Monday, November 21, 2016

தென்கொரிய மக்களின் எழுச்சி போராட்டம்...



Stanley Rajan's photo. Stanley Rajan's photo.






திரண்ட பெரும் மக்கள் தேசத்தை சீரழிக்கும் இரு பெண்கள் என தென்கொரியாவில் வலம் வரும் படங்கள்,


அமெரிக்க தேர்தல், மோடியின் நடவடிக்கை என நமது பத்திரிகைகள் அல்லோலபட்டுகொண்டிருந்தபொழுதே தொடங்கியது தென்கொரிய மக்களின் எழுச்சி போராட்டம், ஆனால் உலகம் டிரம்பினை பார்த்துகொண்டிருந்ததால் பார்வை பெறவில்லை


ஆனால் இப்பொழுது உலகின் மிகபெரும் விவாதபொருளாக மாறிவிட்டது


கடந்த 30 ஆண்டுகளில் மிக வளர்ச்சிபெற்ற நாடு அது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி எலக்ட்ரானிக்ஸ் துறையில் நம்பர் 1 இடத்தினை கைபற்றியது, சாம்சங், எல்ஜி, ஹூண்டாய், கியா என உலகினை இயக்கும் பெரும் பொருட்களின் தயாரிப்பிடம் அது


ஆசியாவில் மிக குறிப்பிட்ட பொருளாதார நிலையம், மொத்த உலகில் 11 வது பொருளகம் என வளர்ந்து நிற்கின்றது. 60 ஆண்டுகளுக்கு முன்பு சவலை குழந்தைதான். வடகொரியாவினை எதிர்க்க அமெரிக்க புட்டிப்பாலில் வளர்ந்த நாடுதான். பாகிஸ்தானை போல புட்டிபாலை எல்லாம் தீவிரவாத பூதத்திற்கு வார்க்காமல் தானே குடித்து வளர்ந்து நிற்கும் நாடு


அப்படி என்ன இப்பொழுது பிரச்சினை?


ஒன்றுமில்லை பெண் அதிபர் பார்க் கியுன்‍ ஹி என்பவர்தான் பிரச்சினை. அவர்தான் அதிபர் அவர்போக்கில் நல்லாட்சி நடத்தியவர்தான், ஆனால் அவரின் தோழி சூய் சூன் சில் என்பவர்தான் முதல் பிரச்சினை


அதாவது நான் அதிபரின் தோழி, உடன்பிறவா சகோதரி அல்லது என அவர் ஏதோ சொல்லி பலரிடம் கோடிகணக்கான பணங்களை சுருட்டினார் என்ற புகாரும், அவர் அப்படி சுருட்டும்பொழுது அதிபர் கண்ணை மூடிகொண்டிருந்தார் என்ற புகாரும் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்திவிட்டன‌


இன்னும் சில சர்ச்சைகள் அதிபர் மேல் வெடித்தன, அமெரிக்க ராணுவ முகாம் சர்ச்சையும் ஒன்று. அதென்ன தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் என கேட்க கூடாது, குளத்துகரையில் கொக்கும், சிறிய நாடுகளில் அமெரிக்க ராணுவமுகாமும் உலக தத்துவம்


பெரும் கொந்தளிப்பில் அதிபர் தன் உடன் பிறவா சகோதரியினை தியாகம் செய்திருக்கின்றார், அவரை சிறையில் அடைத்தாலும் மக்கள் அதிபரையும் பதவி விலக சொல்கின்றனர். அதாவது இப்போது அதிபர் மேல் கைது நடவடிக்கை இல்லை, ஆனால் நாற்காலியினை விட்டு இறங்கினால் அவ்வளவுதான்


அதிபர் அசைய மறுக்கின்றார், என் மேல் குற்றமில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார், சரி பதவியினை விட்டு இறங்கு பின்பு பேசிக்கொள்ளலாம் என்கின்றனர் மக்கள்


சியோல் எனும் தலைநகரம் லட்சகணக்கான மக்களால் நிரம்பி வழிகின்றது, இது அரசியல் மக்கள் பிரச்சினை என காவல்துறையும் உள்ளாட்சி அமைப்புக்களும் ஒதுங்கிவிட்டன. நீரினை பாய்ச்சி மக்களை கலைக்கும் திட்டத்திற்கு நகர மேயரே அது குடிநீருக்கு என சொல்லி நகர்ந்துவிட்டார்


அதிபர் இனி தப்புவதற்கு வாய்ப்பில்லை, மக்களின் கொந்தளிப்பு அப்படி இருக்கின்றது, நாங்கள் உழைத்து கட்டிய வரியில், எங்கள் உழைப்பில் வாழும் நாட்டில் உன் தோழிக்கு அப்படி என்ன அதிகாரமென மக்கள் கேட்கும் கேள்வியில் தென்கொரியா அதிர்கின்றது.


நாட்டில் எல்லோருக்கும் வேலை இருக்கின்றது, வளமாகத்தான் வாழ்கின்றார்கள், பின் என்ன பிரச்சினை? நூடுல்ஸ் தின்றுவிட்டு டிவி பார்த்துவிட்டு வீட்டில் இருந்தால் என்ன? நாட்டில் எல்லாம் கிடைக்கின்றதே, வேறு என்ன வேண்டும் மனமே, என அவர்கள் நினைக்கவில்லை


நாட்டு நலன் அவர்களுக்கு முக்கியம், கொள்ளை கும்பலிடம் நாடு சிக்கிவிட கூடாது எனும் அச்சம் அவர்களை நாட்டு சிந்தனையில் ஒன்றினைத்து வைக்கின்றது.


தென் கொரிய நிலை அப்படி


நமது மாநிலத்திலும் முதல்வர்கள் உண்டு, அவர்களுக்கு உடன்பிறவா சகோதரிகள், அல்லது தாலி கட்டாத மனைவிகள் என பல உறவுகள் அவர்களின் உறவின் உறவுகள் என ஏராள இம்சை உண்டு


அவர்கள் சொத்து குவிப்பார்கள், வசூலிப்பார்கள். முடிந்தால் அரசு இயந்திரத்தை பிரித்துபோட்டு விளையாடுவார்கள், நாம் என்ன சொல்வோம்


"முதல்வருக்கு நெருக்கமானவர் சம்பாதிக்காமல் யார் சம்பாதிப்பார்? என்னய்யா நீ லூசுமாதிரி பேசுற" என சொல்லிவிட்டு நாமும் எப்படி நாலு காசு அல்ல நாலு கோடி அவர்களை போல சம்பாதிக்கலாம் என சிந்திப்போம்


ஆனால் தென்கொரிய மக்கள் அப்படி அல்ல‌


அதனால்தான் எல்ஜி, சாம்சுங், ஹூண்டாய், ஹெச்சிடி, கியா, கும்கோ, லோட்டி, டிஜி, போஸ்கோ, கேசிசி என பல பரகாசுர நிறுவணங்களை நடத்தி அவர்களால் உலகினில் நிமிர்ந்து நிற்க முடிகின்றது


தமிழகம் அப்படி அல்ல‌


பின் தமிழக உற்பத்தி என்னவாக இருக்கும்?


டாஸ்மாக்கும், 4 குத்துபாட்டு சினிமாக்களும், கொள்ளை மணலும், கொள்ளை கல்லும், அதுதான் தமிழ்க உற்பத்தி .


அதாவது மக்களை பொறுத்தே நாட்டு வாழ்க்கை


தமிழர்கள் கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்தால் தென்கொரிய மக்களையும் அதன் அதிபரின் தோழி சர்ச்சையும் படிப்பார்கள்


இவர்கள் இன்று படிக்கும் செய்தி என்ன தெரியுமா?


ரஜினிகாந்த் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு, பொருளாதார மேதை திருமாவளவனின் அறிக்கை, தியாகி முக ஸ்டாலினின் அறிவிப்பு , அப்பல்லோ மருத்துவமையில் அறை மாற்றி விளையாடும் ஒருவகை விளையாட்டு என ஏராள மகா முக்கிய செய்திகள்


வாழ்க தமிழ்திருநாடு...


அதிபரின் தோழி, உடன்பிறவா சகோதரியின் ஊழல் என்றவுடன் பெரும் கோபத்தில் கொந்தளித்து நாட்டையே அல்லோலபடுத்தும் தென்கொரியர்களை பார்த்துவிட்டு அப்படியே தமிழகத்தை நோக்கினால்...


ம்ஹூம்...உங்களுக்கே புரியுமல்லவா?


வேறு என்ன சொல்ல?

















No comments:

Post a Comment