கலாபவன் மணி, இப்போது முத்துகுமார் என இன்னொரு வரிசை உண்டு.

போதை எவ்வளவு திறமையானவர்களையும் அழிக்கும் என்பதை கண்ணார கண்டுகொண்டிருக்கின்றோம்

எப்படியோ சிக்கிகொண்டு கடைசியில் தெய்வத்தின் சந்நிதியில் கதறிய கண்ணதாசனுக்கும் மறுவாழ்வு கிடைக்கவில்லை. உடல் அவ்வளவு கெட்டுபோயிருந்தது.

வாழவேண்டும் என்ற ஆசையில் அவரின் கடைசிகால வரிகள் மனதை உருக்குபவை, என்ன செய்ய? பழம் போதையின் கொடுமையில் காலன் முந்திகொண்டான்.

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு வகையான மன சிக்கல்.

தற்கொலைக்கு முயன்ற குற்றசாட்டில் நீதிபதி முன் நின்றார் சந்திரபாபு, அப்படி உனக்கு என்ன கஷ்டம் என கேட்டார் நீதிபதி

தீக்குச்சியினை உரசி கையினை சுட்டுகொண்டு சொன்னார் பாபு, கணம் நீதிபதி அவர்களே இதோ சுட்டுகொண்டேனே உங்களால் வலி உணர முடியுமா?

ம்ஹூம் என தலையசைத்தார் நீதிபதி

என் வலியினை என்னால் மட்டுமே உணர முடியும் என சொல்லிவிட்டு நடந்தார் சந்திரபாபு

அப்படி அவர்கள் வலியினை அவர்களால்தான் உணரமுடியும்.

ஒவ்வொரு கலைஞனுக்கு பின்னும் ஒரு சோகம் இருக்கின்றது, முத்துகுமாருக்கு பின்னும் அப்படி ஒன்று இருந்திருக்கலாமோ என்னமோ?

ஆனால் அந்த சோகம்தான் அழகான பாடல்களாக, தாலாட்டாக கால கல்வெட்டில் நிலைத்துவிட்டது

மறுபடி அதே சோகத்தில் எல்லோரையும் தள்ளி அவர் சென்றுவிட்டார்.

கலைஞர்கள் (கலைஞர் அல்ல :) ) சொன்னதை செய்யுங்கள், அவர்கள் செய்வதை போல் செய்யாதீர்கள். ஒருவன் எப்படி வாழகூடாது என்பதற்கு அவர்கள் வாழ்வே சாட்சி என சொன்ன அனுபவ கவிஞன் கண்ணதாசனின் வார்த்தைகளில் உண்மை தத்துவம் கொட்டிகிடக்கின்றது.

இதனை அறிந்தாலே போதும், எப்படிபட்ட ஜாம்பவான்களை எல்லாம் போதை கவித்திருக்கின்றது என பிஞ்சு உள்ளங்களில் பதியவைத்தாலே போதும்

சசிபெருமாள் போன்றவர்கள் சாக தேவையில்லை, நந்தினிக்கள் கத்த தேவையில்லை

டாஸ்மாக் தானாக சரியும், வலியபிடித்து வாயில் ஊற்றி கையில் இருப்பதை பிடுங்கும் அளவு அரசு செல்லாது.

குடிக்க சொல்லி கொடுத்த சினிமா தான், குடியினை நொடிக்கு நொடி காட்டி அந்த கலாச்சாரத்தை ஊட்டிய சினிமாவில்தான்

சினிமாக்கலைஞர்களின் அகால மரணம் அதன் கொடூரத்தை மறுபக்கம் சொல்லிகொண்டே இருக்கின்றது.

அதனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கும் கடமை நம்மிடையே இருக்கின்றது

மதுஒழிப்பு என சமூகம் ஓலமிடும் காலங்களில் எல்லாம் இப்படி சில கலைஞர்களும் உயிரை கொடுத்து அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்.

அவர்கள் வயதினை எடுத்து பாருங்கள், இதில் யாருமே சாகவேண்டிய வயது அல்ல. முதல்பகுதி வறுமைக்கும், அடுத்த பகுதி கலைக்கும், பாதி பகுதி வாழ்க்கையினை மதுகொடுமைக்கும் கொடுத்து செத்த பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள்.

சாவித்திரி, சந்திரபாபு, கண்ணதாசன், கலபாவன் மணி, முத்துகுமார் என பலர் நெஞ்சுக்குள் சுழன்றுகொண்டே வருகின்றார்கள்.

No comments:

Post a Comment