Saturday, August 6, 2016

நவீனகால அஸ்வத்தாமன்களும் , அழிந்த ஹிரோஷிமாவும்



இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945 , நேரம் : 8:16....


ஜப்பான் ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம்...


முதல் அணு குண்டு  போடப்பட்டது...


அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று.


சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது அது, இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு


Stanley Rajan's photo.


Albert Einstein & J. Robert Oppenheimer


அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், ஏதோ மூட நம்பிக்கையாளன், இந்துஸ்தான் வெறியன் என என்னை நீங்கள் சொல்லிவிடலாம், ஆனால் அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி.

அப்படி உலகமே அணுவை என்ன செய்யலாம் என நோக்கியபொழுதுதான் ஜாண் டால்டன் அணுவினை பற்றிகருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று. அன்று அவர்கள்தான் அறிவு களஞ்சியங்கள், அன்று என அன்று, இன்று வரை ஜெர்மானியர்கள் அப்படியே


நீல்ஸ்போர், ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. மதுவிற்கு எதிராக தமிழகம் போராடுவதை போல எப்படியாவது உயிர்தப்பிவிட கடும் முயற்சிசெய்த காலம், நிரந்தரமாக தப்பிக்க ஒரே வழி ஹிட்லரை கொல்வது.


அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணித்தனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான‌ ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்கள் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை. ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது.


அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு "ராமர் பிள்ளை" நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார், ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில் இருந்தார்.


ஆனால் அணுகுண்டு ஆராய்ச்சியினை தொடங்கி இருந்தார் ஹிட்லர், ஆனால் அணுகுண்டினை விட அவரின் கவனம் விண்வெளி ஆதிக்கத்திலே இருந்தது, எனினும் கிட்டதட்ட பாதி அணுகுண்டு கிணற்றினை தாண்டியிருந்தார் ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகாலமரணமடைந்தார். அப்படி இல்லாவிடால் என்றோ அணுகுண்டு செய்திருப்பார், காலம் அவனுக்குத்தான் கனிந்திருந்தது


ஆனால் அவர் வீழ்த்தபட்ட பின்புதான் அணுகுண்டு தயாரிக்கபட்டது, அப்படி அதனை பயன்படுத்தாமலே விட்டிருக்கலாம்.


ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி "இந்தியாவின் தேசிய தலைவர்" என அறிவிக்கபட இருந்த நிலை.


அது நேதாஜி மூலமாக ஜப்பானிய ஆதிக்கத்தை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சி என்பதும் தியரி, சொல்லமுடியாது, நேதாஜியினை விரட்டிவிட்டு ஜப்பானிய அரசரை இந்திய அரசராக்க அதிக நேரம் ஆகியிருக்காது, ஆனானபட்ட அமெரிக்காவினையே அன்று நம்ப வைத்து பேர்ஸ் ஹார்பரில் தாக்கியவர்கள்


ஐன்ஸ்டீன் & கோ ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது.


அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, "ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்" என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்த்தாக சொன்னார்.


(ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், அப்துல் கலாமும் அப்படி பட்டவரே. இன்றோ வேற்றுமத நூல்களை படிப்பது பாவம், படித்தால் நரகத்திற்கு போவாய் என் போதிக்கபடுகின்றது)


பின்னர் அந்த நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது.


நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே 50 டன், கணக்கிட்டுகொள்ளுங்கள்.
ஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், பெர்லினில் வேண்டாம் அது நமது கையில், இத்தாலியும் தோற்றாகிவிட்டது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி ஆனால் ஆபத்தில்லை.


தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும்.


செய்தார்கள்,பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945
ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.


10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில்.


என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல்.


அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம்.


Stanley Rajan's photo.


ஹிரோஷிமா


ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது, ஜப்பானிய ஆதிக்கத்திலருந்த நாடுகள் விடுதலை ஆயின, இந்தியாவும் ஜப்பானிய மிரட்டலில் இருந்து தப்பியது, காரணம் சீனாவில் பிலிப்பைன்சில் ஜப்பானிய ராணுவம் ஆடிய ஆட்டம் அவ்வளவு கொடூரமானது.


(ஆனால் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு) நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது "நான் யார் தெரியுமா? மவனே என்கிட்ட வச்சிகிட்ட அவ்வளவுதான்."


பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார் (மேலே சென்ற ஜப்பானியார்களை தேடியிருக்கலாம்),


பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட.


உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள் என போதனையை தீவிரபடுத்தின (அவர்களுக்கென்ன ஒரு குடிசை தீயில் எரிந்தாலும் கடைசிகாலம் என கத்துபவர்களுக்கு, நகரமே எரிந்தால் விடுவார்களா?)


ஆனால் ஒருவர் மனம் திரும்பினார் அவர் ஜப்பானை எதிர்த்து போரிட்டு ஜப்பானை விரட்டிய‌ அமெரிக்க தளபதி மெக் ஆர்தர்.


மனம் திரும்பிய அவர் பெண்டகனில் அமெரிக்க அதிபரை சந்திக்கும் பொழுது, வாயில் இருந்த சிகரெட் பைப்பினை எடுத்துவிட்டு ஒரு கோரிக்கையை சொன்னார், எளிதான கோரிக்கைதான்


"மிஸ்டர் பிரசிடெண்ட், இது போன்று எனக்கு 15 குண்டுகள் தரமுடியுமா?, நான் சில நகரங்களை பட்டியலிட்டிருக்கின்றேன், ஒரு 25 வருடங்களுக்கு போர் இருக்காது"


மிக சீரியசாக அவர் சொன்னதை கேட்டு, வியர்த்து கொட்டியபடி எழுந்து அமர்ந்தார் அந்நாளைய அமெரிக்க அதிபர். அனுமதி மறுத்தார் அதனால் இன்றுவரை அணுகுண்டு வெடித்த கடைசி இடம் நாகசாகி


அமெரிக்கா செய்தால் ரஷ்யா செய்யவேண்டுமல்லா, தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா எல்லாம் செய்தன இன்றைய உலகில் சுமார் 12 நாடுகளிடம் அணுகுண்டு உண்டு


ஆனால் எந்த நாடும் அவ்வளவு எளிதில் இன்னொரு நாடு மீது அதனை ஏவாது, காரணம் அது ஒரு பாதுகாப்பே தவிர பயன்படுத்தினால் சர்வ அழிவு


இன்னும் அதற்கு மாற்று இல்லை, வீசிவிட்டால் அவ்வளவுதான்


ஆனால் மகா பாரதம் ஒரு தீர்வினை சொல்கிறது, அதாவது அஸ்வத்தாமனும் பிரம்மாஸ்திரம் வீசினான், அர்ஜூனனும் வீசினான், இரு பிரம்பாஸ்திரம் மோதினால் உலகழியும் என்பதால் அர்ஜுனன் அதன திரும்ப பெற்றான்


ஆனால் அஸ்வத்தாமனின் கனையால் அழிந்த அழிவினையும் அதே தான் சொல்கிறது,


அதாவது அந்த பெரும் சக்தியினை கட்டுபடுத்தும் சக்தி ஒன்று உள்ளது, பிரம்மாஸ்திரம் போல அணுகுண்டையும் கட்டுபடுத்தலாம் என பாரதம் சொல்கிறது,


அந்த கண்டுபிடிப்பு வரும் வரை நாகசாகியே அணுகுண்டு வெடித்த கடைசி இடமாக வரலாற்றில் இருக்கட்டும்


என்ன தான் சொல்லுங்கள், நவீன விஞ்ஞானத்திற்கு மகாபாரதம் ஒரு முன்னோடி. யானை குதிரை என வாகனம் வைத்திருக்கின்றார்களே தவிர, ஆயுதங்கள் எல்லாம் மகா நவீனமானவை


ஒப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானியே அணுகுண்டில் கிருஷ்ணனைத்தான் கண்டிருக்கின்றான், அவனே சொல்லியும் இருக்கின்றான்


மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நவீன விஞ்ஞானமும் அதற்கான தீர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன, மகா ஆச்சர்யமான விஷயம் இது.


(நவீனகால அஸ்வத்தாமன்களும் , அழிந்த ஹிரோஷிமாவும்)







No comments:

Post a Comment