Saturday, April 29, 2017

பாகுபலி 2 : திரை விமர்சனம்

https://youtu.be/cVUiFEprn-M?autoplay=1

பாகுபலி 2 : பாடல்கள் (இசை  ஒலி வடிவம்)


பாடல்களை கேட்டுக்கொண்டே விமர்சனம் படியுங்கள் 













ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. என கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம், ராஜா கதைகள் என்றால் ஆர்வம் வருவதொன்றும் ஆச்சரியமல்ல..

அப்படி பாகுபலி ராஜாவின் கதையினை இரண்டாம் பாகமாக சொல்லியிருப்பதை பார்த்தாகிவிட்டது, அழகாக என சொன்னால் தவறு, அற்புதமாக சொல்லியிருக்கின்றார்கள்

Image may contain: 4 people, textபடத்தின் பெரும் பலம் ரம்யா கிருஷ்ணன், மனுஷி போன பிறவியில் மங்கம்மாளாக இருந்திருக்கலாம், நடை முதல் முழி வரை அப்படியே "ராஜகளை" காட்டுகின்றார், பாசமா? கடமையா? என அவர் திணறும் இடத்தில் நம்மையும் அழவைக்கின்றார்.

நிச்சயம் அவர் நடிப்பு மகா ராணி, நாம் குஷ்பூ ரசிகன் தான், அதற்காக நல்ல நடிப்பினை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது,

குஷ்பூ கோபபட்டாலும் பரவாயில்லை

நாசரும், ராணாவும் வஞ்சக, பேராசையின் வடிவங்களாக வாழ்ந்திருக்கின்றனர், இருவர் நடிப்பும் அபாரம் என்பதற்கு 10 படி மேல்.

அனுஷ்கா அசத்தியிருக்கின்றார், இந்த பாகம் முழுக்க அவருக்கானது, அக்கால நாயக்க ராணிகள் சாயல் அவருக்கு அசால்ட்டாக பொருந்துகின்றது

பிரபாஸ் பற்றி சொல்லவேண்டியதில்லை, முன்பே அனுபவபட்டது, அதாவது ஒரு தெலுங்கு நண்பர் இருந்தார், ஏதோ ராமராவ் பற்றி சொல்லபோக மனிதர் டென்சனாகி சொன்னார, "ஆமா எங்க ஊர்ல ஹிட் நடிகர் ஆகணும்னா பாடி வெயிட், உயரம் எல்லாம் இருக்கணும், சிரஞ்சீவி இப்போ பிரபாஸ் எல்லாம் அப்படித்தான்

உங்க ஊர்ல இந்த தனுஷ், சிம்பு மாதிரி எல்ல்லாம் எங்கள் ஊரில் வரமுடியாது" உண்மையும் அதுதான், ஆஜானுபாகுவான பாத்திரத்திற்கு பிரபாஸ் அட்டகாசம்

சத்யராஜ் மகா நடிகன், இறுதிவரை நான் அரசனுக்கு அடிமை என போராடும் விசுவாசமான பாத்திரத்தில் உச்சம் தொடுகின்றார், வாட்டாள் நாகராஜ் கும்பல் கூட ரசிக்கும் நடிப்பு

படம் மிரட்டுகின்றது, ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நுணுக்கமாக எடுக்கபட்டிருக்கின்றது, நுணுக்கமாக மட்டும் அல்ல, அழுத்தமாகவும், ரசனையாகவும் எடுத்திருக்கின்றார் ராஜமவுலி

எது கிராபிக்ஸ், எது இயற்கை என தெரியாத அளவு படத்தினை கொண்டு சென்றிருப்பதற்கு பெரும் வாழ்த்துக்களை சொல்லலாம்

இந்திய திரைப்பட வரலாற்றில் நிச்சயம் பாகுபலி ஒரு மைல்கல் அல்லது கோபுரம் என்பதில் இனி சந்தேகமில்லை, இனி நிச்சயம் இம்மாதிரியான படங்கள் நிறைய வரும் , ஆனால் பாகுபலிக்கு மேலா? கீழா? என்றுதான் அளக்கமுடியும்

கொஞ்சம் அல்ல, நிறையவே நீளமான படம், ஆனால் படம் பார்பதை மறந்து, அந்த காலத்திற்கே நம்மை ராஜமவுலி குழு அழைத்துசென்றிருப்பதால் ஒரு அலுப்புமில்லை, படம் முடிந்த பின்னாலும் நான் இங்கே இருக்கின்றேன் அடுத்த ஷோ போடுங்கள் என சொல்லும் ஆர்வம்தான் இருக்கின்றது

இரு பாகத்தையும் சேர்த்துபோட்டு 7 மணிநேரம் ஓடவிட்டால் கூட நன்றாக இருந்திருக்கும், இதுதான் படத்தின் வெற்றி

கொஞ்சம் யோசித்தால் இது அம்புலிமாமா கதைதான், அரச கீரிடம் எனும் மாயை எத்தனை உயிர்களை பழிவாங்கும், சொந்த ரத்ததை சிந்த வைக்கும், பல குடும்பங்களை அழிக்கும் எனும் ஒரு வரி கதைதான், ஆனால் தொழில்நுட்பம் , நல்ல நடிப்பு என மிகுந்த ஆச்சரியமான கண்கட்டி வித்தையாக டைரக்டர் காட்டிவிட்டார் அல்லவா? அதுதான் சிறப்பு

மலேசியாவில் இப்படி வரவேற்பு பெற்ற இந்தியபடத்தினை இப்பொழுதுதான் பார்க்கின்றேன், எல்லா திரையரங்கும் நிரம்பி வழிகின்றன, நள்ளிரவு காட்சிகளும் புல் என்கின்றார்கள், எங்கும் பாகுபலி எதிலும் பாகுபலி

ஆக நல்ல படத்திற்கு, மக்களை கட்டிபோட தெரிந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு இருக்கின்றது, எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் சினிமா தியேட்டர்களை நிரப்பமுடியும் என தெளிவாக சொல்கின்றது பாகுபலி

நல்ல படத்திற்கு செலவழிக்க மக்கள் தயங்குவதில்லை , அவர்கள் நல்ல படத்தினை எதிர் பார்கின்றார்கள், அப்படி அமைந்துவிட்டால் கொண்டாடி தீர்க்கின்றார்கள் என்பது கண் கூடாக தெரிகின்றது.

திரைப்பட தொழில் நஷ்டம், எங்களுக்கு வரிவிலக்கு வேண்டும், இன்னும் பல சலுகை வேண்டும் என ஒப்பாரி வைக்கும் விஷால் போன்றவர்களை இந்த படத்திற்கு வரும் கூட்டத்தை காட்டி காட்டி அடிக்க வேண்டும்

உறுதியாக சொல்லலாம் இன்னும் குறைந்தது 20 வருடத்திற்கு இப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை, நிச்சயமாக இந்த பாணியில் வரும், ஆனால் பாகுபலி அளவிற்கு நுட்பமாக எடுக்கமுடியுமா? என்பது கேள்விகுறி

என்னிடம் மட்டும் ஒரு 100 கோடி இருந்தால், அந்த ராஜமவுலியினை அழைத்து வந்து ராஜராஜசோழன், நரசிம்ம பல்லவன், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் என எல்லா தமிழ் வரலாற்று நாயகர்களையும் படமாக எடுக்க சொல்லலாம்

தமிழகத்தில் இப்படி மிரட்ட யார் இருக்கின்றார்கள்? ராஜமவுலிதான் பக்கத்து மாநிலத்தில் இருக்கின்றார்

சினிமா ரசிகர்கள் தவறவிட கூடாத படம் இது, இனி அரசர் கதைகளை எடுத்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும் என வழிகாட்டிவிட்ட ராஜமவுலிக்கு பெரும் வாழ்த்துக்கள்

இப்பாணியில் கமலஹாசனும் மருதநாயகம் எடுக்கலாம்தான், ஆனால் மனிதர் வித்தியாசமானவர், சொல்லி கேட்கின்ற ரகம் இல்லை, ஆனால் இனி இந்த சாயலின்றி மருதநாயகம் வரமுடியாது

எப்படியோ காலத்திற்கேற்ற சிறந்த படம் வந்திருக்கின்றது, ராஜமவுலி தன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கின்றார், வணங்கலாம். நல்ல நடிகர்கள் நல்ல இயக்குநர் கதைகளில் எப்படி மின்னுவார்கள் என தெரிகின்றது, இதே ரம்யா கிருஷ்ணன் சத்யராஜினை "அசத்தல்" படத்தில் ஒரு மாதிரி அலைய வைத்தது தமிழ்சினிமா

ஆனால் நல்ல இயக்குநர் இருவரின் அபார நடிப்பையும் பிழிந்து கொடுத்திருக்கின்றார்,

மிக மிக அசத்தலான படம் கண்களை மூடினால் அம்புமழை பொழிகின்றது, அரசவையும் ரம்யா கிருஷ்ணனின் கெத்தான முகமுமே நினைவுக்கு மாறி மாறி வருகின்றன‌

நல்ல வேளையாக இம்மாதிரி படங்கள் இப்பொழுது வந்திருக்கின்றன, ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?

அந்த ராமசந்திரன் கோபத்தில் கிளம்பியிருப்பார், "என்ன? பாகுபலியா? நான் இருக்கும்பொழுதா?

கூப்பிடு அந்த லதாவினையும், ஜெயலலிதாவினையும், மஞ்சுளாவினையும். நான் ராமுபலி என்றொரு படம் 3 பாகமாக எடுத்து என்னை நிரூபிக்க போகின்றேன்"

யாராவது தாங்கமுடியுமா? ஆனால் அவர் செய்வார். வாழ்க்கையெல்லாம் அதனைத்தான் செய்திருக்கின்றார்

இப்பொழுது அவர் இல்லை, ஆனால் கமலஹாசனை இந்த படம் உறங்கவிடாது, விடவே விடாது என்பதை மட்டும் யூகிக்கலாம்

மருதநாயகம் படம் இப்பாணியில் வந்தால் நிச்சயம் கொண்டாடபடும், இன்னொரு பாகுபலியாய் அமையும்.

ஆனால் ராஜமவுலி, கமல் என இருவரும் இணையவேண்டும், அது சாத்தியமில்லை, ஒரு குகைக்குள் இரு சிங்கம் இருக்க முடியாது என்பது விதி, அதனால் கனவு மட்டும் கண்டுகொள்ளலாம்....

பாகுபலி எனும் மாயலோகத்தில் நம்மை இழுத்துசென்று அற்புதமான காட்சிகளை காட்டிவிட்டு மறுபடி தியேட்டர் இருக்கைக்கு அழைத்து வந்திருக்கின்றது பாகுபலி குழு

அவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும், வாழ்த்திகொண்டே இருக்கலாம்..

படம் முடிந்த பின் பேரமைதி மனதை ஆட்கொள்கின்றது, பெரும் கனவுலோகத்தை கடந்து வந்தது போல, சுனாமி கடந்து சென்றது போல மனம் ஏதோ ஒரு பெருமூச்சு வருகின்றது

Image may contain: 1 person, textஇப்பொழுது எழும் கேள்வி ஒன்றுதான், அது கமலஹாசனை நோக்கித்தான்

மிஸ்டர் கமலஹாசன், மருதநாயகம் எப்படி வரும்? இதே போல் வருமா? இல்லை இதற்கு மேலுமா?,

தமிழ் சினிமாவில் இம்மாதிரி படங்களை உங்களை தவிர யாரிடம் எதிர்பார்க்கமுடியும் மிஸ்டர் கமலஹாசன்?, தெலுங்கு படமொன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருப்பதை போல , ஒரு தமிழ்படமும் உலகை திரும்பி பார்க்க வைத்தால் நன்றாகத்தான் இருக்கு..

ராஜமவுலி ஒரு தீக்குச்சியினை கொளுத்தியிருக்கின்றார், நீங்கள் ஒரு தீப்பந்தத்தினை எரியவிடுவீர்கள் என காத்திருக்கின்றோம் மிஸ்டர் கமலஹாசன்..











 

 


 

No comments:

Post a Comment