Monday, November 21, 2016

தண்ணீரில் பிழைக்க வைத்தான்



Image may contain: ocean, one or more people, outdoor and water


 தண்ணீரில் பிழைக்க வைத்தான்


உலகில் எத்தனையோ தொழில்கள் உண்டு, பிழைப்புக்கள் உண்டு. ஆனால் மிக ஆபத்தான தொழில் அக்காலமுதல் இக்காலம் வரை உண்டென்றால் நிச்சயம் மீணவதொழில்.


அது அக்காலம் முதல் இருந்திருக்கின்றது, மனித இனம் தோன்றிய காலமுதல் மீன்பிடி தொழில் இருந்திருக்கின்றது.


பழம் தமிழகம் அதனை நெய்தல் என குறிப்பிட்டிருந்தது, பாண்டிய நாட்டின் கொடியே மீன் கொடிதான். மீணவ வாழ்வு எல்லா மத நூல்களிலும் அழுத்தமாக சொல்லபட்டிருக்கின்றது


மீன் என்பது மருந்தும் கூட, பைபிள் சில இடங்களில் சொல்கின்றது, இன்றும் கடற்கரை கிராமங்களில் ஒவ்வொரு மீனிற்கும் ஒரு நோயினை குணப்படுத்தும் சக்தி உண்டென்றே விளக்குவார்கள், இறைவன் ஆயிரகணக்கான மீன்களை சும்மா படைக்கவில்லை


2000 ஆண்டுகள் என நினைக்கின்றேன், அப்பொழுது அங்கு சிக்குன் குனியா பரவிகொண்டிருந்தது, மிக கடுமையான காய்ச்சல் அது பலர் இறந்துகொண்டிருந்தார்கள்.


ஒருவித அச்சமான நேரம், ஒரு பதற்றம். தெரிந்த ஒரு நண்பருக்கும் அது வந்து உறுதிபடுத்தபட்டும் விட்டது, மனிதர் மனதிற்குள் பயந்தார், இனி மரணம் என்றே நினைத்துவிட்டார்


மரணம் உறுதி என்றால், இறுதி ஆசை என்றொன்று வருமல்லவா? அவருக்கு உப்பு கருவாட்டு சோறு நினைவுக்கு வந்திருக்கின்றது, 2 நேரம் வெளுத்து வாங்கியிருக்கின்றார், அதன் பின் அந்த அபாய காய்ச்சலை காணாவில்லை


அதாவது ஒவ்வொரு மீனுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கின்றது, அதில் செய்யவேண்டிய பாடங்கள் நிரம்ப உண்டு


மலைக்கு மேலிருக்கும் மூலிகை போலவே கடல் மீன்களிலும் ஆயிரம் நலன் உண்டு. மகப்பேறு கால கருவாடு முதல் குழந்தைகளுக்கு கொடுக்கும் மீன் எண்ணெய் வரை ஏராளம் சொல்லலாம்.


நண்டு சீன மக்களின் உணவில் மருத்துவ இடம் வகிக்கின்றது, கணவாய் மீன் பல இன மக்களுக்கு மருந்தாகவே பயன்படுகின்றது, சிப்பிகளின் உட்பொருளும், கடல்பாசிகளும் பல மருந்துகளாகின்றன.


உலகில் சில குறிப்பிட்ட சமூகம் தவிர மீனை உண்ணாதோர் இல்லை. வங்க பிராமணர்கள் கூட அதனை காய்கறி வரிசையிலேதான் சேர்க்கின்றனர், தென் தமிழகத்தில் மீன் இல்லா உணவு நினைத்துபார்க்கமுடியாத ஒன்று


அக்காலத்தின் மீணவர் ஆற்றுகரை, ஏரிகரை மற்றும் கடற்கரைகளில் வாழ்ந்தனர். அன்று ஏற்றுமதி போக்குவரத்து வசதி இல்லை, பெரும்பாலும் கடல் மீன் கருவாடே தூரத்து ஊர்களுக்கு செல்லும் , மற்றபடி ஆறு, குளத்து மீன்கள்தான் பிரெஷ்.


வசதிகள் பெருக காட்சிகள் மாறின, கட்டுமரம் படகும், போட்டுமானது, நொடிப்பொழுதில் உட்புறத்திற்கு கொண்டு செல்ல வேகமான லாரிகள், கெட்டுபோகாமல் இருக்க ஐஸ் என கடல் தொழில் முகம் மாறிற்று.


சரி இவ்வளவு வசதிகள் வந்திருக்கின்றன, மீன் விலை உயர பறக்கின்றது, அப்படியானால் மீணவர் வாழ்வு நலம் பெற்றிருக்கவேண்டும் அல்லவா?


இல்லை, அன்றுபோல் இன்றும் அவர்கள் பாடு அதே பழமொழிதான் "மச்சம் பிடிப்பவன் வாழ்வில் மிச்சமில்லை"


விவசாயிக்கு அடுத்தபடியாக ஒரு தொழிலாள இனம் இந்தியாவில் சுரண்டபடுகின்றது என்றால் நிச்சயம் அது மீணவ இனம்தான், மிக மிக பரிதாபத்திற்குரியது அவர்கள் வாழ்வு


நள்ளிரவில் படகேறி, குளிர்காற்றில் துடுப்புபோட்டு, காரிருளுக்குள் சென்று, ஆழ்கடலில் வலையிட்டு, களைத்து சோர்ந்து அவர்கள் திரும்புவது அன்றாட நிகழ்வு.


இதிலும் புயலோ, மழையோ சில நீரோட்டங்கள் என பல ஆபத்துக்களை தாண்ட வேண்டும், திசைமாறினால் அவ்வளவுதான் மடிந்துபோகும் ஆபத்தும் உண்டு


சொல்லபோனால் தினம் தினம் அவர்கள் நிகழ்த்துவது சாகசவிளையாட்டு, உயிர் என்பது அவர்களுக்கு நிச்சயம் அல்ல, திரும்பி வந்தால்தான் உண்டு.


இப்படி படாதபாடுபட்டு பிடிக்கும் மீன்களை அவர்கள் விருப்பத்திற்கு விற்றுவிடமுடியாது, விவசாயி தன் உற்பத்திக்கு தான் விலைவைக்கமுடியா அவலம்போலவே மீணவனுக்கும் உண்டு


மீணவர் உழைப்பினை தரகர் சுரண்டுவர், பெரும் கருப்புபண முதலைகள் பினாமி பெயரில் பெரும் போர்ட்களை வாடகைக்கு கொடுத்து சுரண்டுவர், கூலிக்கு அமர்த்துவோர், என இன்னும் ஏராளமானோர் மீணவர்களை சுரண்டுவர்,


எல்லை கடந்தால் அடுத்த நாட்டுக்காரன் மிதிப்பான்


கடலுக்கு ஏது எல்லை நிர்ணயிக்க முடியுமா? அரசுகள் பிரித்துகொண்டதது மீனுக்கு தெரியுமா? மீன் பின்னால் செல்லும் மீணவனினுக்கு கரைதான் எல்லை.


கொஞ்சம் நிதானித்து பார்த்தால் உலகினில் மீணவர் படும்பாடு நிறைய, அதில் தமிழக நிலை மிக பரிதாபம். இன்றல்ல அன்றிலிருந்தே அப்படித்தான்


சென்னையினை எடுத்துகொள்ளுங்கள், சென்னையின் பூர்வாங்க குடிமக்கள் அவர்களே, வெள்ளையன் கோட்டைகட்ட வரும்பொழுது அவர்கள் குப்பமே இருந்தது, அங்கிருந்து ஓடினார்கள், இன்று சென்னை மீணவ பூர்வீகம் என சொல்லமுடியுமா?


ஆனால் அதுதான் உண்மை, இன்றோ காசிமேடு, அயோத்திகுப்பம் என அப்பகுதிகளளை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர் சென்னைவாசிகள், விசித்திரம்.


மெரினாவினை அழகுபடுத்துகின்றோம் என சொல்லி அப்பகுதி பூர்வீக மீணவர்களை விரட்டியது எல்லாம் பெரும் கொடுமை.


கல்பாக்க பகுதி மீணவர்பாடு அந்தோ பரிதாபம்.


தூத்துகுடி முத்துக்குளித்தபகுதி, அவர்கள்தான் மூத்தகுடி இன்றோ தொழில்நகரமாக ஆக்கிவிட்டார்கள், பரிதாபத்திற்குரியவர்கள் அப்பகுதி மீணவர்கள்


ராமேஸ்வரம் பகுதி பிரச்சினை உலகறிந்தது.


நெல்லை கூடன்குள அணுவுலை பகுதி மீணவர்கள் இடிந்தகரையில் நடத்திய பெரும் போராட்டம் குறிப்பிடதக்கது, ஆனால் வெற்றி என்றல்ல. போராடி பார்த்தார்கள்.


இதோ கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையம் என்றொரு துறைமுகம் உருவாகின்றது, அவர்களுக்கும் இனி சிக்கலே


ஆக அணுவுலையும், மணல் ஆலை கழிவுகளும், இன்னும் தொழிற்சாலைகளும், அரசியலும் மீணவர் வாழ்வில் மண் அள்ளிபோட்டுகொண்டே இருக்கின்றன.


ஓட ஓட விரட்டபட்டிருக்கின்ற இனம் மீணவ இனம்.


மீணவர்கள் பிரச்சினை ஏராளம், ஒவ்வொன்றாக எழுதினால் 1000 பக்கம் வரும், அவ்வளவு இருக்கின்றது, ஆனால் தீர்வு வந்ததா? என்றால் வராது. ஏன் வராது?


தமிழகத்திலே இத்தனை மீணவ பிரச்சினைகள் இருக்கின்றன என பார்த்தோம் சரி, இவற்றில் மீணவர்கள் ஒன்றாக போராடி பார்த்தோமா? மீணவருக்கான இயக்கம் அல்லது ஒன்றுபட்ட சங்கம் அல்லது கட்சி என பார்த்தோமா? இருக்காது, இருக்கவே இருக்காது


படகோட்டி மீணவ நண்பனின் நடித்ததற்காக கொஞ்ச பேர் அந்த கட்சி, கட்டுமரம் என தன்னை அழைத்ததற்காக கொஞ்ச பேர் இந்த கட்சி, பிரான்சிஸ் சவேரியாருக்கு விசுவாசமாக கொஞ்ச பேர் இந்த மதம், கொஞ்ச பேர் அந்தமதம் என பிரிந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கின்றனர்


அவர்களாக சிந்தித்து முடிவுக்கு வரவேண்டிய விஷயம், நாம் என்ன சொல்லமுடியும்? அவர்களுக்காக ஒரு காலம் வரும், அப்பொழுது நிச்சயம் அவர்களுக்கு விடியும்.


பெரும் அவதாரங்களுக்கெல்லாம் மீணவர்களை மிகவும் பிடிக்கும், காரணம் முரட்டு மக்கள்தான் ஆனால் மனதால் அப்பாவிகள்
பழகிபார்த்தால் உங்களுக்கும் தெரியும், மிக பாசமான மக்கள் அவர்கள், நம்பிக்கைகுரியவர்கள்


இயேசு கிறிஸ்து தன் சீடர்களாக மீணவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார், முதல் போப் என கொண்டாடபடும் புனித பீட்டர் ஒரு மீணவர்.


மகாபாரதம் எனும் பெரும் காவியத்தை எழுதிய வியாசர் ஒரு மீணவதாயின் மகன். சிவபெருமானின் திருவிளையாடலில் கூட கடற்புற காட்சிகள் உண்டு,


மச்ச அவதாரம் என திருமாலே ஒரு அவதாரம் நிகழ்த்தி உலகினை மீட்டார், ஊழி காலத்தில் இவ்வுலகில் அழியாமல் இருந்த உயிர் மீன் இனம் மட்டுமே


அப்படி கடவுளுக்கும் மீணவர்களைவும், மீன்களையும் நிரம்ப பிடித்திருக்கின்றது.


16ம் நூற்றாண்டில் தென்னிந்திய கடற்பகுதியில் நடந்த கடற்கொள்ளைகள் கொஞ்சமல்ல, தென்பகுதி மக்களை காக்க அன்று யாருமில்லை. டெல்லி சுல்தானிடம் கடல்படை கிடையாது, நாயக்கர்களிடமும் அந்நுட்ட்பமில்லை


இப்பகுதிக்கு வந்த கிறிஸ்தவ துறவி பிரான்சிஸ் சேவியர் என்பவர்தான் போர்த்துகீசிய மன்னருடன் பேசி படைபெற்று இம்மீணவ மக்களை காத்தார் என்பது வரலாறு, அதனால்தான் பெருவாரியான தென் தமிழக கடற்புரங்கள் கிறிஸ்தவ அடையாளமிட்டன, இன்றுவரை போர்த்துகீசிய மொழி தாக்கம் அவர்கள் பெயரில் உண்டு


அதாவது அப்பகுதி மீணவர்களுக்கு வந்த பெரும் ஆபத்தை ஒரு மகான் வந்து காப்பாறியிருக்கின்றார்


அப்படி எம்மதமாயினும் யாரேனும் வந்து அம்மக்களை காப்பாற்றட்டும், மிகுந்த வலிகளோடும், சவால்களோடும் வாழ்கையோடும், கடலோடும் போராடும் அவர்கள் வாழ்க்கை நிம்மதியாகட்டும்.


காமராஜர் மானிய டீசல், வலை என ஓரளவு மீணவர்களுக்கு சில காரியங்களை செய்தார் அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருந்தது


ஆனால் படகோட்டியிலும், மீணவ நண்பனினும் மீணவருக்காக வாழ்ந்ததில் மீணவசமூகம் மகோ. ராமசந்திரனுக்கு வாக்கு செலுத்தி மகிழ்நது, பின்னாளில் சென்னை மெரீனா சீரமைப்பு என ராமசந்திரன் அம்மீணவர்களை விரட்டியது எல்லாம் அரசியல்,


எப்படியோ மீணவ நண்பன் என சொல்லிகொண்ட அவர் அந்த கடற்கரையிலே தூங்கியும் விட்டார், அவருக்கென்ன விவசாயி படகோட்டி என்றே எல்லோர் பிரச்சினையும் கனவுலகில் தீர்த்துவைத்தவர் அவர். சினிமா அப்படித்தான், தமிழனும் அப்படித்தான்.


கன்னியாகுமரி பகுதிகளில் மீன் பிரதானம், காலை காப்பி தவிர எல்லாவற்றிலும் மீன் இருக்கும், அவர்கள் பழக்கம் அப்படி


நெல்லை பகுதியில் இடிந்தகரை மீனுக்கு அக்காலத்தில் மதிப்பு அதிகம், அதன் சுவை அப்படி. குறிப்பாக பாறை எனப்படும் மீனும், குதிப்பு எனப்படும் சுதும்பு வகையும் மகா பிரசித்தம்


இன்று அவை எல்லாம் கனவாகிவிட்ட காலங்கள், அம்மாதிரியான சுவையான மீன்கள் இப்பொழுது கிடைப்பதில்லை, மணல் ஆலைகளும், அணுவுலைகளும் அம்மீன்களை வெகுதூரம் விரட்டிவிட்டன என்கின்றார்கள்


தொழில் வளர்ச்சி என மீணவர்களை விரட்டினார்கள், அப்படியே மீனகளையும் விரட்டுகின்றார்கள், இன்னும் என்னவெல்லாம் விரட்ட்போகின்றார்களோ தெரியவில்லை


இந்தியாவில் யார் உருப்படியாக மீன் உண்கின்றார்கள் என்றால் உண்மையில் இல்லை. கடற்கரையோரம் சிக்கும் சில மீன்களை ரசாயாண கழிவு மிகுந்த இடங்களில் சிக்கும் சில மீன்களைத்தான் இந்திய மக்கள் உண்கின்றார்கள், வேறு எல்லா இடத்தையும் பிராய்லர் கோழி எனும் விஷம் ஆக்கிரமித்துகொண்டிருக்கின்றது


மீன் சந்தையினை அணைகளிலும், குளங்களிலும் வளர்க்கபடும் கட்லா, ஜிலேபி என மீன் சுவையினே கொடுக்காத சதை பிண்டங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவை ஆபத்தானது


இறால் என்பது சிகப்பு நிறத்தில் செம்மீன் அன அழைக்கபடும் சுவயான உணவு, ஊருக்குள் எங்காவது கிடைக்கும் என நம்புகின்றீர்கள்? கிடைப்பெதல்லாம் ரசாயாணாம் கலந்து வளர்க்கபடும் ஒரு மாதிரி குப்பை இறால்


அதற்கும் பிராய்லருக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.


சுவை மிகுந்த, சத்து மிகுந்த, இந்திய கடலில் மட்டும் கிடைக்கும் சில தனிச்சுவை மீன்களை எங்காவது உள்ளூரில் பார்ர்கமுடியுமா? நிச்சயம் முடியாது


அவை எல்லாம் ஏற்றுமதி என்ற பெயரில் உலக பணக்காரர்கள் தங்கும் ஹோட்டல்கள், பெரும் பணக்கார நாட்டுமக்களின் மேஜைகளில் கிடக்கின்றன‌


இயறக்கை நமக்காக நமது கடலில் கொடுக்கும் அம்மீன்கள் எங்கோ, யாருக்கோ உணவாகின்றன‌


அதனை கடலில் போராடி பிடித்துகொடுக்கும் மீணவன் வாழ்க்கையோடும் வறுமையில் போராடுகின்றான்


விவசாயிகளை போலவே இந்நாட்டில் மிக தீவிர சிக்கலில் இருக்கும் இனம் மீணவ இனம், விவசாயிவாவது மனது கனத்தால் தன் காய்ந்த வயலில் இருந்து ஒப்பாரி வைக்கவாவது முடியும்


மீணவனுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.


தண்ணீரில் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் என்பார்கள், மீணவனும் அப்படித்தான் அழுதுகொண்டிருக்கின்றான் அவன் கண்ணீரும் தெரிவதில்லை


விவசாயியும் மீணவனும் ஒன்றுசேரும் பட்சத்தில் பெரும் புரட்சி வெடிக்கலாம், தரகர்கள் அழிச்சாட்டியம் ஒழியலாம் ஆனால் அதனை எல்லாம் அரசியல் எனும் பெயரில் எழும்பாமல் பார்த்துகொள்வார்கள்


விவசாயிக்கு அழுவது போலவே மீணவனுக்கும் அழலாம், மனதார அழலாம்


இன்று உலக மீணவ நாளாம், போராடி பிழைத்துகொண்டிருக்கும் அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் குரல் ஒலிக்கும் நாளாக இது அமையட்டும்


எத்தனை உணவுகள் இருந்தாலும் கடல்வாழ் இனம் கொடுக்கும் உணவு சுவையே தனி, அப்படி ஒரு சுவை வேறு எந்த உணவிலும் வராது


எத்தனை தொழில் இருந்தாலும் மீணவர்களுக்கான தைரியமும், நெஞ்சுறுதியும் தனி, அப்படி பெரும் தைரியம் இல்லாமல் அந்த தொழில் சாத்தியமில்லை,


ஆச்சரியமாக மாகா பொறுமையும் அந்த தொழிலேதான் வேண்டும். பொறுமை இன்றி மீன் பிடிக்க முடியாது.


அந்த தனித்துவமான மீணவர்களை ஒருநாளில் மட்டுமா வாழ்த்தமுடியும்? மீன் உண்ணும் ஒவ்வொரு நாளிலும் வாழ்த்தலாம்,


இன்று கொஞ்சம் ஸ்பெஷலாக வாழ்த்தலாம்


நீரில் குதித்து விளையாடும் மீன், அதே நீரில் குழம்பாகவும் கொதிக்கும் என்பார்கள், மீணவனின் வாழ்வும் அப்படித்தான்.















No comments:

Post a Comment