Thursday, September 22, 2016

விஜயலஷ்மி என்கிற சில்க் ஸ்மிதா



பேசா படங்கள் வந்து பின் தமிழில் பேசும்படங்கள் வந்தபொழுது தமிழக சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னி தவமணி தேவி




[caption id="" align="aligncenter" width="411"]Stanley Rajan's photo. Enter a caption[/caption]

2 December 1960 – 23 September 1996


 அவரை குறிப்பிடும்பொழுது அக்கால சில்க் ஸ்மிதா என சொல்லும்பொழுதே புரியும் தமிழ்சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அழியா இடம்.


ஆந்திராவின் ஏழை குடும்பத்தில் பிறந்தவர், பலவகை தோல்விகளுக்கு பின், திருமண தோல்விக்கும் பின்னர்தான் ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு வந்தவர், பின் நடிகை ஆனார்.


அவரை சினிமாவிற்கு கொண்டுவந்தது யார் என ஆளாளுக்கு தன்னை காட்டுவார்கள். வைரத்தை கண்டெடுத்து யார்? என்பதா முக்கியம், மின்னிய வைரமே முக்கியம்


நடிகை விஜயலட்சுமி(சீமானின் சீமாட்டி அல்ல) சில்க் ஸ்மிதா ஆனது அப்படித்தான்


வண்டிசக்கரம் படத்திற்கு பின் சில்க் யுகம் தொடங்கியது, அவரது நடனமும், உடல்வாகும் அப்படியே ரசிகர்களை அள்ளின. அவ்ரின் மிகபெரும் பலம், அந்த கண்கள். ஆயிரம் வருடத்து ஒயினையும் அள்ளிகுடித்தாலும் தரமுடியா போதையினை ஒரே நொடியில் கொடுக்கும் அந்த மாய‌ கண்கள்.


அதன் பின்பு அவர் இல்லா படங்கள் இல்லை, எம்ஜிஆர் முதல்வராக ஆகியிராவிட்டால் நிச்சயம் "ஏய் கருப்பு சிங்காரி" பல டூயட் ஆடியிருப்பார், நல்லவேளையாக தமிழகம் தப்பியது.


அது தமிழ்சினிமாவின் அடுத்த தலைமுறை காலம், ரஜினி கமல் என எல்லா நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்களில் எல்லாம் சில்க் ஸ்மிதாவின் பெயரும் இடம்பெற்றது, அல்லது இடம்பெற்றது போல பார்த்துகொள்ளபட்டது.


பல படங்களில் அவருக்கான வேடமும் பாடலும் வலிந்து திணிக்கபட்டன, உதாரணம் மூன்றாம் பிறை.


தென்னிந்தியா முழுக்க பிரபலமானார் ஸ்மிதா, வட நாட்டு பத்திரிகைகள் போட்டி போட்டு எழுதின, இறுதிகாலத்தில் இருந்த அன்னை இந்திராவே சிறு புன்னகையுடன் யார் இந்த பெண் என உதவியாளரிடம் கேட்ட காலங்களும் உண்டு


பெரும் ரசிக பட்டாளங்களை தன்னகத்தே கொண்டிருந்தார், அவரின் ஒரு பாடல் ஆடலுக்க்காகவே காத்திருந்துவிட்டு பாடல் முடிந்ததும் படம் முடியாமலே காலியான‌ தியேட்டர்கள் அக்காலத்தில் உண்டு.


மிக சிறந்த நடிகையும் கூட, ஆனால் விதி அவரை கவர்ச்சி வேடத்திலே நிறுத்திவிட்டது. தமிழக எதார்த்தமும் அப்படி. அவர் அறிமுகமான நிர்பந்தமும் அப்படி


அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியில்லாதவனிடம் அமெரிக்கா போகிறாயா என்றால் உடனே கிளம்புவான். கிடைத்த வேலைக்கு ரெடி என்பான். சுமிதாவின் அக்கால நிலையும் அப்படியே இருந்தது, கிடைத்த கவர்ச்சி வேடத்தில் புகுந்தார், அது நிலைத்தே விட்டது


தமிழக யதார்த்தம் அப்படி, சிவாஜி அழுததால் அழவே வைத்தார்கள். மோகன் மைக் பிடித்தால் அதனையே கொடுத்தார்கள், அப்படி சில்க்கிற்கும் அந்த முத்திரையே விழுந்துவிட்டது, இன்னொன்று அதனை தவிர எந்த வேடத்திலும் அவரை காண தமிழன் விரும்பவிலை.


அன்றைய தமிழ் உலகில் சிகப்பான பெண்களே கதாநாயகி ஆக முடியும், கொஞ்சம் உடல்வாகும் வேண்டும். பின்னாளில் அந்த இலக்கணம் இன்று மாறிவிட்டது. தீபிகா படுக்கோனே, கஜல், ராணி முகர்ஜி அப்படியானவர்கள், மாற்றியவர்கள்.


Stanley Rajan's photo.


இதனை அன்றே செய்தவர்தான் சில்க் ஸ்மிதா, ஆனால் கவர்ச்சி நாயகி என்ற முத்திரையே குத்தபட்டது.


வயது ஏறினாலும் அவருக்கான இடம் அப்படியே இருந்தது, ஒரு பாடலுக்கு வந்தாலும் அரங்கம் அதிர்ந்தது. அமரன் போன்ற படங்கள் அப்படியானவை.


ஆனால் விதி வேறுமாதிரி இருந்தது, திடீரென தற்கொலை செய்துகொண்டார் அவர், அவருக்கு வயது 35


எத்தனையோ பேர் தற்கொலை செய்யும் தேசம்தான், ஆனால் சில்க் ஸ்மிதாவின் தற்கொலை


எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் அன்று இருந்தனர் ஜெயலட்சுமி,சகுந்தலா,அனுராதா,பபிதா, டிஸ்கோ சாந்தி என ஏராளமானோர்.  இருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் இடம் தனி இடம்.


அன்று கதாநாயகிகள் வேறு, கவர்ச்சி நடிகைகள் வேறு என்றொரு காலம் இருந்தது, ஹிஹிஹிஹ் என வில்லன் நெருங்கும் காட்சி தவிர நாயகிகள் மகா கண்ணியமான உடையோடே இருப்பர்.


இன்றைய காலம் சொல்லி தெரியவேண்டியதில்லை, யார் படத்தில் மிக குறைவான ஆடை உடுத்தியிருக்கின்றாரோ அவர்தான் நாயகி.


அன்று அப்படிபட்ட காட்சிகளில் நடிக்க பெரும் தைரியம் வேண்டும், அது பெரிதும் இருந்த, எந்த சீன் என்றாலும் அசாத்தியமாக கடந்த சில்க், அவ்வளவு தைரியமான‌ ஏன் தூக்கிட்டார் என்பது மகா மர்மமே


மிக சுவாரஸ்யமாக அவரின் சாவு அவரின் முன்னோடியுடன் ஒத்துபோகின்றது. அந்த முன்னோடி மர்லின் மன்றோ


அவரும் சில்க் போலவே இளமையில் போராடி பின்னாளில் பெரும் ஹாலிவுட் நடிகையானார். அவருக்கும் அதே போதை கண்கள். அதே ரசிகர் கூட்டம், ரசிகர்கள் என்றால் அமெரிக்க அதிபர்கள் வரை தன் சிகப்பு கவுண் நூலில் சுற்றி வைத்திருந்தவர்


அவருக்கும் சில்க் போலவே மர்ம சாவு, இருவரின் கண்களும், இருவரின் வாழ்வும், இருவரின் மரணமும் ஒன்றானதே. மகா விசித்திரம் இது


இவர்கள் இருவரையும் தவிர அப்படி ஒரு கண்களுக்கு சொந்தகாரிகள் இன்னும் பிறக்கவில்லை என்கிறது உலகம்.


தூரத்தில் மின்னும் நட்சத்திரங்கள் தனக்குள் எரிகின்றன என்கிறது வான அறிவியல். சினிமா கலைஞர்கள் பலபேரின் நிலையும் அப்படியே. நட்சத்திரங்கள் என்பது நிச்சயம் அவர்களுக்கு பொறுத்தமானதே.


அவளுக்கென்று பெரும் ரசிகர்கள் இருப்பார்கள், அவளை வைத்து படமெடுக்க ஆயிரம்பேர் வருவார்கள், ஆட்டோகிராபிற்கு கியூவில் நிற்பார்கள். ஒப்பந்த கையெழுத்து வாங்க பணப்பெட்டியோடே நிற்பார்கள்.


ஆனால் கணவன் என கையெழுத்து போட யாரும் வரமாட்டார்கள், இதில் என் மனைவி என கையெழுத்த்து போடு என சொல்ல யாரும் வரபோவதில்லை, வந்தாலும் அது பெரும்பாலும் நிலைப்பதில்லை


கதாநாயகிகள் நிலையே இப்படி என்றால் சில்க்கின் நிலை எப்படி இருந்திருக்கும்? அவருக்கு காதலர் இருந்தார் என்றார்கள், மர்மம் என்றார்கள், தற்கொலை என்றார்கள். எப்படியோ சில்க் இன்று இல்லை.


வாழ்ந்த காலத்தில் சில்க் ஸ்மிதாவினை பாராட்ட ஆளில்லை, தைரியம் மிக்கவர் என சொல்ல யாருமில்லை. இம்மாதிரி தைரியமாக நடிக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும், சில்கிற்கு அது வந்தது, அவர் பட்ட வறுமையும் போராட்டமும் அதனை கொடுத்தது.


சினிமாவில் அவரை ரசித்தாலும் சமூக நோக்கில் பார்த்த பார்வையில் அருவெறுப்பு இருந்தது , சில்க் சுமிதாவை ரசிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றும் இருந்தது, அது இன்று வரை தொடர்கிறது, அவரை ரசித்தவர்களையே ஒரு மாதிரி பார்த்த சமூகம் இது (இப்பொழுது என்னையும் பார்ப்பார்கள்)


அவருக்கொரு வாழ்க்கையுமில்லை, வழிகாட்டியில்லை, சமூக அங்கீகாரமுமில்லை, புறக்கணிப்பின் உச்சியில் செத்தும் போனார்.


செத்தாலும் அவரோடு நடித்தவர்களோ அல்லது சம்பாதித்த யாரும் வந்ததாகவும் தெரியவில்லை


அவர் இறந்தாலும் அவர் சினிமாவில் பதித்த முத்திரை பெரிது என்பதால் அவர் கதையும் சினிமாவாயிற்று


அவரின் உண்மை கதையில் பின்னாளில் வித்யா பாலன் நடிக்க, அது டர்ட்டி பிக்சர் எனும் படமாக வந்தது.


அதில் வித்யா பாலன் மகா தைரியமாக நடித்தார் என பாராட்டினார்கள், பல வகையான புகழ்களை அவர் தேடிகொண்டார். யாரும் முகம் சுழிக்கவில்லை, வெறுக்கவில்லை புறக்கணிக்கவில்லை. இதோ வித்யாபாலன் பெரும் தொழிலதிபரை மணந்து வாழ்வாங்கு வாழ்கின்றார்


கதைக்கு சொந்தகாரியான சில்க் சமூகத்தால் விரட்டபட்டார், அக்கதையில் நடித்த வித்யாபாலன் கொண்டாடபட்டார்.


மகா விசித்திரமான சமூகம் இது.


டர்ட்டி பிக்சர் படம் சில்க் கதை என்றார்கள், இருக்கலாம். பல காட்சிகளில் அவர் வாழ்வின் சாயல் இருந்தது. ஒரு காட்சி மனதினை பாதித்தது. அதாவது நீங்கள் நினைப்பது போல அம்மாதிரி காட்சிகள் அல்ல, மாறாக இறுதிகாட்சி


சில்க்ஸ்மிதாவின் இறுதிகால வாழ்க்கையினை, அவரின் மன ஏக்கத்தை அப்படியே கொண்டுவந்த காட்சி


அதாவது கடை தெரு கட்டடம் வேறு, குடும்பம் நடத்தும் வீடு வேறு என்பது அவளுக்கு புரிந்துவிட்ட காலம். தனக்கென இனி ஒரு வாழ்வு அமையாது, வியாபார உறவுகள் மட்டும் அமையலாம் என அவள் புரிந்துகொண்ட காலம்


அவள் வியாபார வாழ்வினை விரும்பி இருந்தால் 80 வயது வரை வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவள் விரும்பியது சமூக அங்கீகாரத்துடன் குடும்ப உறவு, கிடைக்காத பின் சாக துணிகிறாள்


அதற்கு முன் தூக்கிலிடபடும் குற்றவாளி, தன் கடைசி ஆசையினை நிறைவேற்றிகொள்வது போல நிறைவேற்றி கொள்கிறாள்


சடை பின்னி, தளைய தளைய சேலைகட்டி, மல்லிகை பூச்சூடி, கண்களுக்கு மையிட்டு, பொட்டிட்டு தனக்கு கிடைக்காத அந்த‌ வாழ்வினை, தன் ஆழ்மன வாழ்வினை சில நிமிடம் வாழ்கிறாள்.




எந்த கோலத்தில் இந்த சமூகம் அவளை பார்க்கவிரும்பவில்லையோ, ஆனால் எந்த கோலத்தில் அவள் வாழ ஆசைபட்டாளோ அதே கோலத்துடன் இறுதி யாத்திரைக்கு தூங்கிவிடுகின்றாள்.



கனத்த சோகத்தை தரும் காட்சி அது. சில்க் ஸ்மிதாவின் கடைசி நொடிகள் அம்மனவலியோடுதான் இருந்திக்கவேண்டும்.


தவமணி தேவி முதல் இன்று வீர சிவாஜி படத்தில் சொப்பண சுந்தரி பாடலுக்கு ஆடியிருக்கும் நடிகை வரை எத்தனையோ பேர் வரலாம், ஆடலாம், போகலாம்


ஆனால் சில்க் ஸ்மிதாவின் இடம் காலியாகவே இருக்கின்றது, இன்னும் இருக்கும்


காரணம் ஹாலிவுட்டிற்க்கு நடமாடும் மயில் என சொல்லபட்ட ஒரே ஒரு மர்லின் மன்றோ என்றால், தமிழ்நாட்டிற்கு நடமாடும் ஒயின் என சொல்லபட்ட ஒரே சில்க் ஸ்மிதாதான்.


இருவருக்குமே கண்கள்தான் பிரமிப்பு, மாய கண்கள் அவை. பார்ப்போரை எல்லாம் ஒரு நொடியில் கிறக்கிவிடும் போதை கண்கள் அவை. எத்தனையோ கோடி பேருக்கு மகிழ்ச்சியினை கொடுத்த கண்கள் அவை


ஆனால் தனக்காக தனிமையில் அழுது, அப்படியே இளம்வயதில் மூடிவிட்ட கண்கள் அவை.


நாளை அந்த தென்னகத்து மர்லின் மென்றோவின் நினைவுநாள்.


அவர் இறந்த கொஞ்சகாலங்களில்தான் தமிழக பேருந்துகளுக்கு பெயர் வைக்கும் சர்ச்சை பற்றி எரிந்தது,சேரன் சோழன், பாண்டியன், திருவள்ளுவர், நேசமணி, சுதந்திர வீரர்கள் போக சாதி அடையாள தலைவர்கள் பெயரிலும் பேருந்து இயக்கவேண்டும் என சாதிய சண்டைகள் தொடங்கியது


திடீரென சில்க்ஸ்மிதா பெயரிலும் பஸ் விட்டே ஆகவேண்டும் என மர்ம சுவரொட்டிகள், மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.


அரண்ட அரசு மொத்தமும் தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் என பெயரினை மாற்றிவிட்டு நிலமையினை சீராக்கியது.


சில்ஸ் ஸ்மிதா தமிழக சினிமாவில் மறக்கமுடியாத பெயர், அதனை விட மறக்கமுடியாதது அவரின் திடீர் மரணம்.















No comments:

Post a Comment