Saturday, August 13, 2016

உறவினை அறுத்த கோடு

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று.

FB_IMG_1471106325907

அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன.

"என் பிணத்தின் மீது இந்த தேசம் பிரியட்டும்" என அடம்பிடித்த காந்தியாலும் முடியவில்லை. ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தாலும் அவர் மட்டும் காரணமில்லை. ஏராளமான காரணங்கள் மிக முக்கியமாக பிள்ளையை கத்தியால் கீறிவிட்டு, தாலாட்டு பாடிய வெள்ளையர்கள்.

அதுவரை ஒற்றுமையாய் வெள்ளையனே வெளியேறு என ஒற்றுமையாய் கோஷமிட்டவர்கள், லாகூரில் ஒருவனுக்கு அடிபட்டால் சென்னையில் துடித்தவர்கள். மராட்டியன் தாக்கபட்டால் அன்றைய பெஷாவரில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் அடித்துகொள்ள தயாராயினர்.

வெந்தபுண்ணில் வேல் அல்ல, பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த காரியம் நடந்தது.

அதுவரை இம்மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் என அறிவித்து சுதந்திரம் கொடுத்தாகிற்று, ஆனால் எல்லைக்கோடு?

வெள்ளையர்கள் மூட்டை முடிச்சினை கட்டிகொண்டிருந்த காலம், வேலை செய்ய ஒரு வெள்ளையனுக்கும் விருப்பமில்லை. ஆனால் செய்யவேண்டிய பணி மிகபெரிது, ஒரு வழக்கறிஞரை அழைத்துவந்தார்கள், அவர் பெயர் ராட்கிளிஃப், எல்லை பிரிக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கபட்டது.

"சம்சாரம் அது மின்சாரம்" விசு போலவோ அல்லது "இந்தகோட்டை தாண்டி....." என வடிவேலு போலவோ செய்துவிடும் விஷயம் அல்ல, பெரும் பணி மக்களை எல்லாம் கலந்து மிக கவனமாக செய்திருக்கவேண்டிய பணி. பழைய பிர்ட்டிசாராக இருந்திருந்தால் இந்திய நிலங்களை அளந்து சுத்தமாக சாதித்தது போல செய்திருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள், ஏதோ கடமைக்கு பணியாற்றினார்கள், அப்படித்தான் மனதளவில் இருந்தார்கள். அதனால்தான் சம்பந்தமே இல்லாதவரை காட்சிக்குள் கொண்டுவந்தார்கள்.
ராட்கிளிப் அதுவரை இந்தியாவினை கண்டதே இல்லை, இங்கு வந்தும் அவர் களமிறங்கி பார்க்கவில்லை,

வரைபடம் கண்டார், அட்சகோடு தீர்க்க கோடு கணக்கிட்டார், கோடு வரைய கிளம்பிவிட்டார். நிச்சயமாக அது அசுபநாளாகத்தான் இருந்திருக்கவேண்டும். கரிநாள் அல்லது வெறி நாள்.

ராட்கிளிப் என்னமோ மைகொண்டுதான் மேப்பில் பிரித்தார், ஆனால் இந்தியா ரத்தத்தால் பிரிந்தது.
குஜராத்திலிருந்து வரைந்தார், அப்படியே வடக்கு நோக்கி சென்றார், உச்சமாக பாதிக்கபட்டது பஞ்சாப் எல்லை. அதாவது ஒரே கிராமம் குறுக்காக கோடு செல்லும் அது பாகிஸ்தானுக்கு இது இந்தியாவிற்கு.

கடமையின் உச்சகட்டமாக ஒரு வீட்டின் உள்ளே கூட கோடு சென்றது, முன்வாசல் இந்தியா பின் வாசல் பாகிஸ்தான்.
பெரும் குழப்பான கோடு அது, வரைந்து அறிவித்ததுதான் தாமதம், தொடங்கி விட்டார்கள்.

அது உன்நாடு நீ அங்கு ஓடு என இரு நாட்டிலும் சிறுபான்மையினர் விரட்டபட்டார்கள். அரசு இல்லை,காவல் இல்லை, சட்டம் இல்லை, பிடித்தால் அடைக்க சிறையோ அல்லது தீர்ப்பிட நீதிமன்றமோ ஒன்றுமில்லை.

எல்லைகளில் ரத்த ஆறு ஓடிற்று, திப்பு சுல்தானை அடக்க வெள்ளையர் போட்ட பிரிவினையின் உச்சம், இரு மாதங்கள் நீடித்தது. ஏராளமான உயிர்ப்பலி, எண்ணற்ற அகதிகள், இன்றும் உண்மை கணக்கு தெரியாது.

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பேரலவங்களில் அது மகா முக்கியமானது.
அப்படியான அந்த கோடு பஞ்சாபின் வாகா கிராமம் வழியாக சென்றது, இன்றும் செல்கிறது

அந்த பக்கம் பாகிஸ்தான் இந்தபக்கம் இந்தியா, அந்த பக்கம் பெரியப்பா இந்த பக்கம் சித்தப்பா, அந்த பக்கம் மாமியார் வீடு, இந்த பக்கம் மருமகள் வீடு, சண்டை போட வேண்டுமென்றாலும் விசா வேண்டும்.

இன்றும் தினந்தோறும் அந்த எல்லை திறக்கும், காலை முதல் மாலை வரை உறவுகள் கொஞ்சும், பின் திரும்பிவிட வேண்டும், அங்கு செல்லவிரும்பினால் ஏகபட்ட விசா கெடுபிடிகள்,பாதுகாப்பு இன்னும் ஏராளம். சொல்லணா துயரில் வாடி நிற்கும் சொந்தங்கள் ஏராளம்.

இன்றும் பஞ்சாபிய எல்லைகள் அந்த கோட்டினால் உறவினை பிரிந்து நிற்கின்றன, இந்தியாவினை பற்றி அறியாத ஒரு வெளிநாட்டவனை கோடுபோட சொன்னால் அவர் எப்படி கொஞ்சமேனும் சிந்திக்காமல் செயல்படுவார் என்பதற்கு இது இன்றளவும் பெரும் உதாரணம்.

அப்படியே வங்கம் பக்கமும் சென்று இதனைபோலவே கோடு கிழித்து, பெரும் கலவரங்களை உண்டாக்கிவிட்டு விட்டு, அவர் சென்றுவிட்டார், கலவரத்தை அடக்க காந்தி நவகாளி யாத்திரை தொடங்கியது யாவரும் அறிந்தது.
பின்னாளில் பாதிக்கபட்ட பகுதிகளை காந்தி கண்டதும், பிரிவினை தொகையை கொடுக்க சொன்னதும், அதற்காக அவர் கொல்லபட்டதும் யாவரும் அறிந்தது.

அந்த பெரும் கலவரங்களை உருவாக்கி, தீரா பகையினை உருவாக்கி, கிட்டதட்ட காந்தி கொலைக்கே முதல் காரணமான அந்த கோடு, லட்சனக்கான பஞ்சாப்,வங்க,குஜராத் மக்களின் உறவுகளை அறுத்த அந்த கோடு உருவாக்கபட்ட ஆகஸ்ட் 17

சுதந்திரம் கொடுத்த மொத்த வன்மத்தையும், தன் கிரீடம் சர்வதேசத்தில் கவிழ்ந்த மொத்த அவமானத்தையும் இப்படி பழிதீர்த்துவிட்டுதான் கிளம்பினான் வெள்ளையன்.

அது இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது

பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான அந்த கோட்டின் பின்னால் நின்றுகொண்டுதான் பாகிஸ்தான் இன்னமும் சுட்டுகொண்டு இருக்கின்றது. அந்த ரத்தகோட்டின் பெயர் அந்த வழக்கறிஞரின் பெயரில் "ராக்கிளிப் கோடு" என்றுதான் இன்றுவரை அழைக்கபடுகின்றது.

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் என மகிழ்ந்தாலும், ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம் என்பதனை மறுக்கமுடியாது.
அதாவது இந்ததேசத்திற்கு மதவெறி எவ்வளவு ஆபத்தானது என்பதனை ஆழபதியவைத்த நாள் இது.

இந்த தேசத்தில் வளர்க்கவேண்டியது சகிப்புதன்மையும், மத‌ஒற்றுமையும், தேசாபிமானமும் என்பதனை ஆழ பதிய சொன்ன தினம் இது.

அந்த கோடுதான் இன்றுபோல் என்றுமே இந்த நாட்டின் கடைசி பிரிவினை கோடாக இருக்கவேண்டும் என்பதில்தான் தேசம் ஆறுதல் கொள்கின்றது, அதில்தான் நம்பிக்கையும் பிறக்கின்றது.

இன்னும் சற்றுநேரத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடும் , ஆனால் சுதந்திரம் பெற்று தீவிரவாதத்தினை வளர்த்ததை தவிர என்ன சாதித்தார்கள்?

இந்த பாகிஸ்தான் சுதந்திரமும் அதனை தொடர்ந்த அந்த ரத்த கோடும் ஒருநாளும் மறக்க முடியாதவை

No comments:

Post a Comment