Tuesday, September 20, 2016

எல்லையில் பதற்றம் உச்சத்தில் ....


in


இந்திய எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருக்கின்றது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானை கிழிப்போம், இரும்புகரம் எக்கு கரம் கொண்டு அடக்குவோம், டைனோசர் வால் கொண்டு சுருட்டுவோம் என சூளுரைத்தவர்கள் எல்லாம் ஐ.நா சபை, பொறுமை, எச்சரிக்கை என என்வென்னவோ சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


மன்மோகன் அரசு அமைதிகாத்தபொழுது இம்மாதிரியான பதற்ற நேரங்களில் சேலை அனுப்பி கட்டிகொள்ளுங்கள் என சீண்டியவர்களுக்கு, இப்பொழுது யாரும் சுடிதார் அனுப்பியதாக தகவல் இதுவரை இல்லை, எனினும் இனி மோடியில் சால் கொஞ்சம் கவனிக்கபடவேண்டியது.


மோடி மீதும் தவறில்லை, ஆனால் மன்மோகனும் அதே நிலையில்தான் இருந்தார்.


எப்படிபட்ட சிக்கல் இது? இரு வகை சாத்தியங்கள்


முதலாவது வகை இப்படியானது, அதாவது அதல பாதாளத்தில் கிடக்கின்றது பாகிஸ்தான் பொருளாதாரம். நாளுக்கொரு குண்டுவெடிப்பு நிமிடத்திற்கொரு கொலை என அது நாசமாகிகொண்டிருக்கின்றது, மதரீதியான பற்றில் தனிநாடு கண்டவர்களுக்கு அது வெறியாக மாறி, சுத்தமான இஸ்லாமிய பாகிஸ்தான் எனும் தாலிபானிய இம்சையில் பற்றி எரிகின்றது அது.


உலகின் எல்லா தீவிரவாதிகளும் குவிந்திருக்கும் இடம், இன்னொன்று அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே இஸ்லாமிய நாடு அது என்பதால் ஏகபட்ட ஆட்சிகவிழ்ப்பு, ராணுவ கட்டமைப்பினை உடைத்து அணுகுண்டை கைபற்ற சில தீவிரவாத குழுக்கள் எடுக்கும் முயற்சி என ஒரே இடியாப்ப சிக்கல். பத்மாசுரன் பரமசிவனை விரட்டிய நிலையில் இருக்கின்றது அது.


இதில் பாகிஸ்தான் மக்களும் பாதிக்கபட்டுள்ளதால் கடுமையான சிக்கல்கள், ஆளுக்கொரு தத்துவம் துப்பாக்கி என அலைகின்றார்கள், இவர்களை ஒரே சிந்தனை உள்ளவர்களாக ஆக்க பாகிஸ்தானால் ஒரே வழியில்தான் முடியும்


அது காஷ்மீருக்காக இந்தியாவோடு போர். அறிவித்துவிட்டால் போதும் நாட்டில் ஒற்றுமை, நாட்டுபற்று எல்லாம் பொத்துகொண்டு வரும். இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய காஷ்மீர் எனும் சொல்லுக்கு அங்கு சக்தி அதிகம்.


இஸ்லாம் எனும் அமைதி மார்க்கம் கொண்டுவரமுடியாத ஒற்றுமையினை அங்கு இந்திய எதிர்ப்பு எனும் வழி கொண்டுவந்துவிடுகின்றதல்லவா? இதுதான் ஆச்சரியம்


மத நெறிக்கும் மதவெறிக்கும் உள்ள வித்தியாசம். அப்பட்டமாக தெரியும் கவனியுங்கள்.


இன்னொரு கோணம் மாறுபாடானது. எப்படியாவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் சண்டை மூட்டிவிட்டால் நாட்டில் நினைத்ததை சாதிக்கலாம் என உலகளாவிய தீவிரவாத குழுக்கள் நினைக்கலாம். மொத்த கவனமும் யுத்தத்தில் இருக்க இஸ்லாபாத்தினை கூட தூக்கிவிடலாம் எனும் விபரீத கோணத்தில் திட்டமிடும் குழுக்களும் உண்டு.


கொஞ்சநாளைக்கு முன்பு பாகிஸ்தானிய கடற்படை கப்பலை படத்தி இந்தியாவினை தாக்க திட்டமிட்டு, கடத்தல் முயற்சியில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கொல்லபட்டது அந்த வகையே.


இன்று 17 பேர் கொல்லபட்டதும் அவ்வகையாக இருக்கலாம் என்கின்றார்கள்.


பாகிஸ்தான் அவ்வளவு எளிதில் படையெடுக்காது, போர் எவ்வளவு பெரும் அழிவினை பொருளாதார ரீதியாக தரும் என்பது அவர்களின் அனுபவம். இந்திய யதார்த்தமும் அப்படியே. இன்றைய உலகில் அமெரிக்காவினை தவிர அடிக்கடி யுத்தம் நடத்தும் சக்தி யாரிடமும் இல்லை.


ஆக இது பாகிஸ்தான் விளையாட்டா? அல்லது தீவிரவாதிகளின் திட்டமா என பெரும் குழப்பத்தில் சிக்கி இருக்கும் விஷயம். அந்த குழப்பத்தில் இருக்கின்றது இந்தியா


ஆக மன்மோகனோ, மோடியோ இப்படிபட்ட நிலையில்தான் இருக்கமுடியும். காரணம் இரு அணுஆயுத நாடுகளின் யுத்தத்தை நினைத்தபொழுதெல்லாம் தொடங்கிவிட முடியாது.


இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கவேண்டியது.


கொஞ்சநாளகவே புதிய அணுவுலைகளை கட்டி வந்தது பாகிஸ்தான், இது யார் கண்ணையோ உறுத்தியது. மோடி அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் என ஆயுதம் இறக்குமதிக்கு பச்சைகொடி காட்ட நீண்டகால குத்தகையாளரான ரஷ்யாவிற்கு கண்கள் சிவந்தன.


இந்தியாவோ அதனை இன்னும் சீண்டும் விதமாக இந்திய ராணுவ தளங்களை அமெரிக்காவும், அமெரிக்க தளங்களை இந்தியாவும் பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் செய்ததும் ரஷ்யாவின் கோபத்தை அதிகபடுத்தின.


நிச்சயம் இந்தியா அமெரிக்க தளங்களை பயன்படுத்தி கியூபா, பிரேசில் மீதெல்லாம் போர் தொடுக்கபோவதில்லை,ஆனால் அமெரிக்க்கா இந்திய தளங்களை பயன்படுத்தி அரேபிய பகுதிகளை தாக்கலாம்.


ஆனால் அதே நேரம் ஆப்கானிய தளங்களை இந்தியா பயன்படுத்தி பாகிஸ்தானை நொறுக்கலாம், கிழக்காசிய தளங்களை பயன்படுத்தி சீனாவினை அடிக்கலாம்.


இது ஒரு வித்தியாசனாம ஆயுதம், சில இடங்களில் அரேபிய நாடுகள், ரஷ்யா என பலரின் வெறுப்பை சம்பாதிக்கும் சாத்தியமும் உண்டு. உச்சகட்டமாக ரஷ்யாவிற்கு மகா எரிச்சல்.


ரஷ்யா அல்லவா? அதுவும் புடினின் ரஷ்யா அல்லவா? அதிரடியாக ஏதும் செய்யாவிட்டால் எப்படி?


அது பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம், கூட்டு ராணுவ பயிற்சி என வரலாற்றினை இன்னொரு பக்கம் திருப்பியது. இந்தியா எதிர்பாரா விஷயமது.


இதனால் ஏற்பட்ட பாரிய நெருக்கடிகளால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டே தீரவேண்டும் என யாரோ முடிவெடுத்து காய்நகர்த்தியிருகின்றார்கள், இந்தியா பொறுமை காக்கின்றது


17 பேர் பலியான சோகத்தை தொடர்ந்து, ரஷ்யா தன் ராணுவ பயிற்சியினை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்துவதை ரத்தே செய்துவிட்டது. இது ஒருவகையில் இந்தியாவிற்கு அணுகூலம்.


என்ன நடக்கின்றது என புரிந்தும் புரியாமலும் செல்கிறதல்லவா? இதுதான் உலக அரசியல்


இந்தியா இதனை வேறுமாதிரி கையாள நினைக்கின்றது, காரணம் இஸ்ரேல் போல அடாவடி எல்லாம் நம்மால் காட்டமுடியாது. அவர்கள் ஒரு சுண்டைக்ககாய் நாடு சுற்றி இருப்பவகை கடுகு தேசங்கள்.


ஆனால் நாம் மிகபெரிய நாடு, அம்மாதிரியான அடாவடிகளில் எல்லாம் ஈடுபடமுடியாது, இஸ்ரேலுக்கு இருக்கும் பின்புலம் வேறு. அது பாம்புதான் ஆனால் பரமசிவன் கழுத்தில் அல்ல உச்சியில் இருக்கும் பாம்பு.


எது சிக்கல்? யுத்தம் நடத்தினால் யாருக்கு லாபம்? அடித்து நம்மை உசுப்பேற்றுகின்றான், ஆத்திரபட்டால் யாருக்கு லாபம்? அவனுக்கோ இழக்க ஒன்றுமே இல்லை. நமக்கோ அடையவேண்டியது ஏராளம் இருக்கின்றது என்ற கோணத்தில் இந்தியா சிந்திக்கின்றது.


இதனையும் மீறி போர் நடத்தியே ஆகவேண்டுமென்றால் அவர்களை மடக்க ஒரு நொடிபோகாது, அணுகுண்டு எல்லாம் கூட வேண்டாம், அசால்ட்டாக மடக்கலாம். காரணம் அவர்களுக்கு மதத்தினை காக்கும் வெறி உண்டே தவிர நாட்டுபற்றெல்லாம் அறவே இல்லை, அப்படித்தான் 4 முறை அடிவாங்கி ஓடியிருக்கின்றார்கள்.


யுத்தம் தொடங்கிய கொஞ்சநாளில் பொருளாதார ரீதியாக சோர்வார்கள், அமெரிக்கா அரை கஞ்சிக்கு படியளக்கும், போதாமல் குப்புற கிடப்பார்கள். மதம் என்றால் தாங்கும் மக்கள், தேசமா? சரி போகட்டும் என விட்டுவிடுவார்கள். மதமே பிரதானம்.


ஆனால் இந்தியர் அப்படி அல்ல நாட்டுபற்றில் கரைந்தவர்கள், யுத்த காலங்களில் எல்லாம் மதம், இனம், மொழி கடந்து இந்தியனாக அள்ளிகொடுத்தவன் இந்தியன். தன் மொத்த நகைகளையும் மேடையிலே போர் நிதிக்காக கழற்றிகொடுத்த வீரப்பெண்கள் உண்டு.


சீன போரின் போது தன் நகைகளை எல்லாம், தன் மகளின் நகைகளை எல்லாம் கழற்றிகொடுத்த சாவித்திரி போல பெரும் தேச அபிமானிகள் கொண்ட நாடு. கார்கில் நிதி குவிந்த வேகமும் அப்படியே,


பிஞ்சு குழந்தைகள் கூட சாக்லேட் பைசாவினை தியாகம் செய்தன.


அந்த ஒற்றுமையினை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது, ஒருவேளை அவர்களை அடித்தே ஆகவேண்டுமென்றால் அதனை எல்லையில் சந்திக்க ராணுவமும், பொருளாதார ரீதியாக சந்திக்க ஒவ்வொரு இந்தியனும் தயார்.


சில பதர்களை தவிர‌


அவர்களுக்கு தேசம் தெரியாது, அதன் அருமை தெரியாது, நாட்டிற்காக சென்ன செய்தோம் என தெரியாது. அடுத்த நாட்டில் திமிரில் செத்தவனுக்காக அழுவான், தன்னை கொளுத்துவான். கொலை வழக்கில் சிக்கி உருப்படியாக ஒன்றும் சொல்லாமல் செத்துபோனவனுக்கு ஒப்பாரி வைப்பான், அவன் குடும்பத்தை அரசு காப்பாற்றட்டும் என கோரிக்கை விடுவான்


ஆனால் நாட்டிற்காக செத்தவனை மட்டும் கவனிக்காமல் விட்டுவிடுவான்.


கிரிக்கெட்டில் அடிக்கும் சிக்சருக்கு கைதட்டுவதும். ஒலிம்பிக் பதக்கதிற்கு அள்ளிகொடுப்பதும் அல்ல நாட்டுபற்று.


இறந்த ஒவ்வொரு வீரனின் குடும்பத்திற்கும் நாங்கள் இருக்கின்றோம் என நம்பிகையினை கொடுக்கவேண்டும். மத்திய அரசு அதனைத்தான் கொடுத்துகொண்டிருக்கின்றது.


எங்கோ செத்த, அல்லது வம்புக்கு செத்த, ஏன் சாகிறோம்? நம் சாவு ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் உருவாக்காது என சிந்தனை கூட இல்லாமல் செத்தவனுக்கு வீர வணக்கம், புகழ்வணக்கம் என ஒரு கூட்டம் சொல்லிகொண்டே இருக்கும்.


அது ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் கொடுக்கும் அந்தஸ்து பட்டமாகவும் ஆயிற்று, தொடர்ந்து முன்னாள் பெரும் ரவுடிகளான ராவணன், சூரபத்மன், நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் எனும் விபரீத வியாதியும் ஆயிற்று.


காவேரி எனும் தமிழச்சி இருந்தாள், கன்னட மன்னனுடனான யுத்ததில் ஆற்றில் விழுந்து செத்தாள் அதனால் அது காவேரி ஆயிற்று என சொல்லுங்கள், அதனையும் நம்பி வீரவணக்கம் செலுத்த ஒரு கூட்டம் ரெடி. வைகை தாமிரபரணி எல்லாவற்றிற்கும் பின் அவர்களாகவே செலுத்துவார்கள்.


இன்னும் பித்தம் கூடி ஆப்பரேஷன் பெயிலியராகி செத்தவனுக்கு எல்லாம் வீரவணக்கம் செலுத்தும் காலம்.


இம்மாதிரியான காமெடிகளை விட்டுவிடலாம்.


ஆனால் எல்லையில் செத்த அந்த வீரர்கள், வீரத்துடன் களத்தில் சாய்க்கபட்டவர்கள், இந்நாட்டின் காவல்பணியில் உயிர்விட்டவர்கள்


அவர்களுக்கு மனதின் ஆழத்திலிருந்து, இந்திய உணர்வின் உச்சத்திலிருந்து கம்பீரமாக சொல்லலாம் வீரவணக்கம், இந்த தேசத்து வீரவணக்கம்.


வீரத்தில் செத்தவர்களுக்கு அழகூடாது என்பது மரபு, அதனால் கண்களில் ஈரம் வராமல் இருக்கலாம், ஆனால் யாருக்கும் தெரியாமல் இதயத்தில் கசியும் ரத்த கண்ணீரே அவ்வீரவணக்கத்திற்கான மரியாதை


அது மகா உறுதியினையும் நாடு என்ற வைராக்கியத்தையும் கொடுக்கும் தாரக வீரவணக்கம்.


வந்தே மாதரம், இத்தேசத்தை தாங்க ஒவ்வொரு இந்தியனும் தயார் என அந்த வீரவணக்கத்தில் உறுதி எடுக்கலாம்.அது அல்லாமல் பாகிஸ்தான், ஈழம் என உளறிகொண்டிருப்பவனுக்கு அந்தந்த நாடுகளுக்கு பார்சல் செய்யலாம்.


வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.




No comments:

Post a Comment