Monday, September 19, 2016

சீன நண்பருக்கு "ஓல்டு ரைஸ் கர்டு சூப்" ரெசிப்பி கிடைத்துவிட்டது

வரப்பிலும், பனைமரத்து அடியிலும் அமர்ந்துதான் பழைய சோற்று கஞ்சி குடிக்கவேண்டுமா? ஐ.டி கம்பெனியிலிருந்து குடிக்க முடியாதா?


இன்று அதனைத்தான் செய்தேன், ஐ.டி கம்பெனியில் அமர்ந்து பழஞ்சோறு தின்றவன் எனும் சரித்திரம் படைத்தாகிவிட்டது.


ஒரு சீனநண்பர் வித்தியாசமாக பார்த்தார். அடிப்படையில் அவர்கள் நூடுல்ஸும் இந்த கஞ்சி வகையறாதான். நாம் அரிசி கஞ்சி குடிப்பது போல சூப்பில் நூடுல்ஸ் போட்டு குச்சியால் பிடித்து வாயில் திணிப்பார்கள். ப்ரைடு நூடுல்ஸ் எல்லாம் இன்றைய காலமாற்றம்.




இது என்ன என்று கேட்டார், அதனை செய்யும் முறையினை சொன்னேன். இவ்வளவு எளிதா என்றார்? தயிர் சேர்க்கவேண்டும் என்றவுடன் நிரம்ப யோசித்தார்.


காரணம் சீனர்களுக்கு பால் பொருட்கள் பயன்பாடு அவ்வளவு கிடையாது. மாடு கிடைத்தால் வெட்டுவார்கள் அவ்வளவுதான். தயிர், நெய் போன்ற பொருட்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் உடல் உஷ்ணத்தினை கட்டுபடுத்துவது பன்றிகறியும் இன்னும் சில கீரைகளும்


அவர்கள் உணவே சதைபோடாது, மாறாக எலும்பினை உறுதியாக்கும் சூப் மயம்.


ஆக இந்த நீராகாரத்தை ஒரு தயிர் சூப் வகையில் சேர்த்துவிட்டார். இனி நூடுல்ஸ் தயிர்கஞ்சி செய்வதாக சொல்லி சென்றவர், அருகிருந்த வெங்காயத்தையும் உப்பையும் பார்த்து இதுவும் சோ சிம்பிள் என்றார்.


யோசனையாய் திரும்பியவர் புன்னகையுடன் கேட்டார், அதில் ஏதோ ரகசியம் கண்டுபிடித்த மகிழ்ச்சி தெரிந்தது


"இப்படி தயிர்கஞ்சி சாப்பிட்டுத்தான் இந்தியர்களுக்கு ஐ.டி மூளை அபாரமாக இருக்கின்றதோ?, ஹா ஹா ஹா" என சொல்லிவிட்டு சென்றார். இனி அவரும் குடிக்கலாம்.


உண்மையாக இருக்கலாம், அப்படி பழஞ்சோறு தின்றவர்களின் சந்ததிகள்தான் ஐடி துறையினை கலக்கிகொண்டிருக்கின்றன.


ஆனால் இந்திய பாரம்பரியம் இல்லா இந்நாளைய பர்மா, தாய், வியட்நாமிய பாலிஷ் அரிசிகள் எல்லாம் சோற்றிற்கும் ஆகா, பழங்கஞ்சிக்கும் ஆகா.


அதற்கு நமது மண்ணின் அரிசிகளே சரி.


முன்னோர்கள் அதனைத்தான் உண்டார்கள். இனிப்பு நீர், ரத்த கொதிப்பு , குடல் பிரச்சினைகள் என ஒரு மண்ணாங்கட்டி நோய்களும் அவர்களை நெருங்கவே இல்லை.


உணவே மருந்தாக அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள்.


எப்படியோ சீன நண்பருக்கு "ஓல்டு ரைஸ் கர்டு சூப்" ரெசிப்பி கிடைத்துவிட்டது :)



No comments:

Post a Comment