Monday, August 15, 2016

சுதந்திர தின வாழ்த்துக்கள்....

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள்.

FB_IMG_1471228998469

அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்?

பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே?

இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள்.

அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் நாட்டை பல பகுதிகளில் யாரோ ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்

மறைக்க முடியா உண்மை இது, இதற்கா சுதந்திரம் வாங்கினீர்கள். மனசாட்சியிடம் கேளுங்கள் அது பேசும்.

மாய பூதமாக நீங்கள் உருவாக்கிய தீவிரவாதம் உங்களை அழித்துகொண்டிருக்கின்றது, காஷ்மீரை காட்டி நீங்கள் உங்கள் செலவுகளை அதிகரித்து கொண்டிருக்கின்றீர்கள், பல உலக வில்லன்கள் உங்களை தூண்டிவிட்டுகொண்டிருக்கின்றார்கள்.

இருவரும் ஒரே பிரிட்டிஷாரை எதிர்த்துதான் போராடினோம், இருவரும் அமெரிக்காவின் அழைப்பினை புறக்கணித்துதான் இரண்டாம் உலகப்போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தோம்

ஆனால் இன்று நமக்குள்ளே சண்டை பலமுறை மோதியாகிவிட்டது, நேரிலும் மறைமுகத்திலும் லட்சகணக்கானோர் செத்தும் ஆகிவிட்டது

உங்களை காட்டி எமது தேசமும், எங்களை காட்டி உங்கள் தேசமும் செலவழிக்கும் பணம் கொஞ்சமல்ல, அது எங்கே விடிகின்றது?

மருத்துவமனை, சாலை, கல்வி என விழுந்து இன்று இருவருமே உலகதரம் எட்டமுடியாமல் அபலைகளாய் அலைகின்றோம்

அரபு நாடுகளின் எண்ணெய் வயல்கள், மலேசிய பாமாயில் காடுகள், சிங்கப்பூர் அடித்தட்டு வேலைகள் இன்னும் உலகெல்லாம் நீங்களும், நாங்களும், வங்கத்தவரும் அலைய காரணம் என்ன?

நமக்குள்ளே நமக்கு எதிராக குவிக்கபடும் ஆயுதங்களும் அதன் செலவுகளும்

இந்த 70 வருடமாகத்தான் இந்த மோதலும், சாதலும்

அதற்கு முன் எவ்வளவு ஒற்றுமையாக போராடியிருக்கின்றோம், அலெக்ஸாண்டர் காலமுதல் மவுண்பேட்டன் காலம் வரை ஒரு ஒற்றுமை ஒருந்தே தான் வந்திருக்கின்றது அல்லவா? வரலாறை புரட்டுங்கள்

ஒரு காலத்தில் இந்துக்கள், அதன் பின் பவுத்தர்கள், அதன் பின் இஸ்லாமியர், சீக்கியர் என மதங்களால் பிரிந்தாலும் இந்தியர் என ஒன்றாகத்தானே போராடியிருக்கின்றோம், சுதந்திர போராட்டம் அதனைத்தான் சொல்கிறது

எங்கள் மண் பாரதி உங்களுக்காக போராடியிருக்கின்றான், உங்கள் லாகூரின் பகத்சிங்கும், லஜ்பதிராயும் எங்களுக்காக குரலெழுப்பிய காலமெல்லாம் எங்கே? மறக்கமுடியுமா?

உங்களோடு கரம் கோர்க்க எங்களுக்கு தயக்கமில்லை, எங்களுக்கு பிரச்சினை இல்லை, அப்படி பாகிஸ்தான் வேண்டாம் என சொல்பவர் சிறிய மதவாத குழுக்களாக இருக்கலாம்,

அவர்களை அங்கே இந்தியா வேண்டாம் என சொல்லும் உங்கள் நாட்டு மதக்குழுக்களோடு சேர்ந்து, அணுகுண்டுகளோடு கடலில் எறிவோம்

பாகிஸ்தான் மக்களுக்கு எந்நாளும் இந்தியா மீதே ஒரு அபிமானம் உண்டு, இந்தியருக்கும் அம்மக்கள் மீது ஒரு அனுதாபம் உண்டு

அந்நிய சக்தியின் பிடியிலிருக்கும் உங்கள் அதிகார பீடமே எல்லாவற்றிற்கும் காரணம். அவ்வகையில் நாங்கள் மகா சுதந்திரமானவர்கள், தனித்து நிற்பவர்கள்

இனிய சகோதரர்களே, வாருங்கள் இணைந்து கொள்வோம்

பஞ்சாப் பூரணமாகும், காஷ்மீர் இணையும், பெருமை மிகு சிந்து நதி எமக்கும் உரிமையாகும்.

அன்று உலகின் பெரும் நாடாக இந்தியா எளிதில் உருவெடுக்கும். மிகபெரும் சக்தியாக அது உலகினை மிரட்டும்.

இப்படி இணைவோம் எனும் குரல்கள் இந்தியாவில் எழுவதும், அதற்கு நீங்கள் ஆதரவளிப்பதையும் பார்த்துகொண்டே இருக்கின்றோம்.

மதங்களை வீட்டில் வைப்போம், மானிடத்தை நாட்டில் வைப்போம் வாருங்கள்

உண்மையில் சுதந்திர தினவிழா கொண்டாட வேண்டுமென்றால் எப்படி சொல்லவேண்டும்? பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்ற ஒரே சுதந்திரம் உங்களுக்கும், எங்களுக்கும் வேறு வேறு என்றால் அது அர்த்தமுள்ளதா?

சகோதர்கள் இல்லாமல் என்ன பண்டிகை கொண்டாட முடியும்? அதுவும் உடன் போராடிய சகோதரர்கள் இல்லாமல் எப்படி? வாருங்கள், இணைந்துகொள்ளுங்கள்.

நிச்சயம் ஒரு நாள் இணைவோம், அன்று அர்த்தத்தோடு கொண்டாடுவோம், அது எந்நாளகவும் இருந்துவிட்டு போகட்டும்

ஜெர்மனி பிரியாத பிரிவினையா? இணந்து இன்று உலகினை மிரட்டவில்லையா?

வியட்நாம் இணையவில்லையா?, ரஷ்யா பெலாரஸ் இணைய விரும்பவில்லையா? நாளையே வடகொரிய வெள்ளை தக்காளி கொள்ளை நோயில் செத்தால் இரு கொரியாக்களும் ஒன்றாக இணையாதா?

அதுபோல நாமும் இணைவோம் சகோதரர்களே, இந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்துஸ்தான் என மோதி அழிந்தது போதும், வரும் தலைமுறை அமைதியாக வாழட்டும், வழிவிடுவோம்

ஹிட்லரின் காலங்களை ஜெர்மானியர் மறக்க நினைப்பது போல இந்த ரத்த காலங்களை நாமும் மறப்போம், அடுத்த சந்ததி அமைதியில் வாழட்டும்.

அந்நாள் வரும் வரை நாங்கள் தனியாக கொண்டாடிகொள்கின்றோம் உங்களுக்காக கதவுகளை திறந்து வைத்துகொண்டே, உங்களை எதிர்பார்த்துகொண்டே

உலகின் பெரும் சவால்களை எதிர்கொண்ட நாடு எனும் முறையில், உலகின் பெரும் அதிசயிக்கதக்க நாடாக இன்று மிளிரும் இந்த நாட்டின் 70ம் சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம்

டிவி சினிமாக்களை விட்டு, மூட ஊடகங்களை விட்டு, நடிகைகள் நடிகையர் எனும் நாடக கூத்தாடிகளின் நடிப்பினை விட்டு, இந்த சுதந்திரத்திற்காய் ராபர்ட் கிளைவ் காலமுதல் மவுண்ட்பேட்டன் காலம்வரை செத்த ஒவ்வொரு தியாகிகளையும் நினைத்து அஞ்சலி செலுத்தி நாங்கள் கொண்டாடுகின்றோம்.

அந்த தியாகிகளை நினைக்கும் பொழுது எப்படி எங்களால் லாகூர், பெஷாவர், கராச்சி போன்ற உங்கள் நாட்டு நினைவுகளை மறக்க முடியும்

மாவீரன் ரஞ்சித் சிங் முதல், பகத்சிங் என தொடங்கி இறுதியில் பலுசிஸ்தான் எல்லையில் இந்தியபிரிவினை வேண்டாம் என கதறி நின்றானே, நாங்களும் கையினை பிசைந்து நின்றோமே, காட்டாறு வெள்ளம் சகோதரனை இழுத்து செல்லும்போது கதறி நின்றோமே அந்த எல்லை காந்தி கபார்கானின் நினைவுகளின்று எப்படி எங்களால் கொண்டாட முடியும்?

நேதாஜி வா என்றவுடன் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்தும் சிந்து ஓரத்திலிருந்தும் ஓடி வந்து டெல்லி சலோ எனும் போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த சகோதரர்களை மறக்க முடியுமா?

அர்த்தமில்லா சுதந்திர தினத்தை இருவரும் கொண்டாடுகின்றோம் என்பதில் உங்களை போலவே எங்களுக்கும் மனம் அறுக்கின்றது.

செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்றான் பாரதி, என்ன சிந்தனை? அது இந்தியன் எனும் சிந்தனை. மொழி மட்டுமல்ல இனம், சாதி என சகலத்தையும் கடந்த பெருந்தன்மையான் சிந்தனை அது.

அந்த பெருமையிலும், கர்வத்திலும் உளமார பெருமையுடன் சொல்கிறோம்

என் இனிய பாகிஸ்தான் சகோதரர்களே, போராடி பெற்ற சுதந்திரம் உங்களுக்கு தனியாகவோ எங்களுக்கு தனியாகவோ அல்ல.

வாருங்கள் இணைவோம், அதன் உண்மையான அர்த்தத்தை உலகிற்கே சொல்வோம்

நாங்கள் எப்பொழுதும் தயார், மனதார தயார். பிரிந்த சகோதரனை எதிர்பார்க்கும் மூத்த சகோதரர்கள் போல கண்ணீருடன் தயார்.

உங்களுக்காக காத்திருந்துகொண்டே உங்கள் குரலும் விரைவில் இணைந்து இப்படி சொல்லும் என எதிர்பார்த்துகொண்டே சொல்கின்றோம்.

வந்தே மாதரம்,
தாய் மண்ணே வணக்கம்.

No comments:

Post a Comment