Sunday, September 11, 2016

தியாக திருநாள் வாழ்த்துக்கள்



bak
அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஒரு ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் "ஊர்" தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான், அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது,


நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம்.


அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், அதாவது குடும்பத்தோடும், சகலத்தோடும் வந்து சேர்ந்தார்.


மனிதர் பெரும் சொத்துபத்திற்கு அதிபதி, அதாவது அந்நாளில் ஆடுகள்,மாடுகள் முதலானவையே மாபெரும் செல்வம். ஊர் என்பது விவசாய பகுதி, இவர் ஆடு மாடுகளை பெருமளவில் வைத்திருந்ததால் மேய்ச்சல் நிலம் தேடி இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற தியரியும் உண்டு.


இவ்வளவு செல்வங்கள் இருந்தும் அவருக்கு பிள்ளை செல்வம் இல்லை, ஆனால் இவரை ஏனோ கடவுளுக்கு மிகவும் பிடித்து போயிற்று.


(சில அட்டகாச கிறிஸ்தவர்கள் சொல்வார்கள், பிரம்மம் எனும் வழிபாடு இருந்த இடம் அது, இவர் அதனை எதிர்த்தார் அதனால் நீதி xஅநீதி. நியாயம்xஅநியாயம் திமுக xஅதிமுக வரிசையில் இவர் பிரம்ம xஅபிரம்மம், அது ஆபிராம் எப்படி பார்த்தீர்களா? என கண்களை வானத்தை நோக்கி திருப்புவார்கள்,


அப்படியானால் அபிராமி என்றால் என்ன பொருள் கேட்டால் பற்களை நரநரவென கடித்துவிட்டு ஓடிவிடுவார்கள்.)


அவர் ஆபிராம் அல்லது ஆபிரகாம் என யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும், இஸ்லாமியர்களால் இபராஹிம் நபி என அழைப்பபடுபவர்


அவரின் பெயர் அப்படியானது அவ்வளவுதான் விஷயம், ஹீப்ரு,கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் என சுற்றி வந்ததால் ஆபிராம், ஒரிஜினல் அரபுபொழியில் அது இப்ராஹிம். அவ்வளவுதான் விஷயம்


இவரிடம் வந்த கடவுள், இவரை கானான் எனப்படும் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளுக்கு வருமாறு அழைத்தார்.


ஆபிரகாமும் ஒரு வார்த்தை பேசாமல் பின் தொடர்ந்து வந்தார்,கொஞ்சகாலம் கானானிலும் பின் எகிப்திலுமாக அப்பகுதியெல்லாம் சுற்றி திரிந்தார், சுருக்கமாக சொன்னால் நாடோடி மேய்ப்பன் வாழ்க்கை.


வயதும் ஏறிற்று, ஆனால் குழந்தை இல்லை. ஒரு நாள் கடவுள் வந்து அவரிடம் குழந்தைபற்றிய உறுதிமொழியும், அவருடைய வம்சம் தழைத்தோங்கும் உறுதியினையும் அளித்துவிட்டு சென்றார்.


நிச்சயமாக அது மெடிக்கல் மிராக்கிள். கிட்டதட்ட 100 வயதாக இருக்கும்பொழுது கடவுள் அவருக்கு ஒரு மகனை கொடுத்தார், மனைவிக்கோ கிட்டதட்ட 80 வயது. ஆண்டவன் நினைத்துவிட்டால் எல்லாமும் சாத்தியம் அல்லவா?


பின்னும் மற்ற வேலைகாரிகள் மூலமாகவும் அவருக்கு பிள்ளைகள் பிறந்தாலும், இம்மகன் மீது அவர் உயிரையே வைத்திருந்தார்.


பக்தனை சோதிப்பது கடவுளின் பிரதான ஆட்டம், அப்படியே இவரையும் சோதிக்க் எண்ணி, உன் மகனை எனக்கு பலிகொடு என்றார். அந்நாளில் ஆடு,மாடுகள் பலி உண்டு, சில இடங்களில் நரபலி கலாச்சாரமும் இருந்திருக்கின்றது.


முதிர்ந்த வயதில், மனைவிக்கும் தனக்கும் வராது வந்த மாமணியான அம்மகனை பலியிடுவது என்றால் எவ்வளவு துயரம்? அரசன் கேட்டால் மறுத்துவிடலாம், கடவுள் கேட்டால்? என்ன செய்ய? அவரின் பக்தி நிறை உள்ளம் மறுக்கவில்லை.


சிறுதொண்ட நாயனாரை சிவபெருமான் அகோரி வேடத்தில் வந்து மகனையே வெட்டி சமைக்க வைத்து சோதித்தார் அல்லவா? அதேபோல் ஒரு சோதனை.


அப்படியே இவரும் மகனை தானே வெட்டி பலியிட தயாரான பொழுதுதான், கடவுள் தடுத்து இவரின் பக்தியினை மெச்சி, இவருக்கு சில உறுதிமொழிகளை அள்ளி வீசிவிட்டு ஒரு ஆட்டினை காட்டி பலியிட சொன்னார், கடவுளுக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துவிட்டு அவரும் அவரோடு இருந்தவர்கள் அந்த ஆட்டினை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.


அதனை நினைவு கூறும் வண்ணம் இஸ்லாமிய பெருமக்கள் அந்த நாளில் ஆடு பலியிட்டு கடவுளுக்கு நன்றி கூறுகின்றனர், அதாவது அந்த பெருமகனாரின் ஒப்பற்ற தியாகத்தினை நினைவு கூறுகின்றனர்.


இச்சம்பவம் யூதர்களின் தோரா, கிறிஸ்தவர்களின் பைபிள், இஸ்லாமிய பெருமக்களின் குரான், பஹாய் மதத்தின் குறிப்புகள் என இந்த பெரியவர் இப்ராஹிம் தொடர்புடைய எல்லா மதங்களிலும் அழுத்தமாக பதிவு செய்யபட்டிருக்கின்றது.


இந்த பக்தியினை மெச்சித்தான், இறைவன் இவருக்கு பெரும் மதிப்பினை கால காலத்திற்கும் வழங்கினார். அதாவது இந்த தியாகம் செய்ய அவர் துணிந்ததால் யூதம்,இஸ்லாம்,கிறிஸ்தவம், பஹாய் என சகல மதங்களின் வரலாறுகளிலும் மகா நிச்சயமாக முதல் இடம் இவருக்கு, காலமுள்ள காலமட்டும் இவர் ஒருவருக்கே.


அந்த தியாக திருநாளினை இஸ்லாமிய பெருமக்கள் தங்களின் பெரும் கடமைகளில் ஒன்றாகவே ஏற்றுகொண்டார்கள், அந்த பெருமகனார் தன் மகனுடன் வந்து கடவுளை வணங்கிய இடம்தான் புனிதமான மெக்காவின் பழமையான கஃபா என்பது அவர்களின் பெரும் ஆதார நம்பிக்கை, அதனால்தான் பல கோடி இஸ்லாமியர் அங்கு கூடி தங்கள் மத சடங்குகளை நிறைவேற்றுவர்.


இந்த நாளில் ஆட்டினை பலியிட்டு பகிர்ந்தளிக்கவேண்டும் என்பது அவர்களின் மரபு, உருது மொழியில் பக்ரீ என்றால் ஆடு என பொருள்படும் என்பார்கள், ஈத் என்றால் பகிர்ந்துகொள்ளும் பண்டிகை. அதுவும் அந்த ஆடு ஏழைகளுக்கு இத்தனை சதவீதமும், உறவினர்களுக்கு இத்தனை சதவீதமும் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்ற கட்டுபாடுகளும் உண்டு.


தியாக திருநாள் அதாவது பக்ரீத் பண்டிகை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


இறைவனின் அருளும், கருணையும் நம் எல்லோர் மேலும் இருக்கட்டும்.


இன்று யாராவது பிரியாணி தந்தால் அவர்கள் மீது இன்னும் அதிகமாக இருக்கட்டும்.






No comments:

Post a Comment