Sunday, April 30, 2017

பாகுபலி : தொடரும் விமர்சனங்கள்...

பாகுபலி விமர்சனம் ஆளாளுக்கு சொல்லி கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலர் முதல்பாகம் போல "பகடை" என்றொரு வார்த்தை சிக்குமா? என அலசி பார்த்துவிட்டு சென்று படுத்து உறங்கியாயிற்று, இன்னும் கொஞ்சம் பேர் கதை சரியில்லை, அரசரின் கிரீடம் சரியில்லை என பல விமர்சனங்கள்...


இதில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, அதெப்படி? ராணிக்கு உளவாளிகள் இல்லையா? அது என்ன ராணி? யார் போட்டு கொடுத்தாலும் நம்பிவிடுவாரா? செல்லாது செல்லாது, இது சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


கதைபடி அது அக்காலம், அதுவும் மகனின் முகத்தில் ரத்தம் பார்த்துவிட்ட தாய் உணர்ச்சியில் முடிவெடுப்பது ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான், அது இருக்கட்டும்




இந்த நவீன உலகத்தில் இந்திய மாநில முதல்வர், அதுவும் பிரதமராக வரகூட வாய்ப்பு இருப்பதாக சொல்லபட்ட ஒரு பெண்மணி எப்படி இறந்தார்? இறுதிகாலத்தில் அவருக்கு நிகழ்ந்தது என்ன? என தெரியாமலே போய்விட்டது


அந்த பெரும் இரும்புபெண்ணுக்கு இல்லாத அதிகாரமா? அவரிடம் இல்லாத அரசு உளவாளிகளா? ஆனால் அந்த இரும்பு பெண்ணால் தப்பிக்க முடிந்ததா?


இதுதான் அரசியல், பெரும் அதிகாரமுள்ள ஒருவரை ஒரு கும்பல் தனிமைபடுத்தி, சூழ்ந்துகொண்டு , அவரை மக்களிடம் இருந்து துண்டித்து, தன் வசபடுத்திகொண்டால் எளிதாக அதிகாரத்தை அடையலாம்


ஆச்சரியமாக அந்த பாகுபலி ராணியின் கதை, தமிழகத்தின் இரும்புபெண்ணின் கதையோடு பொருந்தித்தான் வருகின்றது,


அதற்காக பன்னீர் செல்வம் கட்டப்பா, தினகரன் ராணா , சசிகலா நாசர் என நீங்களாக கற்பனை செய்துகொள்ள கூடாது...


ராஜமவுலி திமுக எல்லாம் இல்லை, அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் சிக்கல் இல்லை


அரசகுடும்பத்தின் பொதுவான தன்மை உலகெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றது என சொல்லிவிடலாம், அது உண்மையும் கூட‌


இதனை தமிழகத்தில் கண்முன்னே கண்டபின்பும், அது எப்படி சிவகாமிக்கு உளவாளிகள் இல்லை என சொல்லிகொண்டிருப்பவர்களை என்ன செய்வது?


படத்தில் கட்டப்பா எனும் விசுவாசி என்ன கொடூரம் நிகழ்ந்தது என சொல்லும்பொழுது அழுதுவிட்டு பாகுபலி எனும் மக்கள் அபிமான மன்னன் மர்மமாக இறந்த பின் மக்கள் பொங்கி எழுந்து அராஜக ஆட்சியினை வீழ்த்தியதாக காட்டும் பொழுது கைதட்டிவிட்டு வெளிவரும் தமிழன்


சொந்த மாநிலத்தில் என்ன நடக்கின்றது என தெரிந்தாலும் தெரியாதது போல் இருந்துவிட்டு, அதெப்படி சிவகாமிக்கு உளவாளி இல்லையா?? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றான்


அவன் அப்படித்தான்..



No comments:

Post a Comment