Monday, November 21, 2016

பணம் பணம் பணம்....



இந்தியாவில் பெருமாற்றம் நிகழ்ந்துவிட்டது, 500 ஆண்டுகால வரலாறு ஒரு வாரத்தில் திரும்பிவிட்டது.


எங்குபார்த்தாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுத்தான், 10, 100 ரூபாய் எல்லாம் யாரிடமும் இல்லை, அது ஏழைகளிடமல்லவா இருக்கும்? இப்பொழுது எல்லோரும் பணக்காரர்கள் அல்லவா? அதனால் எல்லோரிடமும் 2 ஆயிரம்தான் மினிமம்.


மளிகை கடைமுதல் ஜவுளிகடை வரை 2 ஆயிரம் நோட்டை கொடுத்துவிட்டு சில்லறையினை அடுத்தமாதம் வாங்கிகொள்கின்றோம் என சாவகாசமாக இந்தியர்கள் செல்கின்றார்களாம்,


திரும்பிய இடமெல்லாம் பழைய கரன்சிகள் தேடுவாரற்று கிடக்கின்றதாம், சில்லறை பணத்தினை காணவே இல்லையாம்


பிச்சைக்காரர்கள், எளியமக்களிடம் கூட சில்லறை இல்லாமல் பெரும் கரன்சிகளாகவே வைத்திருக்கின்றார்களாம்.


மக்களிடம் கருணை பொங்கி வழிகின்றதாம், எங்கும் சில்லறை சண்டை இல்லையாம், மிக பெருந்தன்மையாக நடந்துகொள்கின்றார்களாம்


சர்பத் குடிக்கவே 2 ஆயிரம் கொடுத்துவிட்டு, சில்லறை கேட்காமல் புன்னகைத்து செல்கின்றார்களாம், கடைக்காரரும் புன்னகைக்கின்றாராம்


பேருந்தில் நடத்துனருக்கு சில்லரை பிரச்சினையே இல்லையாம், அவரின் பையும் கரன்சிகளால் நிறைந்து வழிகின்றதாம்


எல்லோர் கையிலும் பெரும் கரன்சி, எங்கும் பிரச்சினை இல்லை, அட திருடர்கள் கூட எங்கே பர்சில் 2 ஆயிரம் இருந்து தொலையுமோ என்ற அச்சத்தில் பிட்பாக்கெட் அடிப்பதை எல்லாம் விட்டு திருந்திவிட்டர்களாம்.


இப்படி ஒரு தேசம் இன்றைய நிலையில் உலகில் இந்தியாவாக மட்டும் இருக்கின்றது.


இதனால்தான் எங்கே அடுத்தநாட்டு மக்கள் கண் வைத்துவிடுவார்களோ என திருஷ்டி பொட்டினை மக்களின் விரலிலே வைத்து பொறுப்பாக திருஷ்டி கழிக்கின்றதாம் அரசு.


கன்னத்தில் குழந்தைக்கு மை வைத்து திருஷ்டி கழிக்கும் அன்னையினை போல, தன் குடிமக்கள் விரலெல்லாம் மைவைத்து திருஷ்டி கழிக்கும் அரசு இது.


மாட்டுகறி, பசு சாணம், சிறுநீர் என பாரம்பரிய கலாச்சாரத்தை காப்பவர்கள் இருக்கும் அரசு அல்லவா? கண் திருஷ்டி கலாச்சாரத்தை மட்டும் விட்டு விடுமா?


இது தெரியாமல் எதிர்கட்சிகள் என்னவெல்லாமோ பேசுகின்றன, பைத்தியக்கார கூட்டம்.


இந்தியா எங்கும் மக்கள் கைகளில் விரிந்த கரன்சி ஒளிர்கின்றது. எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி, சந்தோஷம்


இதுதான் அன்று மார்க்கோ போலோவும், மெகஸ்தனிஸும், யுவான் சுவாங்கும் கண்டு எழுதி வைத்த வளமான இந்தியா, செழிப்பான இந்தியா


இப்பொழுதும் வெளிநாட்டு சுற்றுபயணிகள் மெக் ஆர்தர், டக்ளஸ் எல்லோரும் அப்படித்தான் தங்கள் ஐபேட்டில் பதிகின்றார்கள், வருங்கால வரலாறு இது.


அடுத்து தங்க நகை மீது மோடி நடவடிக்கை பாயுமாம், அப்பொழுது என்ன நடக்கும்?


கோழியினை விரட்ட தங்க நகையினை கழற்றி எறிந்த கிழவிகள் காலமெல்லாம் திரும்ப வரும்,


இந்த நகைக்குத்தானே வரிகட்ட சொல்கிறாய் இதோ வைத்துகொள் என அதிகாரிகள் முன் பெண்கள் வீசி எறியலாம்.


அப்பொழுதும் தங்கத்தையே மதிக்காமல் வீசி எறிய வைத்த மோடி அரசு வாழ்க என பலர் உற்சாக சத்தமிடுவார்கள்.


எப்படியோ வெள்ளையன் காலத்திற்கு முன்பிருந்த பாரதத்திற்கு அழைத்து செல்கிறது அரசு, பண கட்டுப்பாடு, அடுத்து நகை கட்டுபாடு


பின் என்ன? வாகன கட்டுபாடு, வீட்டுகட்டுபாடு, உடை கட்டுபாடு வரலாம், தேசத்திற்காய் தாங்கியே ஆகவேண்டும்.


ஓலை குடிசையில் வசித்துகொண்டு, மாட்டு வண்டியில் பயணித்து, கோவணமோ ரவிக்கையில்லா சேலையோ அணிந்து கொண்டு அக்கால பாரதம் வாழ்ந்த மிக வசதியான வாழ்க்கைக்கு பல தடைகளை தாண்டி நம்மை அழைத்துசெல்வார்கள்


ராமர் ஆட்சி என்பது சும்மா அல்ல‌


ராமர் காலத்தில் வாழ்ந்தது போலவே வாழவும் வேண்டுமல்லவா?, இதோ வாழ தொடங்க சொல்கின்றார்கள்


ஆக எவனாவது பாஜக தன் தேர்தல் அறிக்கையினை நிறைவேற்றவில்லை என சொன்னால் அவனை பிடித்து அறையவேண்டும்


ராமர் ஆட்சி அல்ல, ராமர் காலத்திற்கே நம்மை அழைத்து செல்கின்றார்கள், சொன்னதை விட சொல்லாததையும் செய்கின்றார்கள்.


கொஞ்ச நஞ்சம் இருக்கும் சில வசதிகளையும் விரைவில் கடாசி விடுவார்கள், பின் எல்லோரும் முழுமையாக ராமர் காலத்திற்கே சென்றுவிடலாம்


வாழ்க பாஜக, நடக்கட்டும் ராமர் ஆட்சி,


மலர்க ராமர் காலம்.










மணிப்பூரில் மணிமோசடி மதன் கைது,

இப்பொழுதுதான் அந்த ஆயிரம் ரூபாய் செல்லாதே, செல்லாத பணத்தை அன்றே வசூலித்த என்னை குப்பை அள்ளியவனாக பாருங்கள் என ஏதும் வாதம் செய்யாமலிருக்கட்டும்.




நளினி கதையினை படம் எடுத்தால் ஆஸ்கார் விருதே கிடைக்கும் ‍: வைகோ

பத்மநாபா, ராஜிவ் கொலையினை முறையாக விசாரித்தால் சிறையில் நளினி பக்கத்தில் இவருக்கு இடமே கிடைக்கும்.










No comments:

Post a Comment