Sunday, April 23, 2017

உலக புத்தக விழா





உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள்

எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர்

அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை

இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் விஷயம் போதிக்கும்

மானிடத்தை வாழ வைக்கும் மகா முக்கிய புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் முக்கியமானவர், லெனின், ஹிட்லரின் எழுத்துக்களும் முக்கியமானவை

உலகளாவிய புத்தகங்கள் அந்த வகையில் ஏராளம், சில அரேபிய எழுத்தாளர்கள் பின்னி எடுத்திருபபர்கள்

தமிழக புத்தகங்களில் தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் என வரிசை பெரிது, தமிழின் அழகினை சொன்ன கம்பராமாயணம் என அந்த வரிசை பெரிது

இந்த நூற்றாண்டு காலத்தில் பாரதியிலிருந்து வரிசை தொடங்குகின்றது, அட்டகாசமான எழுத்தாளன்

அதன் பின் அண்ண, கலைஞர், கண்ணதாசன் என பெரும் வரிசை உண்டு, அதுவும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் காவியம்

கல்கியும், சாண்டில்யனும் ஜாம்பவான்கள்

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் செவிட்டில் அடித்துவிட்டு போகும் ரகம், அதனை வாசித்தபின் இருக்கை விட்டு எழும்புவது கூட சாத்தியமில்லை, அடித்து போட்டது போல இருக்கும்

இவர்களுக்கு பின்னால் தமிழின் பெரும் புத்தகங்களை கொடுத்தவர்கள் சுஜாதா, மதன், ஆசான் பா. ராகவன்

வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தில் தனித்து நின்றவர், பாலகுமாரன் சோழமன்னர்களை பற்றி எழுதிய உடையார் மகா சிறந்த புத்தகம்..

ஆர்.முத்துகுமார் அரசியல் புத்தகங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்

இன்றைய இளம் தலைமுறையில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அசாத்திய எழுத்தாளர் இருவர், ஒருவர் எழுத்து பேரரசர் முகில் சிவா, இன்னொருவர் சரவணன் சந்திரன்

இவர்கள் வயதால் இளையவர்கள், இன்னும் காலம் இருக்கின்றது, தொடக்கம் அட்டகாசம் இனி வருங்காலம் என்ன வைத்திருக்கின்றது என தெரியவில்லை

கண்ணதாசனுக்கும், கலைஞருக்கும் பின் ரசிக்க கூடிய எழுத்து சுஜாதாவிடம் இருந்தது, ராகவன், முகிலிடம் இருக்கின்றது

நல்ல தகவல்களை, வரலாறுகளை, கணிப்புகளை வாசிப்பாளனுக்கு தந்துவிட்டு அவன் செல்ல வேண்டும். அவன் பல்துறை வித்தகனாக இருக்க வேண்டாம், ஆனால் அதனை பற்றிய அறிவும் தேடலும் இருக்க வேண்டும்

எல்லா துறைகள் பற்றியும் ஞானம் இருந்தாலொழிய நல்ல எழுத்தாளன் உருவாகவே முடியாது, மொழியறிவும் முக்கியம்..

எழுத்து பா.ராகவன், சுஜாதா போல இருக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது

காரணம் எழுத்தாளன் என்பவன் தேனி, அவன் எல்லா விஷயங்களை படித்து எழுத வேண்டியவன், தேடி தேடி படித்து அந்த விஷயங்களை சமூகத்திற்கு தன் பாணியில் கொடுப்பவன்

அவனே பயனுள்ள எழுத்தாளன்,

அதனை விட்டும் சும்மா மல்லாக்க படுத்து, கனவிலே கதை எழுதி, ஏதோ புரியாமல் சொல்லி நான் இலக்கியவாதி என்பவன் இன்னொரு வகையே தவிர முழு எழுத்தாளன் அல்ல, அல்லவே அல்ல‌

அதனால்தான் பாரதி, கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, மதன், ராகவன், முகில் சிவா எல்லோரையும் வியந்து பார்க்க வேண்டி இருக்கின்றது

பெண்கள் வரிசை இல்லையா என்றால் ஓவையாரின் பாடல்கள் அற்புதம், நல்ல பெண் கவிஞர்

அதன் பின் மு.வைத்தியநாயகி என்றொரு பெண் எழுத்தாளர் உண்டு, அதன் பின் சல்மா போன்றவர்கள் உண்டு

கவிஞர் தாமரை கவிஞர்கள் வரிசை, அந்த வரிசையில் இன்று அவர்தான் கவிப்பேரரசி, கவிராணி

அரசியல் கட்டுரையினை அதிரடியாக எழுதும் சவுக்கு சங்கர் மிக திறமையான எழுத்தாளர் என்றால், சினிமா செய்திகளில் தனி கோலோச்சும் அந்தணன் மிக சிறந்த ரசனையான எழுத்தாளர், அவரை படித்தால் நரசிம்மராவ் கூட சிரித்துவிடுவார், அவ்வளவு ரசனை

நெல்லைக்காரர் எழுத்தில் "சுகா" தனியிடம், பாபநாசம் படத்து வசனங்கள் அதனை உறுதிபடுத்தின, மகா ரசனை அது, நெல்லை மண்ணுக்குரியது

உலக புத்தக தினத்தில் என் நினைவுக்கு வரும் விஷயங்கள் யூத ஞானிகள் முதல் வரலாற்று குறிப்பெடுத்தவர்கள், வள்ளுவன், இளங்கோ, பாரதி, தெய்வ எழுத்தாளன் கண்ணதாசன், ராஜாஜி, கிவாஜ என பலர் நினைவுக்கு வருகின்றார்கள்

சைவ சித்தாந்த கழகத்தில் அற்புதமான தமிழ் புத்தகங்கள் உண்டு

சுஜாதா கண்ணுக்குள் மின்னுகின்றார்

கலைஞரின் பல புத்தகங்கள் வந்து போகின்றன, கொங்கு தமிழில் பெரியார் எழுதிய புத்தகங்களும் உண்டு, அண்ணாவின் புத்தகம் உண்டு

மதனின் எல்லா புத்தகங்களும் அட்டகாச ரகம், அரசியல் விமர்சனத்தில் சோ ராமசாமியினை மிஞ்ச முடியாது, மனிதர் இல்லா சோகம் தாக்குகின்றது.

ஜெயமோகன் ஒரு சுரங்கம் போல, சில நேரம் தங்கம் வரும், வைரம் வரும், அவ்வப்போது வெள்ளி வரும், இரும்பு வரும், ஆனால் பெரும்பாலும் மணல் வரும்

இன்றைய தேதியில் சிலரின் புத்தகங்களுக்காக காத்திருக்க வேண்டுமென்றால் அதில் பா.ராகவன் முதலிடம்

சடையப்ப வள்ளல் கம்பனை பாதுகாத்தது போல காக்கபட வேண்டிய எழுத்தாளர் அவர், ஆனால் இந்த உலகம் அவரை திரை, சின்னதிரைக்கு எழுத்தாளனாக்கி வைத்திருக்கின்றது

கல்கியே படாதபாடுபட்ட தமிழகத்தில் இதெல்லாம் ஆச்சரியமில்லை, ஒரு சடையப்ப வள்ளலின் கொள்ளுபேரன் கிடைத்தால் பா.ராகவன் பெரும் தொண்டு புத்தகதுறைக்கு அற்றுவார்

முகிலின் புத்தகங்களும் எதிர்பார்ப்பை தூண்டுபவை, அகம் புறம் அந்தப்புரம், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, சரித்திர பயணம் என அவரின் புத்தகங்கள் வாவ் ரகம்

மதன் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை, ஆனால் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது

ஆட்டோமான் சாம்ராஜ்யம் பற்றி தமிழில் இன்னும் புத்தகம் இல்லை, மதனோ, ராகவனோ அல்லது முகில் சிவா எழுதினால் நன்றிகள் கோடி...

ஒரு உண்மையினை ஒப்புகொள்ள வேண்டும், மிக சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் யாரென்றால் ஈழ தமிழர்கள், அந்த புலி, தமிழ்தேசிய அலப்பறைகளை விடுங்கள், இவர்கள் வேறு வகை

புத்தகங்களின் இன்றைய வடிவங்களான இணையத்தில் எழுதுகின்றார்கள், தமிமும் உலக விஷயங்களும் அப்படி கொட்டி எழுதுகின்றார்கள், அவர்கள் தமிழர்கள் என்பதில் மிக்க பெருமை அடையலாம்

தமிழ் எழுத்துக்களில் அவர்கள் எழுதும் தளம் ஜொலிக்கின்றது, கலையரசன் போன்றோர் எல்லாம் ஜெயகாந்தனுக்கு சமம், சந்தேகமின்றி சொல்லலாம்

ரிஷி என்றொருவர் "விறுவிறுப்பு" எனும் இணையபத்திரிகை நடத்தினார், உளவுதுறைகளின் முகங்களை சொல்லி கிழித்தார், அற்புதமான எழுத்து உண்மைகள் அவை, சீமானை முதலில் "அங்கிள் சைமன்" என சொல்லியதே அவர்தான்

சுஜாதா இடத்தினை அவர் நிரப்பும் வாய்ப்பு இருந்தது, அந்த ஆழ்வார்கள் பாடல் மட்டும் இருந்தால் அவர்தான அடுத்த சுஜாதா..

என்ன ஆனாரோ தெரியவில்லை, சொல்லாமல் சன்னியாசம் வாங்கிவிட்டார் , உளவுதுறை அழுத்தமாக இருக்கலாம். ஆனால் அவர் எழுதாததும், அவரின் தலைமறைவும் தமிழ் எழுத்துலகிற்கு பெரும் இழப்பு,அந்த‌ ஆசாமிக்காக தினமும் சாமியிடம் வேண்டிகொண்டிருக்கின்றேன்.

உறுதியாக சொல்லலாம், எழுத்தாளன் என்பவன் தேடி தேடி தேன் எடுப்பவன், அப்படி பல புத்தகங்களை படித்து இனிப்பாக , திகட்டாமல், போரடிக்காமல் படிக்க கொடுப்பவர்கள் எனக்கு தெரிந்து இவர்கள்

நான் கற்ற கைமண் அளவில் இவர்கள் எல்லாம் வருகின்றார்கள், வராத கடலளவில் இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை படிக்கும் நேரம் வரும்பொழுது அவர்களும் பட்டியலில் இணையலாம்

வாழ்வில் தனிமையே விதியாக விதிக்கபட்ட ஒரு சபிக்கபட்ட விதி எனக்கு, பெரும்பாலும் தனிமைதான், சிறுவயதிலிருநதே அப்படித்தான்

அந்த தனிமையில் என்னோடு பேசியவர்கள், இன்னும் பேசிகொண்டிருப்பவர்கள் , இன்னும் பேசபோவது புத்தகங்கள்தான்

மனதில் தங்கிய சிலவற்றை சொல்லிவிட்டேன், இன்னும் சொல்லவேண்டியவை ஏராளம் உண்டு

அதெல்லாம் சரி, நீ ஏன் எழுதுகின்றாய் என சிலர் கேட்கலாம், பெரும் எழுத்துபணிக்கு என்னை தயார்படுத்துகின்றேன், அது செய்தே ஆகவேண்டிய பணி, வரலாற்று தேவை

ஆம், ஒரு காலத்தில் குஷ்பூவின் வரலாற்றை எழுதுவதற்காக என்னை தயார் படுத்தி கொண்டிருக்கின்றேன்

அது இருக்கட்டும், காலம் வரும்

இப்பொழுது ரசித்த மிக நல்ல எழுத்து , முக்கியமான எழுத்து எதுவென்றால் மீன் குழம்ப்பு முதல் ஆட்டு குடல் வறுவல் வரை எப்படி செய்வது என நண்பர் ஒருவர் குறிப்புகள் அனுப்பியிருந்தார், அதுதான் இப்போதைக்கு மனதில் தங்கி இருக்கின்றது


 

 



No comments:

Post a Comment