Thursday, September 1, 2016

நினைத்தாலே பயங்கரமாக இருக்கின்றது...

முன்பெல்லாம் ஒருதலைகாதல் தனிமையில் சாகும், அல்லது எங்காவது என்றாவது காதலர் தற்கொலை செய்வார்கள்.

அப்பெண்ணை தூற்றுவோம் அல்லது சமூகத்தை தூற்றுவோம்

இன்று காதலன் என சொல்லிகொள்பவன் காதலி என அவனாக முடிவுசெய்துகொள்பவளை கொன்று தானும் செத்து கொண்டிருக்கின்றான்.

சுவாதி கொலை, கரூர் கல்லூரி சம்பவம், தூத்துகுடி சம்பவம், நேற்று சமயபுர சம்பவம் எல்லாம் ஒரே நூலிழை சம்பவங்கள்,

சமயபுர மாணவியின் தந்தை காவல்துறை அதிகாரியாம், அவளுக்கே பாதுகாப்பில்லை என சொல்லமுடியாது, இது வேறுமாதிரியான பிரச்சினை.

இதில் கரூர் சம்பவம் கண்டிக்கதக்கது, ஒருவன் நுழைந்து சாகும் வரை ஒரு சகமாணவியினை தாக்கி இருகின்றான், வகுப்பறையில் ஒருவனும் தடுக்கவில்லை.

இப்படிபட்ட சுயநல சமூகத்தைத்தான் உருவாக்கிகொண்டிருக்கின்றோம், இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் இச்சமூகத்திற்கு செய்யபோகும் நன்மை என்ன? சக தோழியினை காப்பாற்ற தெரியாதவர்களா நாளை நாட்டினை காப்பாற்றுவார்கள்.

இவ்வளவிற்கும் அவன் வைத்திருந்தது அரிவாளோ வெடிகுண்டோ அல்ல சாதாரண கட்டை

அந்த இடத்தில் ஒரு நாய் இருந்தால் கூட விழுந்து பிரண்டியிருக்கும், தேனீ கூட்டம் என்றால் மொத்தமாய் கொட்டியிருக்கும். காக்கா கூட்டம் என்றால் கத்தி கொத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கும், இவர்கள் மனிதர்கள் ஆதலால் அமைதி.

அப்படி என்ன காதல்? உயிர் பறிக்கும் காதல்? முதலில் அவளை காதலிக்க் இவர்களுக்கு முழு உரிமையும் கொடுத்தது யார்? அதனையும் மீறி அவள் உயிர்பறிக்க என்ன அதிகாரம், உரிமை இருக்கின்றது.

அப்பெற்றோர்கள் கனவு, உடன் பிறந்தோர் கனவு, அப்பெண்கள் இச்சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் என எல்லாம் நாசமாகவும் அளவு என்ன வன்மம்?

ஒன்றுதான், அதாவது பெண் என்பவள் ஒரு பேசும் ஜடம். அவளுக்கென்று மனம் இல்லை, சிந்தனை இல்லை, வாழ்வு இல்லை, ஆசை இல்லை எல்லாம் தன் விருப்படி நடக்கும் பொம்மையாக அவள் இருக்கவேண்டும் என ஏதேச்சதிகார எண்ணம் மட்டுமே காரணம்.

மணமான பின்னர் கூட, எனக்கு அவனோடு வாழ பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வழங்கி ஜீவனாம்சமும் வழங்க வழிசெய்யும் சட்டம் உண்டு, அப்படி ஒரு உரிமை பெண்களுக்கு நமது சட்டம் கொடுத்துதான் வைத்திருகின்றது, ஈவ் டீசிங் எனும் கொடுமை என்றாலும் காக்க சட்டமுண்டு.

அப்படிபட்ட நாட்டில் இம்மாதிரியான கொடுமைகள் அரங்கேறிகொண்டிருப்பது நிச்சயம் கண்டிக்கதக்கது, பெண்களை அவமதிக்கும் எந்த நாடும் நன்றாக வாழா.

இதற்கு சட்டத்தால் மட்டும் பலனிலை, அது முழு பலளிக்காது. சாராயம், போதை, இம்மாதிரியான பாலியல் கொலைகளுக்கு சட்டம் தண்டனை தருமே தவிர தடுக்காது.

இதற்கு மனநல ஆலோசனைகள் தேவை, எல்லா பள்ளிகளிலும் நல்லொழுக்க வகுப்பும், மனநல கவுன்சிலிங்கும் கட்டாயம் தேவை.

இப்படி தன் மனதில் பட்டத்தை, தன் மன கஷ்டத்தை கொட்டி தீர்க்க ஒருவர் இருந்திருந்தால் இப்பெண்களும் சொல்லி இருப்பார்கள், அந்த குழப்பமான மனம் கொண்ட இளைஞர்களும் சொல்லி இருப்பார்கள்.

கூட இன்னும் வெளிநாடுகளில் எப்படி பெண்கள் சமூகத்தால் புரிந்துகொள்ளபடுகின்றனர், அவர்களை எப்படி அங்கீகரிக்கபட வேண்டும் என்ற விஷயங்களும் சொல்லிகொடுக்கபடவேண்டும்.

கல்வி என்பது தொழில் மட்டும் அல்ல, இச்சமூகத்தில் ஒருவன் அடுத்தவருக்கு தொந்தரவு இன்றி, முடிந்தால் உதவி செய்து வாழும் வாழ்க்கையினை கற்பிப்பதாக இருக்கவேண்டும்.

ஆண் மனம் பெண்ணில் விழத்தான் செய்யும், அது இயற்கை. மிக சாதாரணா விஷயங்களில் ஒன்று, அவளும் விரும்பினால் வாழலாம்.ஆனால் அவளுக்கு விருப்பமில்லாத பொழுது வலிந்து திணித்து கொல்வது வன்கொடுமையே அன்றி வேறென்ன?

ஒரு பெண் இன்றி வாழ முடியாதா? பிரிவுகள் என்பதுதான் வாழ்க்கை. விண்ணுக்கு செலுத்தபடும் ராக்கெட் ஒவ்வொரு பூஸ்டராக இழந்துதான் இலக்கினை அடையும். பெற்றெடுத்த தாய் தந்தை கூட கடைசிவரை வரமுடியாத உலகம் இது,

பிரிவுகளையே சந்திக்காமல் ஒருவன் எப்படி இவ்வுலகில் வாழ முடியும்? அது மானிட விதி.

ஆனால் ஆண்டவன் உயர்ந்தவன், ஒரு உறவு பிரிந்தால் இன்னொரு உறவினை ஒட்ட வைப்பான். இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சுழன்றுகொண்டிருக்கின்றது.

இந்த காதல், மனம் கொடுப்பது, ஒரு தலைராகம் எல்லாம் வெறும் மாயை, அப்படி ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு உணர்வு, ரசிக்கதக்க உணர்வு. குழந்தை போல கொண்டாடும் ஒரு உணர்வு, அதனை பெரும் விஷயமாக மாற்றிய பெருமை இந்த புலவர்களை, கவிஞர்களை, நாடக ஆசிரியர்களை, இப்போது உள்ள திரைப்படங்களை மட்டுமே சாரும்.

மனதில் உள்ள ஏராளமான உணர்வுகளில் ஒன்றே காதல் தவிர, அதுவே பிரதானம் என்பதெல்லாம் மாயை, வீன் கற்பனை. தனக்குதானே ஏற்றிகொண்ட சுமை.

அப்படியும் அவள் இல்லாவிட்டால் சாவேன் என்பவன் சமூக சுமை, குடும்ப சுமை அவன் செத்து தொலையட்டும், ஆனால் அவளை வலுகட்டாயமாக கொல்ல என்ன உரிமை இருக்கின்றது?

அன்பில்லாதது காதல் ஆகாது. அப்படி அன்பிருந்தால் இக்கொலைக்காரர்கள் இப்படிபட்ட பாதகத்தை செய்ய மாட்டார்கள். இது வெறுப்பு முழுக்க முழுக்க வெறுப்பால் நடந்த கொலைகளே தவிர, காதலால் நடந்தது அல்லவே அல்ல.

ஜெயகாந்தன் அழகாக சொல்வார், "அன்பே தெய்வீகமானது. அன்பு மாறாதது எதனையும் தாங்க கூடியது விட்டுகொடுக்க கூடியது, அன்புகொண்டோருக்காக எதனையும் இழக்க செய்ய கூடியது, அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்க கூடியது

காதல் என்பது தெய்வீகமானது அல்ல, அது அற்பமானது. அது தொடங்கவும், முறியவும் ஒரு அற்ப விஷயம் போதுமானது"

இங்கு அந்த அற்ப விஷயம் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருப்பதுதான் மகா பரிதாபம். வீழ்ந்துகிடக்கும் பெண்களை யாரோ என்றால் எளிதாக நகரலாம், அப்படித்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நமது வீட்டு மகளாக, சகோதரியாக நினைத்துபாருங்கள், அக்கொடுமையின் வலி புரியும், பெரும் சோகம் மனதினை கவ்வும். அப்படித்தான் என் மனம் கதறிகொண்டிருக்கின்றது.

அற்பமான காதலுக்கெல்லாம் உயிர்பறிக்கும் கொடூர சமூகமா இது? இதிலா வருங்காலத்தில் நம் சந்ததிகள் வாழபோகின்றன?

நினைத்தாலே பயங்கரமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment