முதலில் கேட்கும்பொழுது கவிஞர் தாமரையின் வரிகள் போலவேத்தான் இருந்தது, இன்று இப்படி நுட்பமாக எழுதுவது அவரை தவிர சாத்தியமில்லை, முத்துகுமார் வரிகளும் இப்படி வரும், ஆனால் இவ்வளவு இயல்பாய் வராது எங்காவது ஓரிரு வரிகள் உரசும்.
அக்கால வைரமுத்துவும் இப்படி இருந்தார் இன்று வேறு பரிணாமம் எடுத்துவிட்டார்
யார் எழுதியது என பார்த்தால் அது பாரதிதாசன், அவர் எங்கே இருக்கின்றார்? அவரின் தமிழ்தான் இருக்கின்றது
எத்தனை கவிஞர்கள் இன்று எழுதட்டும் ஆனால் அந்நாளைய தமிழும் வார்த்தைகளும் அப்படி செழுமையாக இருந்திருக்கின்றன
பாரதிதாசனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இரும்பு குண்டெடுத்து வீசுவதை போன்றே இருக்கும், ஆனால் பல அழகான காவியங்களை படைத்தவர் என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது
பாரதிக்கு தாசன் என்பதில் அவரின் தமிழ் மிக பெரும் அடையாளமகவே நிலைத்து நிற்கின்றது
என்றோ ஒரு கவிதையினை மனிதர் எழுதி வைத்துவிட்டார், யாருக்காக எழுதபட்டது, எதற்காக என்றெல்லாம் சொல்லவில்லை. அவரின் கவிதை தொகுப்பில் ஒன்றாக இருந்திருக்கலாம்
அவளும் நானும்... என தொடங்கியிருக்கின்றது
ஆனால் நல்ல ரசனையாளரின் கண்களில் சிக்கியிருக்கின்றது, மனிதர் அந்த கவிதையினை மிகசிறந்த இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கின்றார்
கவிதையின் அழகோ, மொழியோ கெடாமல் ஒரு தெய்வீக குரலில் வெகு ரசனையாக அமைந்திருக்கின்றது பாடல்
சந்தேகமே இன்றி சொல்லலாம் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கும் மிகசிறந்த பாடல்களில் இப்பாடலுக்கும் நிச்சயம் இடம் உண்டு
காரணம் அந்த மொழி ஆளுமை அப்படி, மிக சிறந்த உவமைகளை, உருவகங்களாக அழகான தமிழில் அக்கவிஞன் கொடுத்திருக்கின்றான்
மிகசிறந்த பாடலாக நெஞ்சமெல்லாம் நிறைத்துகொண்டது
இதுதான் தமிழை நேசிக்கும் கவிஞனுக்கும், மற்ற இம்சை கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாடு
எத்தனை தசாப்தம் கழித்து இக்கவிதை அழகிய பாடலாகியிருக்கின்றது, காரணம் தமிழ் அப்படி. இப்பாடலுக்கு ஒரு வரிகூட யாரும் மாற்றவில்லை, மிக அழகாக பொருந்தி போகின்றது, இதுதான் இசைதமிழ்,
இப்பொழுது தமிழகத்தில் கவிஞர்களுக்கு பஞ்சமில்லை, முக்கால்வாசி தமிழர்கள் கவிஞர்கள்தான்.
இப்பொழுதெல்லாம் கவிதை எழுதுவது எளிது, தோன்றுவதை எழுதிவிட்டால் முடிந்தது விஷயம் இப்படியாக
"இது தோசை
ம்ம்ம்ம்
அது சட்னி
ஆம் தோசைதான்"
"இந்த சாலை
அங்கே செல்கிறதா?
அங்கே தானா?
அங்கேயா தானா?"
இவ்வளவு சிறப்பாக எழுத தெரிந்த கவிஞர்கள் உண்டு, வரும் கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன
இதனை விட கொடுமை இதற்கு அர்த்தம் சொல்ல வருபவர்கள்
100 பக்கத்திற்கு அவர்களுக்கு தெரிந்த அர்த்தம் எல்லாம் சொல்வார்கள், பின் நவீனத்துவம், அழகியல், பிரக்ஞ, ஆத்மம் என புதிதுபுதிதாக அர்த்தம் சொல்வார்கள்.
அறிவாளிகளுக்கு புரியுமாம், அதனால் நமக்கு புரியாததில் ஆச்சரியமில்லை
சொல்லவருவது என்னவென்றால் இம்மாதிரி கவிதைகளை, மனுஷ்யபுத்திரன் இம்சைகளை எல்லாம் பின்னாளில் பாடலாக்க முடியுமா? பாடலாக்க முடியா வரிகள் உரைநடையன்றி எப்படி கவிதையாகும்?
இந்த இம்சை கவிஞர்களிடம் அந்த மொழி அழகு சுத்தமாக இல்லை, ஆனால் எழுதுகின்றார்கள், தமிழ் பேச தெரிந்தால் போதும் என்பது இவர்கள் அடிப்படை இலக்கணம்
பாரதிதாசனும் அன்று காதல் கவிதை எழுதியிருக்கின்றான், எப்படி எழுதியிருக்கின்றான், படித்தவுடன் தமிழ் அழகு எப்படி ஒட்டிகொள்கின்றது?, இன்று நெடுநாள் கழித்தும் பாடலாக மலர்ந்திருக்கின்றது.
குளிர் மாலை நேரத்தில், சலனமற்று ஓடும் நதிக்கரை அருகே இலங்கை தோட்டத்து தேநீர் கோப்பையுடன் அமர்ந்திருப்பது போல அப்படி ஒரு சுகத்தினை அப்பாடல் கொடுக்கின்றது, அப்படியே கட்டி போடுகின்றது
மனம் அதிகாலை பனிதுளிபட்ட தேகமாக சிலிர்க்கத்தான் செய்கிறது
பாவேந்தர் எனும் பட்டத்திற்கு மனிதர் தகுதியானவராகத்தான் இருந்திருக்கின்றார், எக்காலத்திற்கும் பொருந்தும் அழகான தமிழ் அவரிடம் இருந்திருக்கின்றது
என்னமோ தெரியவில்லை, கேட்டுவிட்ட பின் கொஞ்சநாளாக மனதில் பெரும் நாற்காலிபோட்டு அமர்ந்துவிட்ட பாடல் அது, தமிழ் அப்படி மிக அழகாக பொருத்தமாக விளையாடியிருகின்றது
"கேட்பாரற்று கிடக்குதய்யா வேரில் பழுத்த பலா" என்பது பாரதிதாசனின் புகழ்பெற்ற வரி
அந்த பலாவில் ஒரு சுளை நல்ல ரசிகனிடம் சிக்கி இருக்கின்றது, அவன் அதனை மிகசிறந்த கலைஞனிடம் சுவையூட்ட கொடுத்திருக்கின்றான் தித்திக்கின்றது
இன்னும் எத்தனை பாரதிதாசனின் தமிழ் பலாக்கள் இப்படி கேட்பாரற்று கிடக்கின்றதோ தெரியவில்லை
[…] […]
ReplyDelete