Friday, June 24, 2016

மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள்




சரியாக 89 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அந்த செட்டிநாட்டு கிராமத்தில் அக்குழந்தை பிறந்திருக்கும், அன்னையார் என்ன சொல்லி தாலாட்டினார் என தெரியாது,

ஆனால் அக்குழந்தை பின்னாளில் கண்ணனுக்கே தாலாட்டு எழுதிற்று, "ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்.." என அழியா பாடல்களை கொடுத்தது, "

குருவாயூருக்கு வாருங்கள் என அழைத்தது, கோகுலத்து பசுக்களோடு கண்ணை கொண்டாடியது,

மொத்த தமிழகத்தை 30 ஆண்டுகாலம் கவி அரசனாய் தன் தமிழ் செங்கோலினால் ஆட்டி வைத்தது.

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின்
தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.

Stanley Rajan's photo.

குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். தமிழை நேசிக்கும் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும்

கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக அழகுபட புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம்,

அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.
வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம் கம்பனும் கண்ணதாசனும் அதில் முதன்மையானவர்கள்

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் நம்மை அழைத்து சென்றவன் கம்பன் என்றால், உலக நாடுகளுக்குள்ளும, அழகான சோலைகளுக்குள்ளும், பண்டைய செய்யுள்களுக்குள்ளும், இந்துமத ஞானத்திற்குள்ளும் நம்மை அழைத்து சென்று காட்டியவர் கண்ணதாசன்.

இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் "அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே.." பாடல் தானாக ஒலிக்கும்.

அரசியலநிலைய பாருங்கள் "ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல" எனும் வரிகள் காதில் மோதும். தேர்தலை எடுத்துகொள்ளுங்கள் "காசை எடுத்து வீசு, கழுதை பாடும் பாட்டு, உனக்கும் கூட வோட்டு" எனும் பாடல் தானாய் காதில் ஒலிக்கும்.

குழந்தையினை காணுங்கள் "முத்தான முத்தல்லவோ " என காதில் தாலாட்டு ஒலிக்கும், காதலித்து பாருங்கள், அவர் பாடல்தான் துணைக்கு வரும்.

மதுகோப்பையினை ஏந்திபாருங்கள் உற்சாகமாக அவர் பாடல்தான் மனதில் எழும், ஆனால் மதுவால் அவர்பட்ட பாடுகளை, அவர் சொன்னதை சிந்திந்தால் மது இறங்காது

மலைச்சாரலில் பயணியுங்கள் "செந்தாழம் பூவில்.." தானாக ஒலிக்கும், அழகான மானை, மயிலை அல்லது பெண்களை பாருங்கள் அவரின் பல பாடல்கள் வந்து மோதும்.

இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.

எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.

மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

அவரே சொன்னது போல "ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்"
வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்

( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார்
என்பவர்கள் உண்டு, ஆனால் "நெஞ்சு... ..தி" மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம் :) )

தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே. பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

திராவிட அரசியலை பக்கம் பக்கமாக கிழித்து தள்ளிய, முதன் முதலிலே அது புரட்சி இயக்கம் அல்ல, அது ஒரு மாயமான் அது அரசியல் நோக்கம் மட்டும் கொண்டது, ஒரு பிழைப்புவாத இயக்கம் என பகிரங்கமாக சொன்னது அவர்தான்.

இந்திய நாட்டுபற்றில் அவரை மிஞ்ச முடியாது, சீன போரின் போதும், பாகிஸ்தான் போரின்போதும் அவர் எழுதிய கவிதைகள் அந்நாளைய பாரதியின் தொடர்ச்சிகள், அவரை தவிர எவன் எழுதினான்? எந்த கவினுக்கு இருந்தது நாட்டுபற்று

யாழ்பாண பல்கலைகழக எரிப்பினை தொடர்ந்து அவன் எழுத்தொடங்கிய நூல் "ஈழமகள் கண்ணீர்" ஆனால் அது முற்றுபெறவில்லை, ஈழமக்களின் கண்ணீர் போலவே.

கலைஞர் மதுகடைகளை திறந்தபொழுது "காமராஜர் படிக்க சொன்னார், கலைஞர் குடிக்க சொன்னார்" என கவிநயத்தோடு முழங்கிய குடிமகன் அவர்.

இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.

ஏதோ நவீனத்துவமாம், நமக்கெல்லாம் புரியாதாம். அவனைபோன்றவர்களுக்கு புரியுமாம், கேட்டால் கவிதானுபவமாம், பிரக்ஞையாம், இவனிடம் கவிதா உடனான அனுபவத்தை எவன் கேட்டான்?

உரைநடையினை பிரித்து எழுதினால் அது கவிதையாகி விடுமாம், சொல்லி கொள்கின்றார்கள், , உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.
கேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள்,

இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.

அடேய். அடடி அடடே என கவுண்டமணி கரகாட்டகாரனில் செந்தில் சரளா ஜோடியினை கலாய்ப்பார், இன்று அதுவும் கவிதை என ஒருவன் எழுதிகொண்டிருக்கின்றான், அதற்கு அர்த்தமும் சொல்கிறான், பல அர்த்தம் வருமாம்

அடே
அட‌
அடடா.... இது கவிதையாம்,

ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது, அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.

தமிழை காப்பாற்றவேண்டுமானால், தமிழை வளர்க்கவேண்டுமானால் முதலில் இவ்வகை கொடூர கவிஞர்களிடமிருந்து தமிழை காப்பாற்றியாக வேண்டும், அதற்கு சட்டமியற்றினாலும் பரவாயில்லை.

டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான். தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.

இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.

"இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே"
என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

இன்று கண்ணதாசனின் பிறந்தநாள்.

தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.

அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை
"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்"
எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.

ஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால் "நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" , அவருக்கு அழிவே இல்லை.

சந்தேகமின்றி சொல்லலாம், அவர் காவிய தாயின் இளைய மகன், இளையமகன் என்ன? அவர்தான் கடைசிமகன்

முத்தமிழ் அறிஞன் என ஒருவன் தமிழகத்தில் இருந்தான் என்றால் அது கண்ணதாசன் ஒருவனே, தமிழ் அவன் கரங்களில் வீணையாக ஒலித்தது,

கல்லூரி பருவம் மறக்கமுடியாதது, அதன் கடைசிநாள் பிரிவு கலங்க வைக்க கூடியது, ஆனால் கல்லூரி வாசலில் கால்வைக்காத கண்ணதாசன் அந்த சூழ்நிலையினை மிக அழகாக பாடலில் கொண்டுவந்தார் அல்லவா?, அவன் தான் கவிஞர், எப்படி தொடங்கினார்

"பசுமை நிறைந்த நினைவுகளே..."

இன்றும் கல்லூரி பிரிவுக்கு அதனைவிட அருமையான பாடல் அமையும் என கருதுகின்றீர்கள்?

பகவான் கண்ணன் என்னமொழி பேசினார் , அந்த அவதார காலத்தில் கண்ணால் பெற்ற நன்றிகடனுக்குரியர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது தெரியாது.

ஆனால் ஏதோ ஒரு தொடர்ச்சியாக அவர்களில் ஒருவன் தமிழகத்தின் கண்ணதாசனாக அவதரித்து தமிழால் அந்த கண்ணனை உருகி உருகி பாடியிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது

நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல, சில பாடல்கள் மற்ற துறைக்கும் கிடைத்திருக்கலாம்.

காலம் தமிழனுக்கு கொடுத்த கொடை அவர்.

ஆனந்தமானவன் ,அற்புதமானவன், நிச்சயம் கொண்டாடபட வேண்டியவன்

இன்று முழுக்க அவரில் நீந்தபோகின்றேன், அவரின் தமிழில் அவரின் வார்த்தைகளில் மூழ்கி திளைப்பது ஒரு வகை சுகம், தமிழனாய் பிறந்து, தமிழ்படித்ததின் பலனை அனுபவிக்கும் சுகந்தம்.












No comments:

Post a Comment