Sunday, September 18, 2016

ராம்குமார் விவகாரம்....

இறந்தது தன் மகனே அல்ல என ஒரு தந்தை எழுதிகொடுத்த தமிழகம் இது, குத்துபட்டு வெளிவந்த குடல் என்னுடையது அல்ல என குத்து வாங்கியவனே சொன்ன தமிழகம் இது


அந்த தமிழகத்தில்தான் ராம்குமாரின் மரணமும் சர்ச்சையினை கிளப்பிகொண்டிருக்கின்றது. அதே அரசியல்வாதிகளும் குதித்துகொண்டிருக்கின்றனர்.


சுவாதியின் கொலையே பெரும் சர்ச்சை, ஆயிரக்கணக்கான புலனாய்வாளர்கள் இணையத்திலே புலனாய்வு நடத்தினார்கள், சிலர் சுவாதி ராணுவ ரகசியத்தை திருடிவிட்டார் என்றார்கள்


எல்லோரும் எட்டிபார்த்து திருட இந்திய ராணுவம் என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? ஆளாளுக்கு அள்ளிவிட்டார்கள்.


அவள் வைத்திருந்தது ராணுவ ரகசியமோ, ராத்திரி ரகசியமோ தெரியாது, ஆனால் அவளை கொன்றது ராம்குமார் என குற்றம்சாட்டபட்டு சிறையில் அடைக்கபட்டான்.


காவல்துறை நூலிழை சம்பந்தம் இருந்தாலும் ஒருவனை விடாமல் விசாரிக்கும்,


சும்மா யாரையும் பிடித்து போட்டுவிட மாட்டார்கள். தகுந்த காரணம் இருந்திருக்கும். ஏதோ தொடர்பு அவனுக்கு நிச்சயம் இருந்திருக்கின்றது. அல்லது கொலையாளிகளோடு பரிச்சயம் இருந்திருக்கலாம்.


அவனும் முற்றாக மறுத்தோ அல்லது எப்படி தொடர்பு என்றோ உருப்படியாக ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை. வழக்கறிஞர் மட்டும் சொல்லிகொண்டிருந்தார். அவன் கைப்பட எழுதிய கடித ஆதாரம் ஏதும் உண்டா எனவும் தெரியவில்லை.


அவனும் மரணமடைந்துவிட்டான். குற்றச்சாட்டு உள்ள நிலையிலே மரணமடைந்திருக்கின்றான்.


சுவாதியின் மரணத்தை விட ராம்குமாரின் மரணம் பெரும் சர்ச்சையினை கிளப்பிகொண்டிருக்கின்றது, கடும் காவல் உள்ள சிறையில் எப்படி தற்கொலை சாத்தியம் என பல சர்ச்சைகள்


சிறையில் இப்படி பல கைதிகள் சாவது அவ்வப்போது நடக்கும்.


ஆனால் எந்த அரசியல்வாதியும் அவன் உருவாக்கு கல்வி தொழில் அதிபர்கள் மட்டும் சாவதே இல்லை, அவர்கள் ஜாதகம் அப்படி.


தா.கிருட்டினன் ஆள்வைத்து தனக்கு தானே தற்கொலை செய்திருக்கலாம், அல்லது அரிவாளில் தடுக்கி விழுந்திருக்கலாம் என தமிழகம் முடிவுசெய்தாயிற்று, அதனால் காவல்துறைக்கு சிக்கல் இல்லை


ஆனால் ராமஜெயம் குற்றவாளிகளை தேடுகின்றது, ஸ்வாதி வழக்கில் இன்னும் யாரும் உண்டா என தேடுகின்றது, இனி ராம்குமார் எப்படி செத்தான்? தூண்டியது யார் எனவும் தேடும், தேடிகொண்ட இருக்கும்.


தண்டனை உறுதிசெய்யும் வரை குற்றவாளிகளை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என மற்றொறு முறை காவல்துறை உறுதியெடுத்திருக்கும்.


அன்று சுவாதியின் தந்தை கதறிய கதறலும், இன்று ராம்குமாரின் தாயின் நிலையும் காண சகிக்காதவை, மனம் கலங்க வைப்பவை


ஸ்வாதி பிணமாக கிடந்ததையும், ராம்குமார் சடலத்தை தூக்கிகொண்டு போவதையும் பார்க்கும்பொழுது பழிக்குபழி என்றெல்லாம் தோன்றவில்லை, மாறாக வாழவேண்டிய பிஞ்சுகள் கருகிவிட்ட பரிதாபமே தெரிகின்றது.


இருவரின் விதியினை எழுதும்பொழுது இறைவன் இயக்குனர் சசிகுமாரின் சிந்தனையில் இறைவன் இருந்தானோ என்னமோ?,


இனி இம்மாதிரியான விதிகளை அவன் எழுதாதிருக்கட்டும்.


எல்லா கட்சிகளும் வரிந்து கட்டி போராட வந்தாயிற்று,


ஆனால் யாராவது காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் யார்? அவர் இதற்கு என்ன பொறுப்பு சொல்கின்றார் என கேட்கவே மாட்டார்கள்.


அமைச்சர்களுக்கு என்ன பொறுப்பு என தமிழக மக்களுக்கே மறந்துவிட்டது, சரி அமைச்சர்களுக்காவது தாங்கள் அமைச்சர்கள் என நினைவிருக்கின்றதா என்றால், அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து புலவர் பதவிக்கு மாறிவிட்டதாகவே நினைத்துகொண்டிருக்கின்றார்கள்


ஆக அமைச்சர்கள் யார்? அவர்கள் பொறுப்பு இது அல்லவா?என்றெல்லாம் விஷ்ணு பிரியா வழக்கு முதலான காவலர் வழக்கு முதல் இம்மாதிரியான சிறை சாவு வழக்கு வரை யாரும் கேட்க மாட்டார்கள்


ஆனால் காவல்துறை மனித உரிமை மீறுகிறது என்றுமட்டும் குதிப்பார்கள், மின்சார சிக்கல் என்றால் மின் துறை அமைச்சரை விளாசுவார்கள். அவர் ராஜினாமா செய்யட்டும் என்றெல்லாம் கண்டன கனை வீசுவார்கள்.


பால் முதல் முட்டை வரை அப்படி சர்ச்சை என்றால் அமைச்சரை சாடுவார்கள்.


காவல்துறை என்றால் மட்டும் அமைச்சரை விட்டுவிட்டு பணியாளர்களை சாடுவார்கள்.


பெருமை மிக்க காவல்துறை தமிழகத்தில் பெற்றிருக்கும் நிலை அப்படி.


இப்படிபட்ட விசித்திரங்களை தமிழகத்தை தவிர உலகில் எங்கும் காண முடியாது. இது அப்படித்தான்


ராம்குமார் விவகார கோஷங்களை கவனியுங்கள் உங்களுக்கே விளங்கும்

No comments:

Post a Comment