Thursday, November 17, 2016

ஜெமினி கணேசன் : மிக விசித்திரமானவர்

https://youtu.be/moToRGHE204

தோற்றம் : 17-11-1920    ::     மறைவு : 22-03-2005


தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள்


வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள்


இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணெசன்


கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஏகபட்ட திருமணம் பல காதல்கள் என ஏராளமான விஷயம்


ஆனால் இவை எல்லாம் அவரினை பாதித்ததாகவோ, அவரின் தொழிலை அழித்ததாகவோ, வறுமையில் தள்ளியதாகவோ இல்லை, அப்படி ஒரு நிலையே இல்லை


சினிமாவில் சம்பாதித்தவர்களில் இன்றும் நம்பர் 1 சொத்துமதிப்பு ஜெமினி கணேசனுக்கே இருக்கிறது என்கிறது செய்தி. அப்படியான பாதுகாப்பான முதலீடுகளில் மனிதர் செய்திருக்கின்றார்


எத்தனை பெண்கள் அவர் வாழ்வில் குறுக்கிட்டிருந்தாலும் அவர்களில் யாருக்கும் அவர் 1 பைசா செலவழித்தாக வருமான வரியில் கூட தகவல் இல்லை, அவ்வளவு சமத்து.


அதனால்தான் அரசியல் கட்சி என இறங்கவில்லையோ என்னமோ


மகா திறமையான நடிகர், அக்காலத்தில் எல்லா நடிகர்களும் நாடகபிண்ணணியில் இருந்து வந்தபொழுது, கல்லூரி பட்டம் பெற்று திடீரென நடிக்க வந்து வெற்றிகொடி நாட்டியவர் ஜெமினி


களத்தூர் கண்ணம்மாவில் கமலுடன் நடிக்க தொடங்கி அவர், அவ்வை சன்முகி வரை கமலுடன் நடித்தார், அவ்வளவு நீண்ட திரைப்பயணம்.


1970களில் இந்தி நடிகை ரேகாவினை ஜெமினி வீட்டுக்கே முதன் முதலில் விருந்தாளியாக‌ அழைத்து வந்ததும் அதே கமலஹாசன் தான், ரேகா ஜெமினியின் மகள்


ஒரு வகையில் ஜெமினி கமலுக்கு முன்னோடி, ஆம் பல துணைவிகளுக்கு மனைவி எனும் அந்தஸ்தை அவர் கொடுக்கவே இல்லை. இன்றும் கமலஹாசன் அப்படியே


ஜெமினியிடம் இருந்த ஸ்பெஷாலிட்டி, எல்லா நடிகர்களோடும் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசனோ அன்றி வந்த ரவிச்சந்திரனோ இணைந்து நடிக்க மனிதர் தயங்கியதே இல்லை.


அதாவது சாதாரண மனிதனின் பிம்பமாகவே அவர் திரையில் தெரிந்தார், அவர் நீடித்து நின்ற நடிகனாக நிலைபெற இதுதான் அவருக்கு கைகொடுத்தது, ஒரு யதார்த்த நடிகன்


பிரமாண்டமோ, பெரும் பிம்பமோ குறிப்பிட்ட முத்திரையோ அவரிடம் இல்லை.


எத்தனை மனைவிகளை கொண்டிருந்தாலும், ஜெமினி மனதில் தங்கியவர் முதல் மனைவி பாபுஜி மட்டுமே. காரணம் எத்தனை திருமணம் செய்தாலும் அவர் தடுக்கவில்லை, சாவித்திரி வீட்டிற்கு வரும்பொழுது அவர் வரவேற்றார்


புஷ்பவல்லி, ராஜஸீரி திருமண செய்திகள் வந்தபோதும் அவர் அமைதியே காத்தார்


64 வயதில் தற்கொலைக்கு முயன்றபொழுதான் ஜெமினிக்கு ஞானம் வந்தது, நான் மனமார காதலித்த ஒரே பெண் பாபுஜி என்றார்


கொஞ்சநாளில் ஞானம் விடைபெற அடுத்த துணையும் வந்தது, ஆனால் பாபுஜி அவர் மனதில் உயரவே நின்றார்.


(இப்படி ஒரு மனைவி வாய்த்தால் யாருக்குத்தான் மரியாதை வராது :) )


எப்படி நோக்கினும் கொஞ்சம் வித்தியாசமான மனிதர் அவர், பெண்களால் பெரும் சாம்ராஜ்யம் அழிந்தது, பெரும் போர்கள் நடந்தன என சொல்லபடும் உலகில், பெண்களால் நயா பைசா கூட அழியாது, கையாள்வது சுலபம் என உலகிற்கே சொல்லி கொடுத்தவர்


தன் வாழ்வினையும் திறந்த புத்தகமாகவே வைத்திருந்தார்,சுய்சரிதை எழுதுகின்றார்களா? என அவரிடம் கேட்டார்கள்,


"தமிழகத்து சாமான்யனுக்கும் என் அந்தரங்கம் வரை தெரியுமே?, பின் என்ன எழுத" என அசால்ட்டாக கேட்டவர் ஜெமினி


மனிதரை ஆழ்ந்து பார்த்தால் சில விஷயங்கள் தெரியும்


அதாவது சூழ்நிலையின் உணர்ச்சிகளே ஒரு மனிதனை வழிநடத்தும், ஒழுக்கம் ,கட்டுப்பாடு ,சமூகம், சுயமரியாதை, கவுரவம், இவற்றை தாண்டி உணர்சியே ஜெமினி கணேசனை வழிநடத்திற்று


மனிதர் மனம் சொன்னபடி வாழ்ந்திருக்கின்றார், ஜமாய்த்திருக்கின்றார்


சமூகம், சுய ஒழுக்கம் , அடுத்தவன் என்ன நினைப்பான் போன்றவற்றை பற்றி அவர் நினைத்த்தே இல்லை. மனம் சொன்னபடி வாழ்ந்தும் இருக்கின்றார்,


அவர் சொன்னபடி பணமும் நின்றிருக்கின்றது


பல அற்புதமான யதார்த்த படங்களை எல்லா நடிகர்களுடனும் இணைந்தும் தனியாகவும் கொடுத்த அற்புத நடிகர் அவர்


சிவாஜி கணேசனோடு 13 படங்களில் நடித்தாலும், மற்ற எல்லோருடனும் நடித்த ஒரு நடிகர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணேசன் தான்


அந்த அப்பாவி முகமும் , குறும்பு கண்களும் அவரை நினைக்கும் போதெல்லம் வந்து போகின்றன‌


பாடகர் பி.பி சீனிவாஸ் இவருக்கென்றே பாடியதை போன்ற அற்புதமான பாடல்கள் தமிழ் திரையுலகில் சாகா வரம்பெற்றவை


"தேன் நிலவு""சாந்தி நிலையம்""பாச மலர்""பார்த்தால் பசி தீரும்" இன்னும் ஏராளமான முத்திரை படங்களில் பிரகாசித்தவர் ஜெமினி


ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு பல நடிகர்களை சொல்லலாம், இப்படி(யும்) வாழலாம் என்பதற்கு ஜெமினி பெரும் எடுத்துகாட்டு


அவராக யார் வாழ்வினையும் கெடுக்கவுமில்லை, யாரும் தன் வாழ்வினையோ மகிழ்வினையோ கெடுக்க அனுமதிக்கவுமில்லை.


சாவித்திரி நிச்சயம் ஜெமினி சொற்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கமாட்டார், அவர் விதியினை அவர் தேடிகொண்டார்.


ஒரு விதத்தில் ஜெமினி கணேசன் உலகிற்கு சொன்ன தத்துவம் வேறுமாதிரியானது, சென்டிமென்ட் எனும் பாச சங்கிலியில் அதாவது மனைவி, பிள்ளைகள் எனும் உறவின் வலுவிற்கோ அவர் இறுதிவரை அடிமையாகவே இல்லை


அவர் மனம் அப்படி இருந்திருக்கின்றது.


அவர் வாழ்வு அவர் சந்தோஷத்திற்கு என வாழ்ந்திருக்கின்றார், அதே நேரம் நம்பிவந்த குடும்பத்தாரை நடுத்தெருவில் விட்டதாகவும் தெரியவில்லை


வித்தியாசமான மனிதர் ஜெமினி கணேசன், இன்று அவரின் பிறந்தநாள்


பெரும் கஞ்சன் என்றெல்லாம் அவரை சொல்லமுடியாது, தனுஷ்கோடி புயல், சீன போர் போன்ற காலங்களில் அவரும் சாவித்திரியும் கொடுத்த நன்கொடைகள் அதிகம்


காருகுறிச்சி அருணாச்சலம் எனும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுக்கு பெரும் செலவில் நினைவு சின்னம் அமைத்தவர் அவரே


இப்படி பல நினைவுகள் வருகின்றன‌


சரி இத்தனை திருமணம் செய்ய அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம்?


புதுக்கோட்டை மகராஜா துப்பாக்கி சுட்டு பழக, தன் தலையில் ஆப்பிளோடு நிற்பாராம் ஜெமினி கணேசன்


அந்த தைரியம் போதாதா? அந்த மரணபயத்தினை வென்றவருக்கு மனைவி பயமெல்லாம் பெரிய விஷயமா???


ஒரு சுவாரஸ்யமான மனிதராகவே அமைதியாக வாழ்க்கையினை அனுபவித்து வாழ்ந்திருக்கின்றார் ஜெமினி கணேசன்.


கிடைத்த ஒரு வாழ்க்கையினை பலவாறு மாறி மாறி வாழ்ந்து தீர்த்திருக்கின்றார்.



No comments:

Post a Comment