Sunday, August 28, 2016

தர்மதுரை : திரை விமர்சனம்

தர்மதுரை என்றொரு படம் வந்திருக்கின்றது, எத்தனாயிரம் மருத்துவர்கள் தேவைபடும் தேசத்தில்தான், எப்படியாவது எங்களை மருத்துவர் ஆக்குங்கள் என பச்சைமுத்து போன்றவர்களிடம் இம்மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள், என்பதை செவிட்டில் அறைந்து சொன்ன படம்,


இச்சமூகம் அப்படித்தான் நல்ல கல்விக்கு துடித்துகொண்டிருக்கின்றது, படம் பரவாயில்லை, பார்க்கலாம்.


ஆனால் படம் பார்த்தபொழுது எம் ஆர் ராதா நினைவுக்கு வருகின்றார்


மனிதர் தனக்கு பின் அற்புதமான நடிப்பினை வழங்க இரு வாரிசுகளை விட்டுத்தான் சென்றிருக்கின்றார், ஒருவர் ராதா ரவி, இன்னொன்று ராதிகா


கலையரசி எனும் பட்டத்திற்கு மிக பொருத்தமான நடிப்பு அவரது, அப்படி ஒரு உருக்கமான நடிப்பினை கொட்டி தீர்த்திருக்கின்றார், அவருக்கொரு விருது கொடுத்தே இத்தமிழகம் தீரவேண்டும், நிச்சயமாக சொல்லலாம் பெண் சிவாஜி


யாரோ சொன்னார்கள், முதல் மரியாதையில் ராதிகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? சந்தேகமே இல்லை சிவாஜியினை தூக்கி விழுங்கி இருப்பார்.


படத்தில் "உன்ன ஏதாவது செஞ்சிருவாங்கப்பா..எங்கயாவது போய் பொழைச்சிக்க.." என சொல்லும்பொழுது, சாப்பாட்டு தட்டில் ரம்பத்தை வைத்து கொடுக்கும்பொழுது மனதில் அந்த பாட்டியினை கொண்டுவருகிறார்.


அது எனக்கு தெரிந்த பாட்டி


இப்படித்தான் அவள் மகனும் விரும்பிய பெண்ணை மணந்து வந்தான், அவள் குடும்பத்தை பிரிக்கவந்தவள் என உடன்பிறந்தோர் விரட்ட, அவனும் குடிகாரனான். காரணம் அவர்களுக்கு சொத்து இருந்தது என அவர்கள் நினைத்துகொண்டார்கள்


அவனுக்கோர் மகனும் இருந்தான், அவன் கண் முன்னாலேதான் இப்படி விஜய்சேதுபதியினை அடிப்பது போல அடிப்பார்கள், அவர்கள் களைத்து ஓய்ந்தது அந்த தாய் இறுதியில் இப்படித்தான் சொல்லி அவனுக்கு தண்ணீர் ஊற்றுவாள்


"உனக்கு ஒண்ணும் தரமாட்டானுப்பா..நீ எங்கயாவது போய் பொழச்சிக்க..இவனுக உன்ன கொன்னுருவானுகப்பா...கண்ணுமுன்னால சாகத.."


அவன் அழுவான் "எனக்கு யார தெரியும்? நான் எங்கே போவேன், அப்பா இருந்தவரைக்கும் இப்படியா" என கதறி அழுவான்


அந்த வயதான தாயும் அழுவாள், அந்த சிறுவனும் அழுவான். "ஒரு நாள் உனக்கு விடியுமய்யா..." என அழுதுகொண்டே கஞ்சி ஊற்றுவாள் அந்த தாய், அவனோ அந்த கஞ்சியினை தன் அருகே இருக்கும் மகனுக்கு ஊட்டிகொண்டிருப்பான்.


"ராசா நீ படிச்சிட்டு எங்காவது போயிரு, இவனுகட்ட வாழமுடியாது.." என அவன் தன் மகனுக்கு சொல்லும்பொழுது பிஞ்சி வயதில் கண்ணீரை துடைத்துகொண்டு சரிப்பா என சொல்லும் அக்குழந்தை.


அதனை கேட்டு உடைந்து அழுவாள் அந்த பாட்டி


நான் நேரிலே கண்ட அந்த கிராமத்து பாட்டியினை தத்ரூபமாக கொண்டுவந்தார் ராதிகா


எல்லா கிராமங்களிலும் ஒரு வெளிதெரியாத சோககதை உறங்கி கொண்டிருக்கின்றது என்பார் பாரதிராஜா. அது மகா உண்மையும் கூட‌


இந்தபடமும் சில சோகமான உண்மைகளின் பாதிப்பாக இருக்கலாம்


கிராமங்கள் அப்படித்தான், சுத்தமான பாசமும் கிடைக்கும், உயிரெடுக்கும் வன்மமும் அங்கே தான் உருவாகும்,


அது உறவினர்களுக்குள்ளே உருவாகும் என்பதுதான் பெரும் விசித்திரம்.


ராதிகா முகம் காணும்பொழுதெல்லாம் அந்த பாட்டியே மனதில் வந்து போகின்றார், இந்த படத்தினை பார்க்காமலே இருந்து தொலைத்திருக்கலாம்

No comments:

Post a Comment