Thursday, September 22, 2016

தேசத்தை காத்துவிட்டே உயிர்விட்டிருக்கின்றார்


ra



தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானை தனிமைபடுத்தவேண்டும் எனும் இந்திய குரல் கடுமையாக ஒலிக்கின்றது, இந்தியாவிற்கு ஆதரவும் கூடுகின்றது


தனிமைபடுத்துதல் என்றால் ஒருமாதிரி ஒதுக்கிவைத்தல் எனபொருள், பலவாரியான சிக்கல்களை கொண்டுவரும் விஷயம் அது. . "அவன்கிடா யாரும் அன்னம் தண்ணி புழங்ககூடாது..ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்டா.." எனும் மாதிரியான தீர்ப்பு அது


உதாரணமாக 4 பேர் சேர்ந்து அந்நாட்டை போட்டு சாத்தினாலும் அதற்கு ஆதரவாக யாரும் குரல்கொடுக்கமாட்டார்கள்


இன்று இந்தியா பாகிஸ்தானை தீவிரவாதிகள் நாடாக அறிவித்து சிக்கவைக்க எடுக்கும் வேகத்தை விட அன்று 10 மடங்கு அதிக வேகத்தில் செயல்பட்டு இந்தியாவினை தீவிரவாதநாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர் இலங்கையின் ஜெயவர்த்தனேவும் அதுலத் முதலியும்


இந்தியாவின் முகத்திரையினை கிழிப்பேன் என உலகம் சுற்றினான் ஜெயவர்த்தனே, அவனிடம் ஏகபட்ட ஆதாரங்கள் இருந்தன. அன்று ஈழபோரளிகளுக்கு இந்திய கதவு திறந்துகொடுக்கபட்டு வாயில் உணவும் ஊட்டபட்டுகொண்டிருந்தது ஒன்றும் ரகசியமும் அல்ல‌


அனுபவமிக்க இந்திரா காந்தி இல்லாமல் ராஜிவ் அப்பொழுதுதான் வந்திருந்தார். ஆனால் நிலமை மகா மோசமாயிற்று. ஜெயவர்த்தனே இந்தியாவினை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் முயற்சியில் தலைகீழாக நின்றார்


இக்கட்டான நிலையில் ஏதும் செய்தே ஆகவேண்டிய நிலையில் வடமராட்சி முற்றுகையும் பெரும் அழிவும் நடக்க இருந்தபோதுதான், நாங்கள் தீவிரவாத ஆதரவாளர்கள் அல்ல மாறாக மனிதநேயர்கள் என இலங்கையில் இந்தியா நேரடியாக கால்பதித்தது


அன்று இந்தியபடைகளை தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக ஈழமக்கள் கொண்டாடியபோது இந்தியா மனிதநேயத்தினால் தலையிட்ட நாடே தவிர, தீவிரவாத தூண்டுதல் நாடல்ல என உலகம் சொல்ல தொடங்கிற்று, ஜெயவர்த்தனேயும் இறங்கி வந்தார்.


அச்சம்பவம் நடக்காவிட்டால் இந்திய போராளிகள் ஆதரவு உலகில் தெரியபடுத்தபட்டு அது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கும்


காரணம் உலக யதார்த்தம் அப்படி, ஆனானபட்ட ரஷ்யாவே உக்ரைனில் முகமூடிபோட்டுத்தான் ஆடுகின்றது, பகிரங்கமாக சிக்கினால் தீர்ந்தது விஷயம். எல்லாமே தியரியே தவிர ஒன்றும் ஆதாரமில்லை.


சிரியாவில் ஆடுவது போல மொத்தமாக குரூப் டான்ஸ் ஆடினால் சிக்கலில்லை, ஆனால் தனியாக ஆடி மாட்டிகொண்டால் உலகம் வேறுமாதிரி குறித்துவிடும்.


அப்படி சில காரியங்களுக்காக இலங்கையில் கால்பதித்து அபாயத்தை தடுத்தது இந்தியா. காரணம் புலிகள் சகல இந்திய பயிற்சி போராளிகுழுகளையும் போட்டு அழித்துகொண்டிருந்தனர், இதில் எவனாவது கருணா போல ஜெயவர்த்தனே முன்னால் சென்று, இந்தியா அளித்த பயிற்சிகள் பற்றி தகவல் தர தயார் என்றால் எப்படி இருக்கும்?


அந்த ஒற்றை அறிக்கை போதாதா உலகம் இந்தியாவினை ஒதுக்கி வைக்க,


"ஏம்பா எவ்வளவு பெரிய ஆள் நீ, உன் வீடென்ன வசதியென்ன, அந்த சின்னபுள்ளகிட்ட இவ்வளவு வம்பு பண்ணிட்டு இருக்கியா? நீ என்ன ரவுடியா? வங்கத்தில் சண்டை போட்டிருக்க, இப்போ இங்க வந்திருக்க? என்ன நினைச்சிட்டிருக்க.. நாங்கெல்லாம் உலகநாடுகள்னு எதுக்கு இருக்கோம்?... என உலகம் சொல்ல எவ்வளவு நொடி ஆகும்.


அதனால் ஒப்பந்தம் எனும் பெயரில் ஜெயவர்த்தனேவினை மிரட்டி களம்புகுந்தது இந்தியா, ஜெயவர்த்தனே கிட்டதட்ட கன்னட முதல்வர் போல சிக்கி இருந்தார், கனத்த இதயத்தோடே.


அடுத்து ஈழபோராளிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும், தான் வளர்த்துவிட்ட தீவிரவாதம் தன்னால் நீங்கும்படியும் இந்தியா கோரிக்கை விடுத்தது,


எல்லோரும் ஒப்புகொள்ள புலிகள் மட்டும் முரண்டு பிடித்தனர், நாங்கள் கிழித்துவிடுவோம் என்றனர், வடமராட்சியில் சாகும்போது இந்தியா இல்லை என்றால் என்ன .....கிழித்திருப்பீர்கள் என்ற இந்தியாவின் கேள்விக்கு பதில் இல்லை


அதன் பின் புலிகள் ஈழமக்களை தூண்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்ததும், இந்திய ராணுவம் மீதே பாய்ந்ததும் கொடூரமானவை


இந்தியாவினை எதிர்த்த புலிகளை அன்றே தமிழகத்தில் நடமாடாமல் தடுத்திருந்தால் சிக்கல் வந்திருக்காது, இந்திய ராணுவம் தோற்றிருக்காது


இங்கோ தமிழக எம்பி கள்ளதோணிவழியாக செல்லும் அளவிற்கு அட்டகாசம் இருந்தது, சுருக்கமாக சொன்னால் இந்திய தேசவிரோதிகளுடன் சேர்ந்தே இந்திய ராணுவத்தை கொன்றுகொண்டிருந்த்தனர் புலிகள்.


புலிகளால் கொல்லபட்ட இந்திய ராணுவவீரர்களின் குடும்பம் குற்றசாட்டை கூறவேண்டுமானால், நீதிவேண்டும் என கேட்டக்வேண்டுமானால் உறுதியாக சொல்லலாம் அவர்கள் கை காட்ட வேண்டியவர்கள் இங்குள்ள துரோகிகளையே.


இவர்கள் புலிகளுக்கு கொடுத்த பலம் அப்படி. தன் நாட்டை மீறி அந்நிய நாட்டு தீவிரவாதத்திற்கு கொடுத்த ஆதரவு அப்படி. இன்னொரு நாடென்றால் நசுக்கி இருக்கும். இந்தியா நிதானமானது.


இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேற விபி சிங் அரசும், அதற்கு ஆதரவளித்த கலைஞருமன்றி யாரும் காரணமில்லை, இது நிச்சயம் விபிசிங் அரசின் தவறான அணுகுமுறை, பெரும் தவறு. கலைஞர் வேறுமாதிரியானவர் சில விஷயங்களை பட்டால்தான் திருந்துவார், உதாரணம் வைகோ கொடுத்த பாடம்


புலிகளுடன் மோதிய எதிர்பாரா அதிர்ச்சியிலும், இந்தியா அட்டகாசமாக இன்னொரு கோணத்தை காட்டியது.


அது ஒரு வகை ராஜதந்திரம்.


ஏய் உலகத்தாரே பார்த்துகொள்ளுங்கள், இலங்கை தீவிரவாதம் நாங்கள் வளர்த்தது அல்ல, இதோ அவர்களுக்கும் எங்களுக்குமே சண்டை, நாங்கள் விலகிகொள்கின்றோம் என கைகழுவிவிட்டு திரும்பியது இந்தியா


அதன் பின் உலகமே சேர்ந்து புலிகளையும் பிரபாகரனையும் தீவிரவாதிகள் என போட்டு தள்ளியது பிற்கால சம்பவம்.


ஆக அந்த தீவிரவாதநாடு எனும் முத்திரை அபாயமானது, களையபட வேண்டியது. இந்தியா அதனை பெரும் விலை கொடுத்து களைந்துவிட்டது


இதனைத்தான் இங்கிருந்து கொண்டு சில அல்லக்கைகள், ஈழத்தில் இந்தியா துரோகம், ஈழத்தில் இந்தியா அட்டகாசம் என புலம்பிகொண்டு ஒப்பாரி வைத்துகொண்டும் இருக்கின்றன‌


1983ல் அகதிகளாக ஈழத்தவர் வந்தார்கள், ஏதோ செய்ய தோன்றியது செய்தோம், அவர்களில் துப்பாக்கி தூக்கியவர்களுக்குத்தான் பயிற்சிகளில் உதவினோமே தவிர சும்மா இருப்பவர்களுக்கு அல்ல‌


சிலர் சொல்கின்றான், இந்தியா ஈழமக்களை துப்பாக்கி தூக்க வைத்தது, அப்படி அல்ல மாறாக ஏற்கனவே சாக துணிந்தவர்களுக்கு இப்படி முயற்சி செய்துவிட்டு சாவு என பயிற்சி அளித்தது அவ்வளவே


எல்லாம் பிரபாகரனின் பிடிவாதத்தாலும் கொஞ்சமும் தெரியா உலக யதார்த்தாலும் நாசமாக போய், சர்வ நாசமாக மாறி பெரும் அழிவிலும் முடிந்துவிட்டது


ஆனால் இந்தியா தன் நிலையினை அன்றே உலகிற்கு காட்டிவிட்டது, அதுவும் ராஜிவ் கொலையோடே உலகம் வேறுமாதிரி குறித்தும்கொண்டது.


ஓஓ இந்தியா நல்ல நாடே தான்.


இப்பொழுது உரி சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைபடுத்துவது தொடர்பாக கடும் முயற்சிகளில் இந்தியா இறங்கி இருக்கின்றது


ஆப்கன், காஷ்மீர், பின்லேடன் வகை தீவிரவாதிகள், தாவுத் இப்ராஹிம் என எல்லா வகை தீவிரவாதிகளின் புகலிடமாகவும், பல்கலை கழகமாகவும் விளங்கும் பாகிஸ்தான் தப்புவது அவ்வளவு எளிதல்ல எனினும் அவ்வளவு எளிதில் அமெரிக்கா அதனை கைவிடாது, இதுவும் அரசியல்


எனினும் இந்நேரத்தில் 1985களில் இப்படி ஒரு நிலை ஈழவிவகாரத்தால் இந்தியாவிற்கு வந்தபோது, ஓடிசென்று ஈழபோராளிகளை சந்தித்து, ஜெயவர்த்தனேவினை பணிய செய்து ஒப்பந்தமிட்டு இந்தியாவின் மானம் காத்து, அதற்காக சிங்களனிடம் தப்பி, பின் தமிழரிடம் சிக்கி உயிர் விட்ட ராஜிவ் நினைவுக்கு வந்தே போகிறார்.


உண்மைகள் உறங்காது, சமயம் வரும்பொழுதெல்லாம் அது தன்னை காட்டிகொண்டே இருக்கும்.


இதோ பாகிஸ்தானை தனியாக ஒதுக்க நாம் முயற்சி எடுக்கும் காலங்களில் எப்படி இன்று நவாஸ் தேசம் காக்க துடிக்கின்றாரோ, அப்படி அன்று ஜெயவர்த்தனேவின் திட்டத்திலிருந்து இந்நாட்டை விடுவித்த ராஜிவின் உண்மையான தேசபற்று தெரிந்துகொண்டே இருக்கும்.


அவர் தேசத்தை காத்துவிட்டே உயிர்விட்டிருக்கின்றார்.


வந்தே மாதரம்..ஜெய்ஹிந்த்




No comments:

Post a Comment