Monday, November 14, 2016

எழில் மிகு மலேசியா

https://youtu.be/4JeM1MA5LgA


குறிஞ்சி, நெய்தல் என இரு நிலங்களை மட்டும் கொண்டது மலேசியா, பாலை எல்லாம் வாய்ப்பே இல்லை, முல்லை குறிஞ்சியோடு கலந்தே விட்டது, மருதம் தாய்லாந்தினை ஒட்டிய எல்லையில் கொஞ்சம்போல உண்டு.


உணவு, உறைவிடம் உட்பட எல்லாமே இலவசம் சுற்றிபார்க்க வருகின்றாயா? என அழைத்தால் செவ்வாய்கிரகத்திற்கே செல்ல தயாராக இருக்கும்பொழுது, இந்த மலைக்காட்டிற்கு கிளம்பமாட்டோமா?


அப்படி கிளம்பியாயிற்று, சென்ற இடம் அழகான மலையும் காடுகளும் நிரம்பிய பகுதி, இறைவன் பசுமை ஆடை உடுத்தி தவமிருக்கும் பகுதி.


அவ்வப்போது பல இடங்களுக்கு செல்வதுதான், அதே பசுமையான அழகான காடுகள் கடல்கள், ஆனால் இம்முறை இக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகளை சந்திக்க முடிந்தது


எல்லா நாட்டு காடுகளிலும் அக்கால ஆதிவாசி தொடர்ச்சிகள் உண்டு, அமெரிக்க அமோசான், இந்திய இமயமலை, அந்தமான் தீவு என உலகெல்லாம் கொஞ்ச பூர்வகுடிக்கள் அப்படியே உண்டு


பிடித்து நாகரீக உலகில் கலந்துவிட அரசுகளுக்கும் சம்மதமே, ஆனால் அவர்கள் வரமாட்டார்கள். வரவே மாட்டார்கள். அந்த மலையும் காடும் பிரிந்து வாழ்த்தால் அவர்களால் வாழமுடியாது, ஏன் என்றால் நீரினை பிரிந்து மீன் வாழுமா? என்பதுதான் பதில்.


இதனால் ஆதிமனித வாழ்க்கையினை உலகில் கொஞ்சபேராவது தொடருட்டும் என சில அரசுகள் விட்டுவிடுகின்றன, ஆனால் கண்காணிக்கின்றன.


மலேசிய காடுகளில் வாழும் அவர்களின் பெயர் மலேய மொழியில் "ஓராங் அஸ்லி" அதாவது "பழமையான மனிதர்கள்" என்ற பொருளில் வரும்.


அந்த மக்கள் அப்படியே ஆப்ரிக்க சாயலில் இருந்தார்கள், ஆனால் உயரம் குறைவு, மற்றபடி முகம் அதே உருவ அமைப்பு, மூக்கு கண்கள், சுருட்டை முடி என எல்லாம் அப்படியே, அசல் ஆப்ரிக்கர்ர்கள்தான்


என்னுடன் வந்த சீனமக்கள் என்னையும் அவர்களையும் மாறி மாறி பார்த்ததை கவனிக்க முடிந்தது, முந்திகொண்டு அவர்களுக்கு சுருட்டை முடி எனக்கு அப்படி அல்ல என சொல்லி ஹிஹிஹிஹி என சமாளித்தேன்.


அது என்னவோ தெரியவில்லை உலகில் எல்லா காடுகளில் வாழும் பழங்குடியினருக்கு அந்த ஆப்ரிக்க சாயல் பொருந்தி வருகின்றது


மனித இனம் ஆப்ரிக்காவில் தோன்றிற்று என்பதும் ஏற்புடையதே


வாயில் வைத்து ஊதி விடும் மர‌ அம்பு, எளிய குடிசை என, சுற்றிலும் மரப்பொருட்கள் சில அரியவகை மூலிகைகள் என வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.


மலேசியாவின் ஆதிகுடி அவர்களே, மண்ணின் மைந்தரும் நிச்சயமாக அவர்களே,


அவர்கள் மொழி மலேய மொழி அல்ல, புரிந்துகொள்ள மிக சிரமான ஆதிமொழி, கூர்ந்து கவனித்தால் சில ஒரியமொழி வாசம் இருந்தது, இன்னும் பேசவைத்தால் சில பழம் தமிழ் சொற்களும் இருப்பதை அறியலாம், நேரமில்லை. வழிகாட்டி ஏதோ அவர்கள் மொழி கொஞ்சம் அறிந்திருப்பதால் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.


நாம் உலகில் மனிதன் பேசிய ஆதிகால மொழியான சைகை மொழியில் பேசினோம், அவர்களும் அப்படியே பதில் சொன்னார்கள், ஓரளவு புரிந்தது.


அவர்களின் வாழ்க்கை முறையினை அறிய முயற்சித்தால் ஆச்சரியம் காத்திருந்தது .


நெருப்பினை எப்படி உண்டாக்குவார்கள் என அறிய ஆசை, சிக்கி முக்கி கல்லை உரசுவார்கள் என பார்த்தால் ஒரு மரத்துண்டினையும், ஒரு காய்ந்த கொடியினையும், கொஞ்சம் சருகுகளையும் கொண்டுவந்தார்கள். கொடியினை அந்த மரதுண்ண்டில் சுற்றி தயிர் கடைவது போல சர் சர்ரென இழுத்தார்கள், 30 செக்கண்டில் புகை வந்தது, அடுத்து 4 இழுப்பு இழுதுவிட்டு புகை வந்த கட்டையினை சருகில் போட்டார்கள்


குபீரென எழும்பியது நெருப்பு, சிக்கி முக்கி கல் அல்ல. நெருப்பினை ஏற்படுத்த முக்கி சிக்கி கல்லை தவிரம், ஆயிரம் வழிகள் அக்காலத்திலே இருந்திருக்கின்றன.


மரத்தடியில் இருந்து ஒரு காய் எடுத்தார்கள், ஆரஞ்சு போல இருந்தது, கைகளால் நசுக்கினார்கள், கடிமான திரவம் வந்தது. அதனை தலையில் தேய்த்து குளிக்கலாம் என்றார்கள். நானும் தேய்த்துபார்த்தான், மிக அழகான இயற்கை ஷாம்பூ அது. அப்படி தலையினை சுத்தமாக்குகின்றது, துளியும் ரசாயாணமில்லை


காட்டிற்குள் ஆங்காங்கு அந்த கொடி இருந்தது, நெருங்கி பார்த்தால் நமது ஊர் வெற்றிலை. சுவைத்தால் காரம் அதிகம், ஆனால் ஒரிஜினல் வெற்றிலை. அந்த காடெங்கும் சாதாரணமாக கிடக்கின்றது, வயிற்றுகோளாறை சரி செய்யும் மூலிகை என சொன்னார்கள்


வெற்றிலையின் தாயகம் மலேசியா என எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.


இன்னும் காயத்தில் ரத்தம் நிறுத்தும் மூலிகை, எதிரியினை பக்க வாதத்தில் தள்ளும் மூலிகை, மயக்கமடையும் செய்யும் மூலிகை என பல சொன்னார்கள்


அமைதியான, ஆர்பாட்டமில்லா இயற்கையின் மடியில் வாழும் வாழ்வு அவர்களுடையது . மின்சாரமில்லை, இணையமில்லை, குடிநீர் கட்டணம இல்லை, தேர்தல் இல்லை, அரசியல் இல்லை, படிப்பு இல்லை, ஒரு இம்சையுமில்லை ஆனால் மகிழ்வாக வாழ்கின்றார்கள்


காட்டிற்குள் குழு குழுவாக சுற்றுவார்களாம், ஒரு இடத்தினை விட்டு நீங்கும்பொழுது எதற்காக செல்கிறோம் என மரத்தில் ஒரு அடையாளம் இட்டு செல்வார்களாம். வெள்ளம் எனில் ஒரு அடையாளம், வறட்சி என்றால் ஒரு அடையாளாம், பேய் பிசாசு என்றால் இன்னொரு அடையாளம், அந்நியர் படை என்றால் இன்னொரு அடையாளம்


பின்னால் வரும் குழுக்கள் இதனை பார்த்து முடிவெடுக்குமாம், அவர்களுக்கு மதமில்லையாம், இயற்கைதான் கடவுளாம். ஒரு தார மணம் தான் உண்டாம், கட்டுபாடோடுதான் வாழ்கின்றார்கள்


அவர்களை பொறாமையோடு பார்த்துவிட்டு நகர முடிந்தது


அந்த காடு மிக பெரியது, கிட்டதட்ட 3 கிமீ உள்ளே நடந்திருக்கலாம், அங்கே இம்மக்கள் வசிக்கின்றார்கள். அந்த மழைக்காடு மிக பிரமாண்டமானது, சுற்றுலா பயணிகளுக்காக பாதை அமைக்காவிட்டால் உள்ளே செல்வது மகா கடினம். ஆனால் முட்செடிகள் என ஏதுமில்லை.என்ன கானகமோ ஒரு நெருஞ்சி முள் கூட இல்லாவிட்டால் நமக்கு பொறாமை வராதா? கடுமையாக வந்தது செருப்பு இல்லாமலே நடக்கலாம்.


இம்மாதிரியான காடுகளில் வெள்ளையர் கூட்டம் அதிகமாக சுற்றும், அவர்களுக்கென்ன அது வரலாற்று இடமென்றாலும் வருகின்றார்கள், நட்சத்திர விடுதி என்றாலும் வருகின்றார்கள், கடற்கரை என்றால் கால்சட்டையோடு படுத்துகொள்கின்றார்கள், நடுகாட்டில் கேமராவோடு அமர்ந்துகொள்கின்றார்கள்


சில வெள்ளையர்கள் வாரகணக்கில் காடுகளுக்குள் இருந்து படமெடுப்பார்களாம், மழையோ பூச்சிகளோ பாம்புகளோ ஒன்றும் செய்யாதாம், இதற்காகவே பல பயிற்சிபெற்று விட்டு வருவார்களாம்.


அவர்கள் வாழ்க்கைமுறை அப்படி, ஆணோ பெண்ணோ ஒரு கார்டு 4 கால்சட்டை, 2 மேல் சட்டை (சில இடங்களில் அதுவும் இல்லை) ஒரு பையினை தூக்கிகொண்டு கிளம்பிவிடுகின்றார்கள்


என்ன இருந்தாலும் கொலம்பஸ், வாஸ்கோடகாமா வம்சம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்.


காடுகளை சுற்ற சுற்ற, நிறைய சிந்தனைகள் உதித்தன, எப்படி மனிதகுலம் இந்த காடுகளை எல்லாம் கடந்திருக்கும்? காட்டு நதிகளை, மலைகளை எப்படி கடந்தார்கள்? எப்படி முடிந்தது?


இப்படி உலகெல்லாம் அன்றே ஆதிவாசிகள் பரவியிருக்கின்றார்கள், நிச்சயம் ஒரே மூலத்தில் இருந்துதான் பரவியிருப்பார்கள். அமெரிக்காவில் கொலம்பஸுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் வெள்ளையருக்கு முன்பு, ஆப்ரிக்காவில் தொன்றுதொட்டு, அந்தமான் தீவில் ஆதிகாலமுதல்.


உலக நிலம் எல்லாம் ஒன்றாக இருந்து பிரியும்பொழுது அவர்கள் பிரிந்திருக்கலாம் என்றாலும், எப்படி வாழ்ந்து போராடி இன்றிருக்கும் நிலையினை எட்டமுடிந்தது என்றால், மானிட சாதி அவ்வளவு பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது, முன்னோர்கள் அவ்வளவு பாடுபட்டிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது


காடுகளுடன் எப்படி எல்லாம் போராடியிருப்பார்கள்?


அந்த பழங்குடி மனிதர்களை கொஞ்சநேரம் பார்க்கும்பொழுது சிந்தனை அப்படித்தான் சென்றது, "முன்னொரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள்"


காடும் அதன் அழகும், மவுனமும், பச்சை பிரமாண்டமும் மனதோடு பேசிகொண்டே இருந்தன.


பிரமாண்டமான காடும், ஓடும் மஞ்சள் நதியும் (மலேசியாவில் எல்லாம் மஞ்சள் நதியே, அன்றாடம் மழைபெய்வதால் தெளிந்த நீர் சாத்தியமில்லை) ஆண்டவனின் ஞானத்தை அழகாய் தெரிவித்தன‌


நடுகாட்டில் இருந்த மவுனம் மிக ரசிக்கதக்கது, இயற்கையின் பெரும் சிறப்பு அதுதான், இறைவனால் உருவாக்கபட்ட எதுவும் பெரும் கூச்சல் எழுப்புவதில்லை. அது அவனைப்போல அமைதியானது


மனிதன் உருவாக்கிய இயந்திரம் எல்லாம் கூப்பாடு போடுபவை, ஒரு பேருந்திலோ, விமானத்திலோ ஏறினால் புரியும். மானிட விஞ்ஞானம் அப்படி, மனிதனை போலவே அலப்பரையானது.


அற்புதமான அந்த காட்டிலே இருநாட்களும் தங்க ஆசைதான், ஆனால் அழைத்து வந்து மீனும், கோழியும் போடுபவர்கள் சொல்வதை கேட்கவேண்டுமல்லவா? அந்த தளங்களுக்குரிய விளையாட்டுக்களுக்கு அழைத்து சென்றார்கள்


காட்டின் ஒரு பகுதியினை அப்படியே இயல்பு மாறாமல் ஆனால் சுற்றுலா தலமாக வைத்திருக்கின்றார்கள், அதில் மிக உயர்ந்த மரங்களுக்கிடையே கயிற்றுபாலம் வைத்து, ஒரு நபர் மட்டும் செல்லும் அளவு அகலமாக அதுவும் பெரும் இடைவெளிக்கிடையே பயணிகள் செல்லுமாறு அனுப்பினார்கள்


அது சரியும், குலுங்கும் ஆனால் நாம் நடக்க வேண்டும், நன்றாகத்தான் முதலில் நடந்தேன், திடீரென கீழே பார்த்து தொலைத்துவிட்டேன், அது பெரும் பாதாளம், இரு மலைகளுக்கிடையே அப்படி அமைத்திருக்கின்றார்கள்


அதில் நடக்கும்பொழுது கிட்டதட்ட சந்திரமுகியில் பேய் பங்களாவில் மாடிபடிகளில் நடக்கும் வடிவேலு போல ஆனது நிலை, அந்தோணியாருக்கு மட்டும் ஆயிரம் கிடா நேர்ந்திருப்பேன்


30 நிமிடமும் "பே..ப..ப்பா....ம்ம்ம்,, ந்நோஓஓஓ" என கழிந்து இறங்கும்பொழுது ஓரத்தில் காவலுக்கு நிற்பவன் எப்படி என புன்னகைத்தான், ஓங்கி அவன் முகத்தில் குத்தவேண்டும் போலிருந்தது, "சாவு பயத்த காட்டிட்டான் பரமா" என்ற வரி நினைவுக்கு வந்தது


ஆனாலும் அந்த கயிற்றுபாலத்தில் நடக்கும்பொழுது இந்திய ராணுவ வீரர்கள் நினைவுக்கு வந்தார்கள், இப்படித்தால் படாத பாடுபட்டு எல்லை காக்கின்றார்கள், வெள்ளத்தில் மக்களை மீட்கின்றார்கள். எவ்வளவு பெரும் மன உறுதி வேண்டும்?,


ஒரு வழியாக கானகம் நீங்கி நகருக்குள் மாலை வந்தாகிவிட்டது, கோலாலம்பூர் என்பது மனிதன் காட்டும் நவீன அழகு, விண்ணை முட்டும் கட்டடம், பிணைந்து நெளியும் சாலைகள், பெரும் விளக்குகள் என மனிதனால் அழகூட்டபட்டது


இந்நகரையும் அந்த கானகத்தையும் ஒப்பிட்டால் அந்த கானகமே அழகும், அமைதியும் மிகுந்தது.


அதனை படைத்தவன் கடவுள், இதனை படைத்தது மனிதன். இந்நகரம் மனிதனால் படைக்கபட்டது, மின்சாரம் முதல் எல்லாம் மனிதனே உற்பத்தி செய்து இயக்கவேண்டும், தொடர்ந்து மனிதனே இயக்கிகொண்டிருக்கவேண்டும், ஒவ்வொரு நொடியும் அவனே இயக்கவேண்டும், இல்லாவிட்டால் நகரம் நரகமாகும்.


அந்த கானகம் அப்படி அல்ல, ஒரு முறைதான் கடவுள் உருவாக்கினார். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அது தன்னை தானே புதுப்பித்துகொண்டு வந்துகொண்டிருக்கின்றது, தொடர்ந்து சொர்க்கமாகவே இருக்கின்றது.


சொல்லவிரும்புவது இதுதான்


கேரளா கடவுளின் சொந்த நிலம் என்றால் மலேசியா கடவுள் உருவாக்கிய அரண்மனை. இயற்கை அழகு அப்படி கொட்டி கிடக்கின்றது, அதன் பசுமை வனங்களிலும், அழகிய மென்மையான அலைவீசும் கடலிலும் அது மிக மிக அழகாக தெரியும்.


கோலாலம்பூர் என்பது கட்டங்கள் மிகுந்த பாசாங்கு நகரம், மலேசியாவின் உண்மை அழகு என்பது அதன் வனங்களிலும், அந்த காடுகளிலும் உள்ளது, அதன் ஆன்மா அதில்தான் உள்ளது


சுற்றிபார்க்க வருபவர்கள், அங்கே நேரடியாக செல்லலாம்,


ஒரு காலமும் இறைவன் படைத்ததை விட அழகாக மனிதனால் ஒன்றையும் படைத்துவிட முடியாது, காரணம் அவன் படைப்பில் அத்தனை ஞானமும் அழகும் கலந்து நிற்கின்றது


மிக மிக சிரத்தை எடுத்து கடவுள் உருவாக்கிய அழகுகளில் மிக அதிசயமாக தெரியும் விஷயங்களில் அவன் படைப்பில் தனி இடம் பெற்றுவிட்ட குஷ்பூ போலவே, மலேசிய வனங்களுக்கும், அதன் வனப்பிற்கும் தனி இடம் இருக்கின்றது.







No comments:

Post a Comment