Tuesday, September 6, 2016

எது நடக்க கூடாதோ, அது நன்றாகவே நடந்துவிட்டது...

எது நடக்க கூடாதோ, அது நன்றாகவே நடந்துவிட்டது


ஜெயபிரதா பற்றிய பதிவுகள், பாகம்பிரியாளை ஆத்திரமடைய வைத்துவிட்டது. கோர்ட் தீர்ப்பினை கேட்ட மைசூர் விவசாயிகளை போல, ஓபாவினை கண்ட சீன அதிகாரியினை போல, ராஜபக்சேவினை கண்ட மலேசிய தமிழர்களை போல அப்படி ஒரு ஊழி தாண்டவ நிலைக்கே வந்துவிட்டார்


எப்படி ஜெயபிரதா பற்றி அப்படி ... எழுதலாம்? என்ற கேள்வியின் குரலிலே தெரிகிறது எனது முடிவு.




கம்பனே சீதை பற்றித்தானே எழுதினான், காளிதாசன் சாகுந்தலை பற்றித்தானே எழுதினான். அவர்கள் மனையினை பற்றி எழுதவில்லயே என்ற பதிலுக்கெல்லாம் மசிவதாக தெரியவில்லை.


(கம்பன் மனைவியும், காளிதாசன் மனைவியும் அப்படி பொங்கி இருந்தால் அப்படிபட்ட காவியங்கள் கிடைத்திருக்குமா? ...)


இனி கம்பனின் பக்கத்தில் அவன் மனைவிக்கும் சிலை வைக்க வேண்டும், மகராசி வாழ்த்துகுரியவள்.


"இன்பத்து பாலை உன்னை நினைத்தே எழுதுகிறேன் வாசுகி.." என ஏமாற்றாமல் வள்ளுவன் அதனை எழுதியிருக்க முடியாது.


இல்லை என்றால் வாசுகி அந்த எழுத்தாணியாலே வள்ளுவன் கண்ணை குத்தியிருக்கும் அபாயம் உண்டு.


உன்னில் கடவுள் கண்ணணையே காண்கிறேன் செல்லம்மா என சொல்லாமல் பாரதியாலும் "நின்னை சரணடைந்தேன்" என பாடியிருக்க முடியாது


நாமும் அப்படி ஏதாவது சொல்லி தொலைத்திருக்கலாம், என்ன செய்ய விதி முந்திகொண்டது.


இனி என்ன செய்வது? ஓரளவு யூகிக்க முடிகின்றது. என்ன நடக்கும்? அதேதான் அருமை பாகம் பிரியாள், இனி என் உடல் பாகங்களை பிரித்தேவிடுவாள்


உடல் உறுப்பு தானத்திற்கு இப்பொழுதே எழுதிவைத்துவிட வேண்டியதுதான், அதிலும் கண்தானம் அவசியமானது.


நாம் இல்லாவிட்டாலும், நம் கண்ணாவது.. .... புரிந்தவர்கள் புரிந்துகொள்ள்ளுங்கள் :)


எல்லாம் நிறைவேறிற்று, ஜெயபிரதா பெயராலே.. ஆமென்



No comments:

Post a Comment