மலேசியாவின் முதல் ஷிகா வைரஸ் தாக்கிய பெண்மணி அனுமதிக்கபட்டிருக்கும் மருத்துவமனை எமது இல்லத்திலிருந்து வெறும் 15 கிமீ தொலைவிலே உள்ளது
இங்கு ஆளாளுக்கு கடும் கொசு பாதுகாப்பில் இறங்கி இருக்கின்றார்கள், எதிர் வீட்டு அங்கிளின் பாதுகாப்புகளை பார்க்கும்பொழுது "நான் ஈ" படத்தின் வில்லன் படும்பாடு நினைவுக்கு வருகின்றது
மனிதர் அப்படித்தான் கடுமையான பதைபதைப்பில் கொசு விரட்டிகொண்டிருக்கின்றார், காற்று கூட நுழையமுடியாதபடி கடும் காவல்.
உசேன் போல்ட் வேகத்தில் நுழைகிறார், கதவினை மூடுகிறார். 100 முறை ஸ்பிரே அடிக்கின்றார், காருக்கு ஸ்பிரே, லட்டர் பாக்ஸ்க்கு ஸ்பிரே, வீட்டிற்குள் பேய்விரட்டும் சாமியார் போல கடும் புகை.
இப்பொழுது நான் சென்று எனக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல இருக்கின்றது, ஒரு மாத்திரை இருக்குமா என கேட்க ஆசைதான், ஆனால் அவர் வேறுவீட்டிற்கே சென்றாலும் சென்றுவிடுவார்.
அந்த படத்தில் ஈ க்கு பயந்து வில்லன் படும் பாடுகளை நாங்களும் கொசுவிற்கு பயந்து படும் காலம் வந்துகொண்டே இருக்கின்றது.
அது ஈ, எப்படி சமாளிக்கமுடியும் என ஒரு படம் சொன்னது. எப்படி கொசுவினை சமாளிக்கமுடியும் என தமிழ் திரையுலகம் ஒரு படம் எடுத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்.
இப்படி கைவிட்டு விட்டதே தமிழ் திரையுலகம்.
ஷிகா வைரஸ் கூட அச்சமில்லை, இதனை சாக்காக வைத்து என் பாகம்பிரியாள் கொஞ்சமாதம் கழித்து வருகின்றேன் என அங்கேயே இருந்துவிட்டால் என்ன ஆகும்?
அதனை நினைக்கும்பொழுதுதான் மகா அச்சமாக இருக்கின்றது.
நல்லவேளையாக அவள் செய்திகள், நடப்புகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை, இன்னும் ஒரு வாரத்திற்கு செய்திகள் பார்க்காமலே இருந்துவிடட்டும் கர்த்தாவே...
No comments:
Post a Comment