Sunday, April 30, 2017

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது



Image may contain: 1 person, standing, sky, cloud and outdoor


உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது


அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது.


ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை.


இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் அமைத்த காலமும், சுரங்கங்கள் அதிவேகமாக தோண்டபட்ட காலமும்தான்.


அதில் ஆப்ரிக்க அடிமைகள் கடுமையாக பாதிக்கபட்டார்கள், ஆனால் குரலெழுப்ப முடியாது. மற்ற தொழிலாளர்கள் ஓரளவிற்கு குரலெழுப்பி 15 மணிநேர வேலையினை 8 மணிநேரமாக குறைக்க அமெரிக்காவிலும், இன்னபிற நாடுகளிலும் போராடிகொண்டிருந்தார்கள்.


லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பிற்கு பின் அமெரிக்க கருப்பர்களும் அவ்வுரிமையினை கேட்டு போராடினர், முதலாளி வர்க்கத்தின் கடும் கெடுபிடியினையும் தாண்டி அவர்கள் வெற்றிபெற்றனர், மார்க்ஸின் முழக்கமும், சோவியத் யூனியனின் அசுரபலமும் உலகில் தொழிலாளர் நலம் காத்தன.


8 மணிநேர வேலை, பணி பாதுகாப்பு, இன்னபிற சலுகைகள் என உலகம் பயனடைந்தது இப்படித்தான், இன்று தொழிற்சங்கங்கள், கொடிகள்,யூனியன் என தொழிலாளருக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதும் இப்படித்தான், எல்லாம் 1990வரை சரியாக இருந்தது.


அதன்பின் சோவியத் சிதறவும், உலகமயமாக்கல் கொடுமையும் இன்று நவீன அடிமை முறையினை அறிமுகபடுத்திவிட்டன, அன்று பாமர அடிமைகள் இன்று படித்த அடிமைகள்.


அன்று சுரங்கத்திலோ, கரும்பு தோட்டத்திலோ, தேயிலை தொட்டத்திலோ 15 மணிநேரம் பாமரர்கள் உழைத்ததை போல இன்றைய காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் குறிப்பாக ஐ.டி கம்பெனிகள்.


ஒரு ஐடி தொழிலாளி அப்படித்தான் உறிஞ்சபடுகின்றான் 16 மணிநேரம் அவனை பிழிந்துவிடுவார்கள், இன்னும் ஏராள இம்சைகள். உச்சமாக அவனுக்கு சங்கமோ அல்லது பணிபாதுகாப்போ சுத்தமாக கிடையாது.


அதுவும் அவன் ஒழுங்காக வந்து உழைக்கும்பொழுதும் அவனுக்கு அப்ரைசல் என ஒரு கொடுமையினை வைத்து, அம்மா கட்சி அமைச்சராகவோ அல்லது வேட்பாளராகவோ பதைபதைப்பில் வைத்திருப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்.


நான் நீங்கள் இட்ட பணியினை எல்லாம் செய்துதானே வருகிறேன், பின்னர் ஏன் ஆயிரம் கேள்விகள்? என எந்த ஐ.டி தொழிலாளியும் கேட்க முடியாது. திடீரென தூக்குவார்கள் அதற்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.


ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு அவமானம் என்றால் தமிழகம் முழுக்க அது எதிரொலிக்கும், ஒரு கொத்தனாருக்கு பிரச்சினை என்றால் அது கட்டட பணியினை பாதிக்கும், இவ்வளவிற்கும் இவர்கள் அடிப்படை கல்வி மட்டும் பெற்றிருப்ப்பார்கள.


ஆனால் ஒரு ஐ.டி ஊழியன் பணி பறிக்கபடும்பொழுது, அவசர அவசரமாக சக ஊழியன் தனது நண்பர் அல்லது உறவினரின் பயோடேட்டாவினை அங்கு சமர்பித்துகொண்டிருப்பான், படித்தவர் உலகம் இப்படி சுயநலமானது.


ஆக பெரும் போராட்டம் போராடி தொழிலாளர் உலகம் பெற்ற உரிமைகளை, இன்றைய கார்பரேட் உலகம் காலில்போட்டு நசுக்குகின்றது. மறுபடியும் ஆதிகாலத்திற்கு கொண்டுபோயாயிற்று.


ஐடி என்று மட்டுமல்ல, எல்லா கார்பரேட் தொழிலும் 15 மணிநேரம் உழைக்காமல் வாழமுடியாது என்ற அளவிற்கு உலகினை மாற்றிவிட்டார்கள்.


8 மணிநேர வேலை என, 8 மணிநேர சமூக உறவுகள், 8 மணிநேர தூக்கம் என அக்கால வாழ்க்கைமுறையினை சுத்தமாக ஒழித்தும் விட்டனர், அக்கால கிராம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது,


எவ்வளவு சுகமான காலங்கள் அவை


இன்று இந்தியாவில், பிலிப்பைன்ஸில் ஐ.டி வளர்ச்சிபெற்றிருக்கிறது என சொன்னால் அதன் பின்னால் மறைந்திருப்பது இந்த கடுமையான தொழிலாளர் சுரண்டல், 3 வருடத்தில் முடிக்கவேண்டிய பணீகளை 3 மாதத்தில் முடிக்கசொல்லி அவர்கள் படுத்தும்பாடு அப்படி.


ஐரோப்பியர்களிடம் அதிகம் பேசமுடியாது, அவர்கள் உல்லாசம் அவர்களுக்கு முக்கியம், ஓய்வு முக்கியம் என ஏராள சிக்கல்கள், அதன்பின் என்ன செய்ய ஆசியன் தான் இளிச்சவாயன், அந்நாட்டு அரசுகள் ஒரு மண்ணாங்காடி தொழிலாளர் நலமும் பேணாது.


இன்னும் ஆபத்தான அணுவுலை பணிகளில் தொழிலாளர்களுக்கு செய்யபடும் மருத்துவசோதனை, பாதுகாப்பு என ஏராளம் உண்டு, இந்தியாவில் எப்படி என தெரியவில்லை, ஆனால் நன்றாக மட்டும் இருக்காது.


அன்று கரும்பு பண்ணை அடிமைக்கு ஒரு பெட்டி சோளமும், ஒரு பெட்டி கறியும், குளிருக்கு சுருட்டும், தீபெட்டியும் வழங்கபடுமாம்.


இன்று ஐ.டி காரனுக்கு என்ன? பர்கர், பீசா கூடவே எடிஎம் கார்டு, அவ்வளவுதான், ஒரு போன் அதுவும் எதற்கு தூங்காமல் உழைப்பதற்கு, நடுநசியிலும் அழைப்பதற்கு, காரொ வாகனமோ அல்லது வீடோ, எல்லாமே பொறிகள், சிக்க வைக்கும் பொறிகள்.


இதில் அவனுக்கான உரிமையோ, அவனுக்கான சொந்த சிந்தனையோ அவன் செய்துவிட முடியுமா? விடுவார்களா? அனாதையாக விட்டுவிடுவார்கள்.


இன்று உலகில் சங்கமே இல்லாதவர்கள் இரண்டு பேர், ஒன்று தெருவில் சுற்றும் மனநிலை பாதிக்கபட்டவர்கள், அவர்களுக்கான சங்கம் எப்படி சாத்தியமாகும்? இன்னொன்று கார்பரேட் தொழிலாளர்கும் ஐ.டி பொறியாளர்களும்.


பைத்தியங்கள் ஒன்றாய் சேர்ந்து கொடிபிடித்தாலும் நிச்சயம் இந்த ஐ.டி தொழிலாளி ஒருநாளும் சேரப்போவது இல்லை, இப்படி உரிமைகெட்டு நிற்காவிட்டால் அவன் எப்படி அவன் கனவு தேசமான அமெரிக்கா செல்வது?


ஆனால் தொழிலாளர் போராட்டம் தொடங்கியதே அமெரிக்காவில் என்பதும், அங்கிருக்கும் வெள்ளை மக்களுக்கான மட்டும் பாதுகாப்பும் அவனுக்கு தெரியவில்லை அய்யோ பாவம்.


இந்த மே தினத்தில் பரிதாபபட்டு பார்க்கவேண்டியது இம்மாதிரியான தொழிலாளர்களைதான், நாகரீகமான வேடத்தில் இருக்கும் இந்த அடிமைகளைத்தான்.


இன்னும் இந்தியாவில் தொழிலாளர் சுரண்டல் எவ்வளவோ உண்டு, அது அங்காடி தெரு கதையாகட்டும், இன்னபிற சம்பவங்களாகட்டும் ஏராளம் உண்டு


களை கூத்தாடிகளில் உள்ள சிறுவர் சிறுமியரை கணக்கில் எடுக்காமல், கடைகளில் தொழிற்சாலைகளில் மட்டும் கணக்கெடுக்கும் விசித்திரமான நாடு இது, இதோ ஒரு சிறுவனை வேலைக்கு வைத்தால் மிரட்டும் அதிகாரிகள், சினிமாவில் நடிக்கும் சிறுமிகளை மட்டும் கொஞ்சுவார்கள், அங்கு என்ன சட்டமோ தெரியவில்லை.


இப்படி மேதினம் பல சிந்தனைகளை கிளறிவிட்டாலும், பொல்லாத முதலாளிவர்கக்கம் தொழிலாளர் உரிமையினை கொஞ்ச கொஞ்சமாக ஒழித்துவிட்டு மறுபடியும் அடிமை முறையினை ஆசியாவில் கொண்டு வந்துவிடுமோ என பலகுரல்கள் எழும் வேளையில் தமிழன் நிலை என்ன தெரியுமா?


தல அஜித்தின் பிறந்த நாள், தமிழக திருவிழா.


எங்கு நிற்கின்றான் தமிழன், இதுதான் தமிழகம், மே தினம், மார்க்ஸ்,தொழிலாளர் வரலாறு எல்லாம் அவனுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, மாறாக அஜித் எனும் அவதாரம் பிறந்துவிட்டார் போதாதா?


உலகம் முழுக்க மே தின கொண்டாட்டமும் செய்தியும் தெரிவிக்கபட்டுகொண்டிருக்க, தல பிறந்த நாளிலும் மேதினத்தை கொண்டாடுகின்றான்.


ஐடி இந்திய அடிமையோ அன்று 24 மணிநேர உழைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றான்.


ஒன்று மட்டும் உண்மை, தொழில்நுட்பம் எவ்வளவும் வளரட்டும், அதன் கரங்கள் புளூட்டோ வரை கூட நீளட்டும். ஆனால் மனித உரிமைகளை காக்கும் பொறுப்பு தொழிலாளர் சங்கங்களுக்குத்தான் உண்டு.


அவ்வகையில் மேதினம் மகா மதிப்புகுரியது, போற்றுதலுக்குரியது





 


 

No comments:

Post a Comment