Tuesday, September 6, 2016

கர்நாடகத்தின் வலையில் சிக்கிக் கொண்டோமோ?

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் அழிச்சாட்டியம் உண்டு, அதாவது பாலஸ்தீனத்தை அவர்கள் விழுங்கிகொண்டிருப்பது ஒரு நுட்பமான திட்டம். சண்டைக்காக காத்திருப்பார்கள், வந்ததும் எல்லை தாண்டி 1 கி.மீ ஊடுருவுவார்கள், அதன் பின் பஞ்சாயத்து நடக்கும்

அமெரிக்காவோ, நர்வேயோ சில சமயம் ஜோர்டான் மன்னரோ பேசுவார்கள்

முடிவில் அரை கிலோ மீட்டர் பின்னால் செல்லும் இஸ்ரேல் இனி இதுதான் எல்லை என சொல்லும், பாலஸ்தீனம் அதோ எல்லை அங்கிருக்கின்றது சொன்னால் கேட்காது, யாருக்கும் கேட்காது

இப்படி அரை கிமீ அபகரித்தாகிவிட்டதா?

அடுத்த சண்டை நடக்கும்பொழுது அடுத்த அரை கிமீட்டர் அபகரிப்பு. அடிக்கடி சண்டை நடந்தால் இஸ்ரேலுக்கு கடும் மகிழ்ச்சி. எல்லைகளை பாலஸ்தீன பகுதிக்குள் அட்டகாசமாக விரித்து 4 இஸ்ரேலிய குடியேற்றத்தையும் நிறுவி விடுவார்கள், பஞ்சாயத்து பேச வருபவர்களும், ஆமாம் மக்கள் குடியேறியாகிவிட்டது இனி இது எல்லையாக இருக்கட்டும் என்பார்கள்

பின் அடுத்த யுத்தம் அடுத்த கோடு அடுத்த குடியேற்றம், எப்படியான தந்திரம்?

இப்படியாக மேற்கு கரையினையும், காசாவினையும் குறுக்கி வைத்திருக்கின்றது இஸ்ரேல், நியாயாமான பாலஸ்தீன் அளவு இனி மேப்பில் கூட சாத்தியமில்லை

நேற்று சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு 10 டி எம்சி நீர் கொடுங்கள் என சொல்லும்பொழுது பாலஸ்தீன நிலைதான் நினைவுக்கு வந்தது

நமது நியாமான உரிமை கிட்டதட்ட 350க்கு மேற்பட்ட டிஎம்சி, 1950களில் நமது உரிமை அப்படித்தான் இருந்தது, தேவையும் அதுவே

மழை பொய்த்தாலும் நமக்கு வரவேண்டிய நீர் 100 டிம்சிக்கு மேல் என்பது அடிப்படை உரிமை.

ஆனால் இன்று 10 டிஎம்சி எனும் அளவில் சுருக்கிகொண்டுவந்தாயிற்று, இது முன்பு பாண்டிச்சேரிக்கு நாம் கொடுக்கவேண்டிய 7 டிஎம்சி அளவிற்கு வந்துவிட்டது, பெரும் கொடுமை இது.

சொத்தில் உரிமையினை கேட்க உயர்நீதிமன்றத்தில் பேசுபவர்கள், இப்போதைக்கு சோறு போதும் என்றால், அது சினிமா காட்சிக்கு நன்றாக இருக்குமே அன்றி, தொலைநோக்கு பார்வை யதார்த்திற்கு பொருந்தாது.

அப்படித்தான் சுப்ரீம் கோட்டில் தமிழகம் கேட்டிருக்கின்றது, இப்போதைக்கு இதற்காகவாது உத்தரவிடுங்கள் என கோரபட்டு அது கிடைத்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள் .

ஒரு வகையில் கன்னடத்தின் வலையில் சிக்கிகொண்டோமோ என தோன்றுகின்றது.

கிட்டதட்ட 400 டிம்சி நீரினை 10 டிம்சிக்கு கொண்டுவந்தாயிற்று பார்த்தீர்களா? இதில் உள்ள ஆபத்து மகா கொடுமையானது, அதாவது அடுத்தமுறை வழக்கு வரும்பொழுது 10 டிம்சி தண்ணீர் கடந்தமுறை போல கொடுத்தால் போதுமா? என கன்னடம் சொல்லலாம், இந்த ஆதாரத்தை சமர்பிக்கலாம்.

அடுத்து வரும் நீதிபதிகளும் ஆமாம் கடந்த முறை 10டிம்சி அளவு நீர் தேவைகொண்ட விவசாயம் தானே தமிழகத்தில் இருந்திருக்கின்றது, பின்னர் ஏன் 100, 200 என கேட்கின்றீர்கள் என சொல்லலாம்.

நீதிமன்றங்களை பொருத்தவரை முன்பிருந்த நீதிபதிகள் எழுதும் குறிப்புகள் பெரும் ஆதாரமாக கொள்ளபடுபவை.

அக இது ஒரு வகையான ராஜதந்திரம், அளவுகளை சுருக்கிகொண்டே வருவது. கன்னடம் அதில் வெற்றிபெற்றே வருகின்றது.

கிராமங்களிலே பார்த்திருக்கின்றோம், பங்காளி சண்டைகளில் தோட்டத்தில் 4 பங்கு இருந்தால் 4 நாளைக்கு ஒருவனுக்கு நீர் முறை வரும், அது அவன் உரிமை. அதில் ஒருவனுக்கு நீர் கொடுக்காமல் பின் அவன் பயிர் பாதிக்கபட்டபொழுது, சரி 7 நாளைக்கு ஒருமுறை கொஞ்சம் தருவோம் என்பது முறையாகாது

அதனை விசாரிக்கும் கிராமத்து நாட்டாமை, "அதான் பெரிய மனசுபண்ணி தாரேன்னு சொல்றார்ல...வாங்கிக்க" என்பது நல்ல தீர்ப்பா? அவனுக்குள்ள உரிமை அவனுக்கு கொடுக்கவேண்டுமா வேண்டாமா?

ஆக இந்த உலகில் எது எல்லாமோ சுருங்கிகொண்டே வருகின்றது மனித நேயம் போல, பாலஸ்தீனமும் காவேரியில் தமிழக உரிமையும் அந்த வரிசையில் இடம்பெற்றுவிட்டதுதான் சோகம்

இதற்கு அடிப்படை காரணம் என்ன? ஒன்றே ஒன்றுதான்

தமிழகத்தின் கழக ஆட்சிகள் டெல்லிக்கு பயப்படும் பயம் அப்படி, காமராஜர் டெல்லியினை ஆட்டி வைத்தார். பரம்பிகுள்ம் ஆழியாறில் கேரளா ஆட முயன்றபொழுது "இது என்ன வேலைக்காவும்ணேன்..டெல்லிக்கு வா பேசிகிடலாம்ணேண்" என்றபொழுது டெல்லி காமராஜர் பக்கமே நின்றது

பின் காட்சிகள் மாறின‌

கலைஞருக்கு சர்காரியா முதல் இன்று 2ஜி வரை பயம், கூடவே தயாநிதி மாறன் சர்ச்சை, அவராலும் முடியாது. அவரும் 15 வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது இதனை எல்லாம் தீர்க்க நினைக்கவே இல்லை, செய்யவும் மாட்டார்

இந்த முதல்வர் மீதும் டெல்லியில் நடக்கும் வழக்குகள் உண்டு, அவரிடமும் பெரும் எதிர்ப்பினை காணமுடியாது

இவர்களை தாண்டி தமிழகத்தில் ஆட்சிக்கு வருபவர்களும் இல்லை

சுருக்கமாக சொன்னால் தேசிய கட்சியோ அல்லது நல்ல தமிழக‌ தலமையோ வராதவரை இந்நிலை இன்னும் மோசமாகவே செல்லும். தமிழக தலைவிதி இப்பொழுது மாறுவதாகவும் தெரியவில்லை

பெருகும் நீர் தேவையில் பல மாநிலங்கள் இச்சிக்கலுக்கு உள்ளாகின்றன சமீபத்தி பஞ்சாப் ஹரியானா மாநிலங்கள் மோதிகொண்டதும் அப்படியே

இந்திய அரசு ராணுவ தளங்களை போல, அணுமின் நிலையங்களை போல இனி அணைகளையும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் காலம் வந்தால் இன்னும் நல்லது.

அதுவரை வருணன் உறங்கிவிட்ட காலங்கள் எல்லாம் இந்தியாவில் இப்படி சிக்கலானதே.

அவன் உறங்காமலே இருக்க பிராeர்த்திப்போம். இப்போதைக்கு அதுதான் வழி வேறு என்ன செய்ய? தமிழகம் ஆழ்துயிலில் இருக்கின்றது அதன் கனவில் எம்ஜிஆர் வழிகாட்டலில் ஜெ பொற்கால ஆட்சி புரிகின்றார்,

மந்திரிகள் புலவர்களாக கவிமழை பொழிகின்றார்கள், வாழ்த்து மழை. எங்கு நோக்கினும் பணகட்டுகள், கண்டெய்னர் உட்பட.

அது கலைந்தால் கலைஞர் மகா பொற்கால ஆட்சி புரிகின்றார்,

அதன் தூக்கம் தொடர்கிறது.

வருணனாவது உறங்காமல் இருக்கட்டும்.

No comments:

Post a Comment