Wednesday, August 10, 2016

எங்கே போய்விடும் காலம்...

இப்பொழுதெல்லாம் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது, கொட்டுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கின்றது, ஆக சமீபத்திய அனுபவம் இது.


ஒருவனை ஆரம்பத்திலே பிடிக்கவில்லை, பழிவாங்க வேண்டுமென்றால், பழக வேண்டும், பழக்கமென்றால் மிக உறவாக பழகவேண்டும், சிரித்து சிரித்து பழகவேண்டும்.


மனதிற்குள் கடும் வன்மம் வைத்துகொள்ளவேண்டும், மனதிற்குள் கோபத்தை மறைத்து வெளியே உறவாட வேண்டும், அப்படி ஒரு 65ம் கலைக்கு இரவு பகலாக தயாராக இருக்கவேண்டும்.


ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் வரை கொக்குபோல் தவமிருக்கவேண்டும், கிடைத்துவிட்டால் நேரடியாக சொல்லகூடாது, சொல்லிவிட்டால் என்ன ஆகும்? இன்னும் நெருக்கமாக நண்பர்கள் ஆவோம் அல்லவா?, நட்பு தெய்வீகம் ஆகும் அல்லவா?


அது என்ன நட்பு மண்ணாங்கட்டி தெய்வீகம், வன்மம் தீர்ப்பதல்லவா முக்கியம், சாத்தானியம்.


இன்னொருவருவனிடம் சென்று அல்லது வீட்டிற்கு பிச்சை எடுக்க வருபவனோ அல்லது சிலிண்டர் போட வருபவனையோ பிடித்து அதோ இருக்கிறான் அல்லவா.. என தொடங்கி ஆட்டோ சங்கர் தாவூத் இப்ராஹிம் லெவலுக்கு ஏற்றி விட வேண்டும், ஏற்றிவிட்டு அவன் நல்லதற்குதான் சொல்கிறோம் மறக்காமல் சொல் என சொல்லவேண்டும்.


அந்த வயர்மேனோ, கேஸ் போடுபவனோ, கார் கழுவுவனொ, மெக்கானிக்கோ அவன் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு சென்ற்பின் ரகசியமாக ரசிப்பினை தொடங்க வேண்டும்.


அப்படியே அவன் படும் மனசிக்கல்களை மறைமுகமாக கண்காணித்து ரசிக்கவேண்டும், அவன் புழுங்கி அழுவதை ரசிக்க வேண்டும், ஆனால் ஒருவார்த்தை கேட்க கூடாது


அவன் அழுது புரண்டு, ஏன் இப்படி செய்தார்கள்?, தனியாக ஒரு வார்த்தை சொன்னால் முடிந்துவிடும் விஷயமல்லவா? நம்மை பிடிக்கவில்லை என்பதால்தானே இப்படி செய்தார்கள், ஓஓ மனதை காயபடுத்திவிட்டோம் போல என விலக தொடங்கினால்...


மறுநாள் ஒன்றுமே தெரியாதது போல குட்மார்னிங் சார்... என சொல்லவேண்டும், அதாவது ஒரு வன்மமும் இல்லை என்பது போல காட்டிகொள்ளவேண்டும்


மறுபடி அதே உறவினை தொடர்ந்து, அப்படியே கண்காணித்து அடித்துகொண்டே இருக்கும் ஒரு வகை கலை. நெருப்பில் காட்டி இரும்பினை குளிரவைத்து அடிப்பார்கள் அல்லவா?


இரும்பிற்கு மனம் இல்லை வலிக்காது, ஆனால் மனிதனுக்கு?


அப்படி சிரித்து சிரித்து பழகி, திடீரென பின் மண்டையில் அடிக்கும் கலை. பின் தடவி விட்டுகொண்டே ரசிக்கும் கலை.


ஒரு சிலருக்கே வாய்க்கும் கலை


அதாவது பிடிக்கவில்லை என வெட்டி விடாமல், உறவாடியே கெடுக்கும் கலை,


இப்படி ஒரு கொடூர கலை இருக்கிறது என்று சமீபத்தில்தான் அறிய முடிந்தது,


வானத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உருவத்தில் மேகங்கள் வரும், அவை கூடும் மழை கொட்டும்


அப்படி ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு உருவத்தில் வருகின்றார்கள், நமக்கு அனுபவ மழை கொட்டுகின்றது, சில நேரம் ஞான மின்னல் மனதை வெட்டி விடுகின்றது,


அந்த இயற்கையில்தான் ஆண்டவன் எவ்வளவு பெரும் விஷயத்தை மறைத்திருக்கின்றான், மானிட வாழ்வின் நண்பர் குழாமும் அப்படியே, எல்லாம் அனுபவ மழை.


மானுக்கும் நரிக்கும் என்ன உறவு? சிட்டுகுருவிக்கும் கோட்டானும் ஒரே இனமாக வாழ முடியுமா? இரண்டின் குணம் வேறு, தன்மை வேறு


அப்படி வேறுபட்ட சிந்தனை கொண்ட மனிதர்களும் நண்பர்களாய் வரமுடியாது, அவனவன் தரத்தில் அவனவன் நிற்கவேண்டும் என்பது மகா உண்மை.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரம் அரசியல்வாதி ஒளிந்திருக்கின்றான், சந்தர்ப்பம் வாய்க்கும்போது அது வெளிபடுகின்றது என்பது கண்டுகொண்டிருக்கும் அனுபவம்


வாழ்க்கை ஒரு நாடக மேடைதான், அதில் நடிக்கத்தான் செய்வார்கள் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும், வாழ்க்கை கடலை கடக்கும்போது நெத்திலி மீன் முதல் ஆபத்தான ஜெல்லி, பெரும் முதலை, திமிங்கலம் எல்லாம் கடக்கத்தான் வேண்டி இருக்கின்றது


போகட்டும்


தலைவர் பாணியில் போனால "ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை, அவன் அன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை" என சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம்.


எங்கே போய்விடும் காலம்.

No comments:

Post a Comment