Sunday, April 9, 2017

மிஸ்டர் மணிரத்னம் பாதை மாறுகின்றாரோ என அச்சம் ஏற்படுகின்றது

[gallery ids="11616,11615" type="circle" columns="2"]

இப்பொழுதெல்லாம் எதிரில் சீன நங்கைகள் நூலியிடையுடன் நடக்கும்பொழுது, வெள்ளைகாரிகள் இடை காற்றுவாங்க நடக்கும்பொழுது. காற்று வெளியிடை நினைவு வந்து தொலைக்கின்றது


மணிரத்னம் நிறைய வாசிப்பவர், நிறைய நுட்பமானவர் என்ற பிம்பம் நிறைய உண்டு


ஆனால் காலம் மாற மாற நானும் மாறுகின்றேன் என அவர் மாறிநின்று தவிக்கும்பொழுது நமக்கே திகைப்பாக இருக்கின்றது


கமலஹாசனும் இப்படித்தான், அக்காலத்தில் அவரின் படங்கள் யதார்த்தமாக இருந்தன, எல்லோருக்கும் புரிந்தது ரசித்தார்கள், மணிரத்னமும் நாயகன் முதல் பம்பாய் வரை அப்படித்தான் இருந்தார்


இவர்கள் நிரம்ப படிப்பவர்கள் இல்லையா? நாங்கள் பின் நவீனத்துவம் பேசுகின்றோம், முற்போக்காக சிந்திக்கின்றோம் என அவர்கள் அறிவில் வளர்ந்துவிட்டார்கள், அவர்கள அளவிற்கு படம் எடுக்க ஆரம்பித்தார்கள், சறுக்க ஆரம்பித்தார்கள்


அதாவது அவர்கள் குறியீடாய் கதை சொல்வார்களாம், மீதியினை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டுமாம்


இன்னும் இரட்டைஇலையினை தேடிகொண்டிருக்கும் சமூகத்திற்கு இது புரியுமா? புரியவே புரியாது


உயிரே, கடல் , ராவணன் என மணிரத்னம் குப்புறவிழுந்தது இப்படித்தான், ஆளவந்தான் முதல் மன்மதன் அம்பு, உத்தமவில்லன் என கமல் மல்லாக்க கிடப்பதும் இப்படித்தான்


ரசிகர்களின் நாடிபிடித்து வர அவர்கள் திணறுகின்றார்கள்


மணிரத்னம் எப்படி படடவர்? நாயகன் முதல் கன்னத்தில் முத்தமிட்டால் வரை எப்படி பட்ட படங்களை கொடுத்தவர்?


அவரும் எதற்கு யோசித்தாரோ தெரியவில்லை, நான் இளவட்டங்களுக்கான படம் எடுக்கின்றேன் என இறங்கிவிட்டார்


மவுனராகம் கார்த்திக்கினை போல ஒருவரை உருவாகுவார் என்றால் காற்று வெளியிடை கார்த்தி போல ஒன்றை உருவாக்கி இம்சைபடுத்துகின்றார்


அதிகம் படிப்பவர் அல்லவா? காதலை தாண்டி யோசிக்கின்றார்


ஓகே கண்மணி, இந்த காற்றுவெளியிடைகளை பார்க்கும்பொழுது அவர் இளைஞர்களுக்கு இக்கால படம் எடுக்கின்றேன் என நாளை விபரீத‌
பாதை மாறுவது தெரிகின்றது


எப்படி மாறி தொலையலாம்?


நாயகனிலும், அஞ்சலியிலும், பம்பாயிலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் குழந்தைகளை பேச வைத்து கண்களை கலங்க வைத்தவர் அவர், அவரின் ஸ்பெஷாலிட்டி இது


இந்த படங்களை பார்த்தால் இனி அவர்படத்தில் வருங்காலத்தில் குழந்தைகள் எப்படி பேசும் தெரியுமா?


"அம்மா நீங்க நல்லவரா? கெட்டவரா? ஏம்மா இன்னும் அப்பாவ கல்யாணம் பண்ணிக்கல"


"கல்யாணம் பண்ணாம நீங்க என்ன பெத்த மாதிரி நானும் ஒண்ண பெத்துக்கட்டுமா?"


"எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவோட பாய்பிரண்டும், அப்பாவோட கேர்ள்பிரண்டும் ஓகே சொல்லிட்டாங்க‌


இனி தாலிகட்டிட்டு அப்பா அம்மா ஒண்ணா இருப்பாங்க"


"எப்போம்மா..எப்போம்பா கல்யாணம் பண்ணுவ? யாரம்மா கல்யாணம் பண்ண போற?"


"எழுந்திரிம்மா எழுந்திரி இந்த கல்யாண உனக்கு வேண்டாம், அப்பா கூட பண்ணிக்க..எழுந்திரிங்கம்மா எழுந்திருங்க.."


இப்படி எல்லாம் அவரின் வருங்கால படங்களின் குழந்தைகள் பேசும் ஆபத்து இருக்கின்றது


மிஸ்டர் மணிரத்னம், இம்மாதிரி படங்களை எடுக்க செல்வராகவன் முதல் எத்தனையோ இம்சைகள் தமிழகத்தில் உண்டு, கவுதம் மேனன் வரை உண்டு


இது உங்களுக்கான இடம் அல்ல‌


கழுகு உயர பறக்க வேண்டியது, அது கோழிகளுடன் குப்பையினை கிளறினால் பரிதாபம், புலி கம்பீரமானது அது நரிகளோடு சேர்ந்து நண்டு வேட்டைக்கு கிளம்பினால் கண்ணீர் வரும்


சர்வதேச தீவிரமாதம் முதல் இருவரின் இரண்டாம் பாகம் முதல் எத்தனை விதமான கதைகளுக்கான வாசல் உங்கள் முன் திறந்து கிடக்கின்றது,


அப்படி ஒன்றில் உங்களை நிரூபித்துகாட்டுங்கள் மணிரத்னம்..


காலம் மாற மாற பெரும் அறிவாளிகள் எல்லாம் எப்படி தடுமாறுகின்றார்கள்


காலத்திற்கு ஏற்றபடி மாறி கடைசிவரை மக்களை சோர்வுறசெய்யாமல் ரசிக்கும்படியாகவே ஒரு எதிர்பாரப்பு வைத்திருந்து, அந்த புகழிலே ஓய்வுபெற்றவர்கள் யாரென தேடுகின்றேன்..


கலைஞர் அதில் முதலிடத்தில் இருக்கின்றார், 1950களின் இளைஞர்களை வசீகரித்த அவரால் 2015 இளைஞர்களின் ரசனையினையும் பேச்சிலும் எழுத்திலும் பெற முடிந்தது, திரை வசனங்களை விடுங்கள்


தனக்குரிய இடத்தினை இறுதிவரை அபபடியே கொண்டு சென்றதில் அவருகு நிகர் அவர்தான்..


சுஜாதா அந்த வித்தை சாதனையினை சமத்தாக செய்தவர்..


மிஸ்டர் மணிரத்னம் பாதை மாறுகின்றாரோ என அச்சம் ஏற்படுகின்றது


பிணம் இருக்கும் இடத்தில் கழுகுகளும், பணம் இருக்கும் இடத்தில் மானிட‌ கூட்டமும், ஏரிகள் இருக்கும் இடங்களில் பறவைகளும் கூடும்


அப்படி திறமை இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பும் இருக்கும்..


அப்படி இன்னும் உங்களை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றது மணிரத்னம்...


தயவு செய்து இளைஞர்களின் நாடிதுடிப்பினை அறிந்து படமெடுக்கின்றேன் என இந்தமாதிரி கழிசடை படங்களில் இறங்கிவிடாதீர்கள் மணிரத்னம்


அணுகுண்டு வேண்டாம் என கென்னடியிடமும், மதுக்கடை வேண்டாம் என கலைஞரிடமும் கெஞ்சிய ராஜாஜிபோல கெஞ்சுகின்றோம்


மதுபழக்கம் வேண்டாம் என கண்ணதாசனிடம் கெஞ்சிய காமராஜரை போல கெஞ்சுகின்றோம்..


இந்த புதிய‌ பாதை உங்களுக்கு வேண்டாம்...

No comments:

Post a Comment